அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

நன்றிசொல் காதலுக்கு

காதல் வந்தால்
காற்றின் ஆக்சிஜன்
குறைந்து போகும்
கால்கள் மறையும்
சிறகுகள் முளைக்கும்
காற்றில் பறப்பாய்
இதே உடலில்
மறுபிறவி எடுப்பாய்

கலைக்கண் திறக்கும்
தேடல் ஆரம்பிக்கும்
வார்த்தைகளை வளைப்பாய்
வண்ணங்களில் தோரணம் கட்டுவாய்
மலரை ரசிப்பாய்
நிலவை முட்டுவாய்
இதயத்தை பங்குபிரிப்பாய்
தனி உலகில்
வாழ ஆரம்பிப்பாய்
மண்ணைமுட்டி வெளிவந்த
புதியவிதை போல
பூமியை பார்ப்பாய்

எமனுடன் போட்டிபோட்டு
உலகம் சுற்றிவருவாய்
கண்ணில் கண்ட
கற்களை சிலையாக்குவாய்
ஒளியின் வேகத்தில்
கற்பனை செய்வாய்
பூமி சிறியதாகி
பிரபஞ்சத்தில் பறப்பாய்
அன்பென்னும் பிரபாகம்
பொங்கிப்பெருகி கருணையால்
உலகை நனைப்பாய்
ஆதலால் நன்றிசொல்
காதலுக்கு!

தமிழனின் பொங்கல்

மேகம் மழைபொழிய
நிலமெல்லாம் ஈரமாக
கையில் கலப்பை எடுத்து
கம்பீர காளை பூட்டி
இடுப்பில் கோவணம் கட்டி
ஆழ உழுத்திட்டோம்
மார்கழியில் கதிரறுக்க

மாரியம்மா துணையிருக்க
மும்மாரி மழைபொழிய
கதிரவன் துணையிருக்க
மார்கழியும் வந்ததடி
மனசெல்லாம் குளிர்ந்ததடி
பசித்த வயித்துக்கெல்லாம்
வயிறாற சோறுபோட
பூமித்தாய் கொடுத்ததடி

தையும் வந்ததடி
பொங்கலும் வந்ததடி
பொங்கலாம் பொங்கல்
நாளுநாள் பொங்கல்
அள்ளிகொடுத்த அன்னைக்கு
தமிழனின் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
போகிப் பொங்கல்
பசியெல்லாம் போக்கி
மனஅழுக்கெல்லாம் போக்கி
பழசெல்லாம் பறந்துவிட
புதுவெள்ளம் பாய்ந்துவிட
மக்கள் குறைபோக்க
தமிழனின் பொங்கல்
போகிப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
தைப் பொங்கல்
அன்னம் கொடுத்த
பூமி அன்னைக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
தைப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
களத்து மேட்டிலும்
ஜல்லி கட்டிலும்
துள்ளி விளையாடிய
காளைகளுக்கு
நன்றி தெரிவிக்கும்
தமிழனின் பொங்கல்
மாட்டுப் பொங்கல்

பொங்கலாம் பொங்கல்
கணுப் பொங்கல்
உற்ற சுற்றங்களை
வரவேற்றும்
களைபிடுங்கி
நாத்து நட்டு
கதிரறுத்து சுமைதூக்கிய
பெண்டீருக்கும்
நன்றி தெரிவிக்கும்

தமிழனின் பொங்கல்
கணுப் பொங்கல்

பொங்கலும்தான் பொங்குது
சந்தோஷம் பொங்குது
பசித்த உயிர்க்கெல்லாம்
சந்தோஷம் பொங்குது
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

மொழி வணக்கம்

ஒலிக்கும் மொழிகளில்
இனிக்கும் மொழியாய்
இசைக்கும் ஒலிகளில்
இனிக்கும் தேனாய்
பிறந்த மழலை
மெல்லும் சொல்லாய்
கட்டிக் கரும்பில்
இனிக்கும் தேனாய்

வானாய்,மண்ணாய்
ஊனாய்,உயிராய்
அன்னை ஊட்டிய
சுவை அமுதாய்
கொஞ்சும் மகளிர்
இதழில் பெருகும்
இன்பத்தேனாய்
வாழ்விலும் வளர்ச்சியிலும்
உன்மடி சாய்த்து
என்னை வளர்க்கும்
தமிழ் அன்னையே
உன்னை வணங்குகிறேன்!


என்ன செய்யபோகிறாய்?

உனக்காக கவிதை செய்து
வார்த்தைகளும் வற்றிவிட்டன
உனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!




ஜன்னல்

காலைத்தென்றல்
குயிலின் சத்தம்
மாலைச் சூரியனென
பூத்துக்குலுங்கிய
என் வீட்டு ஜன்னல்
உன்னைப் பார்த்ததுமுதல்
உன் நிழற்படம் ஆனதடி.

இப்போதும் அழகு
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது
ஜன்னலின் வெளியே
ஆனால் ரசிக்க மனமில்லை!

அழகாய் தெரிந்த ஜன்னல்
சிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!

காலம்

காலமென்னும் ஆற்றினிலே
கூழாம் கற்களாய்
ஓடுகின்ற வாழ்க்கையிது
யார் சொல்லியும் கேட்பதில்லை
யாருக்கும் நிற்பதில்லை
விழித்தவன் கரை சேர்கிறான்
மற்றவன் அடித்துச் செல்லப்படுகிறான்

முன்னது முடிந்தது
பின்னது வரப்போவது
இரண்டுக்குமிடையில்
ஒரு புள்ளி ஊஞ்சலாட்டம்
இந்த ஓடம்
எல்லையில்லா வெளியில்
எல்லை தெரியாமல்
அசைந்துகொண்டே முடிகிறது.

சுருக்கவும் வழியில்லை
நீட்டவும் வழியில்லை
கரைபுரண்ட வெள்ளமாய்
கண்ணுக்கு சிக்கமால்
பலரின் வாழ்க்கையை கரைத்து
கையில் சிக்காமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது.

விதை

நீரில்லா பாலையிலே
நாவல் மரமொன்று
வெயிலோடு போராட
பழுத்த நாவலொன்று
சூரைக்காற்றில் மண்ணில் விழ

சுட்டெரிக்கும் வெயிலும்
கொந்தளிக்கும் மணலும்
பழத்ததனை வறுத்தெடுக்க
நீர்வற்றி , உடல் வற்றி
விதையென ஆனதென்ன?
கனலின் நடுவே பிறந்த
பிள்ளையை வெயிலே
வறுத்தெடுப்பதென்ன?

அப்பக்கம் வந்ததோர்
வெள்ளாட்டுக் கூட்டமோ
பிள்ளையை மித்தெடுக்க
அதிலோர் வெள்ளாடு
பிள்ளையை மேய்ந்துவிட
வெள்ளாட்டின் குடலில்
பிள்ளையின் போராட்டமென்ன?

வெள்ளாட்டுக் கூட்டத்தை
இடையனோ வயலில் பட்டியிட
வெள்ளாடோ புழுக்கையிட
விதையும்தான் விழுந்ததடி
உழவனின் மிதிகொஞ்சம்
காளையின் மிதிகொஞ்சம்
விதையும்தான்  புதைந்ததடி மண்ணிலே!

கார் இருள் , கடும் அழுத்தம்
அம்மாவின் கருவறையில்
இருந்த அதே சூழல்
அப்போது சுகமாய்
இப்போது போராட்டமாய்
தோலெல்லாம் கிழிந்து
உடலெங்கும் ரணமாய்
உயிர்வாழும் வைராக்கியம் எஞ்சிருக்க

வந்ததோர் மழைகாலம்
ஒருதுளி மழைநீர் உற்சாகப்படுத்த
மண்ணை துளைத்து
பொங்கி எழுந்தது
விண்ணைமுட்ட!

முதியோர் இல்லம்

வாழ்க்கையென்னும் கடலில்
போராடி கரைசேர்த்தவர்களுக்கு
பிள்ளைகளின் அன்புபரிசு
முதியோர் இல்லம்!

காதல் ரணம்

ரசித்த இதயத்தை
துடிக்க வைக்கிறாய்
மலர் கொடுத்த என்னை
முள்ளால் குத்துகிறாய்
பஞ்சணையில் தூங்கியவன்
இப்போது பனிகொட்டும் ரோட்டில்
சிறகடித்து பறந்தவன்
சிறகொடிந்து நிற்கிறேன்
போதும் கொன்றுவிடு!!

பார்வையற்ற ஜோடி

விழியிருந்தும் ஒளியில்லை
இருந்தாலும் தடையில்லை
வழிகாட்டி ஒருகையில்
வாழ்க்கைத்துணை மறுகையில்
அன்பின் ஒளியில்
தொடர்கிறது வாழ்க்கைப்பயணம்!