அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

எனர்ஜி டானிக்:புறக்கணிக்க வேண்டிய போட்டிகளும் சவால்களும்

No comments
இந்த உலகம் போட்டிகள்  நிறைந்தது,அதற்காக போட்டி போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? இந்த உலகம் சவால்களால் நிறைந்தது,அதற்காக சவால் விட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன?போட்டிகளும்,சவால்களும் மனிதனின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எதற்கு போட்டி இடுகிறோம்?என்ன பெறப் போகிறோம்?என்ன இழக்கப் போகிறோம்? என்பது முக்கியம்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும்,ரஷ்யாவும் போட்டி போட்டுக்கொண்டுஅணு ஆயுதங்கள் தயாரித்து யார் பெரியவர் என மோதிக்கொண்டனர்.தற்போது தயாரித்த ஆயுதங்களை என்னசெய்வது என்று முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரோ ஒருவர் நம்மை விட சாதாரண பைக்கில் நம்மை முந்தும் போது உடனடியாக முந்த வேண்டும் என்ற உணர்ச்சி கொந்தளிப்பில் போட்டியிட்டு வாழ்க்கையை தொலைக்கிறோம்.இந்த வித போட்டியில் லாபம் ஒன்றும் இல்லை.ஆனால் இழப்பை பற்றி யோசிக்காமல் மரணத்தின் விளிம்பை தொட்டுவிட்டு வரும்  இந்த போட்டி தேவைதானா?

எதிர் வீட்டுக்காரி புதுச்சேலை வாங்கி விட்டால் என்பதற்காக சவால் விட்டு கடனுக்கு புதுச்சேலை எடுக்கும் இந்த பழக்கம் தேவைதானா?பக்கத்து வீட்டுக்காரன் வெளிநாடு சென்றுவிட்டான் என்பதற்காக நாமும் போட்டி போட்டுக்கொண்டு பார்க்கிற வேலையை விட்டு புது வேலைக்கு போவதா?
நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம், வாழ்க்கையில் எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது.ஒவ்வொரு போட்டியிலும் ,சவாலிலும் பெறும் ஆற்றலையும்,பொருளையும் நாம் இழக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.

இந்த உலகம் இயந்திரமயமானதிற்கு, இந்த போட்டிகளும் ஒரு காரணம்.ஒன்று முடிந்ததும் அடுத்தது.ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் என போட்டி போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். எல்லை தொட்டு திரும்பிப் பார்க்கும் போது  இழந்தவைகள் கண் முன்னே நிழலாடிக்கொண்டிருக்கின்றன.

ஒரு விசயத்தை புரிந்து கொண்டு பத்து மதிப்பெண்கள் எடுத்தால் கூட போதும்.ஆனால் புரியாமல் நூறு மதிப்பெண்கள் எடுத்தால் கூட பயன் இல்லை.போட்டி, சவால் என பிள்ளைகளை யோசிக்ககூட விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறோம்.போட்டியில் தோற்றால் வாழ்க்கையே தோல்வி என்பது போல் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

விளையாட்டு,சினிமா என எல்லாவற்றையும் தொலைத்து தொண்ணூற்று ஒன்பது மதிப்பெண் எடுத்து தேம்பி தேம்பி அழுபவனை கெட்டிக்காரன் என்பதா?நன்றாக விளையாடி,எல்லாவற்றையும் அனுபவித்து எழுபது மதிப்பெண் எடுத்து சிரிப்பவனை கெட்டிக்காரன் என்பதா?

போட்டிகளும்,சவால்களும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்,அதைவிட அவசியம் எல்லா லாப நஷ்டங்களையும் அலசி ஆராய்ந்து போட்டியிடும் கெட்டிக்காரத்தனம்.அந்த கெட்டிக்காரத்தனத்தோடு போட்டிகளையும்,சவால்களையும் கையாண்டால் வெற்றி நமதே.


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..