அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

காகிதங்களும் பேனாக்களும் - ஒரு காதல் ரொமான்ஸ்

1 comment
பேனாக்கள் கண்டிப்பாக
ஆண்கள்தான் - அவை
காகிதங்களின் அங்கங்களைப் பற்றி
தன் இச்சைகளை - அதன் மேல்
பச்சை குற்றிவிடுகின்றன.
காகிதங்களும் பேனாக்களின்
காதல் பரிசுகளை
ஏற்றுக்கொள்கின்றன.
உண்மையில் எழுத்துகள்
உயிரற்ற இரு பொருட்களின்
காதல் இச்சைகள்.

எழுத்துகளுக்கு மனித இனத்தில் பெரிய வரலாறு உண்டு.எழுத்துகள் சிறந்த அறிவு கடத்திகள்.அவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவுச்செல்வத்தை கடத்திச்செல்கின்றன.மனிதன் முதலில் மணலில் குறியீடுகளாக குறிக்க ஆரம்பித்தான்.பின் களிமண்ணில் எழுதி நெருப்பில் சுட்டு, சுட்ட எழுத்துகளை பயன்படுத்த ஆரம்பித்தான்.அதன் பின் பனையோலை,எழுத்தாணி என ஆரம்பித்து காகிதம்,பேனா என அதன் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது.

எழுதும் முறைகளோடு மனிதனும் பரிணமித்துக்கொண்டே வந்திருக்கிறான்.இவ்வளவு பெரிய பரிணாம வளர்ச்சி ஏதோ ஒரு ஆதிமனிதன் தன் உணர்ச்சியை,கற்பனையை பதிய முயற்சி செய்தலின் விளைவாக வந்திருக்கிறது.பெரிய ஆறுகள் கூட சின்ன சுனையிலிருந்து தான் தன் பயணத்தை தொடங்கின்றன.அது போல் எங்கோ ஆரம்பித்த தனிமனித எழுத்து முயற்சி காலம் என்னும் பரிணாம ஓடையில் மெருகேற்றப்பட்டு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

எழுத்து முயற்சியென்பது வெறும் மைகளால் காகிதங்களை நிரப்புவது அல்ல.எழுத்துகள் தனி மனிதனின் அனுபவக்குறியீடுகள்.ஒரு எழுத்தாளன் என்பவன் மேகம் சூழ்ந்த வானிலையில் மழைக்காக காத்திருக்கும் உழவன் போல கற்பனைக்காக காத்திருக்கிறான்.சில நேரம் கற்பனையும்,அனுபவமும் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடலாம் அல்லது பொய்த்தும் போகலாம்.ஆனாலும் அவன் பொறுமையாக இருக்கிறான்.எழுதுவது செயல் அல்ல.அது ஒரு தவம் என்பது அவனுக்கு தெரியும்.அனுபவம்,சிந்தனை,ஆழந்த ஞானம் என எல்லாம் ஒரு புள்ளியில் சந்திக்கும் அந்த ஒரு கணத்திற்காக காத்திருக்கிறான்.

எழுத்துகள் வெறும் குறியீடுகள் தான்.ஆனால் எழுத்துகளால் மனித உணர்வுகளை தூண்டமுடியும்.சிலவகை எழுத்துகள் உணர்வுகளை தூண்டி அனுபவிக்கச்செய்கின்றன.சிலவகை மூளையை சிந்திக்கச்செய்கின்றன.எல்லா எழுத்துகளும் ஒருவிதத்தில் மலைப்பாதையை போன்றவை.அவைகளை பின் தொடர்ந்து செல்லும் போது உச்சியில் இருக்கும், எழில்மிகு காடுகளையும்,கோட்டைகளையும், பள்ளத்தாக்கின் ரகசியங்களையும் ரசிக்க முடியும்.

எழுத்துகள் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல்பரிசுகள்.தனிமையான அறையில் எழுத்தாளன் காகிதத்தையும்,பேனாவையும் காதலிக்க விடுகிறான்.பேனாவின் கடிவாளத்தை தன்கையில் பற்றி கற்பனையோடு காத்திருக்கிறான்.சில நேரங்களில் இந்த காத்திருப்பு நீண்டுகொண்டே இருக்கும்.அடித்தலும் திருத்தலுமாய் காதல் ஆரம்பிக்கும்.பின் சிறிது சிறிதாக பேனா காகிதங்களின் அங்கங்களை பற்றி அதன் மேல் புரள ஆரம்பிக்கும்.அப்போது எழுத்தாளான் தேர்ந்த குதிரை ஓட்டி போல் பேனாவின் கடிவாளத்தை பற்றி காகிதங்களின் அங்கங்களில் பேனாவின் துணையோடு தன் கற்பனையை பச்சைகுற்றி விடுகிறான்.

ஒவ்வொரு எழுத்தாளானும் ஒருவகையில் சுயநலக்காரன்.அவன் ஒரு காதலை தன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறான்.கண்டிப்பாக பேனாக்கள் ஆண்கள்தான்.அவைகள் தன் கூரிய நகங்களால் காகிதங்களில் அங்கங்களில் கீறிவிடுகின்றன.காகிதங்கள் அழகான காதலிகள்.அவைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் காதலனை அரவணைத்துக்கொள்கின்றன.காகிதங்களுக்கும், பேனாக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைய குறைய எழுத்துகள் பரிணமிக்கின்றன.அதன் உயிர்தன்மை ,நிலைப்புத்தன்மை அவர்களின் காதல் வலிமையை சார்ந்தது.எழுத்துகள் உண்மையில் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல் பரிசுகள்.எல்லா எழுத்துகளும் ஒருவகையில் தாஜ்மகால்கள்.

படிக்கவேண்டிய புத்தகங்கள்








1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

உசாரய்யா உசாரு பஞ்சம் வரப்போகுது உசாரு

5 comments
கடந்த சில வருடங்களாக நான் உன்னிப்பாக கவனித்துவரும் விசயங்களில் ஒன்று உணவுப்பொருட்களின் விலைவாசி.2011 ஆம் ஆண்டு நான் மதுரைக்கு குடியேறிய போது ஒரு சாதாரண ஓட்டலில் இரண்டு வகை காய்களுடன் நான் சாப்பிடக்கொடுத்து 30 ரூபாய்.அதே ஓட்டலுக்கு நான் இப்போது கொடுத்துக்கொண்டிருப்பது 60 ரூபாய்.நான்கு வருடங்களில் இரண்டு மடங்குவிலை கூடிவிட்டது என்றால் உண்மையில் இது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய விசயம்.அதிலும் எங்கள் குடும்பமே அரிசி வியாபாரம் செய்ததால் அரிசியின் விலை உயர் பற்றி தீவிரமாக சிந்தித்ததின் விளைவுதான் இந்த பதிவு.

அரிசியில் பொன்னி,கல்சர் பொன்னி,ஐ,ஆர்.20 என வகைகள் உண்டு.இதில் பொன்னி மேல் தட்டு மக்களால் வாங்கப்படும் வகை.ஏனென்றால் அதன் விலை கிலோ 40 லிருந்து 60 வரை இருக்கும்.கல்சர் பொன்னியின் விலை 20 லிருந்து 40 வரை இருக்கும், ஆனால் கடைக்காரர்கள் எல்லாவற்றையும் பொன்னியென்றே நாமம் சாத்தி விற்று விடுவார்கள்.இதிலும் விளைந்து நீண்ட நாள் ஆன அரிசியை பழைய அரிசியெனவும்,விளைந்து கொஞ்சநாளே ஆன அரிசியை புது அரிசியெனவும் அழைப்பார்கள்.சுருக்கமாக ஒரு வருட பழசு அல்லது ஆறு மாத பழசு என குறிப்பிடுவார்கள்.ரொம்ப பழைய அரிசிக்கு மொளசு அதிகம்.ஏனென்றால் அது குழையாது. அரிசியின் கணிசம் அதிகமாக இருக்கும்.இங்கே கணிசம் என்பது முக்கியமான ஒரு சிந்திக்க வேண்டிய விசயம்.ஒருவருக்கு 100 கிராம் கணிசமான அரிசி ஒரு வேளை வயிறு நிறைய தேவைப்படுகிறது  என வைத்துக்கொள்வோம்.அதே நபர் கணிசம் குறைந்த அரிசியை சாப்பிட்டால் அவருக்கு 200 கிராம் வயிறு நிறைய தேவைப்படும்..எனவே கணிசம் என்பது  வயிறு நிறையும் தன்மை எனக்கொள்ளலாம்,கணிசத்தை கவனிக்க தவறினால் மாத பட்ஜெட்டில் போர்வையே விழுந்துவிடும்.

நான் சிறுவயதாக இருக்கும் போது 100 மூடை உள்ளூர் அரிசியென்றால் 10 மூடை கர்நாடக பொன்னி இருக்கும்.கர்நாடக பொன்னி விலை குறைவாக இருந்தாலும், கணிசம் மற்றும் தரம் கம்மியாக இருந்ததால் வாங்க ஆள் இருக்காது.ஆனால் நான் இப்போது கர்நாடக பொன்னி தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.ஏனென்றால் உள்ளூரில் விளையும் பொன்னியின் விளை 60 ஐ தொட்டுவிட்டது.

தீண்டவே ஆளில்லாத அரிசி இன்றைக்கு சிம்மாசானத்தில்.உள்ளூர் அரிசியோ தீண்ட முடியாத விலை உயரத்தில்.என்ன காரணம்?

ரொம்ப எளிமையான காரணம் தான்.விளைச்சல் குறைந்துவிட்டது.உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.நான்கு வருடங்களில் இரண்டு மடங்கு விலைஉயர்வு என்றால் நான்கு வருடங்களில் விளைச்சல் இரண்டு மடங்கு குறைந்து விட்டதாகத்தான் அர்த்தம். விளைச்சல் குறைவுக்கானக்கான காரணங்கள் என்ன?

1.பருவநிலை மாறுபாடு
2.விவசாயம் ஊக்குவிக்கபடாமல் அடுத்த தலைமுறை விவசாயிகள் இல்லாமல் போய்விட்டனர்.
3.தண்ணீர் அரசியல்

பருவநிலை மாறுபாட்டுக்கு நாம் தான் முழுக்காரணம்.குறிப்பாக மரங்களின் அழிவு,தமிழ் நாட்டில் ஊக்குவிக்கப்படும் தொழிற்ச்சாலைகளினால் ஏற்படும் சுற்றுப்புற மாசுபாடு,உலகலாவிய வெப்ப உயர்வு.இதனால் பருவமழை தவறிவிடுகிறது.எனவே விவசாயிகள் அரசையும், நிலத்தடி நீரையும் நம்பி இருக்க வேண்டி இருக்க வேண்டியுள்ளது.தனியார் கம்பெனிகளின் தண்ணீர் சுரண்டல்களினால் நிலத்தடிநீரின் அளவும் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது.மேலும் அரசு விவசாயத்தை ஊக்குவிக்காமல் ஒரு தன்னுடைய ஒரு தலை பட்சமான கல்வி மற்றும் தொழில் அணுகு முறையால் அடுத்த தலைமுறை விவசாயிகளே இல்லாமல் போய்விட்டனர்.வேறு வழியில்லாமல் விவசாயிகள் பக்கத்து மாநிலங்களை தான் தண்ணீருக்காக நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.கேரளமும் கர்நாடகமும் நமக்கு தண்ணீர் தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கப்போகிறார்கள்.

நிறைய பேருக்கு கர்நாடகம் ஏன் தண்ணீர் தருவதில்லை என்ற காரணமே தெரிவதில்லை.ஏற்கனவே மேலே சொன்னபடி அரிசி விவகாரத்தில் நம் போட்டியாளர்களே அவர்கள் தான்.அவர்கள் நமக்கு நிறைய தண்ணீர் தருவார்களாம்.நாம் முப்போகம் விளைவித்து அவர்களுடனே போட்டி போடுவோமாம்.கர்நாடகம் கையை சூப்பிக்கொண்டு வேடிக்கைபார்க்குமாம்.உண்மையில் இந்த தண்ணீர் அரசியலில் அழவேண்டியது நாம் தான். விவசாயிகள் அல்ல.இன்னும் சில வருடங்களில் நம் சொந்த விவசாயமே அழியப்போவதின் அறிகுறிதான் இவையெல்லாம்.அப்போது யானைவிலைக்கு குதிரைவிளைக்கு போகப்போகிறது அரிசிவிலை.இதையெல்லாம் தமிழகத்தின் ஒட்டு மொத்தவிவசாயத்தையே குலநாசம் செய்ய ஒருதிட்டத்தை செயல்படித்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.அதை பற்றி அடுத்த கட்டுரையில்.

எங்கள் அப்ப எங்களை எதற்காவும் வீட்டில் கண்டித்ததில்லை.ஏன் திட்டியது கூட இல்லை.ஆனால் ஒரு விசயத்தை தவிர.அது என்ன தெரியுமா?சாப்பிடும் போது சிந்தும் ஒரு துளி அரிசி மணிக்காக.சிந்தினாலும் பொறுக்கி தட்டில் போட்டு சாப்பிடச்சொல்வார்.ஏன் என்பதற்கு அவரே காரணம் சொல்வார்.ஒரு அரிசி மணி விளைய ஆறு மாதங்கள் வெயில், மழை, காற்று என்று பாராமல் உழைத்து கண்ணின் மணியை போல் பாதுகாக்கிறார்கள்.ஒரு மணி என்பது ஒரு விவசாயின் ஆறுமாத உழைப்பு.அதை விரயம் செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

நாம் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பசியென்றால் கைவைக்கப்போவது என்னவோ சோற்றில் தான்.சோற்றில் கைவைக்கும் போது உங்களுக்காக சேற்றில் கால்வைத்த மினிதர்களை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.அவர்களும் மனிதர்கள் தானே.

"சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.

படிக்கவேண்டிய புத்தகங்கள்








5 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..