அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

டால்ஸ்டாய் கதைகள்: பாதிரியாரும் பிரார்த்தனையும்

2 comments
அமைதியாக இருந்த கடலில் அந்தக் கப்பல் நிதானமாக போய்க்கொண்டிருந்தது.அதில் ஒரு பாதிரியாரும் சில பிரயாணிகளும் இருந்தனர்.கப்பளின் மேல் தளத்தில் இருந்தவர்கள் சிறு சிறு கூட்டங்களாக கூடி உணவருந்திக் கொண்டும் படுத்தபடி அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். பாதிரியார் இவர்கள் யாருடனும் சேராமல் தனியாக உலவிக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ஒருவன் தொலைவில் இருந்த எதையோ சுட்டிக்காட்டித் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.பாதிரியாரும், அவன் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தார்.சூரிய ஒளியில் பளபளக்கின்ற கடலைத் தவிர வேறு ஒன்றும் அங்கிருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. தானும் கூட்டத்தின் மத்தியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசும் கதைகளைக் கேட்க விரும்பினார் பாதிரியார்.

ஆனால் அவர் வருவதைக் கண்டதும் கதை சொன்னவன் அதை நிறுத்திவிட்டான்.நீ சொல்வதைக் கேட்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.ஏன் நீ சொல்லிக்கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டாய்?என்றார் பாதிரியார் அவனைப் பார்த்து.

"கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் அதோத் தூரத்தில் தெரியும்,அந்தச் சிறிய தீவைப் பாருங்கள்! அங்கே கடவுளின் தொண்டர்கள் சிலரும் முதியவர்கள் சிலரும் இருக்கிறார்கள்" என்றான் அவன்.அவன் கண்ணுக்குத் தெரிந்த அந்த தீவு ஏனோ பாதிரியாரின் கண்களுக்குத் தெரியவில்லை.

"தீவுதான் எனக்குத் தெரியவில்லை. அதை விடு.அங்கே வாழும் முதியவர்களைப் பற்றியாவது என்னிடம் கூறு:அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன்" என்று மிகவும் ஆவலோடு கேட்டார் பாதிரியார்.

அவர்களைப் பற்றி நான் வெகு காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர்கள் புனிதமானவர்கள் என்பார்கள்.ஆனால் அவர்களைக் காணும் பாக்கியம் எனக்குப் போன வருடம்தான் கிடைத்தது.ஒரு பயணத்தின் போது படகில் மீன் பிடித்துக் கொண்டு நான் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி தவறி அத்தீவிற்குப் போய்விட்டேன்.இங்கும் அங்கும் அலைந்து திரிந்து விட்டு கடைசியாக ஒரு மண்குடிசைக்குச் சென்றேன். அங்கே முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.அப்போது வேறு இருவர் அந்த மண்குடிசையின் உள்ளே இருந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எனக்கு உணவும் உடையும் தந்து என் படகைச் செப்பனிடு உதவினார்கள்.

"அவர்களில் ஒருவர் கூனல் முதுகுள்ள சிறிய உருவமுடையவர்:அவர் காவி உடை அணிந்திருந்தார்.மிகவும் வயதானவராகத் தெரிந்தார்.அவருக்கு நூறு வயதுக்கும் இருக்கும்.அவருடைய நரைத்த தாடி வெண்மை நிறம் மாறிப் போய் பசுமையாகிக் கொண்டிருந்தது.சிரித்த முகம் அவருக்கு.தேவதையைப் போல் அது ஒளி வீசிக்கொண்டிருந்தது.இரண்டாவது கிழவர் முதலாமானவரை விட உயரமானவர்.அவரும் வயதானவர்தான்.கிழிந்த கம்பளி உடை ஒன்றை அவர் அணிந்திருந்தார்.அவருடைய நீளமான தாடி பாதி மஞ்சள் நிறமானதாகவும் பாதி சாம்பல் நிறத்திலும் இருந்தது.ஆனாலும் அவர் மிக பலசாலியாக இருந்தார்.நான் சொல்லாமலே என் படகை அவர் செப்பனிட்டுக் கொடுத்தார்.மூன்றாவதாக இருந்த கிழவர் மிகப் பெரியவரியவராகவும் உயரமானவராகவும் இருந்தார்.முழங்கால் வரை அவரது தாடி நீண்டு வளர்ந்திருந்தது.அவரது முகம் அவரது கடின உள்ளத்தைக் காட்டியது.அவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவேயில்லை.வேலை செய்வதிலேயே அவர்கள் கருத்தாக இருந்தார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதன் மூலமும் பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலமும் உணர்த்திக் கொண்டு அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் 'இங்கே வெகு காலமாக வசிக்கிறீர்களா?' என்று கேட்டேன்.அதற்கு அவர்களில் ஒருவர் ஏதோ முணுமுணுத்தார்.மற்றொருவர் அவர் கையைப் பற்றிக் கொண்டு புன்னகை செய்தார்.சிறிது நேரத்திற்குப் பிற்கு ,"மன்னிக்கவும்!" என்று கூறிவிட்டுச் சிரித்தார். "

இப்போது கப்பல் தீவை நெருங்கிக் கொண்டிருந்தது.

தீவு இப்போது எல்லோர் கண்களுக்கும் நன்றாகத் தெரிந்தது.பாதிரியாருக்கும் அது நன்றாகத் தெரிந்தது.

மாலுமியை நெருங்கி அந்தத் தீவின் பெயரைக்கேட்டார் ."பெயர் எனக்குத் தெரியாது; இதைப் போல எவ்வளவோ தீவுகளின் இங்கே இருக்கின்றன" என்றான் அவன் அசட்டையாக.

"அங்கே முதியவர்கள் வாழ்வதாக கூறுகிறார்களே?" என்று திரும்பவும் கேட்டார் பாதிரியார்.

"அப்படித்தான் சொல்லுகிறார்கள்! அது உண்மையா,பொய்யா என்று எனக்குத்தெரியாது;மீனவர்களில் சிலர் அவர்களைப் பார்த்திருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.அது கட்டுக் கதையாகவும் இருக்கலாம்" என்றான் மாலுமி சலிப்புடன்.

"அந்தத் தீவுக்குச் சென்று அவர்களைக் காண நான் விரும்புகிறேன்:எனக்கு உன்னால் உதவ முடியுமா?" என்று கேட்டார் பாதிரியார்.

"இந்தக் கப்பல் அங்கே போகாது!ஏதாவது ஒரு சிறு படகிலே ஏறித்தான் அங்கு செல்ல வேண்டும்.அதற்குக் கப்பல் தலைவனின் அனுமதி வேண்டும்" என்றான் மாலுமி கடுப்புடன்.

பாதிரியார் விடுவதாயில்லை.கப்பல் தலைவனிடம் நேராய்ப் போய் தன் ஆசையைக் கூறினார்.

"நம்முடைய பிரயாணம் தடைப்படுவதைத் தவிர அதனால்  எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் பேசும் பேச்சு நமக்குப் புரியாது:நம் மொழியும் பேச்சும் அவர்களுக்குத்தெரியாது!" என்றான் தலைவன்.

பாதிரியார் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால்,மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தலைவன் கடைசியில் அவர் ஆசையை நிறைவேற்ற இணங்கினான்.

கப்பல் தீவை நோக்கிச் சென்றது!கப்பல் தலைவனிடமிருந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியின் மூலம் பாதிரியார் தீவைப் பார்த்தார்.கரையில் அந்த மூன்று பெரியவர்களும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.

"கப்பலை இங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கிறேன்.நீங்கள் வேண்டுமானால் படகில் சென்று வாருங்கள்" என்று கூறினான் தலைவன்.

கப்பல் நிறுத்தப்பட்டது.சிறு படகு ஒன்றை அதிலிருந்து இறக்கினார்கள்.படகோட்டிகளில் சிலர் அதற்குள் குதித்தார்கள்.பாதிரியாரும் படகிற்குள் இறங்கினார்.படகும் தீவை நோக்கிச் சென்று கரையை அடைந்தது.பாதிரியார் அதிலிருந்து கரையேறினார்.இப்போதும் அந்த மூன்று பெரியவர்களும் அங்கே கைகோத்துக் கொண்டு நின்றிருந்தனர்.பாதிரியரைப் பார்த்ததும் அவர்கள் அவரை வணங்கினார்கள்.அவர்களும் அவர்களை ஆசிர்வதித்தார்.

அவர்களைப் பார்த்து பாதிரியார், "இந்த ஆளரவமற்ற இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் மனித குலத்தின் பாவத்தை மன்னித்து அருளும்படி ஏசுவை நோக்கித் தவம் புரிவதாகக் கேள்விப்பட்டேன்.நானும் கர்த்தரின் சேவகன் தான்! வேத்தைப் போதித்து வாழ்விப்பது என்னுடைய புனித கடமை.அதனால் கடபுளின் கருணையால் நான் இங்கே வந்திருக்கிறேன்.உங்களைப் பார்க்க வேண்டும் என்பதும், முடிந்தால் உங்களுக்குப் போதனை செய்ய வேண்டும் என்பதும் ,ஆண்டவனின் கட்டளை!" என்றார் பாதிரியார்.

முதியவர்கள் இதற்குப் பதில் ஒன்றும் கூறாமல்,ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள்.

"நீங்கள் ஆண்டனை எவ்வாறு வழிபடுகிறீர்கள்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் பாதிரியார்.

அதற்கும் அவர்கள் புன்னகையையே பதிலாக அளித்தனர்.

கடைசியில் அவர்களில் பெரியவராகத் தென்பட்டவர் கூறினார்:"கர்த்தரின் சேவகரே! கடவுளை எப்படி வழிபடுவது என்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது; எங்களுக்கு நாங்களே சேவை செய்வது எப்படி என்கிற ஒன்றை மட்டும் தான் நாங்கள் அறிவோம்."

"சரி,அதை விடுங்கள்.கடவுளை எப்படி வண்ங்குகிறீர்கள் அதைச் சொல்லுங்கள்?" என்றார் பாதிரியார்.

அதற்கு அந்த மூவரில் மூத்தவராகத் தெரிந்த பெரியவர் பதில் அளித்தார்:"மூன்று தேவர்களே!எங்கள் மூவரிடமும் கருணை காட்டுங்கள் என்று கூறி வணங்குவோம்."

அவர் இவ்வாறு கூறியதும்,அம்மூவரும் வானை நோக்கி,ஒரே குரலில் மேற்கூறிய பிரார்த்தனையைக் கூறி வணங்கினார்கள்.

"தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி என்ற இந்த மூன்று தேவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீகள் என்று தெரிகிறது.ஆனாலும் நீங்கள் பிரார்த்தனை செய்யும் முறை தவறு.உங்கள் அறியாமைக்காக நான் பரிதாபப்படிகிறேன்.நீங்கள் கர்த்தருக்கு திருப்தி அளிக்கும் முறையில் நடந்து கொள்ள விருப்புகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால்,அதற்கான சரியான வழிமுறை உங்களுக்கு தெரியவில்லை.சரியாகப் பிரார்த்தனை செய்யும் முறையை உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். இது வேதத்தில் கூறப்பட்டுள்ள முறை.கடவுளே அவ்விதிகளைச் செய்திருக்கிறார்."

தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி இவை பற்றிய தத்துவங்களைப் பாதிரியார் அவர்களுக்கு விளக்கினார்.

"மனிதர்களை இரட்சிக்க வேண்டி இந்த உலகில் அவதரித்த தேவகுமாரன் இப்படித்தான் கடவுளை வணங்க வேண்டும் என்று விதித்திருக்கிறான்.சொல்லுகிறேன் கேளுங்கள்: பரமண்டலத்திலுள்ள எங்கள் கர்த்த பிதாவே......" என்று தொடங்கினார் பாதிரியார்.

பெரியவர்கள் மூவரும் அவர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொன்னார்கள். நடுத்தர உயரமுள்ள பெரியவர் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பினார்.உயரமானவருடைய தாடியும்,மீசையும் தெளிவாக உச்சரிக்க இயலாமல் அவரைத் தடுத்தன.மூன்றாவது பெரியவருக்குப் பற்கள் இல்லாததால் உச்சரிப்பு சரியாக வரவில்லை.மறுபடியும் மறுபடியும் பாதிரியார் அவர்களிக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே இருந்தார்.அவர்களும் திரும்பத் திரும்ப அதைச் சொன்னார்கள்.மாலை நேரம் வரை இதே கதை தான்.ஆனாலும் பாதிரியார் சலிக்கவில்லை.முதியவர்களும் அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.பிரார்த்தனை வாசகம் மனப்பாடம் ஆகும் வரை பாதிரியார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், கப்பலுக்குப் புறப்படப் பாதிரியார் எழுந்தார்.அவர் அவர்களிடம் விடை பெறும் போது,முதியவர்கள் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.பாதிரியார் கப்பலை அடையும் வரை, உரத்த குரலில் அவர்கள் செய்த பிரார்த்தனை கேட்டுக் கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் நிலவொளியில் அவர்களது உருவங்கள் மட்டும்தான் தெரிந்தன.சத்தம் அடங்கிப் போயிருந்தது.

இப்போது கப்பல் அங்கிருந்து நகரத் துவங்கியது.ஆனாலும் தீவைப் பார்த்துக் கொண்டே பாதிரியார் உட்கார்ந்திருந்தார்.தீவும் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.இப்போது கப்பலில் இருந்த அனைவரும் உறங்கிவிட்டனர்.பாதிரியார் மட்டும் உறங்கவில்லை.

அந்த நேரத்தில் முதியவர்களின் ஆர்வத்தை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தார்.அந்த உத்தமர்களுக்கு போதிக்கும் பாக்கியத்தை தமக்கு அருளிய கடவுளுக்கும் நன்றி கூறினார்.

அந்தச் சமயத்தில் கடலில் திடீரென வெண்மையாக ஒளி போன்ற ஒன்று பளிச்சென்று காணப்பட்டது.அது கப்பலையும் நெருங்கியது.அது ஒரு படகும் இல்லை.அதற்குப் பின் பாய் மரமும் தெரியவில்லை.அது பறவையோ, மீனோ இன்னதென்று அவரால் இனம் காண முடியவில்லை.ஆனால் மனித உருவம் அல்ல.இவ்வளவு உயரமான மனிதன் இருக்க முடியுமா? அதுவும் அவன் இப்படிக் கடலில் நடந்து வரக்கூடுமா?அவரது சிந்தனை பலவாறாக ஓடியது.

அந்த சமயத்தில் மாலுமியும் அதைப் பார்த்துவிட்டான்."அதோ தெரிகிறதே, அது என்ன?" என்று அந்த மாலுமி கேட்டான் பாதிரியாரைப் பார்த்து.அதற்குள் பாதிரியார் தெரிந்துகொண்டார் அந்த மூன்று முதியவர்களும் தான் விரைவாக அங்கே வந்துகொண்டிருந்தனர் என்பதை.அவர்களுடைய உடலும் வெண்ணிறத்தாடியும் நிலவொளியில் ஒளி வீசின."கடவுளே! பூமியில் நடந்து வருவதைப் போல் அல்லவா இவர்கள் கடளில் நடந்து வருகின்றனர்!." என்று வியப்போடு உரக்கக் கூவியபடி கப்பலை அந்த இடத்திலே நிறுத்திவிட்டான் மாலுமி.பிரயாணிகள் அனைவரும் அதற்குள் தளத்தில் கூடிவிட்டனர்.அவர்கள் வருவதை அபர்களும் கண்டார்கள்.அவர்கள் இப்போது கப்பலில் வந்து ஏறிவிட்டனர்.பிறகு பாதிரியாரைப் பார்த்து,"கர்த்தரின் தொண்டரே! நீங்கள் சொல்லிக் கொடுத்தவற்றையெல்லாம் நாங்கள் மறந்துவிட்டோம்.தயை செய்து அதை மீண்டும் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள். " என்று அவர்கள் அவரை வேண்டிக்கொண்டார்கள்.

அவர்கள் அப்படிச் சொன்னதும் மண்டியிட்டு அமர்ந்து பாதிரியார், "கடவுளின் புராதன உத்தமர்களே!உங்கள் பிரார்த்தனையும் கடவுளை எட்டும்.நாங்ககள் தான் பாவ ஆத்மாக்கள்.நீங்கள் தான் எங்களுக்காக கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்ய வேண்டும்.உங்களுக்குப் போதிக்க எனக்குத் தகுதியில்லை!" என்றார்.

பிறகு பாதிரியார் அவர்களை வணங்கினார்.அதற்குப் பிறகு தங்கள் தீவை நோக்கி அந்த முதியவர்கள் திரும்பினார்கள்.

பொழுது புலரும் வரை, அவர்கள் மறைந்த அந்த இடத்திலிருந்து ஒளி எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருந்தது.


2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்!!

2 comments
சின்ன பிரச்சனை  வந்துவிட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த திசையில் ,எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. முன்னேற்பாட்டுடன் தயார் நிலையில் இருப்பவர்கள் பிரச்சனைக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் அடிக்கிறார்கள்.முன்னேற்பாடு இல்லாதவர்கள் சோர்ந்து மூலையில் உட்கார்ந்துவிடுகிறார்கள்.ஒரு மனிதன் தன்னம்பிக்கையை இயல்பாக வளர்த்துக்கொள்ளலாம் அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கலாம். தன்னம்பிக்கையை இயல்பாக வளர்த்துக்கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்.சரி தன்னம்பிக்கையை நமக்கு நாமே வளர்த்துக் கொள்வது எப்படி?

நாம் எல்லோரும் சினிமா பார்த்து இருப்போம். அதில் ஒரு ஹீரோ இருப்பார்.படத்தின் துவக்கத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்திப்பார்.இரண்டாவது கட்டத்தில் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறுவார்.இந்த இரண்டு கட்டத்திற்கு இடையில் ஒரு திருப்புமுனை இருக்கும்.அந்த திருப்புமுனை தான் ஹீரோவிற்கு தன்னம்பிக்கை தரும் தருணம். நாமும் நம்மை உணர தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ள வாழ்வில் ஒரு திருப்புமுனை அவசியம்.அப்படி ஒரு திருப்புமுனை ஏற்படுத்திக்கொள்ள  நம் வாழ்க்கையை நாமே பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டும்.உதாரணமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது சற்று நிதானமாக நம் வாழ்க்கையை பின்னோக்கி அதுவரை சந்தித்த பல பிரச்சனைகளை நினைத்து பார்க்கவேண்டும்.அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக எதிற்கொண்டோம் என்பதை சிந்திக்க வேண்டும்.இதை செய்ய ஆரம்பிக்கும் போதே பிரச்சனையை பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக ,அதை தீர்க்க சிந்திக்க ஆரம்பித்து விடுவோம்.

என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய நிகழ்வு நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது நிகழ்ந்தது.படிப்பில் நான் சுமார் ரகம் தான்.ஆனால் முட்டாள் இல்லை.அதுவும் கணிதத்தில் தான் படுமோசம்.முதல் ஆறு மாதத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு கணித்தில் நான் எடுத்த அதிக மதிப்பெண்களே ஐந்து .இதை பார்த்த கணித ஆசிரியர் நான் தேறுவது கடினம் கடினம் என் நினைத்து என்னை தினமும் கும்ம ஆரம்பித்தார்.என்னை மாற்றுவதற்காக குட்டிக்கரணமே அடித்துப்பார்தார்.ஆனால் கணிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.இப்போதும் ஞாபகம் இருக்கிறது.ஹால்டிக்கெட் கொடுக்கும்போது எப்படியாவது பாஸாகிவிடு என்று என் ஆசிரியர் கூறியது.அதன் பின் நடந்ததெல்லாம் ஆச்சர்யம்.ஏனென்றால் முழு ஆண்டு தேர்வு முடிவில் கணிதத்தில் நான் எடுத்த மதிப்பெண் 190.இதைக் கேட்ட என் ஆசிரியருக்கு நம்பவே முடியவில்லை.பெயில் ஆகிவிடுவேன் என அவர் கணித்த மாணவன்   190 மதிப்பெண்கள். இதைவிட நூறு மதிப்பெண்கள்  எடுப்பார்கள் என ஆசிரியர் கணித்த பல மாணவர்கள் 160 கூட தாண்டவில்லை.

நடந்தது இது தான்.முழு ஆண்டு தேர்வுக்கு தயாராவதற்கு 20 நாட்கள் வரைக்கொடுத்திருந்தார்கள்.ஓராண்டில் படிக்காததை 20 நாட்களில் படிக்க ஒரு திட்டம் தீட்டினேன்.திட்டம் இதுதான்.அதுவரை வெளிவந்த அனைத்து கம்பெனிகளின் நோட்ஸ்களையும் மாதிரி வினாத்தாட்களையும் சேகரிப்பது.எதை எப்போது படித்து முடிக்கவேண்டும் என்ற விரிவான ஒரு செயல் திட்டம்.இதற்காக எத்தனையோ பழைய நோட்டு புத்தகக்கடைகளை ஏறி இறங்கினேன்.கணிதத்திற்கு மட்டும் எட்டு கம்பெனிகளின் நோட்ஸ்களை சேகரித்தேன்.

நோட்ஸ்,மாதிரிவினாத்தாட்கள் ஒரு கையில் ,எப்படி படிக்க வேண்டும் என்ற செயல் திட்டம் மறு கையில்.இருபது நாட்கள் திட்டமிட்ட கடின உழைப்பு.அந்த இருபது நாட்களில் நான் முழுவதுமாக மாறிப்போயிருந்தேன்.ஒவ்வொரு பரிட்சை எழுதும் போதும் துளிகூட சந்தேகமில்லாமல் எழுதினேன்.கணிதம் மட்டுமில்லாமல் இயற்பியல்,வேதியியல் என எல்லா பாடாத்திலும் மார்க்குகளை அள்ளிக்குவித்தேன்.அதுதான் என் வாழ்க்கையில் உண்மையாக என்னை உணர்ந்த தருணம்.வெற்றிச்சூத்திரத்தை கண்டறிந்த தருணம்.அன்றிலிருந்து எவ்வளவு பிரச்சனைகள் எனக்கு வந்தாலும் இந்த நிகழ்வை நினைத்துப்பார்பேன்.புது புத்துணர்ச்சி பிற்க்கும்.புதிதாய் பிறந்தது போல் இருக்கும்.சட்டென களத்தில் குதித்து போரட ஆரம்பித்து விடுவேன்.

திரும்பிப்பாருங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு கரடுமுரடான பாதைகள், எத்தனை சோகம்,எத்தனை கண்ணீர்,எத்தனை இன்னல்கள்.ஆனால் சோர்ந்து போகவில்லை.இதையெல்லாம் கடக்க வைத்தது யார்?இதையெல்லாம் தாங்கிக்கொண்டது யார்?கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது வேறு யாரும் இல்லை.நீங்கள் தான். வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் நீங்களும் ஹீரோ தான்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..