எனர்ஜி டானிக் : எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்
எதிர்வினையில்லை என்றால் நாம் இறந்துவிட்டதாக அர்த்தம்
சின்னதாகவோ, பெரியதாகவோ நம்மைச் சுற்றி பல தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.வெறும் செய்திகளாகவும் பொழுதுபோக்கும் சம்பவமாகவும் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்.சின்னதாக ஒரு எதிர்ப்பை நாம் மனதுக்குள் கூட சொல்லிக்கொள்ள மாட்டோம்.இது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை வியாதி போல் பரவி உள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது.
பெற்றோர்கள் செய்யும் தவறை பிள்ளைகள் எதிர்த்து சொல்லக்கூடாது.ஆசிரியர்கள் தவறை மாணவர்கள் எதிர்த்து சொல்லக்கூடாது என அடிப்படையிலே எல்லாவற்றையும் அமுக்கி நசுக்கி ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டோம்.ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் யாருக்கோ நடந்தது போல் வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
பக்கத்து நாட்டில் கொத்து கொத்துதாக மக்கள் அகதிகளாக கொல்லப்படுகின்றனர்.பக்கத்து மாவட்டத்தில் விவசாய நிலங்களை நசுக்கி கார்பரேட் கம்பெனிகள் அபகரிக்கின்றன.பக்கத்தில், தூரத்தில் என பாகுபாடில்லாமல் தனிமனித சுதந்திரங்கள்,வாழ்வுரிமை பறிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.செய்யாத தவறைக்கூட எடுத்து சொல்ல வழியில்லாமல் கூனிக்குறுகி கடந்து கொண்டிருக்கின்றோம்.
எதிர்க்கமாட்டார்கள் என தெரிந்தே அரசியல்வாதிகள் பொய்மேல் பொய் கூறி நம்மை இழிச்சவாயகர்களாக வைத்திருக்கிறார்கள்.எதிர்க்கமாட்டார்கள் என் தெரிந்தே கார்ப்பரேட் கம்பனிகள் கலப்பட பொருளையும் தர குறைந்த பொருளையும் தலையில் கட்டுகிறார்கள்.நாம் எதிர்க்காமலே இருந்ததால் நம்மை 200 வருடங்களாக அடிமைகளாகவே வைத்திருந்தார்கள்.
காந்தி என்ற மாபெரும் மனிதரே நிறவெறிக்கெதிராக சின்ன எதிர்ப்பை காட்டியதால் தான் உருவானார்.அன்று தென்னாப்பிரிக்காவில் காந்தியை நிறவெறியை காரணம் காட்டி முதல் வகுப்பில் பயணம் செய்வதை தடுத்தை காந்தி எதிர்த்திருக்காவிட்டால் காந்தி என்ற மனிதர் உருவாகியிருக்க மாட்டார்.இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்காது.கார்ல்மார்க்ஸ் மட்டும் முதலாளித்துவத்தை எதிர்த்திருக்காவிட்டால் சமத்துவம் கிடைத்திருக்காது.பல தனிமனித எதிர்ப்புகளின் விளைவுகள் தான் இன்று நாம் வாழும் நவீன உலகம்.
எதிர்ப்பு என்பது எதிராளியின் மனதை தூண்டுவதாக இருக்க வேண்டும்.நம் எதிர்ப்பு எதிராளியை சிந்திக்க செய்து தன் குற்றத்துக்காக கூனி குறுக்கச் செய்ய வேண்டும் என காந்தி கூறுகிறார்.தவறுகளை பார்த்து தப்பி ஓட வேண்டாம்.இது தவறு என சொன்னால் கூட போதும்.துப்பாக்கி தூக்கி போராட வேண்டாம்,ஒரு பேப்பரை எடுத்து எதிர்ப்பை எழுதி பிரசுரித்தால் போதும்.
ஒன்றை எதிர்க்க ஆரம்பிக்கும் போதே நம்மை நாம் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.மற்றவர்களை எதிர்க்க ஆரம்பிக்கும் முன் தான் சரியாக இருக்கிறோமா என காந்தி தன்னை தானே கேட்டுக்கொண்டார்.தன்னை சரி செய்ய ஆரம்பித்தார்.மகாத்மா ஆனார்.சாவு ஒரு முறைதான்.ஆனால் எப்படி சாகிறோம் என்பது முக்கியம்.எதிர்க்காமல் உள்ளே புழுங்கி வெந்து நொந்து சாவதை விட எதிர்த்து விட்டு சந்தோஷமாக சாகலாம்.குனிந்து குனிந்து வாழ்ந்து நமக்கு இருப்பது முதுகுதண்டா? ரப்பர்துண்டா? என்ற வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எதிர்த்து பழகுங்கள்,உலகமே நமக்கு எதிராக இருந்தாலும்.
எதிர்த்து பழகுங்கள்.பயம் நம்மைவிட்டு ஓடும் வரை.
எதிர்த்து பழகுங்கள்,நாம் உயிர்ப்பு தன்னையுடன் வாழ்வதற்காக
எதிர்த்து பழகுங்கள்,நாம் விழிப்போடு வாழ்வதற்காக.
எதிர்த்து பழகுங்கள்,நம் முட்டாள்தனங்ககளை தெரிந்து கொள்ள.
எதிர்த்து பழகுங்கள்,கடவுளின் உதவியில்லாமல் வாழ.
எதிர்த்து பழகுங்கள்,சிலருக்கு கடவுளாக இருக்க.
சரியோ தவறோ எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்.
இதோ அற்புதமான பாரதியின் பாடல் வரிகள்
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..