அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா

2 comments

எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு.நானும் கல்யாணம் ஆன புதுசுல ஊட்டிக்கு போலாம்னு பிளான் பன்னி இருந்தப்ப எங்க வீட்டுல விடல.அதுக்கப்பறம் குழந்தை , வேலைனு டூர் பத்தி நினைக்கறதுக்கே நேரம் இல்லாம போச்சு,சரி இந்தவாட்டி கொடக்கானல் போலாம்னு ஒரு சின்ன பிளான்  பன்னினேன்.பிளான் இது தான்.எனக்கு சனி,ஞாயிறு வார விடுமுறை.அதனால் வெள்ளிக்கிழமை மதியம் மூணு மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி ஏழு மணிக்குள்ள கொடைக்கானல் போய் சேரனும்.அங்க போய் ரூமும் வாடகை காரும் பிடிச்சு சனி ஞாயிறு இரண்டு நாள் ரிலாக்ஸா கொடைக்கானல என்ஜாய் பன்னனும்.ஆனா என் பிளான் எப்படியெல்லாம் சொதப்பி, நான் என்ன அனுபவிச்சேன் என்பது தான் இந்த கட்டுரை.

என்னுடைய பிளான்படி சரியா மாலை 3.30க்கு நான் , என் மனைவி ஒரு வயது மகள் மூவரும் ஆரப்பாளையம் பஸ்டாண்டிற்கு ஆட்டோவில் போய் சேர்ந்தோம்.அங்கே போய் விசாரித்த பிறகுதான் தெரிந்தது அங்கிருந்து கொடைக்கானலுக்கு நேர் வண்டி 5.20க்கு என்று.சரி அங்கிருந்து வத்தலகுண்டு சென்றால் கொடைகானலுக்கு வேகமாக போய்விடலாம் என்று அங்கிருந்து டீகடைக்காரர் சொன்னதால் நேராக வத்தலகுண்டு சென்றோம்.ஆனால் வத்தல்குண்டிலும் இதே நிலைமைதான்.அங்கிருந்தும் கொடைக்கானலுக்கு அடிக்கடி பஸ் இல்லை.வத்தலகுண்டில் பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் ஒரு வண்டி வந்தது.அந்த வண்டியில் நிற்ககூட இடமில்லை.ஆனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் அந்த வண்டியில் ஏறினோம்.

ஏறி பதினைந்தாவது நிமிடத்தில் என் மகள் அழ ஆரம்பித்தாள்.நானும் என் மனைவியும் நின்று கொண்டே என் மகளை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தோம்.ஆனால் அவளோ பஸ்ஸே ரெண்டாகும் அளவுக்கு கத்த ஆரம்பித்தாள்.தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி தன் பையில் இருந்த ஒரு சாக்லேட்டை என் மகள் கையில் கொடுத்தாள்.என்மகளும் சாக்லேட் தின்னும் ஆசையில் சமாதானமானாள்.ஆனால் எல்லாம் ஐந்து நிமிடம் தான்.மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

இதைப்பார்த்து என் மனைவி நின்று கொண்டிருந்த சீட் அருகில் இருந்த பெண்மணி கருணையோடு தன் சீட்டை என் மனைவிக்கு கொடுத்தார்.ஆனாலும் என் மகள் அழுகையை நிறுத்தவில்லை.வேறு வழி இல்லாமல் என் பையில் இருந்த டேப்லட் கணிணியை இயக்க ஆரம்பித்தாள் என் மனைவி.உடனே என் மகள் அழுகையை நிறுத்திவிட்டாள்.இதற்குள் பஸ் மலைப்பகுதியின் கால்வாசி தூரத்தை கடந்திருந்தது.திடீரென ஒரு வளைவில் பஸ் நின்றுவிட்டது.பஸ் முழுவதும் புகையால் நிரம்ப ஆரம்பித்தது.எல்லோரும் பஸ்ஸில் இருந்து வேகமாக இறங்கி சாலையில் நின்றோம்.இனி பஸ் நகராது என டிரைவர் சொல்லிவிட்டு மாற்று வண்டிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நானும் என் மனைவியும் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம்.என் மகளும் குளிரில் அழ ஆரம்பித்தாள்.ஆனால் அவளை சாமாதானம் செய்ய முடியாமல் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.அருகில் இருந்தவர்கள் போகும் வண்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏற ஆரம்பித்தார்கள்.பத்து நிமிட காத்திருப்புக்கு பின் தூரத்தில் ஒரு வேன் வந்து நின்றது.அது கல்லூரி மாணவிகளை ஏற்றிவரும் வேன் என்பதால் எங்களை  ஏற்ற மறுத்தார்கள்.ஆனால்கையில் குழந்தையுடன் கொட்டும் பனியில் நிற்பதை பார்த்து எங்களை ஏற்றிக்கொண்டார்கள்.என் மகளும் வேனில் ஏறியவுடன் அழுகையை நிறுத்திவிட்டாள். நான் டிரைவர் சீட் அருகிலும் என் மனைவி உள்ளே மாணவிகளுடன் போய் அமர்ந்து கொண்டாள்.

வண்டி மெதுவாக கொடைக்கானலை நெருங்கும் போது டிரைவர் என்னிடம் எங்கு இறங்க வேண்டும் என்றார்?நான் பஸ்டாண்ட் என்றேன். நீங்கள் ரூம் எடுத்துவிட்டீர்களா? என்றார். நான் இல்லை என்றேன்.உடனே அவர் ஒரு கார்டை என்னிடம்  காட்டி தாங்கள் லோக்கல் கொடைக்கானல் டிரைவர்கள் என்றும் ரூம் மற்றும் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்பவர்கள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.அது மட்டுமில்லாமல் கொடைக்கானலில் ஏமாற்றுபவர்கள் அதிகம் என்பதால் தாங்களே ரூம் ஏற்பாடு செய்யலாமா, என  கேட்டார்கள்?  நானும் சரி என தலையசைத்தேன்.உடனே கிளினர் யாருக்கோ போன் செய்து வரச்சொன்னார்.

வண்டி கொடைக்கானலை அடைந்ததும் அங்கே ஒருவர் எங்களுக்காக காருடன் காத்துக்கொண்டிருந்தார். நாங்கள் காரில் ஏறி பஸ்டாண்டில் இருக்கும் அவருடைய ஏஜன்ஸிற்கு சென்றோம்.அங்கே எந்த மாதிரி ரூம் வேண்டும் என்றார்.நான் சிங்கிள் பெட் உள்ள ரூம் வேண்டும் என்றேன்.அவர் தன் மேஜையின் மீது இருந்த அந்த ரூமின் போட்டோவை காட்டி இது ஓகேவா என் கேட்டார்?நானும் என் மனைவியும் ஓகே என்றோம்.அங்கிருந்து ஓட்டலுக்கு வந்த காரிலே சென்றோம்.ஓட்டலுக்கு சென்று பார்த்தால் எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் எங்களுக்கு போட்டோவில் காட்டிய அறைக்கும் நாங்கள் நேரில் பார்க்கும் அறைக்கும் சம்பந்தமே இல்லை.நாங்கள் ஏமாற்றப்பட்டதை நொந்து கொண்டு வேறு வழி இல்லாமல் அதே அறையில் தங்கினோம்.

 மறுநாள் காலையில் மீண்டும் அந்த ஹோட்டலின் ஓனர் எங்களை வந்து சந்தித்தார்.சுற்றிப்பார்க்க கார் அல்லது வேனை ஏற்பாடு செய்யட்டுமா என கேட்டார்? நான் யோசித்துக்கொண்டே நின்றேன்.உடனே தன் சட்டை பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து என்னிடம் நீட்டினார்.அதில் எந்ததெந்த இடங்களை எல்லாம் சுற்றி காட்டுவார்கள் என ஒரு லிஸ்ட் இருந்தது.அதுவும் தலைக்கு150,200,350 என பணத்தின் அடிப்படையில் மூன்று வகையாக இருந்தது. நானும் என் மனைவியும் 350 ரூபாய் வகையை தேர்ந்தெடுத்தோம்.அவர் அங்களிடம் பணத்தை வாங்கிவிட்டு வண்டி பத்து மணிக்கு வரும் என்றார்.நாங்களும் வேகமாக சாப்பிட்டுவிட்டு ரிசப்சனில் பத்து மணிக்கு காத்திருந்தோம்.மணி 10.30 ஆகியும் வண்டி வரவே இல்லை.போன் பன்னி கேட்டதற்கு பாரஸ்ட் ட்ரிப் என்பதால் காட்டிலகா அதிகாரிகளின் அனுமதி சீட்டிற்காக காத்திருப்பதாக சொன்னார்கள்.மூன்று முறை போன் செய்த பின்பு 11.30 ஒரு வேன் வந்து சேர்ந்தது.அதற்குள் ஒரு கைடு,டிரைவர் மேலும் எங்களைப்போல ட்ரிப் கேட்டிருந்தவர்களும் இருந்தார்கள்.

வண்டி சரியாக இரண்டு வளைவுகள் பயணம் செய்து ஒரு ஓரம் போய் நின்றது.அந்த இடம் தான்  கோக்கர்ஸ்வாக் எனவும் ,எதிரே இருப்பது பூங்கா எனவும் அதனதன் வரலாறை ஒரு நிமிடம்கூறி எல்லோரும் இரண்டையும் சுற்றி பார்த்துவிட்டு சரியாக ஒரு மணிக்கு வண்டி நிற்கும் இடத்திற்கு வருமாறு கூறினார்கள்.அந்த இரண்டு இடங்களுமே நாங்கள் இருந்த ஹோட்டலின் அருகில்தான் இருந்தது .நாங்கள் மறுபடியும் நொந்து கொண்டு இரண்டு இடங்களைசுற்றி பார்த்துவிட்டு வேன் நிற்கும் இடத்திற்கு வந்தோம்.அங்கிருந்து வேன் வேகமாக மலைக்காட்டிற்குள் பயணம் செய்ய ஆரம்பித்தது.போகும் வழியில் வண்டியில் இருந்தவாரே எல்லா இடங்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.பேருக்கு இரண்டே இடங்களில் இறக்கிவிட்டார்கள்.மதியம் உணவிற்கு மலை உச்சியில் தனியாக இருந்த ஒரு கடையில் இறக்கிவிட்டார்கள்.அங்கு சாப்பாடு மட்டும் இருந்தது.பொறியல் காலியாகியிருந்தது.ஆனால் விலையோ அறுபது ரூபாய்.என்ன சொல்ல வேறுவழியில்லாமல் சாப்பிட்டோம்.

அங்கிருந்து மறுபடியும் வேனில் புறப்பட்டு சரியாக நான்கு இடங்களை வேனில் இருந்தவாறே காட்டினார்கள்.பேருக்கு குணாக்குகையில் மட்டும்
இறக்கிவிட்டார்கள்.கடைசியில் எங்களை ஏரி கரையில் இறக்கிவிட்டு தலைக்கு ஐம்பது எக்ஸ்ட்ரா ஜார்ஜ் வாங்கிக்கொண்டார்கள்.கேட்டதற்கு டிரைவர்,கிளினர் சம்பளம் என்றார்கள்.உண்மையில் ஒரு மணி நேர வேன் பயணம் இதற்கு தலைக்கு இவர்கள் வாங்கிய பணம் 400.நாங்கள் உண்மையில் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.மறுநாள் காலை நாங்கள் எந்த ட்ரிப்பும் ஏற்பாடு செய்யாமல் நாங்களே நடந்து பார்க்,ஏரி என சுற்றிப்பார்த்து கொடைக்கானலில் இருந்து கீழே இறங்கினோம்.

உண்மையில் மொத்த கொடைக்கானல் டூரிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதுதான் உண்மை.இதற்கு நான் செய்த முட்டாள்தனமான பிளான்தான் காரணம்.ஆனால் என் மனதை உறுத்துவது ஒன்றேதான்.மனிதன் சகமனிதனை ஏமாற்றிவாழும் அந்த வாழ்க்கைதான்.பத்து ரூபாய்க்கு எத்தனை பொய் எத்தனை புரட்டு.தங்களை நம்பிவந்தவர்களை முதுகில் குத்தும் கூட்டத்தை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன்.ஆனாலும் இவ்வளவு கெட்ட மனிதர்கள் நடுவிலும் நிறைய நல்ல மனிதர்களையும் சந்தித்தேன்.

கொட்டும் பனியில் மலை ரோட்டில் கையில் குழந்தையுடன் லிப்ட் கேட்கும் போது வண்டியை நிறுத்தி இடம் கொடுத்த வேன் டிரைவர்.என் மகளுக்காக தான் உட்கார்ந்திருந்த இடத்தை கொடுத்த அந்த பெண்.அவ்வளவு பேருந்து கூட்டத்திற்கு நடுவிலும் என் மகளின் அழுகையை சமாதானப்படுத்த தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்துக்கொடுத்த கல்லூரி மாணவி என் நிறைய நல்ல மனங்களையும் சந்தித்தேன்.


மகாபாரத்தில் துரியோதனன் தலைமையிலான கெளரவர்கள் படை எல்லாவிதத்திலும் பெரியதாகவும், திறமையானவர்களை கொண்டதாகவும் இருந்தாலும்,ஏன் போர் சொல்லிக்கொடுத்த குருதேவரே அவன் பக்கம் இருந்தும் ஏன் தோற்றார்கள் என ஓசோவிடம் ஒரு கேள்விகேட்கப்பட்டது?

அதற்கு அவர் ஒரு மனிதன் ஒரு செயலை செய்யவோ அல்லது இலக்கையோ  அடையவோ திட்டமிடும் போது  இது இப்படிதான் நடக்கும் மிகுந்த நம்பிக்கை கொள்கிறான்.ஆனால் கண்ணுக்கு புலனாக சக்திகள் அதில் செயல்பட ஆரம்பிக்கும் போது எல்லாம் தலைகீழ் ஆகிவிடுகிறது.நினைப்பதொன்று நடப்பதொன்றாகி விடிகிறது.துரியோதனனும் தன் முழு திறமையுடன் திறமையான ஆட்களை தன் படையில் இணைத்து வெற்றி பெருவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டான்.ஆனால் கடவுள் கண்ணண் ரூபத்தில் வந்து எல்லாவற்றையும் மாற்றிப்போட்டுவிட்டார்.எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.தோற்கவேண்டியவன் ஜெய்த்துவிட்டான்,ஜெயிக்க வேண்டியவன் தோற்றுவிட்டான்.

உண்மையில் கொடைக்கானல் கிளம்பும்முன் இன்பச்சுற்றுலா என நினைத்தேன்.ஆனால் அதுவே துன்ப சுற்றுலாவாக மாறி  நல்ல அனுபவத்தை கொடுத்தது என்பதுதான் உண்மை.

மேலும் வாசிக்க

சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்




2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..