அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

காகிதங்களும் பேனாக்களும் - ஒரு காதல் ரொமான்ஸ்

1 comment
பேனாக்கள் கண்டிப்பாக
ஆண்கள்தான் - அவை
காகிதங்களின் அங்கங்களைப் பற்றி
தன் இச்சைகளை - அதன் மேல்
பச்சை குற்றிவிடுகின்றன.
காகிதங்களும் பேனாக்களின்
காதல் பரிசுகளை
ஏற்றுக்கொள்கின்றன.
உண்மையில் எழுத்துகள்
உயிரற்ற இரு பொருட்களின்
காதல் இச்சைகள்.

எழுத்துகளுக்கு மனித இனத்தில் பெரிய வரலாறு உண்டு.எழுத்துகள் சிறந்த அறிவு கடத்திகள்.அவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவுச்செல்வத்தை கடத்திச்செல்கின்றன.மனிதன் முதலில் மணலில் குறியீடுகளாக குறிக்க ஆரம்பித்தான்.பின் களிமண்ணில் எழுதி நெருப்பில் சுட்டு, சுட்ட எழுத்துகளை பயன்படுத்த ஆரம்பித்தான்.அதன் பின் பனையோலை,எழுத்தாணி என ஆரம்பித்து காகிதம்,பேனா என அதன் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது.

எழுதும் முறைகளோடு மனிதனும் பரிணமித்துக்கொண்டே வந்திருக்கிறான்.இவ்வளவு பெரிய பரிணாம வளர்ச்சி ஏதோ ஒரு ஆதிமனிதன் தன் உணர்ச்சியை,கற்பனையை பதிய முயற்சி செய்தலின் விளைவாக வந்திருக்கிறது.பெரிய ஆறுகள் கூட சின்ன சுனையிலிருந்து தான் தன் பயணத்தை தொடங்கின்றன.அது போல் எங்கோ ஆரம்பித்த தனிமனித எழுத்து முயற்சி காலம் என்னும் பரிணாம ஓடையில் மெருகேற்றப்பட்டு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

எழுத்து முயற்சியென்பது வெறும் மைகளால் காகிதங்களை நிரப்புவது அல்ல.எழுத்துகள் தனி மனிதனின் அனுபவக்குறியீடுகள்.ஒரு எழுத்தாளன் என்பவன் மேகம் சூழ்ந்த வானிலையில் மழைக்காக காத்திருக்கும் உழவன் போல கற்பனைக்காக காத்திருக்கிறான்.சில நேரம் கற்பனையும்,அனுபவமும் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடலாம் அல்லது பொய்த்தும் போகலாம்.ஆனாலும் அவன் பொறுமையாக இருக்கிறான்.எழுதுவது செயல் அல்ல.அது ஒரு தவம் என்பது அவனுக்கு தெரியும்.அனுபவம்,சிந்தனை,ஆழந்த ஞானம் என எல்லாம் ஒரு புள்ளியில் சந்திக்கும் அந்த ஒரு கணத்திற்காக காத்திருக்கிறான்.

எழுத்துகள் வெறும் குறியீடுகள் தான்.ஆனால் எழுத்துகளால் மனித உணர்வுகளை தூண்டமுடியும்.சிலவகை எழுத்துகள் உணர்வுகளை தூண்டி அனுபவிக்கச்செய்கின்றன.சிலவகை மூளையை சிந்திக்கச்செய்கின்றன.எல்லா எழுத்துகளும் ஒருவிதத்தில் மலைப்பாதையை போன்றவை.அவைகளை பின் தொடர்ந்து செல்லும் போது உச்சியில் இருக்கும், எழில்மிகு காடுகளையும்,கோட்டைகளையும், பள்ளத்தாக்கின் ரகசியங்களையும் ரசிக்க முடியும்.

எழுத்துகள் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல்பரிசுகள்.தனிமையான அறையில் எழுத்தாளன் காகிதத்தையும்,பேனாவையும் காதலிக்க விடுகிறான்.பேனாவின் கடிவாளத்தை தன்கையில் பற்றி கற்பனையோடு காத்திருக்கிறான்.சில நேரங்களில் இந்த காத்திருப்பு நீண்டுகொண்டே இருக்கும்.அடித்தலும் திருத்தலுமாய் காதல் ஆரம்பிக்கும்.பின் சிறிது சிறிதாக பேனா காகிதங்களின் அங்கங்களை பற்றி அதன் மேல் புரள ஆரம்பிக்கும்.அப்போது எழுத்தாளான் தேர்ந்த குதிரை ஓட்டி போல் பேனாவின் கடிவாளத்தை பற்றி காகிதங்களின் அங்கங்களில் பேனாவின் துணையோடு தன் கற்பனையை பச்சைகுற்றி விடுகிறான்.

ஒவ்வொரு எழுத்தாளானும் ஒருவகையில் சுயநலக்காரன்.அவன் ஒரு காதலை தன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறான்.கண்டிப்பாக பேனாக்கள் ஆண்கள்தான்.அவைகள் தன் கூரிய நகங்களால் காகிதங்களில் அங்கங்களில் கீறிவிடுகின்றன.காகிதங்கள் அழகான காதலிகள்.அவைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் காதலனை அரவணைத்துக்கொள்கின்றன.காகிதங்களுக்கும், பேனாக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைய குறைய எழுத்துகள் பரிணமிக்கின்றன.அதன் உயிர்தன்மை ,நிலைப்புத்தன்மை அவர்களின் காதல் வலிமையை சார்ந்தது.எழுத்துகள் உண்மையில் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல் பரிசுகள்.எல்லா எழுத்துகளும் ஒருவகையில் தாஜ்மகால்கள்.

படிக்கவேண்டிய புத்தகங்கள்








1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..