அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

Showing posts with label எனர்ஜி டானிக். Show all posts
Showing posts with label எனர்ஜி டானிக். Show all posts

எனர்ஜி டானிக் : கடினமானதை தேர்ந்தெடுங்கள்

மிக எளிதான விசயம்,மிக கடினமான விசயம் ரெண்டில் ஒன்றை தேர்ந்தெடிக்கச் சொன்னால், எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
மிகச்சிறப்பான ஒருஅணி,மிகச்சுமாரான ஒரு அணி இரண்டில் ஒன்றுக்கு தலைமை தாங்கச் சொன்னால்,எதற்கு தலைமை தாங்குவீர்கள்?பெரும்பாலும் சிறப்பான ஒன்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுப்போம்.உண்மையில் சிறப்பான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான வெற்றி பெறலாம்.சுமாரான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான அனுபவத்தையும், வாழ்க்கை பாடத்தையும் கற்கலாம்.

வாழ்க்கைக்கு வெற்றியை விட சிறப்பான அனுபவமும், கற்ற பாடமும் மிக அவசியம்.சின்ன வயதில் தெரிந்தோ ,தெரியாமலோ இந்த பழக்கம் என்னிடம் இருந்தது.கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டாக இருந்தாலும் மிகச் சுமாரான அணியின் பக்கம் சேர்ந்து விளையாடுவது பழக்கமாக இருந்தது.இப்போது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது என்னுடைய பழக்கத்தினால் நான் கற்ற படங்கள் என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் எனக்கு மிக உறுதுணையாக இருக்கின்றன.

தொடர் தோல்விகள்

மிகச் சுமாரான அணியாக இருப்பதால் தொடர் தோல்விகள் என்பது நிதர்சனம்.மிக அரிதாகவே வெற்றி கிட்டும்.தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் தானாக ஏற்பட்டுவிடும்.தொடர் தோல்விகளை கூட தாங்கிக்கொள்ளும் மனோ திறன் ஏற்படும்.மொத்த அணியுமே முன்னேறாத வரை வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற பாடம் புலப்படும்.

கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்றுக்கொடுப்பது

மிகச்சிறப்பான அணிக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள  ஆரம்பிப்போம்.நம்முடைய ஆட்டத்திறனும் மெருகேர ஆரம்பிக்கும்.மெது மெதுவாக கற்றவற்றை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு கற்றுக்கொடுக்க ஆரம்பிப்போம்.நம்மை அறியாமலே ஒரு நிபுணனாக ஆரம்பிப்போம்.நிபுணன் ஆன பின் பயிற்சியாளராக மாறி மொத்த அணிக்கு சொல்லிக்கொடுப்போம்.

விமர்சனங்களை புறந்தள்ளுதல்

திறமையான அணியோடு மோதும் போது விமர்சனங்கள் வருவது சாதாரணம்.எள்ளி நகையாடுதல்,மோசமான வார்த்தைகள் அல்லது கோபத்தை தூண்டும் நடத்தைகள் என எல்லாம் அருவியாக பொழியும்.எல்லாவற்றையும் பொறுமையாக, திறமையாக கையாளும் போது  வெற்றியின் ரகசியங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

ஒரு அணியாக ஆடுவது

தனி மனிதனாக எவ்வளவுதான் சிறப்பானதாக ஆடினாலும்,ஒரு அணியாக ஆடினால் தான் வெற்றிகிட்டும்.அணியில் ஒருவரின் சிறு தவறுகூட மொத்த அணியின் வெற்றியை பாதிக்கும்.தனிமனித திறமையை குழுவின் திறமையே வெற்றிக்கு முக்கியம்.

பலம் மற்றும் பலவீனங்கள்

சுமாரான அணியாக இருப்பதால் நம்முடைய பலவீனங்கள் எளிதில் தெரிய ஆரம்பிக்கும்.தனி மனிதனின் பலங்களை வைத்து, அணியின் பலவீனத்தை மறைப்பதே  விளையாட்டின் தந்திரம் என்பது புரிய ஆரம்பிக்கும்.இறுதியில் தன்னம்பிக்கை மிக்க மனிதனாக இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற ஒற்றை வசனத்துடன் போராட ஆரம்பிப்போம்.

ஒரு சுமாரான அணியோடு வாழ ஆரம்பித்தை என் வாழ்க்கை எத்தனையோ பாடங்களை மனதில் விட்டுச்சென்றது.வெற்றிக்காக ஆடாமலும்,தோல்விக்காக அழமாலும் எல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கம் என மனதை பண்படுத்திவிட்டது.வாழ்க்கையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் வாழ்க்கையை ரசிக்க பழகிக் கொண்டேன்.வாழ்க்கையில் நம்முடைய சிறு தேர்வு நம்மை எங்கையோ கொண்டு சென்றுவிடுகிறது.தேர்ந்தெடுக்கும் போது கடினமானதையே தேர்ந்தெடுப்போம்.வாழ்க்கை  நம்மை செதுக்க அனுமதி அளிப்போம்.




எனர்ஜி டானிக் : எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்

எதிர்வினையில்லை என்றால் நாம் இறந்துவிட்டதாக அர்த்தம்


சின்னதாகவோ, பெரியதாகவோ நம்மைச் சுற்றி பல தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.வெறும் செய்திகளாகவும் பொழுதுபோக்கும் சம்பவமாகவும் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்.சின்னதாக ஒரு எதிர்ப்பை நாம் மனதுக்குள் கூட சொல்லிக்கொள்ள மாட்டோம்.இது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை வியாதி போல் பரவி உள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது.

பெற்றோர்கள் செய்யும் தவறை பிள்ளைகள் எதிர்த்து சொல்லக்கூடாது.ஆசிரியர்கள்  தவறை மாணவர்கள் எதிர்த்து சொல்லக்கூடாது என அடிப்படையிலே எல்லாவற்றையும் அமுக்கி நசுக்கி ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டோம்.ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் யாருக்கோ நடந்தது போல் வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

பக்கத்து நாட்டில் கொத்து கொத்துதாக மக்கள் அகதிகளாக கொல்லப்படுகின்றனர்.பக்கத்து மாவட்டத்தில் விவசாய நிலங்களை நசுக்கி கார்பரேட் கம்பெனிகள் அபகரிக்கின்றன.பக்கத்தில், தூரத்தில் என பாகுபாடில்லாமல் தனிமனித சுதந்திரங்கள்,வாழ்வுரிமை பறிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.செய்யாத தவறைக்கூட எடுத்து சொல்ல வழியில்லாமல் கூனிக்குறுகி கடந்து கொண்டிருக்கின்றோம்.

எதிர்க்கமாட்டார்கள் என தெரிந்தே அரசியல்வாதிகள் பொய்மேல் பொய் கூறி நம்மை இழிச்சவாயகர்களாக வைத்திருக்கிறார்கள்.எதிர்க்கமாட்டார்கள் என் தெரிந்தே கார்ப்பரேட் கம்பனிகள் கலப்பட பொருளையும் தர குறைந்த பொருளையும் தலையில் கட்டுகிறார்கள்.நாம் எதிர்க்காமலே இருந்ததால் நம்மை 200 வருடங்களாக அடிமைகளாகவே வைத்திருந்தார்கள்.

காந்தி என்ற மாபெரும் மனிதரே நிறவெறிக்கெதிராக சின்ன எதிர்ப்பை காட்டியதால் தான் உருவானார்.அன்று தென்னாப்பிரிக்காவில் காந்தியை  நிறவெறியை காரணம் காட்டி முதல் வகுப்பில் பயணம் செய்வதை  தடுத்தை காந்தி எதிர்த்திருக்காவிட்டால் காந்தி என்ற மனிதர் உருவாகியிருக்க மாட்டார்.இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்காது.கார்ல்மார்க்ஸ் மட்டும் முதலாளித்துவத்தை எதிர்த்திருக்காவிட்டால் சமத்துவம் கிடைத்திருக்காது.பல தனிமனித எதிர்ப்புகளின் விளைவுகள் தான் இன்று நாம் வாழும் நவீன உலகம்.

எதிர்ப்பு என்பது எதிராளியின் மனதை தூண்டுவதாக இருக்க வேண்டும்.நம் எதிர்ப்பு எதிராளியை  சிந்திக்க செய்து தன் குற்றத்துக்காக கூனி குறுக்கச் செய்ய வேண்டும் என காந்தி கூறுகிறார்.தவறுகளை பார்த்து தப்பி ஓட வேண்டாம்.இது தவறு என சொன்னால் கூட போதும்.துப்பாக்கி தூக்கி போராட வேண்டாம்,ஒரு பேப்பரை எடுத்து எதிர்ப்பை எழுதி பிரசுரித்தால் போதும்.

ஒன்றை எதிர்க்க ஆரம்பிக்கும் போதே நம்மை நாம் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.மற்றவர்களை எதிர்க்க ஆரம்பிக்கும் முன் தான் சரியாக இருக்கிறோமா என காந்தி தன்னை தானே கேட்டுக்கொண்டார்.தன்னை சரி செய்ய ஆரம்பித்தார்.மகாத்மா ஆனார்.சாவு ஒரு முறைதான்.ஆனால் எப்படி சாகிறோம் என்பது முக்கியம்.எதிர்க்காமல் உள்ளே புழுங்கி வெந்து நொந்து சாவதை விட எதிர்த்து விட்டு சந்தோஷமாக சாகலாம்.குனிந்து குனிந்து வாழ்ந்து நமக்கு இருப்பது முதுகுதண்டா? ரப்பர்துண்டா? என்ற வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


எதிர்த்து பழகுங்கள்,உலகமே நமக்கு எதிராக இருந்தாலும்.
எதிர்த்து பழகுங்கள்.பயம் நம்மைவிட்டு ஓடும் வரை.
எதிர்த்து பழகுங்கள்,நாம் உயிர்ப்பு தன்னையுடன் வாழ்வதற்காக
எதிர்த்து பழகுங்கள்,நாம் விழிப்போடு  வாழ்வதற்காக.
எதிர்த்து பழகுங்கள்,நம் முட்டாள்தனங்ககளை தெரிந்து கொள்ள.
எதிர்த்து பழகுங்கள்,கடவுளின் உதவியில்லாமல் வாழ.
எதிர்த்து பழகுங்கள்,சிலருக்கு கடவுளாக இருக்க.


சரியோ தவறோ எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்.

இதோ அற்புதமான பாரதியின் பாடல் வரிகள்
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

எனர்ஜி டானிக்:புறக்கணிக்க வேண்டிய போட்டிகளும் சவால்களும்

இந்த உலகம் போட்டிகள்  நிறைந்தது,அதற்காக போட்டி போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? இந்த உலகம் சவால்களால் நிறைந்தது,அதற்காக சவால் விட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன?போட்டிகளும்,சவால்களும் மனிதனின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எதற்கு போட்டி இடுகிறோம்?என்ன பெறப் போகிறோம்?என்ன இழக்கப் போகிறோம்? என்பது முக்கியம்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும்,ரஷ்யாவும் போட்டி போட்டுக்கொண்டுஅணு ஆயுதங்கள் தயாரித்து யார் பெரியவர் என மோதிக்கொண்டனர்.தற்போது தயாரித்த ஆயுதங்களை என்னசெய்வது என்று முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரோ ஒருவர் நம்மை விட சாதாரண பைக்கில் நம்மை முந்தும் போது உடனடியாக முந்த வேண்டும் என்ற உணர்ச்சி கொந்தளிப்பில் போட்டியிட்டு வாழ்க்கையை தொலைக்கிறோம்.இந்த வித போட்டியில் லாபம் ஒன்றும் இல்லை.ஆனால் இழப்பை பற்றி யோசிக்காமல் மரணத்தின் விளிம்பை தொட்டுவிட்டு வரும்  இந்த போட்டி தேவைதானா?

எதிர் வீட்டுக்காரி புதுச்சேலை வாங்கி விட்டால் என்பதற்காக சவால் விட்டு கடனுக்கு புதுச்சேலை எடுக்கும் இந்த பழக்கம் தேவைதானா?பக்கத்து வீட்டுக்காரன் வெளிநாடு சென்றுவிட்டான் என்பதற்காக நாமும் போட்டி போட்டுக்கொண்டு பார்க்கிற வேலையை விட்டு புது வேலைக்கு போவதா?
நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம், வாழ்க்கையில் எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது.ஒவ்வொரு போட்டியிலும் ,சவாலிலும் பெறும் ஆற்றலையும்,பொருளையும் நாம் இழக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.

இந்த உலகம் இயந்திரமயமானதிற்கு, இந்த போட்டிகளும் ஒரு காரணம்.ஒன்று முடிந்ததும் அடுத்தது.ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் என போட்டி போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். எல்லை தொட்டு திரும்பிப் பார்க்கும் போது  இழந்தவைகள் கண் முன்னே நிழலாடிக்கொண்டிருக்கின்றன.

ஒரு விசயத்தை புரிந்து கொண்டு பத்து மதிப்பெண்கள் எடுத்தால் கூட போதும்.ஆனால் புரியாமல் நூறு மதிப்பெண்கள் எடுத்தால் கூட பயன் இல்லை.போட்டி, சவால் என பிள்ளைகளை யோசிக்ககூட விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறோம்.போட்டியில் தோற்றால் வாழ்க்கையே தோல்வி என்பது போல் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

விளையாட்டு,சினிமா என எல்லாவற்றையும் தொலைத்து தொண்ணூற்று ஒன்பது மதிப்பெண் எடுத்து தேம்பி தேம்பி அழுபவனை கெட்டிக்காரன் என்பதா?நன்றாக விளையாடி,எல்லாவற்றையும் அனுபவித்து எழுபது மதிப்பெண் எடுத்து சிரிப்பவனை கெட்டிக்காரன் என்பதா?

போட்டிகளும்,சவால்களும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்,அதைவிட அவசியம் எல்லா லாப நஷ்டங்களையும் அலசி ஆராய்ந்து போட்டியிடும் கெட்டிக்காரத்தனம்.அந்த கெட்டிக்காரத்தனத்தோடு போட்டிகளையும்,சவால்களையும் கையாண்டால் வெற்றி நமதே.


எனர்ஜி டானிக்: கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்

புத்திசாலிகள் உலகை ஆளுகிறார்கள்,
பலசாலிகள் அவர்களை பின் தொடர்கிறார்கள். 

கடுமையாக உழைத்தால் முன்னேறலாம்.புத்திசாலிதனமாக உழைத்தால் வேகமாக முன்னேறலாம்.கடுமையான உழைப்பும்,புத்திசாலிதனமும் இணையும் போது அற்புதம் நிகழ ஆரம்பிக்கும்.கடுமையாக எல்லோருக்கும் உழைக்க தெரியும்.ஆனால் எப்படி புத்திசாலிதனமாக செயல்படுவது?அதற்கு முன் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

எதையும் யோசிக்காமல் செய்ய ஆரம்பித்தால் கடுமையாக உழைப்பவர் என கொள்ளலாம்.யோசித்து தெளிவான திட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தால் புத்திசாலிதனமாக செயல்படுபவர் என கொள்ளலாம்.இதில் நீங்கள் எந்தவகை என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சரி எந்த விசயத்தையும் புத்திசாலிதனமாக அணுகுவது எப்படி?

  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை சுலபமாகவும்,எளிமையாகவும் செய்யக் கூடிய ஒரு வழி உள்ளது என்பதை மனதார நம்புங்கள்.இந்த வார்த்தையை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
  • உடனே சிந்திக்க ஆரம்பியுங்கள்,சிந்தனையில் வருபவற்றை மனதிலே குறித்துக்கொள்ளுங்கள்.எதையும் நல்லது,கெட்டது என சிந்தனை தடையில்லாமல் சிந்தியுங்கள்.
  • ஒரு சின்ன யோசனை கிடைத்த உடன் அதை உடனே திட்டமாக்குங்கள்.
  • இதைவிட ஒரு சிறப்பான, எளிய திட்டம் ஒன்று உள்ளது.அதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என மறுபடியும் மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.
  • இப்போது முதல் திட்டத்தை உருவாக்க என்னென்ன வழிமுறைகளை ,சிந்தனைகளை,பின்பற்றினோமோ அவற்றை மறுபடியும் பயன்படுத்தாமல் வேறு ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.இதை திரும்ப திரும்ப செய்து பலதிட்டங்களை உருவாக்குங்கள்.
  • எல்லா திட்டங்களில் உள்ள நல்லது கெட்டதை உங்கள் உள்ளுணர்வால் ஆராய்ந்து, எல்லாவற்றையும் இணைத்து இறுதி திட்டத்தை உருவாக்குங்கள்.
  • உங்கள் திட்டத்தை யாரிடமாவது விளக்கி தேவையான மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக உழையுங்கள்.
எதையும் யோசித்து செய்வதுதான் புத்திசாலிதனம்.எப்படி யோசிக்க வேண்டும் என்பதைதான் மேலே பார்த்தோம்.மேலே சொன்னவற்றை படிக்கும் போது சில ஆச்சர்யமான மனம் சார்ந்த விசயங்களை பார்க்கலாம்.
நம் மூளைதான் எல்லாவற்றையும் செய்கிறது.அது சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் சிறப்பாக ஊக்கப் படுத்தவேண்டும்.மற்றொன்று நம் உள்ளுணர்வு.தேர்தெடுக்கும் போது பகுத்தறிவைவிட உள்ளுணர்வுதான் சரியானதை தேர்ந்தெடுக்கிறது என அறிவியல் சொல்லுகிறது.எனவே நாம் புத்திசாலிதனமாக செயல்பட மனமும்,உள்ளுணர்வும் முக்கியம்.

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவரும் மரவெட்டிகள்.அதில் ஒருவர் பலசாலி. மற்றொருவர் புத்திசாலி.காலையில் மரம் வெட்ட சென்று மாலையில் திரும்பி வரும்போது யார் அதிகமாக மரம் வெட்டியது என எண்ணிப் பார்ப்பார்கள்.எப்போதும் புத்திசாலி நபர் தான் நாளின் இறுதியில் அதிக மரம் வெட்டியிருப்பார். இதை பார்த்த பலசாலி புத்திசாலியிடம் காரணத்தை இவ்வாறாக கேட்டார்.

"நான் காலையிலிருந்து மாலைவரை இடைவிடாமல் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். நீ யோ இடைவெளி விட்டு வெட்டிக் கொண்டிருக்கிறாய். ஆனால் நாளின் இறுதியில் நீதான் ஜெயிக்கிறாய். அதன் ரகசியிம் என்ன?" என்றார் ?

அதற்கு அந்த புத்திசாலி சொன்னார்
"நாம் தொடர்ந்து வெட்டும் போது சிறிது நேரத்தில் உடலும் மனமும் சோர்ந்து விடுகிறது, கோடாரியும் மழுங்கி விடுகிறது. அதனால் சிறிது ஓய்வு எடுத்து மரம் வெட்டுகிறேன்.ஓய்விலும் எனது கோடாரியை நான் கூர் தீட்டிக் கொண்டிருப்பேன். இதனால் மறுபடியும் முழு வீச்சுடன் வெட்ட ஆரம்பிப்பேன். இதனால் நாள் முழுவதும் முழு தெம்புடன் மரம் வெட்டுகிறேன். நாளின் இறுதியில் அதிகமான மரக்கட்டைகளை சேகரிக்கிறேன்.


மேலே உள்ள கதையில் சொன்னது போல் கடின உழைப்பை விட .புத்திசாலிதனத்துடன் கூடிய கடின உழைப்பே உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிலும் வெற்றி பெற கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்



எனர்ஜி டானிக்: நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் ஆள் நீங்கள் தான்

யார் யாரையோ,எதை எதையோ இந்த மனம் தெரிந்து கொள்ள துடியாய் துடிக்கிறது.மனமே நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்பதை தெரிந்து கொள்ள நான் துடியாய் துடிக்கிறேன்!!
 
என்னை என் மனைவி புரிந்து கொள்ளவில்லை,நண்பன் புரிந்து கொள்ளவில்லை,யாரும் புரிந்து கொள்ளவில்லை என புலம்பிக் கொண்டே நம்மில் பலர் தினமும் வாழ்க்கையை கடந்து கொண்டே இருக்கிறோம்.நம்மை மற்றவர்கள் புரிந்து கொண்டது ஒரு புறம் இருக்கட்டும்.நம்மை நாமே எவ்வளவு புரிந்து கொண்டு இருக்கிறோம்?நம்முடைய பலம், பலவீனம்,விருப்பு,வெறுப்புகள் என துளி துளியாக நமக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியும்.இதை தான் கிழக்கில் தன்னை அறிந்தவன் எல்லாம் அறிவான் என்றும்,தன்னை வென்றவன் உலகை வென்றவன் என்றும் கூறுவர்.

எவ்வளவோ தொழில்நுட்பம் பற்றி பேசிக்கொண்டும் ,படித்துக்கொண்டும் இருக்கிறோம்.ஆனால் நம்மால் ஒரு ரொட்டித்துண்டை போட்டால் அதை ரத்தமாகவும்,சதையாகவும் மாற்றக்கூடிய ஒரு தொழில்நுட்பமோ அல்லது கருவியோ கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் நம் உடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை சுலபமாக செய்கிறது.அப்படியே இன்றைய தொழில்நுட்பத்தில் இதை செய்து முடிக்க,நமக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இடைவேளி இல்லாமல் பல சிக்கலான கருவிகளை பயன் படுத்தினால் மட்டுமே இதை செய்து முடிப்பது சாத்தியம் என அறிவியல் கூறுகிறது. ஆனால்சரியாக ஒரு ஜான் வயிற்றுக்குள் இதெல்லாம் எந்த சத்தமுமில்லாமல் சுலபமாக நடக்கிறது.

ஒரு மிக்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் பத்து கல்லை போட்டு அரைத்துப் பாருங்கள்.அது தான் அந்த மிக்சியின் கடைசி காலம்.ஒரு கல்லை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள்,எந்த பிரச்சனையுமில்லை,முடிந்தால் அரைக்கும் இல்லையென்றால் ,அப்படியே வெளியே தள்ளிவிடும்.இதையே தொடர்ந்து செய்தால்  நம் உடல் அதற்கும் தன்னை பழக்கப் படுத்துக்கொள்ளும். இவ்வளவு அற்புதமான நம் உடலை நாம் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளோம்?

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நம் இதயம் நம்மை கேட்டு துடிக்கவில்லை,மனம் நம் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் மூளை நம்மை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.நம்மிடம் எந்த உத்தரவையும் எதிர்பார்ப்பதில்லை.மொத்தத்தில் ஒரு பத்து சதவீதம் தான் நம் உடலே நம் கட்டுப்பாட்டில் உள்ளது.சரி இதையெல்லாம் நாம்  தெரிந்து கொண்டோமா?

உடல் கண்ணுக்கு தெரிந்த மனம்,மனம் கண்ணுக்கு தெரியாத உடல்.இதை உணரும் போதே உடலும்,மனமும் கோவிலாகிவிடும்.இவ்வளவு அற்புதம் செய்யும் இந்த உடலை வணங்காமல்,உணராமல் கடவுளை, மற்றவரையோ வணங்கி என்ன பயன்?நாம் கண்டதை தின்று,தேவையில்லாதை நினைத்து இந்த கோவிலாகிய உடலையும்,மனதையும் அசுத்த படுத்திக்கொண்டிருக்கிறோம்.நம்மை நாம் வணங்கி மதிக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்.துள்ளியமாக நிலாவுக்கு போய்வர தெரிந்த நமக்கு, சாதாரண சாலையை விபத்தில்லாமல் கடக்க தெரியவில்லை.ஊருக்கே உடல் நலம் பற்றி கூறும் டாக்டருக்கு தன் பிரச்சனை தெரியவில்லை.பிரச்சனை  எங்கே இருக்கிறது?


நாம் தேடல் என வெளியே ,வெளியே என ஓடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரச்சனை உள்ளே தான் இருக்கிறது.மனைவியை புரிந்து கொள்ளும் முன்,நம்மை புரிந்து கொண்டிருந்தால்,பிரச்சனைக்கு அங்கே வாய்ப்பில்லை.குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அவ்வளவு முட்டாள்தனம் தன்னை அறியாமல் மற்றவர்களை குறை சொல்வது.அமைதியான குளத்தில் வெளியில் இருந்து யாரும் கல் எறியாமல் ஒழிய,குளத்தின் அமைதியை யாரும் கெடுக்க முடியாது.அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்க மனமென்னும் குளத்தில் கல்லெரிந்தவர்கள் யார் என்பதை ஆராயுங்கள்.



அந்த ஜென் குருவை சந்தித்து ஞானம் பெற ஒரு அரசன் வந்தான்.அவனை வரவேற்ற குரு.நீ இங்கு எப்படி வந்தாய்? என கேட்டார்.அதற்கு குதிரை வண்டியின் மூலம் வந்ததாக கூறினான்.அரசனை அழைத்து வாசலுக்கு சென்ற குரு, அரசனிடம்
வண்டியின் சக்கரத்தை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை, இது வெறும் சக்கரம் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை, அதை கழட்டிவிட ஆணையிட்டார்.அடுத்து குதிரையை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை இது வெறும் குதிரைகள் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை அந்த குதிரைகளை கழட்டிவிட ஆணையிட்டார்.இப்படியாக அச்சாணி,சாட்டை,வண்டி என ஒவ்வொன்றாக காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை என சொல்ல எல்லாவற்றையும் கழட்டிவிட சொன்னார்.கடைசியில் அங்கே ஒன்றும் இல்லாமல் இருந்தது.அப்போது அரசினிடம் நீ குதிரை வண்டியில் வந்ததாக சொன்னாயே எங்கே உன் வண்டி என்றார்?யோசிக்க ஆரம்பித்தான் அரசன் .

நான்,நான் என பேசிக்கொண்டே போகிறோம்.இந்த நான் தான் பிரச்சனைக்குரிய நபர்.அவர் தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதல் நபர்.நம்மை புரிந்து கொண்டாலே உலகத்தை புரிந்து கொண்டது மாதிரி.


உலகம் உன்னில் இருந்து ஆரம்பிக்கிறது,
நீயின்றி உலகில்லை,
புரிதலை உன்னில் இருந்து ஆரம்பி,
புரிந்து கொண்டபின்,
நீ உருவாக்கிய உலகத்தை உடைத்து விடு,
இப்போது ஒரே உலகம்,
அதில் நீ,நான்,நாம் என பாகுபாடில்லாமல்
தடம் தெரியாமல்,வாழ்ந்து மறைவோம்.


எனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்!!

சின்ன பிரச்சனை  வந்துவிட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த திசையில் ,எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. முன்னேற்பாட்டுடன் தயார் நிலையில் இருப்பவர்கள் பிரச்சனைக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் அடிக்கிறார்கள்.முன்னேற்பாடு இல்லாதவர்கள் சோர்ந்து மூலையில் உட்கார்ந்துவிடுகிறார்கள்.ஒரு மனிதன் தன்னம்பிக்கையை இயல்பாக வளர்த்துக்கொள்ளலாம் அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கலாம். தன்னம்பிக்கையை இயல்பாக வளர்த்துக்கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்.சரி தன்னம்பிக்கையை நமக்கு நாமே வளர்த்துக் கொள்வது எப்படி?

நாம் எல்லோரும் சினிமா பார்த்து இருப்போம். அதில் ஒரு ஹீரோ இருப்பார்.படத்தின் துவக்கத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்திப்பார்.இரண்டாவது கட்டத்தில் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறுவார்.இந்த இரண்டு கட்டத்திற்கு இடையில் ஒரு திருப்புமுனை இருக்கும்.அந்த திருப்புமுனை தான் ஹீரோவிற்கு தன்னம்பிக்கை தரும் தருணம். நாமும் நம்மை உணர தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ள வாழ்வில் ஒரு திருப்புமுனை அவசியம்.அப்படி ஒரு திருப்புமுனை ஏற்படுத்திக்கொள்ள  நம் வாழ்க்கையை நாமே பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டும்.உதாரணமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது சற்று நிதானமாக நம் வாழ்க்கையை பின்னோக்கி அதுவரை சந்தித்த பல பிரச்சனைகளை நினைத்து பார்க்கவேண்டும்.அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக எதிற்கொண்டோம் என்பதை சிந்திக்க வேண்டும்.இதை செய்ய ஆரம்பிக்கும் போதே பிரச்சனையை பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக ,அதை தீர்க்க சிந்திக்க ஆரம்பித்து விடுவோம்.

என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய நிகழ்வு நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது நிகழ்ந்தது.படிப்பில் நான் சுமார் ரகம் தான்.ஆனால் முட்டாள் இல்லை.அதுவும் கணிதத்தில் தான் படுமோசம்.முதல் ஆறு மாதத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு கணித்தில் நான் எடுத்த அதிக மதிப்பெண்களே ஐந்து .இதை பார்த்த கணித ஆசிரியர் நான் தேறுவது கடினம் கடினம் என் நினைத்து என்னை தினமும் கும்ம ஆரம்பித்தார்.என்னை மாற்றுவதற்காக குட்டிக்கரணமே அடித்துப்பார்தார்.ஆனால் கணிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.இப்போதும் ஞாபகம் இருக்கிறது.ஹால்டிக்கெட் கொடுக்கும்போது எப்படியாவது பாஸாகிவிடு என்று என் ஆசிரியர் கூறியது.அதன் பின் நடந்ததெல்லாம் ஆச்சர்யம்.ஏனென்றால் முழு ஆண்டு தேர்வு முடிவில் கணிதத்தில் நான் எடுத்த மதிப்பெண் 190.இதைக் கேட்ட என் ஆசிரியருக்கு நம்பவே முடியவில்லை.பெயில் ஆகிவிடுவேன் என அவர் கணித்த மாணவன்   190 மதிப்பெண்கள். இதைவிட நூறு மதிப்பெண்கள்  எடுப்பார்கள் என ஆசிரியர் கணித்த பல மாணவர்கள் 160 கூட தாண்டவில்லை.

நடந்தது இது தான்.முழு ஆண்டு தேர்வுக்கு தயாராவதற்கு 20 நாட்கள் வரைக்கொடுத்திருந்தார்கள்.ஓராண்டில் படிக்காததை 20 நாட்களில் படிக்க ஒரு திட்டம் தீட்டினேன்.திட்டம் இதுதான்.அதுவரை வெளிவந்த அனைத்து கம்பெனிகளின் நோட்ஸ்களையும் மாதிரி வினாத்தாட்களையும் சேகரிப்பது.எதை எப்போது படித்து முடிக்கவேண்டும் என்ற விரிவான ஒரு செயல் திட்டம்.இதற்காக எத்தனையோ பழைய நோட்டு புத்தகக்கடைகளை ஏறி இறங்கினேன்.கணிதத்திற்கு மட்டும் எட்டு கம்பெனிகளின் நோட்ஸ்களை சேகரித்தேன்.

நோட்ஸ்,மாதிரிவினாத்தாட்கள் ஒரு கையில் ,எப்படி படிக்க வேண்டும் என்ற செயல் திட்டம் மறு கையில்.இருபது நாட்கள் திட்டமிட்ட கடின உழைப்பு.அந்த இருபது நாட்களில் நான் முழுவதுமாக மாறிப்போயிருந்தேன்.ஒவ்வொரு பரிட்சை எழுதும் போதும் துளிகூட சந்தேகமில்லாமல் எழுதினேன்.கணிதம் மட்டுமில்லாமல் இயற்பியல்,வேதியியல் என எல்லா பாடாத்திலும் மார்க்குகளை அள்ளிக்குவித்தேன்.அதுதான் என் வாழ்க்கையில் உண்மையாக என்னை உணர்ந்த தருணம்.வெற்றிச்சூத்திரத்தை கண்டறிந்த தருணம்.அன்றிலிருந்து எவ்வளவு பிரச்சனைகள் எனக்கு வந்தாலும் இந்த நிகழ்வை நினைத்துப்பார்பேன்.புது புத்துணர்ச்சி பிற்க்கும்.புதிதாய் பிறந்தது போல் இருக்கும்.சட்டென களத்தில் குதித்து போரட ஆரம்பித்து விடுவேன்.

திரும்பிப்பாருங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு கரடுமுரடான பாதைகள், எத்தனை சோகம்,எத்தனை கண்ணீர்,எத்தனை இன்னல்கள்.ஆனால் சோர்ந்து போகவில்லை.இதையெல்லாம் கடக்க வைத்தது யார்?இதையெல்லாம் தாங்கிக்கொண்டது யார்?கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது வேறு யாரும் இல்லை.நீங்கள் தான். வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் நீங்களும் ஹீரோ தான்.

சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்

வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போது மாபெரும் நாகரிகங்கள் எனத் தன்னை மார்தட்டிக் கொண்டவை பல இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு
மண்ணாக புதைந்து போய் உள்ளன.இதே போல் பல சாம்ராஜ்ஜியங்கள் ,அரசர்கள்,தனி மனிதர்கள் என பலரும் கணப்பொழுதில் காணாமல் போய் உள்ளனர்.இந்த அழிவு, வியாபாரம்,தொழில்நுட்பம் என பல துறைகளுக்கும் பொருந்தும்.நேற்று வரை கார்,பணம்,வசதி என பறந்து கொண்டிருந்தவர் சட்டென்று நடு ரோட்டிற்கு வந்திருப்பார்.நேற்று வரை உச்சத்திலிருந்த தொழில்நுட்பம் இன்று குப்பைக்கு போயிருக்கும்.பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து ,பங்கு மார்க்கட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி இன்று காணாமல் போயிருக்கும்.இவையெல்லாம் ஏன் நடக்கின்றன?இவற்றின் பின்னால் ஏதாவது அறிவியல் காரணம் உள்ளதா?இந்த காணமல் போனவர்கள் பட்டியலில் நாமும் சேராமல் இருப்பது எப்படி?

பத்து வருடத்திற்கு முன்னால் இந்தியவில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் கைபேசியை கொண்டு வந்து,அன்று கைபேசி மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி நோக்கியா.இன்று காணமல் போய்விட்டது.ஏன் காணாமல் போனது?நோக்கியாவின் அழிவைப் பற்றி பேச வேண்டுமானால், இரண்டு முக்கியமான விசயங்களைப் பற்றி பேச வேண்டும்.அதில் ஒன்று ஆப்பிளின் ஐபோன், மற்றொன்று கூகுளின் ஆண்டிராய்டு.ஆறு வருடத்திற்கு முன்னால் எல்லா மக்களின் கையிலும் கைபேசியை கொண்டு சேர்த்திருத்திருந்தன கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள். ஆனால் அடுத்த கட்ட தொழில்நுட்பம் என்னவென்று தெரியாமல் கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள் முழித்திக்கொண்டிருந்தன.அதில் நோக்கியாவும் ஒன்று.அப்போது கைபேசியின் அடுத்த பரிமாணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது ஆப்பிளின் ஐபோன்.தொடுதிரை ,கண்கவர் பொத்தன்கள் ,தொழில் நுட்ப நேர்த்தியென கைய்டக்க கணிப்பொறியாகவே கைபேசியை அறிமுகப்படுத்தினர்.இதை அனைத்து கைபேசி தயாரிப்பு கம்பெனிகளும் காப்பியடிக்க முயன்று மண்ணை கவ்வின.காரணம் ஆப்பிளின் தொழில்நுட்ப நேர்த்தி.இந்த இடைப்பட்ட காலத்தில் நோக்கிய சரியத்தொடங்கியது.தன்னை காப்பாற்றிக்கொள்ள மைக்ரோசாப்ட்டுடன் இணைய திட்டமிட்டது.மற்ற கம்பெனிகள் மாற்றத்திற்காக காத்திருந்தன.

அப்போது தான் ஆப்பிளின் தொழில்நுட்பத்திற்கு சவால்விட கூகுள் தயாரானது.அதாவது புதிய கைபேசி இயங்குதளம் ஆண்டிராய்டை இலவசமாக வெளியிட் தயாரானது.ஆண்டிராய்டை பொருத்தவரை தொழில்நுட்பம் முற்றிலும் இலவசம்.அதுவும் உயர்ந்த தரத்தில்.கூகுளின் திட்டமே அப்போது உச்சத்திலிருந்த ஆப்பிளை வீழ்த்துவது தான்.வாய்ப்புகளுக்காக காத்திருந்த அலைபேசி கம்பெனிகள் ஆண்டிராய்டை மொய்க்கத்தொடங்கின.அதுதான் அலைபேசி தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையின் ஆரம்பம்.கூகுள் ஆண்டிராய்டின் புண்ணியத்தால் குப்பனும் சுப்பனும் கைபேசி தயாரிக்கும் அளவுக்கும் தொழில்நுட்பம் எளிதானது.இங்கே நோக்கியாவின் நிலை பரிதாபம்.ஏற்கனவே மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துவிட்டதால்,ஆண்டிராய்டு இயங்கு தள கைபேசியை உருவாக்க முடியவில்லை. கடைசியில் வாய்ப்புக்காக காத்திருந்த சாம்சங்கும்,சோனியும் கைபேசி மார்க்கெட்டை விழுங்கின.நோக்கியாவை மைக்ரோசாப்ட் விழுங்கியது.சரி இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

வியாபார அறிவியலில் இதை இடையூறான கண்டுபிடிப்பு(disruptive innovation) என்பார்கள்.அதாவது வியாபாரத்திலோ,பொருட்களை உருவாக்கு முறையிலோ அல்லது தொழில்நுட்பத்திலோ சிறு மாற்றங்கள் செய்து புதிய சந்தையை அல்லது புதிய பயனாளர்களை உருவாக்கி சந்தையின் உச்சத்தை தொடுவது.உதாரணமாக சீன சந்தை மலிவானது,தரம் குறைந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் சீனாவின் திட்டமே மலிவான விலையை காரணம் காட்டி சந்தையில் நுழைந்து மெதுவாக தரத்தை உயர்த்தி உலக சந்தையின் உச்சத்தை தொடுவதுதான்.ஆரம்பத்தில் தரத்தை காரணம் காட்டி சீனாவை பார்த்து சிரித்த நாம் இன்று சீனாவிடம் உலக சந்தை இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை.

நோக்கியாவின் கதையிலும் நடந்தது இது தான்.கைபேசியில் புதிய மாற்றங்களை உருவாக்கி மொத்த சந்தையை வளைத்தது ஆப்பிள்.அதில் இருந்து புதிய சந்தையை உருவாக்க கூகுள் தொழில்நுட்த்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இலவச இயங்குதளத்தை உருவாக்கி சந்தையை தன் வசமாக்கிக்கொண்டது.இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருந்த நோக்கியா தன்னையே இழந்துவிட்டது.

இப்படிதான் தொழிலிலும் ,தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்படும் சிறு மாற்றங்களை கவனிக்க தவறி மொத்தத்தையும் இழந்துவிடுகிறோம்.உங்கள் கடைக்கு எதிராக ஒருவர் வித்தியாசமான அணுகுமுறை முறையோடு சின்ன கடை விரித்தாலோ,அல்லது நீங்கள் வேலைபார்க்கும் இடத்தில் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்தாலோ அதை அலட்சியம் செய்யாதீர்கள்.அது உங்கள் அழிவுக்கே காரணமாகலாம். மற்றொரு கோணத்தில் சொன்னால் வாழ்க்கையில் நாம் உயரத்திற்கு போக சின்ன மாற்றங்களே போதும்.மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.மாறிக்கொண்டே இருங்கள்.மாற்றம் ஒன்றே மாறாதது.




தன்னம்பிக்கை நேரம்::உன்னையே நீ அறிவாய்

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் கேட்கச்சொன்னார் சாக்ரடீஸ்.ஆனால் அவ்வாறு கேட்பதானால் ஆகும் விளைவுகளை அவர் சொல்லவே இல்லை.உண்மையில் இந்த உலகை புரட்டிப்போட்ட அத்தனை விசயங்களும் கேள்விகள் கேட்டதினாலே விளைந்தவை.சரி ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?கேள்வி
கள் கேட்பதனால் என்ன பயன்? யாரிடம் கேள்விகள் கேட்பது?

கேள்விகள் தான் மனித பரிணாமத்தின் முதல் படிக்கட்டுகள்.எப்போது மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தானோ? அன்றே அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.உண்மையில் சிந்தனை என்பது பல கேள்வி பதில்களின் கூட்டுத்தொகுப்பு.நாம் சிந்திக்க வேண்டுமானால் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.சரி யாரிடம் கேள்விகள் கேட்பது?கேள்விகள் மனிதன் தனக்குதானே கேட்டுக்கொள்ள வேண்டியவை.ஆனால் நம்மில் பெரும்பாலானோர் கேள்விகளை மற்றவரிடம் கேட்டு நம் மேதாவிலாசங்களை காட்டிக்கொண்டிருக்கிறோம்.பிரச்சனை என்னவென்றால் நமக்கு புரியாத விசயங்களை மற்றவரிடம் கேட்கும் போது அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.நம் கேள்வி நம்மை புத்திசாலியாக அடையாளம் காட்டிவிடுகிறது.ஆனால் அது ஒரு போலி அடையாளம்.ஏனென்றால் நமக்கு பதில் தெரியவில்லை.இப்படிதான் இந்த உலகம் கேள்விகளால் புத்திசாலிகளை அடையாளம் காணுகிறது.கேள்விகள் என்றும் நிரந்தரமானவை.பதில்கள் வெறும் கானல் நீர்.

ஏதென்ஸ் மக்கள் அந்த ஊர் கோவிலில் உள்ள மாந்தீரக பெண்ணிடம் கேட்டார்கள்.இந்த ஊரிலே எல்லாம் தெரிந்த மேதையார் என்று.உடனே அந்த பெண் சொன்னாள் சாக்ரடீஸ்.எல்லாரும் சாக்ரடீஸிடம் போய் இதை சொன்னார்கள்.அதற்கு அவர் சொன்னார் "எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.ஆனால் நீங்களோ எல்லாம் தெரிந்தவர் போல் நடித்துக்கொண்டு இருக்குறீர்கள்".அதனால் தான் நான் மேதையாக தெரிகிறேன் என்றார்.

ஒரு அற்புதமான கதை ஒன்று சொல்வார்கள்.ஒரு ஊரில் ஒரு முட்டாள் இருந்தான்.ஊர் மக்கள் அனைவரும் அவனை முட்டாள் முட்டாள் என்றே அழைத்தார்கள்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மனிதன் ஊருக்குள்ளே வசிக்காமல் ஊரின் வெளியே வசித்துவந்தான்.ஒரு நாள் ஒரு ஜென் குரு அந்த பக்கமாக கடந்து போவதைப்பார்த்த அந்த மனிதன் அவர் காலில் விழுந்து தன் பிரச்சனையை விளக்கி கூறினான்.அவரும் அவனிடம் யார் என்ன சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இரு என்றார்.தான் ஒரு வருடம் கழித்து இந்த பக்கம் கடந்து போகும் போது தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார்.ஒரு வருடமும் கடந்து சென்றது .அந்த குரு மீண்டும் அந்த ஊரை கடந்து சொல்லும் போது ஊரே அந்த முட்டாள் மனிதனை தோளில் சுமந்து கொண்டு குருவை வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர்.குரு அந்த மனிதனிடம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா எனக்கேட்டார்.அதற்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஊரே தன்னை அறிவாளியென்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் கூறினான்.இந்த கதை பதில் தெரியாமல் கேள்வியோடு மட்டும் நின்று போகும் மனிதர்களைப் பற்றியது.

கேள்விகளை நமக்கு நாமே கேட்கும் போது நமது அறியாமை நமக்கு புரிகிறது.மற்றொன்று அறியாமை நம் அறியும் ஆவலை தூண்டி நம் தேடலை ஆரம்பித்து வைக்கிறது.தேடல் நம்மை எல்லையற்ற புரிதலின் ஆழத்திற்கு கூட்டிச்செல்கிறது.ஜென்னில் ஒரு அற்புத வரி சொல்வார்கள்."நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது ஒரு குரு உங்கள் முன் தோன்றுவார்".அதே சமயம் நாம் தேடும் பொருளும் நம்மை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.தேடல் நம்மை அறிவின் உச்சத்திற்கு இட்டுச்சென்று பிரகாசிக்க வைக்கிறது.

தன் மேல் ஏன் ஆப்பிள் விழுந்தது என தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தேடி புறப்பட்டார் நியூட்டன்.விளைவு நவீன அறிவியலின் தந்தை ஆனார்.ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தால் என்னவாகும் என் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தன்னைதானே கேட்டுக்கொண்டதன் விளைவுதான் ஜன்ஸ்டீனின் "சார்பு மற்றும் சிறப்பு சார்புக்கொள்கை".சாக்ரடீஸ்,நீயூட்டன்,ஜன்ஸ்டீன் என எல்லோரும் கேள்விகளை தனக்கு தானே  கேட்டுக்கொண்டார்கள்.தீராத தேடல் அவர்களை தொற்றிக்கொண்டது.அதனால் தான் அவர்கள் அறிவின் உச்சத்தை தொட்டார்கள்.உன்னையே நீ அறிவாய் என்பதன் பொருள்.உன்னையே நீ கேள்விகேட்டு தேட ஆரம்பி என்று பொருள்.உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.தீராத தேடல் உங்களை தொற்றிக்கொள்ளட்டும்.

தன்னம்பிக்கை நேரம் :: எங்கிருந்து ஆரம்பிப்பது?



நம்மில் சிலருக்கு ஒரு விசயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? என்பதே தெரிவதில்லை.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.ஒரு விசயத்தின் ஆரம்பமே தவறு என்றால் முடிவு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்.நாம் தொடங்கும் இடத்தை பற்றி சரியாக யோசிக்கவில்லை என்றால் முடிவில் காணமல் போய்விடுவோம்.உண்மையில் சிறப்பான திட்டமிட்ட தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள்.

சரி எங்கிருந்து ஆரம்பிப்பது,எப்படி ஆரம்பிப்பது?
உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் இரண்டு வகையான வழிகள் உண்டு.ஒன்று சிந்தனை வழி மற்றொன்று செயல் வழி.நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்பட ஆரம்பித்துவிடுவோம்.ஆனால் வெகு சிலரே சிந்தித்துபின் செயல்பட தொடங்குகிறோம்.

நம்மில் எத்தனை பேர் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளைப் பற்றி சிந்தித்து பின் செயல்பட தொடங்குகிறோம்.அதாவது நம் இலக்குகள் என்ன?திறமைகள் என்ன?பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன?என்பதை பற்றி சிந்தித்திருக்கிறோம்.ஒரு நாளில் நாம் செய்யப்போகும் வேலைகள் எந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்? என்பதில் நமக்கு தெளிவு இல்லை என்றால் அந்த வேலையின் பலன் தான் என்ன?

இந்த உலகத்தில் உள்ள எல்லா விசயங்களும் மேம் போக்காக எளிமையாக இருந்தாலும் அடிப்படையில் மிகவும் சிக்கலானவை.உதாரணமாக வீட்டில் மனைவியின் சமையலை எளிமையாக குறை சொல்லிவிடலாம்.ஆனால் அதை நாம் செய்யும் போது தான் உணர முடியும் அதன் கடினத்தை.கொஞ்சம் யோசித்து பார்த்தால் சமையல் பல பொருட்களின் ஒரு சிக்கலான கலவை.அதில் ஒன்று குறைந்தாலோ அல்லது கூடினாலோ முழுவதும் பாலாகிவிடும்.எனவே சிந்திக்கும் போது விசயங்களின் அடி ஆழம் முழுமையாக தெரியவரும்.

மேலும் நான் பலரை பார்த்திருக்கிறேன். உடல் எடையை குறைக்கிறேன் பேர் வழி தங்களை உடலை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள்.உண்மையில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஆழமாக சிந்திக்க வேண்டியது.அதாவது உண்ணும் உணவுகள்,உண்ணும் விதம் என எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பின் செயலில் இறங்க வேண்டும்.

உண்மையில் நம் உடம்பை கட்டுப்படுத்துவது மூளை.அதற்கு சரியான கட்டளைகள் இட்டுவிட்டால் அது நம் உடல் முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஓடு என்று மூளைக்கு தற்காலிக கட்டளையிடுகிறோம்.உடனே உடல் ஓடிக்கொண்டே இருக்கும்.ஆனால் எதற்காக ஓடுகிறோம் என்று மூளைக்கு தெரியாது.சாப்பிடாதே என்று வாய்க்கு கட்டளையிடுகிறோம்.அதை வாய் கேட்பதே இல்லை.இங்கு தான் எல்லோரும் தோற்று போய்விடுகிறோம்.உண்மையில் உடல் எடை என்பது பல விசயங்களின் சிக்கலான தொகுப்பு.

நம் கண் ஒரு சுவையான சிக்கன் வறுவலை பார்க்கிறது.உடனே மூளைக்கு தகவல் போகிறது.உடனே மூக்கும் தன் பணியை ஆரம்பித்து மூளைக்கு தகவல் போகிறது.எல்லா தகவல்களையும் ஆராய்ந்து சிக்கன் வேணுமா?வேண்டாமா? என்று மூளை முடிவு செய்கிறது.வேண்டும் என முடிவாகி நாக்கு மற்றும் குடலில் அமிலங்கள் சுரந்து உணவை செரிக்க தயாராகின்றன.உற்றுப்பார்த்தால் நன்றாக புரியும் நம் மூளைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.நம் மூளைதான் முதலாளி, உடம்பு வெறும் தொழிலாளர்கள்.நமக்குள் என்ன நேர்ந்தாலுல் நாம் பரிசோதிக்க வேண்டிய முதல் ஆள் மூளை.

நம் மூளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மான முடிவெடுக்க நாம் ஒதுக்கும் நேரம்தான் சிந்திக்கும் நேரம்.ஒரு முறை தெளிவாக மூளை முடிவெடுத்து விட்டால் மற்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக்கொள்ளும்.உலகின் ஆகச்சிறந்த செல்வந்தர்கள்,மனிதர்கள்,படைப்பாளிகள் என எல்லோரின் வெற்றிக்கும் காரணம் அவர்கள் சிந்தக்க நேரம் ஒதுக்குகிறார்கள்.உண்மையில் நாம் சிந்தக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க ஆரம்பிக்கிறோம்.நாம் கவனிக்க ஆரம்பிக்கும் போது புரிய ஆரம்பிக்கிறது.எல்லாம் புரிய ஆரம்பிக்கும் போது நாம் வளர ஆரம்பிக்கிறோம்.

காலை எழுந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் அமைதியாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அன்றைய நாளைப்பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்.அது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அடையாளம் காட்டலாம்.எனவே எல்லாவற்றையும் சிந்தித்து,நமக்கு தெரிந்த விசயங்களில் இருந்து செயல்பட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

தன்னம்பிக்கை நேரம் :: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.

"அப்பா இங்கே பாருங்கள் மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால்  ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள் மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக்குருடன்.இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."


உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.

கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்.