அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கான கவிதைகள்
எழுதப்படாமல் காத்திருக்கின்றன.
உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள்
பரிமாறப்படாமல் இதயக்கூட்டில் காத்திருக்கின்றன.
உனக்கான முத்தங்கள்,
உனக்கான ரோஜா,
உனக்காக சேகரித்த மயிலிறகு,
நாம் கைகோர்த்து நடக்க வேண்டிய
கடற்கரை மணற்பரப்பு,
இரவின் நிழல்,
நிலவின் மடி,
குளிர்கால போர்வைகளென,
எல்லாம் காத்திருக்கின்றன,
உன் ஒற்றை சொல்லுக்காக,
எப்போது சொல்லப்போகிறாய்?
உன் காதலை என்னிடம்.


மனுநீதி

அப்பாவியை தூக்கிலிட்டு,
நீதி சாவதில்லையென்று,
மார்தட்டிக்கொண்டார்கள்
நீதியரசர்கள்.

இதயத்திற்குள் போராட்டம்

எனக்கு பிடித்த
புத்தகத்தை,
என் குழந்தை
கிழிக்கும் போது,
என் இதயம்
அணி பிரிந்து
சண்டையிடுவதை
உணர்கிறேன்.

எதார்த்த கணவன்

நிலவிற்கு 
ராக்கெட் அனுப்பிவிட்டு, 
வீட்டிற்கு வந்தவனிடம்
 மனைவி சொன்னாள்? 
நேற்று வாங்கி வந்த
வெண்டைக்காய்
 சூத்தையென்று.

மனித தர்மம்

கடித்த எறும்பின்
கருணை மனுவை
அதை கொன்ற பின்,
பரிசீலிக்கும்
மனித தர்மத்தை
என்னவென்று சொல்ல?



'நான்' என்னும் 'கருங்குழி'

யாரோ சொல்லி,
எனக்குள் எட்டிப்பார்க்க,
அங்கிருந்த கருங்குழி
என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.
இப்போது
என்னால் யாரையும்
பார்க்கமுடிவதில்லை.
யார் குரலையும்
கேட்கமுடிவதில்லை.
தயவு செய்து
உங்களுக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்.

கவிஞனின் கவிதை

கடல் நீரில்
கால் நனைக்கும் போது,தன்
கால்கள் கரைவதை
உணரமுடியாத
கவிஞனின் கவிதை
ஆன்மாவில்லாத
வெற்றுடம்பு.

நீ நல்லவனா?





நீ நல்லவனா?

என்று

கேட்டவனிடம் சொன்னேன்,

பொய்,

பொறாமை,

கோபம்,

வஞ்சம்,

ஏமாற்றம்,

தோல்வி,

போன்ற குப்பைகளால் ஆன,

கனத்த இதயம்

எனக்கும் உண்டு என்று.

உன் மெளனத்தின் முன்னால்

உன் மெளனத்தின் முன்னால்
ஒரு குழந்தையாய் தவிக்கிறேன்!
கொல்ல நினைக்கிறாயா?
கொஞ்ச  நினைக்கிறாயா?

உன் மெளனத்தின் முன்னால்
என் இதயம் துடிப்பது கூட
எரிசலாய் இருக்கிறது.

உன் மெளனத்தின் முன்னால்
என் ஊன்னுடம்பு
மெழுகாய் உருகுகிறது.

 உன் மெளனத்தின் முன்னால்
 உனக்கும் எனக்கும் இடையேயான
கால தூர பிரபஞ்சபோர்வை நீள்கிறது.

 உன் மெளனத்தின் முன்னால்
உணர்வுகளை தொலைத்த
புத்தனாகிறேன்.

மொத்தத்தில்
உன் மெளனத்தின் முன்னால்,நான்
என்னையே தொலைத்து தேடுகிறேன்.




வாழ்வு

வாழ்வை என்னவென்று நினைத்தாய்?
வாழ்வு
நிற்காமல் ஓடும் கால ஓடை,
யாரையும் சட்டை செய்யாமல்,
யாருக்காகவும் கருணைகாட்டாமல்,
இல்லாத இலக்கை நோக்கி ஓடும் வேட்டைக்காரன்.
 நீ ஜான் ஏறினால் முழம் சறுக்கும்,அதற்காக
ஏறுவதை நிறுத்தாதே.
சுகங்களை அள்ளி வீசும்,அங்கே
தேங்கி சாக்கடை ஆகிவிடாதே.
போலிகள் சுற்றி வருவார்கள்
அவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.
வெறுப்பை அள்ளி உமிழும்,அதற்காக
வருத்தப்பட்டு பயணத்தை நிறுத்தாதீர்கள்.
தோல்விகள் அலையாய் மலையாய் வரும்
சுருண்டு படுத்துவிடாதீர்கள்.
இழப்புகள் தகர்க்கவரும்
தகர்ந்துவிடாதீர்கள்.
ஓடவிட்டு செங்கல்லால் அடிக்கும்
திரும்பி அடிக்க மறந்துவிடாதீர்கள்.
திமிரை கொடுக்கும்,அதை
 நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
அன்பை கொடுக்கும்,அதற்கு
அடிமையாகிவிடாதீர்கள்.
 நட்பை கொடுக்கும்,அதற்காக
 நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
வாழ்வை பற்றி தெரியாமல்
உன்னை வாழ வைக்கும்.
வாழ ஆரம்பிக்கும் போது
இடுகாட்டில் புதைத்துவிடும்.
வாழ்வை என்னவென்று நினைத்தாய்?

புத்தாண்டு வாழ்த்துகள் -2014

வருடங்கள் கடப்பதை மனம் மறந்தாலும் ,
உடல் காட்டி கொடுத்துவிடுகிறது.
இழப்புகள் வலித்தாலும்,
வாழ்க்கை திருப்பங்கள் இனிக்கின்றன.
இருள் பயமூட்டினாலும் ,
ஒளி நம்பிக்கையளிக்கிறது.
அவரவருக்கொரு கொள்கை,அதற்கொரு பயணம்,
எங்கோ சந்தித்தோம் ,எங்கோ போகிறோம்?
இளைப்பாறும் நேரம் சந்தித்துக்கொள்கிறோம்,பகிர்ந்துகொள்கிறோம்.
வாழ்க்கை நம்மை எங்கோ அடித்து செல்கிறது.
சில நேரம் அழுகிறாம்,சில நேரம் சிரிகிறோம்,
சில நேரம் தோற்கிறோம்,சில நேரம் ஜெய்க்கிறோம்.
திரும்பி பார்க்கும் போது,
இந்த கூத்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முகங்கள் மாறினாலும் அன்பு மாறுவதில்லை,
எல்லைகள் தாண்டினாலும் நட்பு மாறுவதில்லை.
தோல் கொடுக்க தோழர்கள் உண்டு,
அன்பு பாராட்ட உறவுகள் உண்டு.
வாழ்க்கையை வாழ்ந்து அழிப்போம்,
சாகும் வரைபோராடுவோம்,பயமில்லை ,கலக்கமில்லை.
காலனையும் காலத்தையும் சிரித்துக்கொண்டே வரவேற்போம்.

சமூக வலைதளங்கள் (facebook)

முன்பெல்லாம்
என்னுடைய கிறுக்கல்களையும்,
சுய துக்கங்களையும்
என் டைரியில் கிறுக்கிக்கொண்டிருந்தேன்,
இப்போது பக்கத்து வீட்டுக்காரன் டைரியில்
கிறுக்கி காத்துகொண்டிருக்கிறேன்.
அவனுடைய பதிலுக்காக!!!

இடைவெளி

இடைவெளிக்கு
மதிப்பில்லையென்று யார் சொன்னது?
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையேயான இடைவெளிதான்
அவர்களின் காதலை இனிக்க செய்து
கல்யாணத்தை புளிக்க செய்கிறது!!!

வெறுமையின் வலி

வெறுமை
இங்கே கொட்டிக்கிடக்கும்
வரிகளுக்குள்ளும் வார்த்தைகளுக்குள்ளும்
நீங்கள் எதை தேடிக்கொண்டு வந்தீர்களோ?
அதைதான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்!
உணர்வுகளை தேடும் மனிதர்களின்
நடுவில் இந்த வெறுமையின் வலிகளை
வரிக்கும் வெற்று மனிதன் நான்!!

விஸ்வரூபம்

சூழ்ச்சி வலையால்
பசுவின் கழுத்தை நெறித்த
பசுந்தோல் போர்த்திய
புலியென தீவிரவாதம்.
பசு புனிதம் - அதுபோல்
எல்லா மதமும் புனிதம்.
பசுவை வணங்கும் நாம்
பசுந்தோல் போர்த்திய
புலிகளை வணங்குவது தகுமோ?
மதத்தை வணங்கலாம்.
ஆனால் அதன் பின்னால்
ஒளிந்து வாழும்
மக்களை கொல்லும்
மனித பீரங்கிகளை
துடைத்து  துடைத்து 
வணங்கவா முடியும்?
தவறுகளை சுட்டிக்காட்டும்
விரல்களை வெட்ட ஆரம்பித்தால்
உலகமும் நரகம்.
அதே ஏற்றுக்கொண்டால்
நரகமும் சொர்க்கம்.
மனிதன் மனிதானாக
இருக்கவே மதம்.
மதம் கருணையாகும் போது
கடவுள் ஆகிறது.
மதம் கருகும் போது
மிருகமாகிறது.
எங்கே கொள்கையும்
பாதையும் தவறப்படுகிறதோ
அங்கே மதம் கருகுகிறது.
கருகுவதன் காரணத்தை
சுட்டிக்காட்டி ஆளில்லை.
போராட ஆளில்லை.
களை வெட்ட ஆளில்லை.
ஆனால் சுட்டிகாட்டுபவனை
வெட்டி எறிய கூட்டமுண்டு.
குறைகளை ஏற்காத,சகிக்கமுடியாத
எல்லாம் டார்வின் பரிணாமப்படி
வாழ்ந்தாக சரித்திரம் இல்லை.
மாற்றமென்பது நம்மிடம் வரவெண்டியது
அடுத்தவரிடம் இல்லை.
மாறுவோம் மனிதனாவோம்.







ஜென் நிலா

நிலா
வெறும் நிலா
நிர்வாண நிலா
நிலா நிலாவாக
இருப்பதை தவிர
வேறொன்றும் இல்லை.

கருவறை சுகம்

ரத்தமும் சதையுமாய்
ஆனந்த சுகத்தோடு
அன்னையின் கருவறையில்
உறங்கியதொரு காலம்.....

யாருமில்லா தனிமையில்
நான் உள்ளே இருந்து
அவள் பேசுவதை கேட்டு
கழித்ததொரு காலம்....

அந்த பத்து மாதமும்
எனக்காக அவள் பட்ட
கஷ்டமெல்லாம் எனக்கு
மட்டுமே தெரியும்....

பத்துமாதமும் முடிந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் கருவறையில்
இருந்து பிரித்து பூமியில்
நட்டார்கள்.கேட்டால்
பிறந்தநாள் என்றார்கள்.

அன்று நான் அழுவதை
சுற்றி நின்று ஆனந்தமாக
சிரித்தார்கள் .

அன்று தொலைத்த
கருவறை சுகம்
அன்பாக காதலாக மாறி
ஒரு பெண்ணை
நோக்கி நகர்ந்தது!

அவளும் வந்தாள் - மனைவியாக.
அவள் மார்பில்
தலைவைத்து படுத்துக்கொண்டேன்.
அவளும் தலைகோதிவிட்டாள்.
மீண்டும் குழந்தையாகி போனேன்.

மீண்டும் ஒரு நாள் வந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் பூமியில்
இருந்து பிரித்துவிட்டார்கள்.கேட்டால்
இறந்தநாள் என்கிறார்கள்.

இப்போது எல்லோரும்
அழுகிறார்கள்.நானோ
ஆனந்தமாக இருக்கிறேன்.ஏனென்றால்
நான் மீண்டும் அவளோடு
சேரப்போகிறேன் .

அந்த கருவறை
சுகத்திற்கான
பயணத்திற்கு மீண்டும்
தயாராகிவிட்டேன்.









நான் தேடும் கவிதை

தினமொரு கவிதை
எழுதிட நினைத்து
தவியாய் தவிக்கிறேன்.

ஆயிரம் எண்ணங்கள்
குவியலாய் அவியலாய்,
 அதிலொரு முகத்தை தேடுகிறேன்.

எண்ணங்கள் கூடி வர
வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை.
வார்தைகள் வளைந்துவர
அர்த்தங்கள் ஒத்துழைக்கவில்லை.
அர்த்தங்கள் கூடிவர
உணர்வுகள் வெளிப்படவில்லை.

இன்னமும் குப்பையும்
கூழமுமாய் ஒழுங்கில்லா
வடிவியலுடன் எழுத்துகளை
அடுக்கி கவிதை
செய்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் உணர்வை தொட்டு
உயிரில் கலக்கும் அந்த
கவிதை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.


தெருக்கூத்து

இருட்டுக் கொட்டடியில்
சிற்றிடை சிரிப்பழகியின்
கடைசரக்கை கண்டிட,
விட்டில் பூச்சிகளாய்
வாலிபம் மொய்த்து நிற்க,
ஆரம்பித்தது கலைக்கூத்து.

அடித்தொண்டை கானமும்
கோமாளி பேச்சுமாய் தன்
நாடகத்தை தொடங்கினாள்.
காட்டியும் காட்டாமலும்
பேசியும் பேசாமலும்
ஜாடையாய் அவள் செய்த
கோலங்கள் இரவைவிரட்டிக்
கொண்டு இருந்தன.

ஏழ்மையின் காரணமாய்
தன் மானத்தை முச்சந்தியில்
கொட்டி அவள்  அள்ளி
கொண்டிருந்ததை பதின்ம
வயது சிங்கங்கள்
சீண்டி சுகம் கண்டனர்.

இங்கே பார்பவனுக்கும் பசி
பார்க்கப்படும் பொருளுக்கும் பசி
இவனது காமப்பசி அங்கே
அவளுக்கு வயற்றுப்பசியை
தீர்க்கிறது.

உண்மையில் பசி
சந்தி சிரிக்க வைக்கும்
கலைக்கூத்து தான்.






தீண்டாமை

தீண்டாமை
அழகான அந்த கவிதை
வாசித்து முடிக்கப் பட்டதும்
அரங்கமே அதிர்ந்தது - கர ஒலியில்
அதை எழுதிய மாணவன்
பிற்படுத்த பட்டவன் என்பதால்
அக்கவிதை நிராகரிக்கவும் பட்டது.
இங்கே மனிதர்கள் மட்டுமல்ல ,
கடவுளே பிறந்தாலும் -
உயர்குடியில் பிறந்தால் தான்
டம்ளரில் டீ- இல்லையென்றால்
சிரட்டையில் தான் டீ.