அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஜாலியாக ஜாவா கற்கலாம்:கணிப்பொறி செயலாக்கமுறை(computer programming)

3 comments

 கொள்கையோ அல்லது கோட்பாடோ அதை ஒரு மூன்று வயது பிள்ளைக்கு புரியவைக்க முடியவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை. 
                                                               -  ஐன்ஸ்டீன்



கணினித்துறை பற்றி எல்லோருக்கும் எளிதாக புரியும் படி எப்படி சொல்லாம் என பலமுறை யோசித்திருக்கிறேன்.கடந்த பத்து ஆண்டுகளாக இந்த துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.பலரும் இந்த கேள்வியை என்னிடம் கேட்டுள்ளனர்.ஏன் என் அப்பாவே ஒரு முறை, அப்படி என்ன செய்யுறீங்க?உங்களுக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் என்று கேட்டுள்ளார்?

கணினித்துறையில் பிரச்சனையே கலைச்சொற்கள்(keywords) கையாளும் விதம் தான்.
கணினித்துறையில் நிறைய கலைச்சொற்கள் உள்ளன.சிலவற்றிற்கு நேரடியாகவும், சிலவற்றிற்கு மறைமுகமாகவும் அர்த்தம் உண்டு.அது மட்டுமில்லாமல் எல்லாமே ஆங்கில கலைச்சொற்கள் என்பதால் அதை அவரவர் தாய் மொழியில் மொழிபெயர்ப்பது மிக கடினமாக உள்ளது.முதன் முதலில் நான் தமிழில் கணிப்பொறி படிக்க ஆரம்பித்த போது தமிழுக்கே தமிழ் அகராதி தேடி படிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.ஏனென்றால் எல்லா கலைச்சொற்களும் நடைமுறைக்கேற்ற சொற்களாகவும் இல்லை. அர்த்தமும் புரியவில்லை.முடிந்த அளவு மிக எளிதாகவும் ,புரிந்து கொள்ளும் படியும் எழுத இந்த கட்டுரையில் இருந்து முயற்சி செய்ய ஆரம்பித்துள்ளேன்.நிறைய விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.

கணினித்துறை பற்றி தெரிந்து கொள்ள முதலில் கணினி பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு முன் ஒரு சின்ன கதை படிப்போம்.சிறு வயதில் அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை படித்திருப்போம்.அதில் ஒரு பூதம் பல ஆண்டுகளாக விளக்கினுள் அடைபட்டு இருக்கும்.அலாவுதீன் அந்த பூதத்திற்கு சுதந்திரம் கொடுப்பார்.அதனால் அலாவுதீன் சொன்னதையெல்லாம் பூதம்  செய்யும்.ஆனால் சின்ன பிரச்சனை என்னவென்றால் பல ஆண்டுகளாக விளக்கினுள் அடைபட்டுக்கிடந்ததால் அந்த பூதத்திற்கு நடைமுறை வாழ்க்கைப்பற்றி அறிவில்லாமல் முட்டளாக செயல்படும்.உதாரணமாக சாப்பிட முழுக்கோழி வேண்டும்  என்றால் உயிருடன் முழுக்கோழி கொண்டுவரும்.எனவே பூதத்திற்கு எதையும் தெளிவாக விளக்கமாக எடுத்து சொல்ல வேண்டும்.அதாவது செய்முறையை தெளிவாக சொல்ல வேண்டும்.அதாவது  கீழ்கண்டவாறு


  • உயிருள்ள கோழியை பிடி
  • கொன்று ,தோல் மற்றும் தேவை இல்லாதவற்றை நீக்கு
  • தேவையான மசால் சேர்த்து எண்ணெயில் போட்டு பொரி


இப்படி தெளிவாக சொன்னால் மட்டுமே பூதம் சாப்பிடமுழுக்கோழி கொண்டுவரும்.சரி இப்போது கணிப்பொறிக்கு வருவோம்.

மேலே சொன்ன கதையில் உள்ள முட்டாள் பூதமும் ,நம் கணினியும் ஒன்று தான்.ஆனால் நாம் முறையாக கட்டளையிட்டு பயன்படுத்திக்கொண்டால் அற்புதங்கள் செய்யலாம்.கணிப்பொறிக்கு சுயமாக சிந்திக்கும் திறன் கிடையாது.ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்பதை நாம் தான் அதற்கு சொல்ல வேண்டும்.அதுவும் கணினி மொழியில்.உதாரணமாக இரண்டு எண்களை கூட்ட வேண்டும் என்றால் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற செயல்முறையை கீழ்கண்டவாறு கணினிக்கு சொல்ல வேண்டும்.

  • எண் ஒன்றை உள்ளீடாக பெறு
  • எண் இரண்டை உள்ளீடாக பெறு
  • இரண்டையும்  கூட்டு
  • விடையை திரையில் காண்பி


மேலே சொன்னவாறு எந்த ஒரு செயலையும் கணினி மொழியில் செய்முறையாக மாற்றுவதே கணிப்பொறி செயலாக்கமுறை(computer programming)

 
 கணிப்பொறி செயலாக்கம் (computer program)

கணிப்பொறி செயலாக்கமுறை  (computer programming)
                                                                                                                              .....தொடரும்









3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எனர்ஜி டானிக்:புறக்கணிக்க வேண்டிய போட்டிகளும் சவால்களும்

No comments
இந்த உலகம் போட்டிகள்  நிறைந்தது,அதற்காக போட்டி போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? இந்த உலகம் சவால்களால் நிறைந்தது,அதற்காக சவால் விட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன?போட்டிகளும்,சவால்களும் மனிதனின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எதற்கு போட்டி இடுகிறோம்?என்ன பெறப் போகிறோம்?என்ன இழக்கப் போகிறோம்? என்பது முக்கியம்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும்,ரஷ்யாவும் போட்டி போட்டுக்கொண்டுஅணு ஆயுதங்கள் தயாரித்து யார் பெரியவர் என மோதிக்கொண்டனர்.தற்போது தயாரித்த ஆயுதங்களை என்னசெய்வது என்று முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரோ ஒருவர் நம்மை விட சாதாரண பைக்கில் நம்மை முந்தும் போது உடனடியாக முந்த வேண்டும் என்ற உணர்ச்சி கொந்தளிப்பில் போட்டியிட்டு வாழ்க்கையை தொலைக்கிறோம்.இந்த வித போட்டியில் லாபம் ஒன்றும் இல்லை.ஆனால் இழப்பை பற்றி யோசிக்காமல் மரணத்தின் விளிம்பை தொட்டுவிட்டு வரும்  இந்த போட்டி தேவைதானா?

எதிர் வீட்டுக்காரி புதுச்சேலை வாங்கி விட்டால் என்பதற்காக சவால் விட்டு கடனுக்கு புதுச்சேலை எடுக்கும் இந்த பழக்கம் தேவைதானா?பக்கத்து வீட்டுக்காரன் வெளிநாடு சென்றுவிட்டான் என்பதற்காக நாமும் போட்டி போட்டுக்கொண்டு பார்க்கிற வேலையை விட்டு புது வேலைக்கு போவதா?
நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம், வாழ்க்கையில் எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது.ஒவ்வொரு போட்டியிலும் ,சவாலிலும் பெறும் ஆற்றலையும்,பொருளையும் நாம் இழக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.

இந்த உலகம் இயந்திரமயமானதிற்கு, இந்த போட்டிகளும் ஒரு காரணம்.ஒன்று முடிந்ததும் அடுத்தது.ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் என போட்டி போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். எல்லை தொட்டு திரும்பிப் பார்க்கும் போது  இழந்தவைகள் கண் முன்னே நிழலாடிக்கொண்டிருக்கின்றன.

ஒரு விசயத்தை புரிந்து கொண்டு பத்து மதிப்பெண்கள் எடுத்தால் கூட போதும்.ஆனால் புரியாமல் நூறு மதிப்பெண்கள் எடுத்தால் கூட பயன் இல்லை.போட்டி, சவால் என பிள்ளைகளை யோசிக்ககூட விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறோம்.போட்டியில் தோற்றால் வாழ்க்கையே தோல்வி என்பது போல் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

விளையாட்டு,சினிமா என எல்லாவற்றையும் தொலைத்து தொண்ணூற்று ஒன்பது மதிப்பெண் எடுத்து தேம்பி தேம்பி அழுபவனை கெட்டிக்காரன் என்பதா?நன்றாக விளையாடி,எல்லாவற்றையும் அனுபவித்து எழுபது மதிப்பெண் எடுத்து சிரிப்பவனை கெட்டிக்காரன் என்பதா?

போட்டிகளும்,சவால்களும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்,அதைவிட அவசியம் எல்லா லாப நஷ்டங்களையும் அலசி ஆராய்ந்து போட்டியிடும் கெட்டிக்காரத்தனம்.அந்த கெட்டிக்காரத்தனத்தோடு போட்டிகளையும்,சவால்களையும் கையாண்டால் வெற்றி நமதே.


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மொக்கை டாக்டர்கள் ஜாக்கிரதை

2 comments
உடலும், மனதும் நமது கட்டுப்பாட்டில் உள்ளவரை பிரச்சனையேதும் இல்லை.இரண்டில் எதில் பிரச்சனை என்றாலும் நாம் உடனடியாக அணுகும் முதல் நபர் மருத்துவர்.சரி எல்லா மருத்துவர்களும் திறமையானவர்கள் தானா? இந்த கேள்வி மிக மிக முக்கிமான ஒன்று.இக்கட்டான சூழலில் ஒரு மருத்துவரை நம்பி தான் நம் வாழ்வையே ஒப்படைக்கிறோம்.அந்த சூழலில் அவரின் திறமையின் மீது ஏற்படும் சிறு சந்தேகம் கூட நம் வாழ்க்கையை முடித்துவிடலாம்.

ஒப்புக்கு கூட ஒரு வகுப்பறையில் உள்ள எல்லா மாணவர்களும் திறமையானவர்கள் என்று கூற முடியாது.அதிக பட்சம் ஒரு பத்து சதவீதம் திறமையானவர்கள் என எதிர்பார்க்கலாம்.நிலைமை இப்படி இருக்கையில் மருத்துவம் படித்து வெளிவருபவர்கள் எல்லாம் திறமையானவர்கள் என எப்படிக் கூற முடியும்.அப்படியே திறமையானவர்கள் என்றாலும் கூட நாம் சந்திக்கப் போகும் மருத்துவர் திறமையானவர் என எப்படி நம்புவது?

திறமையான என என்ற வார்த்தையை ஏன் சுற்றி சுற்றி வருகிறோம் என்றால் இக்கட்டான சூழலில் பதற்றமில்லாமல் சரியான அணுகுமுறையை கையாள சாதாரண மருத்துவரை விட அசாதாரண மருத்துவரே முக்கியம்.எனவே நாம் சந்திக்கும் மருத்துவர் திறமையானவரா என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.இயல்பாகவே இரண்டுவிதமான மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன.இயல்பான நோய்க்கான மருத்துவம். உதாரணமாக காய்ச்சல்,ஜலதோஸம்,இருமல் ஆகியவற்றை இயல்பான நோய்கள் எனலாம்.நாட்பட்ட நோய்கான மருத்துவம். காசநோய்,உள்ளுறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை நாட்பட்ட நோய்கள் என கூறலாம்.

சாதாரண நோயோ,நாட்பட்ட நோயோ முதலில் மருத்துவரை அணுகும் முன் மருத்துவரை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.முதல் சந்திப்பிலே நோய் குணமாக வேண்டும் என எண்ணக்கூடாது.ஏனென்றால் முதல் சந்திப்பிலே குணமாக வேண்டும் என்றால் அதிக வீரியம் மிக்க மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.மருந்துகள் என்றாலே பக்கவிளைவுகள் உண்டு.எவ்வளவு சாப்பிடுகிறோமோ அவ்வளவு பக்கவிளைவு.சில டாக்டர்கள் அதிக வீரியம் மிக்க மாத்திரைகளை முதல் சந்திப்பிலே கொடுத்துவிடுகிறார்கள்.அப்போது தான் நோய் வேகமாக குணமாகி அவருக்கு நல்ல பேர் கிடைக்கும் என்பதால் அவ்வாறு செய்கிறார்கள்.

நன்றாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் உலகில் உள்ள எந்த மருத்துவருக்கும் உள்ளே சென்ற மருந்து என்ன மாதிரியான  விளைவுகளை தரும் என்பது தெரியாது.மருந்துகள் எல்லாமே வேதிப்பொருள்கள். இரண்டு மாத்திரைகளை சேர்த்து சாப்பிடும் போது என்ன மாதிரி செயல்படும் என்பதை யாராலும் சொல்லமுடியாது.அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இரண்டு மாத்திரைகளை ஆராய்ந்த போது, தனி தனியாக சாப்பிடும் போது எந்த பிரச்சனை இல்லை என்றும் ,சேர்த்து சாப்பிடும் போது ரத்ததில் சக்கரை அளவு கடுமை உயர்ந்ததை கண்டு பிடித்துள்ளார்கள்.

நம் நாட்டிலோ பல மாத்திரைகளை பொட்டலம் போல் கட்டித்தருகிறார்கள்.எங்கள் உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கிய போது வலி தெரியாமல் இருக்க வீரிய மிக்க வலி நிவாரணியை செலுத்தி உள்ளார்கள்.இதனால் தற்காலிக சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி வந்தார்.

கன்பூசியஸ் காலத்தில் மக்களுக்கு நோய் வராமல் இருக்க மருத்துவருக்கு பணம் கொடுப்பார்களாம்.நோய் வந்து விட்டால் அவருக்கு பணம் தருவதை நிறுத்திவிடுவார்களாம்.ஏனென்றால் நோய் வருவதை தடுக்காமல் விட்டது மருத்துவரின் குற்றமாம்.

நாம் வாழ்வதோ கன்பியூசனான காலம்.எங்ககிட்ட வாங்க, எங்ககிட்ட வாங்கனு மருத்துவமனைகளே விளம்பரப் படுத்தி அழைக்கிற காலம்.உள்ளே போன ஜட்டி, பனியன கூட கழட்டிட்டு விட்டுறுவாங்க .நாம் உயிர் வாழ்வது மருத்துவர்கள் கையில் ,அவர்களை சரியாக தேர்ந்தெடுக்காமல் நாம் மருத்துவம் பார்த்தால்  நம் கதி அதோ கதிதான்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மக்களுக்காக நேரு எடுத்த பிச்சை?

No comments
நேற்று தினமலர் நாளிதளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அற்புதமான கட்டுரை.

"எனக்கு நாள்தோறும் வரும் மின்னஞ்சல்கள் ஒன்றில் ஓர் இளைய நண்பர் கேட்டிருந்தார். ''இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததனால் என்ன லாபம்? இங்கே ரயில் பாதைகளை அமைத்தவர்கள் துறைமுகங்களை கட்டியவர்கள், காவல் நிலையங்களையும், நீதிமன்றங்களையும் ஏற்படுத்தி சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டியவர்கள், தேசம் முழுக்க இணைக்கும் செய்தித் தொடர்பை உருவாக்கியவர்கள்.


''வலுவான நிர்வாக அமைப்பை கட்டி எழுப்பியவர்கள் பிரிட்டிஷார் தானே? அவர்களே நீடித்திருந்தால் இந்த நாடு இன்னும் முன்னேறியிருக்கும் அல்லவா? சுதந்திரம் கிடைத்த பிறகு நமக்கு என்ன வந்தது? எங்கு பார்த்தாலும் ஊழல், சுரண்டல். இந்த ஊழல்வாதிகளை விட வெள்ளைக்காரன் எவ்வளவோ மேல் அல்லவா?”


மூன்று மாதங்களுக்கொரு முறையாவது ஒரு இளைஞன் இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பதில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பரவலாக டீக்கடைகளில் புழங்கும் ஒரு கேள்வி இது. அரசியல் பற்றிப் பேசினாலே ''வெள்ளைக்காரன் ஆட்சி போய் கொள்ளைக்காரன் ஆட்சி வந்தது” என்று யாராவது ஒரு முதியவர் சொல்வதுண்டு. ஆனால் நாம் இதைச் சொல்லும் போது வரலாற்றை கொஞ்சமேனும் யோசிப்பதில்லை. வரலாற்று உணர்வுடன் கருத்துக்களை சொல்பவர்கள் நம்மிடம் மிக மிகக் குறைவு.


உண்மை என்ன? வெள்ளையர் ஆட்சி நம்மிடம் மேலே சொன்ன வளர்ச்சி களை உருவாக்கியது உண்மை தான். அது வெள்ளையர்களின் கொடை அல்ல. நவீன முதலாளித்துவத்தின் கொடை. அது உலகமெங்கும் ஒரே சமயம் உருவான வளர்ச்சி.


ஆனால் கூடவே வெள்ளையர் ஆட்சி மனிதகுல வரலாறு காணாத பெரும்பஞ்சங்களை இந்த நாட்டில் உருவாக்கியது. அதைப்பற்றி ஆங்கிலேய அறிஞர்களே மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள். அமர்த்தியா சென் அவர்கள் அப்பஞ்சங்களை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1769 முதல் இருபதாண்டுக்காலம், மீண்டும் 1837 முதல் இருபதாண்டுக்காலம் இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சங்கள் வந்தன.

இவற்றை தாதுவருஷ பஞ்சங்கள் என்று நம் முன்னோர் குறிப்பிட்டுஉள்ளனர். இவ்விரு பெரும் பஞ்சங்களுக்கு நடுவிலும் தொடர்ந்து பஞ்சங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. வெள்ளையர்கள் மிகத் தந்திரமாக, வங்கப்பஞ்சம், தக்காணப்பஞ்சம் என்று பிரித்து சிறு சிறு பஞ்சங்களாக மாற்றி வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்.


ஒட்டுமொத்தமாக சுமார் 150 ஆண்டுகாலம் இந்தியாவில் தொடர்ந்து பஞ்சம் இருந்தது என்பது தான் உண்மை. வெள்ளையர் வருவதற்கு முன்பு இங்கு சிறிய அளவில் பஞ்சங்கள் இருந்தன. பெரும்பஞ்சங்கள் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியே அந்தப்பெரும் பஞ்சங்களை உருவாக்கியது. அவை செயற்கைப்பஞ்சங்கள் என்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.


இந்திய நிலம் என்பது பருவக்காற்றுகளால் மழைபெறக்கூடியது. பருவக்காற்றுகள் பொய்த்துப் போகும்போது உணவுப்பஞ்சம் வருவது தலைமுறை தலைமுறையாக நடந்து வருவது தான். ஆகவே இந்தப்பஞ்சங்களை சமாளிக்கவும் ஒரு வழிமுறை இங்கே இந்தியா வில் இருந்தது. பஞ்சம் வரும்போது உணவு இருக்கும் இடங்களை நோக்கி இடம் பெயர்வது தான் அந்த வழிமுறை.


இந்தியா மிகப்பெரிய நாடாகையால் கிழக்குப்பகுதியிலே பஞ்சம் வந்தால் மேற்குப்பகுதியிலே விளைச்சல் அதிகம் இருக்கும். இரு தாது வருஷப்பஞ்சங்களின்போது இந்தியாவின் மேற்குபகுதிகளில் நல்ல விளைச்சல் இருந்தது. ஆனால் இந்த பாரம்பரியமான பஞ்சம் சமாளிக்கும் முறை பிரிட்டிஷ் ஆட்சியால் இல்லாமல் ஆக்கப்பட்டது எப்படி என்பதை பிரிட்டிஷ் ஆய்வாளரான ராய் மாக்ஸம் 'உப்புவேலி' என்ற பெயரில் எழுதியிருக்கிறார். தமிழில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு என்னுடைய முன்னுரையுடன் வந்துள்ளது. பிரிட்டிஷார் 1750-ல் இந்தியாவில் ஒரிஸ்ஸாவிலிருந்து காஷ்மீர் வரை இந்தியாவை நெடுக்காக பிளக்கும் ஒரு பெரிய வேலியை கட்டினார்.

இது உலக அளவில் கட்டப்பட்ட மிகப்பெரிய முள்மரவேலி. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாசல்களை அமைத்து சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தி சுங்கம் வசூலித்தார்கள். ஆகவே மேற்குப்பகுதியில் விளைந்த நெல் தானியங்கள் கிழக்கு பகுதியில் வந்த மாபெரும் பஞ்சத்திற்கு உதவ முடியாத நிலைமை ஏற்பட்டது.


மேலும் விசாகப்பட்டினம், மும்பை, நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற துறைமுகங்களை ரயில் பாதைகளால் இணைத்து, இங்கே விளைந்த தானியங்களை கொள்முதல் செய்து கப்பல்களில் ஏற்றி தங்கள் ஆதிக்கம் இருந்த பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றார்கள். அன்றைக்கு வெள்ளையர்கள் உலகம் முழுக்க நூற்றுக்கணக்கான போர் முனைகளில் உலகத்தை பிடித்து வெல்வதற்கான போர்களில் ஈடுபட்டிருந்தார்கள் அதற்கான உணவு முழுக்க இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. ஒரு பக்கம் மக்கள் செத்துக் குவிய மறு பக்கம் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவை அனைத்தையுமே இன்று ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி வருகிறார்கள்.

இப்பஞ்சங்களின் விளைவாக இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் செத்துக் குவிந்தனர்.


இந்தப் பஞ்சத்தில் முதல் பஞ்சத்தில் மூன்று கோடி பேர் செத்திருக்கலாம்; இரண்டாவது பஞ்சத்தில் ஏழு கோடி பேர் செத்தார்கள். அதே அளவு மக்கள் பஞ்சம் பிழைக்க அகதிகளாக கிளம்பி மொரிஷியஸ், நியூசிலாந்து, மலேசியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, கரீபியன் தீவுகள் என்று உலகம் முழுக்க பரவினார்கள் அவ்வாறு சென்ற இடங்களில் தொற்று நோயால் கூட்டம் கூட்டமாக செத்துக் குவிந்தனர்.


உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய பஞ்சங்கள் வந்ததில்லை. இத்தனை பேர் செத்து அழிந்ததும் இல்லை. இந்த சித்திரங்கள் அனைத்தையும் நான், 'வெள்ளையானை' என்ற நாவலில் விரிவாக அளித்திருக்கிறேன். நாகரீக காலம் என்று சொல்லக்கூடிய இந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் இத்தனை கோடிக்கணக்கில் பஞ்சத்தில் சாவதென்பது சாதாரண விஷயமல்ல. ஓரிருநாள் உணவு இல்லாவிட்டால் மனிதர்கள் சாவதில்லை, தொடர்ந்து பதினைந்து இருபது நாட்கள் ஒரு பிடி உணவு கிடைக்காமல் இருந்தால் மட்டும் தான் மனித உடல் உயிர் துறக்கும்.


பிரிட்டிஷ் கணக்குகளின்படியே ஒரு நாளில் கோவையில் மட்டும் இருபதாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னையில் ஒரு நாளில் முப்பத்தைந்தாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். தாதுவருஷக்கும்மி என்ற பெயரில் அன்றைக்கிருந்த அந்த பட்டினி சாவுகளை பாவலர்கள் பாடி வைத்திருக்கிறார்கள்.


இந்திய சுதந்திர போராட்டம் நடக்கும் போது கூட இந்தியா முழுக்க பெரும்பஞ்சம் நிலவியது. மதுஸ்ரீ முக்கர்ஜி என்னும் ஆய்வாளர் 'சர்ச்சில்ஸ் சீக்ரெட் வார்' என்ற நூலில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சர்ச்சில் பட்டினி மூலம் எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தை

அழிக்க முயன்றார் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார். 1942-ல் கூட இந்தியாவில் 30000 பேர் பஞ்சத்தில் செத்திருக்கிறார்கள்.


1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதே அரசு நிர்வாகம். பிரிட்டிஷ் காலத்தில் இருந்ததை விட மிக மோசமான பொருளியல் நிலைமை அரசாங்கத்திற்கு கருவூலம் என்ற ஒன்றே இல்லை. இருந்த நிதியாதாரங்களும் பாகிஸ்தானுடன் பாதியாக பங்கிடப்பட்டு விட்டன. இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்றார். ஆனால் ஒரு மனிதர் கூட சாகும்படி விடப்படவில்லை. உலகம் முழுக்க சென்று மன்றாடி கையேந்தி இரந்து நன்கொடையாக பெற்ற உணவை கஞ்சித்தொட்டிகளாக மாற்றி உணவளித்து எவரும் சாகாமல் பார்த்துக் கொண்டார் நேரு. கஞ்சித்தொட்டி இயக்கத்தின் நாயகன் என்று சொல்லப்படும் ஜெயப்ப்ரகாஷ் நாராயண் பீகார் பஞ்சத்தை ஒருவரும் சாகாமல் வெற்றிகரமாக சமாளித்தார்.


முதல் ஐந்தாண்டு திட்டத்தில் அணைக்கட்டுகளை எழுப்பி விவசாய நிலத்தின் பரப்பை பெருக்கி உணவு உற்பத்தியைக்கூட்டி வெறும் 25 ஆண்டுகளில் உணவு அளவில் தன்னிறைவான நாடாக இந்தியாவை மாற்ற நேருவால் முடிந்தது. இன்றும் இந்தியாவில் பட்டினி இருக்கிறது. ஆனால் பஞ்சத்தில் எவரேனும் செத்த செய்தி நம் காதில் விழுவதில்லை. 1947-க்கு முன்னால் இருந்தது ஒரு அந்நிய ஆட்சி. நாம் கோடிக்கணக்கில் செத்து விழுந்த போது அவர்கள் எந்த வகையிலும் கவலைப்படவில்லை. மாபெரும் திருவிழாக்களை நடத்தினார்கள். பிரம்மாண்டமான விருந்து களைக் கொண்டாடினார்கள். 1947க்கு பிறகு வந்தது நாம் தேர்ந்தெடுத்த அரசு ஆகவே தான் நாம் பஞ்சத்தில் தவிக்கும் போது பிரதமர் மாளிகையில் நேருவால் தூங்க முடியவில்லை.


இதுதான் நாம் சுதந்திரத்தால் பெற்ற நன்மை :அமெரிக்காவில் பிரிக்லி பல்கலைக்கழகத்தில் நூலகத்தில் ஒரு குறிப்பை பார்த்தேன் பஞ்சத்தில் இந்தியா அவதிப்பட்ட போது நேரு கலிஃபோர்னியா மாநிலத்திடம் உதவி யாசித்து கடிதம் எழுதினார். அவர்கள் நிதி திரட்டி அனுப்பினார்கள். அதற்கு நன்றி சொல்லி நேரு எழுதிய கடிதத்தில் 'இந்த பணத்தை எங்களால் திருப்பி தரமுடியாது எங்கள் அன்புக்காக சில நூல்களை அனுப்பியிருக்கிறோம். பெற்றுக்கொள்ளுங்கள்' என்று எழுதியிருக்கிறார்.


அந்தக் கடிதத்தை பார்த்த போது என் அருகே நின்றிருந்த அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் ஒருவர் 'பார்த்தீர்களா சார் நாம் பிச்சை கேட்டதை எல்லாம் ப்ரேம் போட்டு மாட்டி வைத்து நம்மை அவமதிக்கிறார்கள்?” என்றார். நான் சொன்னேன். ”நேரு பிச்சை கேட்டது தனக்காக அல்ல. தன்னவர்களுக்காக அல்ல. தன் நாட்டு மக்களுக்காக. தன் குடிமக்களில் ஒருவர் கூட சாகக்கூடாது என்று சொல்லி தன் சுயமரியாதையைக் கூட இழந்து பிச்சையெடுத்த ஒரு தலைவனை பெற்றிருக்கிறோம் என்பதற்காக நாம் பெருமிதம் அல்லவா அடைய வேண்டும்?”

எனக்கு கண்ணீர் இல்லாது அந்தக் கடிதத்தை படிக்க முடியவில்லை.


சுதந்திரத்தால் என்ன அடைந்தோம் என்றால் இதைத்தான். நமக்காக கவலைப்படும் ஒரு அரசை, அதற்கு தலைமை தாங்கும் தலைவரை. அத்தகைய அரசியல்வாதிகளை நாம் இழந்தோம் என்றால் அது நம்முடைய பிழை. நம்முடைய கையாலாத தன்மைக்கு, நேர்மையின்மைக்கு நாம் நம் முன்னோடிகளை குற்றம் சொல்கிறோம். அது இன்னமும் கீழ்மை.கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: -ஜெயமோகன் - jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in"

நன்றி
தினமலர்.
எழுத்தாளர் -- ஜெயமோகன்

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை,ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.

No comments
 கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை
ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.
கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை,ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.

கோடை காலம்,இலையுதிர் காலம் என்பது போல் இது தேர்தல் காலம்.பட்டிதொட்டி எங்கும் ஒரே அரசியல் பேச்சு.தேர்தல் கூட்டணி,ஆளும் ஊழல்,எதிர் கட்சி ஊழல்,என இணையம் முழுவதும் ஒரே அரசியல் பேச்சு.ஆனால் இந்த தேர்தல் முன்பை போல் இல்லை.இணையத்தின் ஆழமான ஊடுருவல் மற்றும் கைப்பேசிகளின் தாக்கத்தால் சின்ன விசயம் கூட கடைக்கோடி குடிமகன்களிடம் வெகுவாகப் போய்ச்சேர்கிறது.இதில் முக்கியமான ஒரு விசயம் எல்லா நிகழ்வுகளும் நகைச்சுவையாகவே சித்தரிக்கப் படுகின்றன.

இன்றைய சூழலில் எல்லாஅரசியல் தலைவர்களும் கேளி கிண்டலுக்கு ஆளாகின்றனர்.உண்மையில் எல்லா தலைவர்களும் என்ன பேசுவதென்று விழி பிதுங்கி போய் இருக்கின்றனர்.அது மட்டுமில்லாமல் அவர்கள் பேசும் ஒவ்வொரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து பதில் போடஇணையத்தில் ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.அவர்கள் பேசும் சிறிய தவறான பேச்சு கூட அவர்கள் அரசியல் வாழ்க்கைக்கு சாவு மணியாக அமையக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் அவதாரம் எடுத்து நிற்கிறது.

இப்படி இன்றைய அரசியல் ஒரு கேளி கூத்தாகவே போய் கொண்டிருக்கிறது.எல்லா அரசியல் தலைவர்களையும் கோமாளியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒன்றை யோசிக்க மறந்துவிட்டோம்.நாளை தேர்தல் என்று வரும் போது இந்த கோமளிகளில் ஒருவரைதான் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.வேறு வழி இல்லை.இது அவர்களுக்கும் தெரியும் அதனால் தினம் ஒரு பேச்சு என தினுசு தினுசாக பொய் பேசித்திரிகிறார்கள்.நாமும் எல்லாவற்றையும் ஒரு காமடியாகவே பார்த்து போய்க்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் மூன்று மாதங்களுக்கு கோமாளிகளாக தெரிபவர்களுக்கு தேர்தல் முடிந்தபின் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாம் கோமாளிகளாக தெரிவோம்.ஆட்சி அதிகாரத்தில் எல்லாவற்றையும் சம்பாதித்துவிட்டு நம்மை அடிமையாகவே வைத்திருக்கும் அவர்கள் கோமாளிகளா? இல்லை எல்லா அதிகாரமும் கையில் இருந்து மாற்று அரசியலுக்கு வழியில்லாமல் ,பணத்தை வாங்கிக்கொண்டு சொத்தைகளுக்கு ஓட்டு போட்டு, பதவியில் அமர்த்தி குறை சொல்லி கொண்டிருக்கும் நாம் கோமாளிகளா?

இந்த நிலைமையை பார்க்கும் போது ஆப்பசைத்த குரங்கின் கதைதான் நியாபகம் வருகிறது.சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.கண்டிப்பாக சிரிக்க வேண்டிய காலத்தில் அழுவோம்.

பச்சைவேட்டிக்காரன் ஐந்நூறு
சிவப்புவேட்டிக்காரன் ஆயிரம்
கருப்பு,சிவப்பு வேட்டிகாரனிடம் முந்நூறுவென
எல்லாரிடம் பணம்வாங்கிக்கொண்டு
சிவப்புவேட்டிக்காரனுக்கு ஓட்டுப்போட்டு
காரணம் சொன்னால் அம்மா
சத்தியத்தை மீறக்கூடதென்று.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எனர்ஜி டானிக்: கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்

No comments
புத்திசாலிகள் உலகை ஆளுகிறார்கள்,
பலசாலிகள் அவர்களை பின் தொடர்கிறார்கள். 

கடுமையாக உழைத்தால் முன்னேறலாம்.புத்திசாலிதனமாக உழைத்தால் வேகமாக முன்னேறலாம்.கடுமையான உழைப்பும்,புத்திசாலிதனமும் இணையும் போது அற்புதம் நிகழ ஆரம்பிக்கும்.கடுமையாக எல்லோருக்கும் உழைக்க தெரியும்.ஆனால் எப்படி புத்திசாலிதனமாக செயல்படுவது?அதற்கு முன் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

எதையும் யோசிக்காமல் செய்ய ஆரம்பித்தால் கடுமையாக உழைப்பவர் என கொள்ளலாம்.யோசித்து தெளிவான திட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தால் புத்திசாலிதனமாக செயல்படுபவர் என கொள்ளலாம்.இதில் நீங்கள் எந்தவகை என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சரி எந்த விசயத்தையும் புத்திசாலிதனமாக அணுகுவது எப்படி?

  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை சுலபமாகவும்,எளிமையாகவும் செய்யக் கூடிய ஒரு வழி உள்ளது என்பதை மனதார நம்புங்கள்.இந்த வார்த்தையை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
  • உடனே சிந்திக்க ஆரம்பியுங்கள்,சிந்தனையில் வருபவற்றை மனதிலே குறித்துக்கொள்ளுங்கள்.எதையும் நல்லது,கெட்டது என சிந்தனை தடையில்லாமல் சிந்தியுங்கள்.
  • ஒரு சின்ன யோசனை கிடைத்த உடன் அதை உடனே திட்டமாக்குங்கள்.
  • இதைவிட ஒரு சிறப்பான, எளிய திட்டம் ஒன்று உள்ளது.அதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என மறுபடியும் மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.
  • இப்போது முதல் திட்டத்தை உருவாக்க என்னென்ன வழிமுறைகளை ,சிந்தனைகளை,பின்பற்றினோமோ அவற்றை மறுபடியும் பயன்படுத்தாமல் வேறு ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.இதை திரும்ப திரும்ப செய்து பலதிட்டங்களை உருவாக்குங்கள்.
  • எல்லா திட்டங்களில் உள்ள நல்லது கெட்டதை உங்கள் உள்ளுணர்வால் ஆராய்ந்து, எல்லாவற்றையும் இணைத்து இறுதி திட்டத்தை உருவாக்குங்கள்.
  • உங்கள் திட்டத்தை யாரிடமாவது விளக்கி தேவையான மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக உழையுங்கள்.
எதையும் யோசித்து செய்வதுதான் புத்திசாலிதனம்.எப்படி யோசிக்க வேண்டும் என்பதைதான் மேலே பார்த்தோம்.மேலே சொன்னவற்றை படிக்கும் போது சில ஆச்சர்யமான மனம் சார்ந்த விசயங்களை பார்க்கலாம்.
நம் மூளைதான் எல்லாவற்றையும் செய்கிறது.அது சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் சிறப்பாக ஊக்கப் படுத்தவேண்டும்.மற்றொன்று நம் உள்ளுணர்வு.தேர்தெடுக்கும் போது பகுத்தறிவைவிட உள்ளுணர்வுதான் சரியானதை தேர்ந்தெடுக்கிறது என அறிவியல் சொல்லுகிறது.எனவே நாம் புத்திசாலிதனமாக செயல்பட மனமும்,உள்ளுணர்வும் முக்கியம்.

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவரும் மரவெட்டிகள்.அதில் ஒருவர் பலசாலி. மற்றொருவர் புத்திசாலி.காலையில் மரம் வெட்ட சென்று மாலையில் திரும்பி வரும்போது யார் அதிகமாக மரம் வெட்டியது என எண்ணிப் பார்ப்பார்கள்.எப்போதும் புத்திசாலி நபர் தான் நாளின் இறுதியில் அதிக மரம் வெட்டியிருப்பார். இதை பார்த்த பலசாலி புத்திசாலியிடம் காரணத்தை இவ்வாறாக கேட்டார்.

"நான் காலையிலிருந்து மாலைவரை இடைவிடாமல் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். நீ யோ இடைவெளி விட்டு வெட்டிக் கொண்டிருக்கிறாய். ஆனால் நாளின் இறுதியில் நீதான் ஜெயிக்கிறாய். அதன் ரகசியிம் என்ன?" என்றார் ?

அதற்கு அந்த புத்திசாலி சொன்னார்
"நாம் தொடர்ந்து வெட்டும் போது சிறிது நேரத்தில் உடலும் மனமும் சோர்ந்து விடுகிறது, கோடாரியும் மழுங்கி விடுகிறது. அதனால் சிறிது ஓய்வு எடுத்து மரம் வெட்டுகிறேன்.ஓய்விலும் எனது கோடாரியை நான் கூர் தீட்டிக் கொண்டிருப்பேன். இதனால் மறுபடியும் முழு வீச்சுடன் வெட்ட ஆரம்பிப்பேன். இதனால் நாள் முழுவதும் முழு தெம்புடன் மரம் வெட்டுகிறேன். நாளின் இறுதியில் அதிகமான மரக்கட்டைகளை சேகரிக்கிறேன்.


மேலே உள்ள கதையில் சொன்னது போல் கடின உழைப்பை விட .புத்திசாலிதனத்துடன் கூடிய கடின உழைப்பே உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிலும் வெற்றி பெற கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்



No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

விஜய் மொல்லையா :- பணம் உள்ளவனுக்கே உலகம் சொந்தம்

No comments
"நீ யார் என்பது முக்கியமல்ல,பணம் உன்னிடம் உள்ளதா என்பது தான் முக்கியம்"



வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டு ஒடியதால் இன்று முதல் அவரை விஜய் மொல்லையா என அன்போடு அழைக்கலாம்.


9000 கோடி ரூபாய் அடித்துவிட்டு இன்னும் ஜம்பம் பேசி திரியும் விஜய் மல்லையாவை பாராட்டுவதா ! இல்லை நாம் இந்த மாதிரி உலகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைத்து வருந்துவதா? உண்மையில் இதை நினைத்தால் மிக வருத்தமாக உள்ளது.ஒரு லட்ச ரூபாய் கடன் தொகையை கட்டமுடியாத ஒருவரை குண்டர்களை வைத்து அடித்து துவத்த ஒரு வங்கி,1200 கோடி கடன் வாங்கியவனிடம் கடன் வசூலிக்க முடியாமல் மன்டியிட்டு கதறிக்கொண்டு இருக்கிறது.இந்த அனுபவம் எனக்கும் ஒரு முறை ஏற்பட்டது.


அது நம் நாட்டின் பெயரை கொண்ட ஒரு தேசிய வங்கி.அவர்களிடம் வீடு கட்ட நான்கு லட்ச ரூபாய் கடன் கேட்ட போது அந்த வங்கி மேலாளர் பேசிய பேச்சை கேட்டால், நாம் என்னவோ கடவுளின் பினாமியிடம் கடன் கேட்டது போன்று இருந்தது.இத்தனைக்கும் நான் முறையாக வரி செலுத்தும் குடிமகன்.அந்த வங்கியில் இருந்து தான் 10 வருடமாக சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த மேலாளர் சொன்னார்,தம்பி நான்கு லட்சம் எல்லாம் சின்ன விசயம்,வேண்டும் என்றால் 20 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள்.அது மட்டும் இல்லாமல் எங்கள் வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.தயவு செய்து வேறு வங்கியில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.இவை எல்லாம் வழக்கம் போல் பல வார  அலைச்சலுக்கு பின் கிடைத்த பதில்கள்.

இப்போது அதே வங்கிதான் நம் கதநாயகனுக்கு 1200 கோடி கொடுத்து முதலிடத்தில் உள்ளது.இதை நினைக்கும் போது ட்விட்டரில் நண்பர் ஒருவர் போட்ட காமடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

லோன் வாங்க லோ லோவென அலையவிட்ட வங்கிகளை,இப்போது
கடன் வசூலிக்க லோ லோவென அலையவிடும் விஜய் மல்லையாவை வாழ்த்துகிறோம்.

உண்மையில் நம் நாட்டில் பணம் உள்ளவருக்கு தான் சட்டம் முதல் அரசியல் வரை சலாம் போடுகிறது.பலகோடி மதிப்புள்ள நிலங்களை அரசே மானிய விலையில் ஒரு தொழில் அதிபருக்கு வழங்குகிறது.ஒரு தொழில் அதிபரின் மகன் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை கார் ஏற்றிக்கொன்று சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்.பல கோடி ஊழல் செய்தவர்களை,
பல கோடி வரி ஏய்ப்பு செய்தவர்களை நம் சட்டத்தால் ஒன்றும்  செய்ய முடியவில்லை.இதைக்கூட அரசியல் கட்சிகள் பணக்காரன் ,ஏழை என அரசியல் பேசி அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் பார்க்கும் போது கீழே உள்ள பாடல் தான் ஞாபகம் வருகிறது.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

அண்டாவை காணோம்

No comments
அண்டாவை காணோம் என்பது போல் இப்போதெல்லாம் விமானங்கள் காணாமல் போவது சர்வ சாதாரணமாகிவிட்டது.காணாமல் போனது கூட பரவாயில்லை. அதை கண்டுபிடிக்கிறோம் என்கிற பெயரில் மெகா சீரியல் ரேஞ்சுக்கு செய்திகள் வெளியிடுகிறார்கள் சம்பந்தப்பட்ட நாடுகளும் அதன் விமான நிறுவனங்களும்.கூகுள் மேப்பில் தன் வீடு தெரிகிறதா?தன் பைக் தெரிகிறதா? என்று தேடிச் செல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையான விசயம்.நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் விமானங்கள் காணாமல்  போவதற்குரிய காரணங்களை வெளியிட்டிருந்தது.அதில் ஒரு செய்தி இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

அதாவது பயணிகள் விமானத்தை ஓட்டுவதற்கு குறைந்த பட்சம் 1500 முதல் 3000 மணி நேரமாவது பயிற்சி செய்து ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் உள்ள விமானிகள் அதிக பட்சம் 100 மணி நேரம் தான் பயிற்சி பெற்றிருப்பதாகவும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு எப்படி செயல்படுவது என்பது தெரிவதில்லை என்று ஓய்வு பெற்ற விமானி கூறுகிறார்.இதில் வேடிக்கையான விசயம் பேட்டியளித்த விமானி வெறும் முப்பது மணிநேரமே பயிற்சி பெற்றதாக ஒப்புக்கொண்டார்.இதனால் கடுமையான பனிபொழிவு , சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு நடுவே எப்படி செயல் படுவது என்று முதலில் தெரியவில்லை என்றும், பின்னர் அனுபவத்தில் கற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

சரியா சொன்ன நம்மள வச்சு தான் அவங்க விமானத்தை ஓட்டி பழகுறாங்க!அட பதறுங்களா நீங்க லோடுவச்சு ஓட்டி பழக நாங்க தான் கிடைச்சோமா?



No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எனர்ஜி டானிக்: நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் ஆள் நீங்கள் தான்

No comments
யார் யாரையோ,எதை எதையோ இந்த மனம் தெரிந்து கொள்ள துடியாய் துடிக்கிறது.மனமே நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்பதை தெரிந்து கொள்ள நான் துடியாய் துடிக்கிறேன்!!
 
என்னை என் மனைவி புரிந்து கொள்ளவில்லை,நண்பன் புரிந்து கொள்ளவில்லை,யாரும் புரிந்து கொள்ளவில்லை என புலம்பிக் கொண்டே நம்மில் பலர் தினமும் வாழ்க்கையை கடந்து கொண்டே இருக்கிறோம்.நம்மை மற்றவர்கள் புரிந்து கொண்டது ஒரு புறம் இருக்கட்டும்.நம்மை நாமே எவ்வளவு புரிந்து கொண்டு இருக்கிறோம்?நம்முடைய பலம், பலவீனம்,விருப்பு,வெறுப்புகள் என துளி துளியாக நமக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியும்.இதை தான் கிழக்கில் தன்னை அறிந்தவன் எல்லாம் அறிவான் என்றும்,தன்னை வென்றவன் உலகை வென்றவன் என்றும் கூறுவர்.

எவ்வளவோ தொழில்நுட்பம் பற்றி பேசிக்கொண்டும் ,படித்துக்கொண்டும் இருக்கிறோம்.ஆனால் நம்மால் ஒரு ரொட்டித்துண்டை போட்டால் அதை ரத்தமாகவும்,சதையாகவும் மாற்றக்கூடிய ஒரு தொழில்நுட்பமோ அல்லது கருவியோ கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் நம் உடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை சுலபமாக செய்கிறது.அப்படியே இன்றைய தொழில்நுட்பத்தில் இதை செய்து முடிக்க,நமக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இடைவேளி இல்லாமல் பல சிக்கலான கருவிகளை பயன் படுத்தினால் மட்டுமே இதை செய்து முடிப்பது சாத்தியம் என அறிவியல் கூறுகிறது. ஆனால்சரியாக ஒரு ஜான் வயிற்றுக்குள் இதெல்லாம் எந்த சத்தமுமில்லாமல் சுலபமாக நடக்கிறது.

ஒரு மிக்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் பத்து கல்லை போட்டு அரைத்துப் பாருங்கள்.அது தான் அந்த மிக்சியின் கடைசி காலம்.ஒரு கல்லை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள்,எந்த பிரச்சனையுமில்லை,முடிந்தால் அரைக்கும் இல்லையென்றால் ,அப்படியே வெளியே தள்ளிவிடும்.இதையே தொடர்ந்து செய்தால்  நம் உடல் அதற்கும் தன்னை பழக்கப் படுத்துக்கொள்ளும். இவ்வளவு அற்புதமான நம் உடலை நாம் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளோம்?

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நம் இதயம் நம்மை கேட்டு துடிக்கவில்லை,மனம் நம் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் மூளை நம்மை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.நம்மிடம் எந்த உத்தரவையும் எதிர்பார்ப்பதில்லை.மொத்தத்தில் ஒரு பத்து சதவீதம் தான் நம் உடலே நம் கட்டுப்பாட்டில் உள்ளது.சரி இதையெல்லாம் நாம்  தெரிந்து கொண்டோமா?

உடல் கண்ணுக்கு தெரிந்த மனம்,மனம் கண்ணுக்கு தெரியாத உடல்.இதை உணரும் போதே உடலும்,மனமும் கோவிலாகிவிடும்.இவ்வளவு அற்புதம் செய்யும் இந்த உடலை வணங்காமல்,உணராமல் கடவுளை, மற்றவரையோ வணங்கி என்ன பயன்?நாம் கண்டதை தின்று,தேவையில்லாதை நினைத்து இந்த கோவிலாகிய உடலையும்,மனதையும் அசுத்த படுத்திக்கொண்டிருக்கிறோம்.நம்மை நாம் வணங்கி மதிக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்.துள்ளியமாக நிலாவுக்கு போய்வர தெரிந்த நமக்கு, சாதாரண சாலையை விபத்தில்லாமல் கடக்க தெரியவில்லை.ஊருக்கே உடல் நலம் பற்றி கூறும் டாக்டருக்கு தன் பிரச்சனை தெரியவில்லை.பிரச்சனை  எங்கே இருக்கிறது?


நாம் தேடல் என வெளியே ,வெளியே என ஓடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரச்சனை உள்ளே தான் இருக்கிறது.மனைவியை புரிந்து கொள்ளும் முன்,நம்மை புரிந்து கொண்டிருந்தால்,பிரச்சனைக்கு அங்கே வாய்ப்பில்லை.குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அவ்வளவு முட்டாள்தனம் தன்னை அறியாமல் மற்றவர்களை குறை சொல்வது.அமைதியான குளத்தில் வெளியில் இருந்து யாரும் கல் எறியாமல் ஒழிய,குளத்தின் அமைதியை யாரும் கெடுக்க முடியாது.அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்க மனமென்னும் குளத்தில் கல்லெரிந்தவர்கள் யார் என்பதை ஆராயுங்கள்.



அந்த ஜென் குருவை சந்தித்து ஞானம் பெற ஒரு அரசன் வந்தான்.அவனை வரவேற்ற குரு.நீ இங்கு எப்படி வந்தாய்? என கேட்டார்.அதற்கு குதிரை வண்டியின் மூலம் வந்ததாக கூறினான்.அரசனை அழைத்து வாசலுக்கு சென்ற குரு, அரசனிடம்
வண்டியின் சக்கரத்தை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை, இது வெறும் சக்கரம் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை, அதை கழட்டிவிட ஆணையிட்டார்.அடுத்து குதிரையை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை இது வெறும் குதிரைகள் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை அந்த குதிரைகளை கழட்டிவிட ஆணையிட்டார்.இப்படியாக அச்சாணி,சாட்டை,வண்டி என ஒவ்வொன்றாக காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை என சொல்ல எல்லாவற்றையும் கழட்டிவிட சொன்னார்.கடைசியில் அங்கே ஒன்றும் இல்லாமல் இருந்தது.அப்போது அரசினிடம் நீ குதிரை வண்டியில் வந்ததாக சொன்னாயே எங்கே உன் வண்டி என்றார்?யோசிக்க ஆரம்பித்தான் அரசன் .

நான்,நான் என பேசிக்கொண்டே போகிறோம்.இந்த நான் தான் பிரச்சனைக்குரிய நபர்.அவர் தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதல் நபர்.நம்மை புரிந்து கொண்டாலே உலகத்தை புரிந்து கொண்டது மாதிரி.


உலகம் உன்னில் இருந்து ஆரம்பிக்கிறது,
நீயின்றி உலகில்லை,
புரிதலை உன்னில் இருந்து ஆரம்பி,
புரிந்து கொண்டபின்,
நீ உருவாக்கிய உலகத்தை உடைத்து விடு,
இப்போது ஒரே உலகம்,
அதில் நீ,நான்,நாம் என பாகுபாடில்லாமல்
தடம் தெரியாமல்,வாழ்ந்து மறைவோம்.


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..