அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

மக்களுக்காக நேரு எடுத்த பிச்சை?

No comments
நேற்று தினமலர் நாளிதளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அற்புதமான கட்டுரை.

"எனக்கு நாள்தோறும் வரும் மின்னஞ்சல்கள் ஒன்றில் ஓர் இளைய நண்பர் கேட்டிருந்தார். ''இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததனால் என்ன லாபம்? இங்கே ரயில் பாதைகளை அமைத்தவர்கள் துறைமுகங்களை கட்டியவர்கள், காவல் நிலையங்களையும், நீதிமன்றங்களையும் ஏற்படுத்தி சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டியவர்கள், தேசம் முழுக்க இணைக்கும் செய்தித் தொடர்பை உருவாக்கியவர்கள்.


''வலுவான நிர்வாக அமைப்பை கட்டி எழுப்பியவர்கள் பிரிட்டிஷார் தானே? அவர்களே நீடித்திருந்தால் இந்த நாடு இன்னும் முன்னேறியிருக்கும் அல்லவா? சுதந்திரம் கிடைத்த பிறகு நமக்கு என்ன வந்தது? எங்கு பார்த்தாலும் ஊழல், சுரண்டல். இந்த ஊழல்வாதிகளை விட வெள்ளைக்காரன் எவ்வளவோ மேல் அல்லவா?”


மூன்று மாதங்களுக்கொரு முறையாவது ஒரு இளைஞன் இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பதில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பரவலாக டீக்கடைகளில் புழங்கும் ஒரு கேள்வி இது. அரசியல் பற்றிப் பேசினாலே ''வெள்ளைக்காரன் ஆட்சி போய் கொள்ளைக்காரன் ஆட்சி வந்தது” என்று யாராவது ஒரு முதியவர் சொல்வதுண்டு. ஆனால் நாம் இதைச் சொல்லும் போது வரலாற்றை கொஞ்சமேனும் யோசிப்பதில்லை. வரலாற்று உணர்வுடன் கருத்துக்களை சொல்பவர்கள் நம்மிடம் மிக மிகக் குறைவு.


உண்மை என்ன? வெள்ளையர் ஆட்சி நம்மிடம் மேலே சொன்ன வளர்ச்சி களை உருவாக்கியது உண்மை தான். அது வெள்ளையர்களின் கொடை அல்ல. நவீன முதலாளித்துவத்தின் கொடை. அது உலகமெங்கும் ஒரே சமயம் உருவான வளர்ச்சி.


ஆனால் கூடவே வெள்ளையர் ஆட்சி மனிதகுல வரலாறு காணாத பெரும்பஞ்சங்களை இந்த நாட்டில் உருவாக்கியது. அதைப்பற்றி ஆங்கிலேய அறிஞர்களே மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள். அமர்த்தியா சென் அவர்கள் அப்பஞ்சங்களை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1769 முதல் இருபதாண்டுக்காலம், மீண்டும் 1837 முதல் இருபதாண்டுக்காலம் இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சங்கள் வந்தன.

இவற்றை தாதுவருஷ பஞ்சங்கள் என்று நம் முன்னோர் குறிப்பிட்டுஉள்ளனர். இவ்விரு பெரும் பஞ்சங்களுக்கு நடுவிலும் தொடர்ந்து பஞ்சங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. வெள்ளையர்கள் மிகத் தந்திரமாக, வங்கப்பஞ்சம், தக்காணப்பஞ்சம் என்று பிரித்து சிறு சிறு பஞ்சங்களாக மாற்றி வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்.


ஒட்டுமொத்தமாக சுமார் 150 ஆண்டுகாலம் இந்தியாவில் தொடர்ந்து பஞ்சம் இருந்தது என்பது தான் உண்மை. வெள்ளையர் வருவதற்கு முன்பு இங்கு சிறிய அளவில் பஞ்சங்கள் இருந்தன. பெரும்பஞ்சங்கள் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியே அந்தப்பெரும் பஞ்சங்களை உருவாக்கியது. அவை செயற்கைப்பஞ்சங்கள் என்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.


இந்திய நிலம் என்பது பருவக்காற்றுகளால் மழைபெறக்கூடியது. பருவக்காற்றுகள் பொய்த்துப் போகும்போது உணவுப்பஞ்சம் வருவது தலைமுறை தலைமுறையாக நடந்து வருவது தான். ஆகவே இந்தப்பஞ்சங்களை சமாளிக்கவும் ஒரு வழிமுறை இங்கே இந்தியா வில் இருந்தது. பஞ்சம் வரும்போது உணவு இருக்கும் இடங்களை நோக்கி இடம் பெயர்வது தான் அந்த வழிமுறை.


இந்தியா மிகப்பெரிய நாடாகையால் கிழக்குப்பகுதியிலே பஞ்சம் வந்தால் மேற்குப்பகுதியிலே விளைச்சல் அதிகம் இருக்கும். இரு தாது வருஷப்பஞ்சங்களின்போது இந்தியாவின் மேற்குபகுதிகளில் நல்ல விளைச்சல் இருந்தது. ஆனால் இந்த பாரம்பரியமான பஞ்சம் சமாளிக்கும் முறை பிரிட்டிஷ் ஆட்சியால் இல்லாமல் ஆக்கப்பட்டது எப்படி என்பதை பிரிட்டிஷ் ஆய்வாளரான ராய் மாக்ஸம் 'உப்புவேலி' என்ற பெயரில் எழுதியிருக்கிறார். தமிழில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு என்னுடைய முன்னுரையுடன் வந்துள்ளது. பிரிட்டிஷார் 1750-ல் இந்தியாவில் ஒரிஸ்ஸாவிலிருந்து காஷ்மீர் வரை இந்தியாவை நெடுக்காக பிளக்கும் ஒரு பெரிய வேலியை கட்டினார்.

இது உலக அளவில் கட்டப்பட்ட மிகப்பெரிய முள்மரவேலி. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாசல்களை அமைத்து சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தி சுங்கம் வசூலித்தார்கள். ஆகவே மேற்குப்பகுதியில் விளைந்த நெல் தானியங்கள் கிழக்கு பகுதியில் வந்த மாபெரும் பஞ்சத்திற்கு உதவ முடியாத நிலைமை ஏற்பட்டது.


மேலும் விசாகப்பட்டினம், மும்பை, நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற துறைமுகங்களை ரயில் பாதைகளால் இணைத்து, இங்கே விளைந்த தானியங்களை கொள்முதல் செய்து கப்பல்களில் ஏற்றி தங்கள் ஆதிக்கம் இருந்த பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றார்கள். அன்றைக்கு வெள்ளையர்கள் உலகம் முழுக்க நூற்றுக்கணக்கான போர் முனைகளில் உலகத்தை பிடித்து வெல்வதற்கான போர்களில் ஈடுபட்டிருந்தார்கள் அதற்கான உணவு முழுக்க இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. ஒரு பக்கம் மக்கள் செத்துக் குவிய மறு பக்கம் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவை அனைத்தையுமே இன்று ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி வருகிறார்கள்.

இப்பஞ்சங்களின் விளைவாக இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் செத்துக் குவிந்தனர்.


இந்தப் பஞ்சத்தில் முதல் பஞ்சத்தில் மூன்று கோடி பேர் செத்திருக்கலாம்; இரண்டாவது பஞ்சத்தில் ஏழு கோடி பேர் செத்தார்கள். அதே அளவு மக்கள் பஞ்சம் பிழைக்க அகதிகளாக கிளம்பி மொரிஷியஸ், நியூசிலாந்து, மலேசியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, கரீபியன் தீவுகள் என்று உலகம் முழுக்க பரவினார்கள் அவ்வாறு சென்ற இடங்களில் தொற்று நோயால் கூட்டம் கூட்டமாக செத்துக் குவிந்தனர்.


உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய பஞ்சங்கள் வந்ததில்லை. இத்தனை பேர் செத்து அழிந்ததும் இல்லை. இந்த சித்திரங்கள் அனைத்தையும் நான், 'வெள்ளையானை' என்ற நாவலில் விரிவாக அளித்திருக்கிறேன். நாகரீக காலம் என்று சொல்லக்கூடிய இந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் இத்தனை கோடிக்கணக்கில் பஞ்சத்தில் சாவதென்பது சாதாரண விஷயமல்ல. ஓரிருநாள் உணவு இல்லாவிட்டால் மனிதர்கள் சாவதில்லை, தொடர்ந்து பதினைந்து இருபது நாட்கள் ஒரு பிடி உணவு கிடைக்காமல் இருந்தால் மட்டும் தான் மனித உடல் உயிர் துறக்கும்.


பிரிட்டிஷ் கணக்குகளின்படியே ஒரு நாளில் கோவையில் மட்டும் இருபதாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னையில் ஒரு நாளில் முப்பத்தைந்தாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். தாதுவருஷக்கும்மி என்ற பெயரில் அன்றைக்கிருந்த அந்த பட்டினி சாவுகளை பாவலர்கள் பாடி வைத்திருக்கிறார்கள்.


இந்திய சுதந்திர போராட்டம் நடக்கும் போது கூட இந்தியா முழுக்க பெரும்பஞ்சம் நிலவியது. மதுஸ்ரீ முக்கர்ஜி என்னும் ஆய்வாளர் 'சர்ச்சில்ஸ் சீக்ரெட் வார்' என்ற நூலில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சர்ச்சில் பட்டினி மூலம் எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தை

அழிக்க முயன்றார் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார். 1942-ல் கூட இந்தியாவில் 30000 பேர் பஞ்சத்தில் செத்திருக்கிறார்கள்.


1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதே அரசு நிர்வாகம். பிரிட்டிஷ் காலத்தில் இருந்ததை விட மிக மோசமான பொருளியல் நிலைமை அரசாங்கத்திற்கு கருவூலம் என்ற ஒன்றே இல்லை. இருந்த நிதியாதாரங்களும் பாகிஸ்தானுடன் பாதியாக பங்கிடப்பட்டு விட்டன. இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்றார். ஆனால் ஒரு மனிதர் கூட சாகும்படி விடப்படவில்லை. உலகம் முழுக்க சென்று மன்றாடி கையேந்தி இரந்து நன்கொடையாக பெற்ற உணவை கஞ்சித்தொட்டிகளாக மாற்றி உணவளித்து எவரும் சாகாமல் பார்த்துக் கொண்டார் நேரு. கஞ்சித்தொட்டி இயக்கத்தின் நாயகன் என்று சொல்லப்படும் ஜெயப்ப்ரகாஷ் நாராயண் பீகார் பஞ்சத்தை ஒருவரும் சாகாமல் வெற்றிகரமாக சமாளித்தார்.


முதல் ஐந்தாண்டு திட்டத்தில் அணைக்கட்டுகளை எழுப்பி விவசாய நிலத்தின் பரப்பை பெருக்கி உணவு உற்பத்தியைக்கூட்டி வெறும் 25 ஆண்டுகளில் உணவு அளவில் தன்னிறைவான நாடாக இந்தியாவை மாற்ற நேருவால் முடிந்தது. இன்றும் இந்தியாவில் பட்டினி இருக்கிறது. ஆனால் பஞ்சத்தில் எவரேனும் செத்த செய்தி நம் காதில் விழுவதில்லை. 1947-க்கு முன்னால் இருந்தது ஒரு அந்நிய ஆட்சி. நாம் கோடிக்கணக்கில் செத்து விழுந்த போது அவர்கள் எந்த வகையிலும் கவலைப்படவில்லை. மாபெரும் திருவிழாக்களை நடத்தினார்கள். பிரம்மாண்டமான விருந்து களைக் கொண்டாடினார்கள். 1947க்கு பிறகு வந்தது நாம் தேர்ந்தெடுத்த அரசு ஆகவே தான் நாம் பஞ்சத்தில் தவிக்கும் போது பிரதமர் மாளிகையில் நேருவால் தூங்க முடியவில்லை.


இதுதான் நாம் சுதந்திரத்தால் பெற்ற நன்மை :அமெரிக்காவில் பிரிக்லி பல்கலைக்கழகத்தில் நூலகத்தில் ஒரு குறிப்பை பார்த்தேன் பஞ்சத்தில் இந்தியா அவதிப்பட்ட போது நேரு கலிஃபோர்னியா மாநிலத்திடம் உதவி யாசித்து கடிதம் எழுதினார். அவர்கள் நிதி திரட்டி அனுப்பினார்கள். அதற்கு நன்றி சொல்லி நேரு எழுதிய கடிதத்தில் 'இந்த பணத்தை எங்களால் திருப்பி தரமுடியாது எங்கள் அன்புக்காக சில நூல்களை அனுப்பியிருக்கிறோம். பெற்றுக்கொள்ளுங்கள்' என்று எழுதியிருக்கிறார்.


அந்தக் கடிதத்தை பார்த்த போது என் அருகே நின்றிருந்த அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் ஒருவர் 'பார்த்தீர்களா சார் நாம் பிச்சை கேட்டதை எல்லாம் ப்ரேம் போட்டு மாட்டி வைத்து நம்மை அவமதிக்கிறார்கள்?” என்றார். நான் சொன்னேன். ”நேரு பிச்சை கேட்டது தனக்காக அல்ல. தன்னவர்களுக்காக அல்ல. தன் நாட்டு மக்களுக்காக. தன் குடிமக்களில் ஒருவர் கூட சாகக்கூடாது என்று சொல்லி தன் சுயமரியாதையைக் கூட இழந்து பிச்சையெடுத்த ஒரு தலைவனை பெற்றிருக்கிறோம் என்பதற்காக நாம் பெருமிதம் அல்லவா அடைய வேண்டும்?”

எனக்கு கண்ணீர் இல்லாது அந்தக் கடிதத்தை படிக்க முடியவில்லை.


சுதந்திரத்தால் என்ன அடைந்தோம் என்றால் இதைத்தான். நமக்காக கவலைப்படும் ஒரு அரசை, அதற்கு தலைமை தாங்கும் தலைவரை. அத்தகைய அரசியல்வாதிகளை நாம் இழந்தோம் என்றால் அது நம்முடைய பிழை. நம்முடைய கையாலாத தன்மைக்கு, நேர்மையின்மைக்கு நாம் நம் முன்னோடிகளை குற்றம் சொல்கிறோம். அது இன்னமும் கீழ்மை.கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: -ஜெயமோகன் - jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in"

நன்றி
தினமலர்.
எழுத்தாளர் -- ஜெயமோகன்

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..