அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

உனக்காக காத்திருக்கிறேன்

2 comments
உனக்கான கவிதைகள்
எழுதப்படாமல் காத்திருக்கின்றன.
உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள்
பரிமாறப்படாமல் இதயக்கூட்டில் காத்திருக்கின்றன.
உனக்கான முத்தங்கள்,
உனக்கான ரோஜா,
உனக்காக சேகரித்த மயிலிறகு,
நாம் கைகோர்த்து நடக்க வேண்டிய
கடற்கரை மணற்பரப்பு,
இரவின் நிழல்,
நிலவின் மடி,
குளிர்கால போர்வைகளென,
எல்லாம் காத்திருக்கின்றன,
உன் ஒற்றை சொல்லுக்காக,
எப்போது சொல்லப்போகிறாய்?
உன் காதலை என்னிடம்.


2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

தன்னம்பிக்கை நேரம்::உன்னையே நீ அறிவாய்

1 comment
எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் கேட்கச்சொன்னார் சாக்ரடீஸ்.ஆனால் அவ்வாறு கேட்பதானால் ஆகும் விளைவுகளை அவர் சொல்லவே இல்லை.உண்மையில் இந்த உலகை புரட்டிப்போட்ட அத்தனை விசயங்களும் கேள்விகள் கேட்டதினாலே விளைந்தவை.சரி ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?கேள்வி
கள் கேட்பதனால் என்ன பயன்? யாரிடம் கேள்விகள் கேட்பது?

கேள்விகள் தான் மனித பரிணாமத்தின் முதல் படிக்கட்டுகள்.எப்போது மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தானோ? அன்றே அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.உண்மையில் சிந்தனை என்பது பல கேள்வி பதில்களின் கூட்டுத்தொகுப்பு.நாம் சிந்திக்க வேண்டுமானால் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.சரி யாரிடம் கேள்விகள் கேட்பது?கேள்விகள் மனிதன் தனக்குதானே கேட்டுக்கொள்ள வேண்டியவை.ஆனால் நம்மில் பெரும்பாலானோர் கேள்விகளை மற்றவரிடம் கேட்டு நம் மேதாவிலாசங்களை காட்டிக்கொண்டிருக்கிறோம்.பிரச்சனை என்னவென்றால் நமக்கு புரியாத விசயங்களை மற்றவரிடம் கேட்கும் போது அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.நம் கேள்வி நம்மை புத்திசாலியாக அடையாளம் காட்டிவிடுகிறது.ஆனால் அது ஒரு போலி அடையாளம்.ஏனென்றால் நமக்கு பதில் தெரியவில்லை.இப்படிதான் இந்த உலகம் கேள்விகளால் புத்திசாலிகளை அடையாளம் காணுகிறது.கேள்விகள் என்றும் நிரந்தரமானவை.பதில்கள் வெறும் கானல் நீர்.

ஏதென்ஸ் மக்கள் அந்த ஊர் கோவிலில் உள்ள மாந்தீரக பெண்ணிடம் கேட்டார்கள்.இந்த ஊரிலே எல்லாம் தெரிந்த மேதையார் என்று.உடனே அந்த பெண் சொன்னாள் சாக்ரடீஸ்.எல்லாரும் சாக்ரடீஸிடம் போய் இதை சொன்னார்கள்.அதற்கு அவர் சொன்னார் "எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.ஆனால் நீங்களோ எல்லாம் தெரிந்தவர் போல் நடித்துக்கொண்டு இருக்குறீர்கள்".அதனால் தான் நான் மேதையாக தெரிகிறேன் என்றார்.

ஒரு அற்புதமான கதை ஒன்று சொல்வார்கள்.ஒரு ஊரில் ஒரு முட்டாள் இருந்தான்.ஊர் மக்கள் அனைவரும் அவனை முட்டாள் முட்டாள் என்றே அழைத்தார்கள்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மனிதன் ஊருக்குள்ளே வசிக்காமல் ஊரின் வெளியே வசித்துவந்தான்.ஒரு நாள் ஒரு ஜென் குரு அந்த பக்கமாக கடந்து போவதைப்பார்த்த அந்த மனிதன் அவர் காலில் விழுந்து தன் பிரச்சனையை விளக்கி கூறினான்.அவரும் அவனிடம் யார் என்ன சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இரு என்றார்.தான் ஒரு வருடம் கழித்து இந்த பக்கம் கடந்து போகும் போது தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார்.ஒரு வருடமும் கடந்து சென்றது .அந்த குரு மீண்டும் அந்த ஊரை கடந்து சொல்லும் போது ஊரே அந்த முட்டாள் மனிதனை தோளில் சுமந்து கொண்டு குருவை வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர்.குரு அந்த மனிதனிடம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா எனக்கேட்டார்.அதற்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஊரே தன்னை அறிவாளியென்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் கூறினான்.இந்த கதை பதில் தெரியாமல் கேள்வியோடு மட்டும் நின்று போகும் மனிதர்களைப் பற்றியது.

கேள்விகளை நமக்கு நாமே கேட்கும் போது நமது அறியாமை நமக்கு புரிகிறது.மற்றொன்று அறியாமை நம் அறியும் ஆவலை தூண்டி நம் தேடலை ஆரம்பித்து வைக்கிறது.தேடல் நம்மை எல்லையற்ற புரிதலின் ஆழத்திற்கு கூட்டிச்செல்கிறது.ஜென்னில் ஒரு அற்புத வரி சொல்வார்கள்."நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது ஒரு குரு உங்கள் முன் தோன்றுவார்".அதே சமயம் நாம் தேடும் பொருளும் நம்மை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.தேடல் நம்மை அறிவின் உச்சத்திற்கு இட்டுச்சென்று பிரகாசிக்க வைக்கிறது.

தன் மேல் ஏன் ஆப்பிள் விழுந்தது என தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தேடி புறப்பட்டார் நியூட்டன்.விளைவு நவீன அறிவியலின் தந்தை ஆனார்.ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தால் என்னவாகும் என் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தன்னைதானே கேட்டுக்கொண்டதன் விளைவுதான் ஜன்ஸ்டீனின் "சார்பு மற்றும் சிறப்பு சார்புக்கொள்கை".சாக்ரடீஸ்,நீயூட்டன்,ஜன்ஸ்டீன் என எல்லோரும் கேள்விகளை தனக்கு தானே  கேட்டுக்கொண்டார்கள்.தீராத தேடல் அவர்களை தொற்றிக்கொண்டது.அதனால் தான் அவர்கள் அறிவின் உச்சத்தை தொட்டார்கள்.உன்னையே நீ அறிவாய் என்பதன் பொருள்.உன்னையே நீ கேள்விகேட்டு தேட ஆரம்பி என்று பொருள்.உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.தீராத தேடல் உங்களை தொற்றிக்கொள்ளட்டும்.

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

தன்னம்பிக்கை நேரம் :: எங்கிருந்து ஆரம்பிப்பது?

2 comments


நம்மில் சிலருக்கு ஒரு விசயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? என்பதே தெரிவதில்லை.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.ஒரு விசயத்தின் ஆரம்பமே தவறு என்றால் முடிவு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்.நாம் தொடங்கும் இடத்தை பற்றி சரியாக யோசிக்கவில்லை என்றால் முடிவில் காணமல் போய்விடுவோம்.உண்மையில் சிறப்பான திட்டமிட்ட தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள்.

சரி எங்கிருந்து ஆரம்பிப்பது,எப்படி ஆரம்பிப்பது?
உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் இரண்டு வகையான வழிகள் உண்டு.ஒன்று சிந்தனை வழி மற்றொன்று செயல் வழி.நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்பட ஆரம்பித்துவிடுவோம்.ஆனால் வெகு சிலரே சிந்தித்துபின் செயல்பட தொடங்குகிறோம்.

நம்மில் எத்தனை பேர் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளைப் பற்றி சிந்தித்து பின் செயல்பட தொடங்குகிறோம்.அதாவது நம் இலக்குகள் என்ன?திறமைகள் என்ன?பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன?என்பதை பற்றி சிந்தித்திருக்கிறோம்.ஒரு நாளில் நாம் செய்யப்போகும் வேலைகள் எந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்? என்பதில் நமக்கு தெளிவு இல்லை என்றால் அந்த வேலையின் பலன் தான் என்ன?

இந்த உலகத்தில் உள்ள எல்லா விசயங்களும் மேம் போக்காக எளிமையாக இருந்தாலும் அடிப்படையில் மிகவும் சிக்கலானவை.உதாரணமாக வீட்டில் மனைவியின் சமையலை எளிமையாக குறை சொல்லிவிடலாம்.ஆனால் அதை நாம் செய்யும் போது தான் உணர முடியும் அதன் கடினத்தை.கொஞ்சம் யோசித்து பார்த்தால் சமையல் பல பொருட்களின் ஒரு சிக்கலான கலவை.அதில் ஒன்று குறைந்தாலோ அல்லது கூடினாலோ முழுவதும் பாலாகிவிடும்.எனவே சிந்திக்கும் போது விசயங்களின் அடி ஆழம் முழுமையாக தெரியவரும்.

மேலும் நான் பலரை பார்த்திருக்கிறேன். உடல் எடையை குறைக்கிறேன் பேர் வழி தங்களை உடலை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள்.உண்மையில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஆழமாக சிந்திக்க வேண்டியது.அதாவது உண்ணும் உணவுகள்,உண்ணும் விதம் என எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பின் செயலில் இறங்க வேண்டும்.

உண்மையில் நம் உடம்பை கட்டுப்படுத்துவது மூளை.அதற்கு சரியான கட்டளைகள் இட்டுவிட்டால் அது நம் உடல் முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஓடு என்று மூளைக்கு தற்காலிக கட்டளையிடுகிறோம்.உடனே உடல் ஓடிக்கொண்டே இருக்கும்.ஆனால் எதற்காக ஓடுகிறோம் என்று மூளைக்கு தெரியாது.சாப்பிடாதே என்று வாய்க்கு கட்டளையிடுகிறோம்.அதை வாய் கேட்பதே இல்லை.இங்கு தான் எல்லோரும் தோற்று போய்விடுகிறோம்.உண்மையில் உடல் எடை என்பது பல விசயங்களின் சிக்கலான தொகுப்பு.

நம் கண் ஒரு சுவையான சிக்கன் வறுவலை பார்க்கிறது.உடனே மூளைக்கு தகவல் போகிறது.உடனே மூக்கும் தன் பணியை ஆரம்பித்து மூளைக்கு தகவல் போகிறது.எல்லா தகவல்களையும் ஆராய்ந்து சிக்கன் வேணுமா?வேண்டாமா? என்று மூளை முடிவு செய்கிறது.வேண்டும் என முடிவாகி நாக்கு மற்றும் குடலில் அமிலங்கள் சுரந்து உணவை செரிக்க தயாராகின்றன.உற்றுப்பார்த்தால் நன்றாக புரியும் நம் மூளைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.நம் மூளைதான் முதலாளி, உடம்பு வெறும் தொழிலாளர்கள்.நமக்குள் என்ன நேர்ந்தாலுல் நாம் பரிசோதிக்க வேண்டிய முதல் ஆள் மூளை.

நம் மூளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மான முடிவெடுக்க நாம் ஒதுக்கும் நேரம்தான் சிந்திக்கும் நேரம்.ஒரு முறை தெளிவாக மூளை முடிவெடுத்து விட்டால் மற்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக்கொள்ளும்.உலகின் ஆகச்சிறந்த செல்வந்தர்கள்,மனிதர்கள்,படைப்பாளிகள் என எல்லோரின் வெற்றிக்கும் காரணம் அவர்கள் சிந்தக்க நேரம் ஒதுக்குகிறார்கள்.உண்மையில் நாம் சிந்தக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க ஆரம்பிக்கிறோம்.நாம் கவனிக்க ஆரம்பிக்கும் போது புரிய ஆரம்பிக்கிறது.எல்லாம் புரிய ஆரம்பிக்கும் போது நாம் வளர ஆரம்பிக்கிறோம்.

காலை எழுந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் அமைதியாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அன்றைய நாளைப்பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்.அது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அடையாளம் காட்டலாம்.எனவே எல்லாவற்றையும் சிந்தித்து,நமக்கு தெரிந்த விசயங்களில் இருந்து செயல்பட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

தன்னம்பிக்கை நேரம் :: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.

1 comment
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.

"அப்பா இங்கே பாருங்கள் மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால்  ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள் மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக்குருடன்.இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."


உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.

கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்.


1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பொட்டல்கள்

2 comments
வெயிலும் கருவேல மரமும்
கைகோர்த்து நிற்கும்
பொட்டல் காட்டில்,

ஒழுகல் மூக்கும்
ஓட்டை டவுசர் சகிதம்
டயர் வண்டியுடன்
மகாராஜாவாக வலம்
வந்தவர்கள் ஏராளம்.

ரெட்டை ஜடை
குட்டை பாவடை சகிதம்
பொம்மை குழந்தைகளை
வளர்த்த அம்மாக்கள் ஏராளம்.

இச்சி மரத்தடியில்
ஊரத்தண்ணி பானை  ஸ்டெம்பாக
கிரிக்கெட் ஆடிய சச்சின்கள் ஏராளம்.

பேந்தான்,குழிக்குண்டு,பம்பரமென
பக்கத்து தெரு ஒலிம்பிக்கிற்காக
பயிற்சி எடுத்தவர்கள் ஏராளம்.

பக்கத்து தெரு பஞ்சாயத்து,
அரசியல் ராஜ தந்திரம் மென
அரசியல் படித்தவர்கள் ஏராளம்.

புழுதியும் வெயிலுமாக
தண்ணீரே உணவாக
பொட்டலில் கரைந்த
இளமைக்காலங்கள் ஏராளம்.

ஒவ்வொருமுறை பொட்டலை
கடக்கும் போதும்,அதன் தாக்கம்
இதயத்தின் அடிவரை வருகிறது.
ரோஜாக்களால் ஏற்படாத
தாக்கமும் ,ஏக்கமும் - ஒரு
பொட்டலால் ஏற்படுகிறது.

இப்போது
பொட்டல்கள் கொள்வாரில்லாமல்
அனாதைகளாக கைவிரித்து
காத்துக்கொண்டிருக்கின்றன.
மகாராஜாக்களையும்
சச்சின்களையும்
சந்திக்க.




























2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..