அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

எனர்ஜி டானிக்: நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் ஆள் நீங்கள் தான்

No comments
யார் யாரையோ,எதை எதையோ இந்த மனம் தெரிந்து கொள்ள துடியாய் துடிக்கிறது.மனமே நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்பதை தெரிந்து கொள்ள நான் துடியாய் துடிக்கிறேன்!!
 
என்னை என் மனைவி புரிந்து கொள்ளவில்லை,நண்பன் புரிந்து கொள்ளவில்லை,யாரும் புரிந்து கொள்ளவில்லை என புலம்பிக் கொண்டே நம்மில் பலர் தினமும் வாழ்க்கையை கடந்து கொண்டே இருக்கிறோம்.நம்மை மற்றவர்கள் புரிந்து கொண்டது ஒரு புறம் இருக்கட்டும்.நம்மை நாமே எவ்வளவு புரிந்து கொண்டு இருக்கிறோம்?நம்முடைய பலம், பலவீனம்,விருப்பு,வெறுப்புகள் என துளி துளியாக நமக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியும்.இதை தான் கிழக்கில் தன்னை அறிந்தவன் எல்லாம் அறிவான் என்றும்,தன்னை வென்றவன் உலகை வென்றவன் என்றும் கூறுவர்.

எவ்வளவோ தொழில்நுட்பம் பற்றி பேசிக்கொண்டும் ,படித்துக்கொண்டும் இருக்கிறோம்.ஆனால் நம்மால் ஒரு ரொட்டித்துண்டை போட்டால் அதை ரத்தமாகவும்,சதையாகவும் மாற்றக்கூடிய ஒரு தொழில்நுட்பமோ அல்லது கருவியோ கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் நம் உடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை சுலபமாக செய்கிறது.அப்படியே இன்றைய தொழில்நுட்பத்தில் இதை செய்து முடிக்க,நமக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இடைவேளி இல்லாமல் பல சிக்கலான கருவிகளை பயன் படுத்தினால் மட்டுமே இதை செய்து முடிப்பது சாத்தியம் என அறிவியல் கூறுகிறது. ஆனால்சரியாக ஒரு ஜான் வயிற்றுக்குள் இதெல்லாம் எந்த சத்தமுமில்லாமல் சுலபமாக நடக்கிறது.

ஒரு மிக்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் பத்து கல்லை போட்டு அரைத்துப் பாருங்கள்.அது தான் அந்த மிக்சியின் கடைசி காலம்.ஒரு கல்லை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள்,எந்த பிரச்சனையுமில்லை,முடிந்தால் அரைக்கும் இல்லையென்றால் ,அப்படியே வெளியே தள்ளிவிடும்.இதையே தொடர்ந்து செய்தால்  நம் உடல் அதற்கும் தன்னை பழக்கப் படுத்துக்கொள்ளும். இவ்வளவு அற்புதமான நம் உடலை நாம் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளோம்?

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நம் இதயம் நம்மை கேட்டு துடிக்கவில்லை,மனம் நம் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் மூளை நம்மை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.நம்மிடம் எந்த உத்தரவையும் எதிர்பார்ப்பதில்லை.மொத்தத்தில் ஒரு பத்து சதவீதம் தான் நம் உடலே நம் கட்டுப்பாட்டில் உள்ளது.சரி இதையெல்லாம் நாம்  தெரிந்து கொண்டோமா?

உடல் கண்ணுக்கு தெரிந்த மனம்,மனம் கண்ணுக்கு தெரியாத உடல்.இதை உணரும் போதே உடலும்,மனமும் கோவிலாகிவிடும்.இவ்வளவு அற்புதம் செய்யும் இந்த உடலை வணங்காமல்,உணராமல் கடவுளை, மற்றவரையோ வணங்கி என்ன பயன்?நாம் கண்டதை தின்று,தேவையில்லாதை நினைத்து இந்த கோவிலாகிய உடலையும்,மனதையும் அசுத்த படுத்திக்கொண்டிருக்கிறோம்.நம்மை நாம் வணங்கி மதிக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்.துள்ளியமாக நிலாவுக்கு போய்வர தெரிந்த நமக்கு, சாதாரண சாலையை விபத்தில்லாமல் கடக்க தெரியவில்லை.ஊருக்கே உடல் நலம் பற்றி கூறும் டாக்டருக்கு தன் பிரச்சனை தெரியவில்லை.பிரச்சனை  எங்கே இருக்கிறது?


நாம் தேடல் என வெளியே ,வெளியே என ஓடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரச்சனை உள்ளே தான் இருக்கிறது.மனைவியை புரிந்து கொள்ளும் முன்,நம்மை புரிந்து கொண்டிருந்தால்,பிரச்சனைக்கு அங்கே வாய்ப்பில்லை.குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அவ்வளவு முட்டாள்தனம் தன்னை அறியாமல் மற்றவர்களை குறை சொல்வது.அமைதியான குளத்தில் வெளியில் இருந்து யாரும் கல் எறியாமல் ஒழிய,குளத்தின் அமைதியை யாரும் கெடுக்க முடியாது.அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்க மனமென்னும் குளத்தில் கல்லெரிந்தவர்கள் யார் என்பதை ஆராயுங்கள்.



அந்த ஜென் குருவை சந்தித்து ஞானம் பெற ஒரு அரசன் வந்தான்.அவனை வரவேற்ற குரு.நீ இங்கு எப்படி வந்தாய்? என கேட்டார்.அதற்கு குதிரை வண்டியின் மூலம் வந்ததாக கூறினான்.அரசனை அழைத்து வாசலுக்கு சென்ற குரு, அரசனிடம்
வண்டியின் சக்கரத்தை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை, இது வெறும் சக்கரம் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை, அதை கழட்டிவிட ஆணையிட்டார்.அடுத்து குதிரையை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை இது வெறும் குதிரைகள் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை அந்த குதிரைகளை கழட்டிவிட ஆணையிட்டார்.இப்படியாக அச்சாணி,சாட்டை,வண்டி என ஒவ்வொன்றாக காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை என சொல்ல எல்லாவற்றையும் கழட்டிவிட சொன்னார்.கடைசியில் அங்கே ஒன்றும் இல்லாமல் இருந்தது.அப்போது அரசினிடம் நீ குதிரை வண்டியில் வந்ததாக சொன்னாயே எங்கே உன் வண்டி என்றார்?யோசிக்க ஆரம்பித்தான் அரசன் .

நான்,நான் என பேசிக்கொண்டே போகிறோம்.இந்த நான் தான் பிரச்சனைக்குரிய நபர்.அவர் தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதல் நபர்.நம்மை புரிந்து கொண்டாலே உலகத்தை புரிந்து கொண்டது மாதிரி.


உலகம் உன்னில் இருந்து ஆரம்பிக்கிறது,
நீயின்றி உலகில்லை,
புரிதலை உன்னில் இருந்து ஆரம்பி,
புரிந்து கொண்டபின்,
நீ உருவாக்கிய உலகத்தை உடைத்து விடு,
இப்போது ஒரே உலகம்,
அதில் நீ,நான்,நாம் என பாகுபாடில்லாமல்
தடம் தெரியாமல்,வாழ்ந்து மறைவோம்.


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..