அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கண்ணீர்! தண்ணீர்!

இனம் வேண்டாம்
மொழி வேண்டாம்
மதம் வேண்டாம்
எல்லாம் கடந்த அன்பு வேண்டும்

ஈசல் கூட அரைநொடி ஆயுலில்
அற்புதமாய் வாழ்கிறதே!
வரலாறாய் வாழும் மானிடா
ஏன் இந்த போராட்டம்?
ஏன் இந்த சண்டை?
தாய்மொழியென்று மார்தட்டும் நீ
அன்பின் மொழி மறந்ததென்ன?
என்னுடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல
பக்கத்து மாநிலத்தில் பிறந்த
நீ கூட என் சகோதரன்தான் என்று
தேசியகீதம் பாடும்போது
உறுதிமொழி கூறினேனடா.

உன்னை திட்டகூட மனம் வரவில்லை
ஆனால் நீ வெட்ட வருகிறாய்
கண்ணீர் வருகிறது, சிறு
தண்ணீருக்காக என்னை அடிக்கும்போது
உனக்கும் எனக்கும் இடையில்
ஆயிரம் தடுப்புகள் இருந்தாலும்
என்மனம் உன்னை நினைத்து அழுகிறது.

நான் கேட்பது தண்ணீர்
நீ கொடுப்பதோ கண்ணீர் ,பரவாயில்லை
என் கல்லறை மேல்
உன்மாளிகை கம்பீரமாய் எழும்பட்டும்
அப்போதும் சொல்வேன்
இவ்வுலகில் பிறந்தயாவரும்
என் உடன்பிறந்தோரென்று!!

உனக்காக தான்

அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துகொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்.

காதல் கசியும் நேரம்

அழகான மாலைநேரம்
அந்திசாயும் மாலைநேரம்
இரவே நுழைந்தாயோ
பகலே மறைந்தாயோ

என்னுள் ஏதோ மாற்றம்
சிறு மின்னலின் தோற்றம்
மனதே கரைந்தாயோ
ஈரம் கசிந்தாயோ

வானம் முழுக்க வண்ணமாற்றம்
எந்தன் வானில் அவளின் தோற்றம்
நிலவே வந்தாயோ
காதல் சொன்னாயோ

எந்தன் உணர்வு விளிம்புகளில் சிறுமாற்றம்
எந்தன் உடல் முழுதும் சிறுஏக்கம்
மனமே அழுதாயோ
அவளை நினைத்தாயோ

காதல் உணர்வுகளில் நான் திளைக்க
அவளைபற்றி என் உடல் நினைக்க
தூக்கம் வாராதோ
ஏக்கம் குறையாதோ

என் ஏக்கம் இங்கிருக்க
அவளின் ஏக்கம் அங்கிருக்க
கனவே வருவாயோ
தூரம் குறைப்பாயோ

இரவே முடியாதே!
பகலே வாராதே!
இரவே முடியாதே!
பகலே வாராதே!

உயிர் நண்பனே

எங்கோ பிறந்தோமடா
எங்கோ வளர்ந்தோமடா
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நண்பர்கள் ஆனோமடா

இன்பத்தில் இனித்தாய்
துன்பத்தில் அணைத்தாய்
என்னை எனக்கே
அடையாளம் காட்டினாய்

என் உதட்டின் வழியே நீ சிரிக்க
உன் கண்ணின் வழியே நான் அழ
உயிருக்கு உயிராய் ஆனாயடா

வறண்ட என் வானத்தில்
தேன் மழை பொழிந்தாயடா
சாறற்ற என் வாழ்க்கையில்
பின்னணி இசை ஆனாயடா
பெற்றோரை மறந்து
உடன் பிறந்தவர்களை மறந்து
நீயே என்வாழ்க்கை
என்று ஆனாயடா

சின்ன சண்டைகள்
சில்மிஷ சேட்டைகள்
ஒற்றைச் சட்டை
ஒரே படுக்கை
மொட்டை மாடி
தேனிர் விடுதி
குட்டிச்சுவரு
கோவில் சாலை
என வாழ்க்கையை
கரைத்தோமடா

விதியென வாழ்க்கை
நண்பர்கள் ஆனோம்
சதியென வாழ்க்கை
பிறிந்து விட்டோம்
உடல் இங்கே
உயிர் அங்கே
இருட்டில் நான்
ஒளியில் நீ
என்குரல் கேட்கிறதா?
மீண்டும் வருவாயா?

அழவிடமாட்டேன் என்றாயடா?
இப்போது உனக்காக அழுகிறேனடா!
நிலவுக்கு காத்திருக்கும் இரவுபோல
உனக்காக காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
என் உயிர் நண்பனே!

காத்திருப்பு

முள்ளில் பூத்த அழகே
என் சொல்லில் முளைத்த கனியே
இசையாய் காற்றாய்
இனிக்கும் தேனாய்
என் உயிரில் கலந்த உணர்வே!

உன்னை நினைக்கும் போது
என் உள்மூச்சும் எரியுதடி
விழிகள் மூடினாலும்
உன் பிம்பம் தெரியுதடி
உன் ஒவ்வொரு அசைவிலும்
என்னுள் மாற்றம் நிகழுதடி

காலம் சுருங்க
இடைவெளி அதிகரிக்க
உன் ஒவ்வொரு மொளனம்
என்னைக் கொல்லுதடி
என் ஆசை குழந்தையின்
அழுகுரல் கேட்கவில்லயா?
அது காதல் கேட்கிறது
நீ மொளனம் கொடுக்கிறாய்
விண்ணை நோக்கிய மண்ணாய்
உன்னை நோக்கி காத்திருக்கிறேன்
உன் காதலுக்காக!

என் கேள்வி ?

கேள்வியொன்னு கேள்வியொன்னு
மண்டைக்குள்ள நிக்குது
அத கேக்கனும் நினைக்கும்போது
நெஞ்சுக்குள்ள விக்குது
வந்த இடமும் தெரியல
போகும் இடமும் தெரியல
நடுவுல நின்னுக்கிட்டு
நானும் கேள்வி கேக்குறேன்

கட்டிக் கட்டா புத்தகமுண்டு
கடன் வாங்கிய அறிவுமுண்டு
புத்திசாலினு பேருமுண்டு
நல்லவனா நடிப்பும் உண்டு
நடிக்கிறேனு தெரிஞ்சிருந்தும்
நடிக்காம இருந்ததில்ல
பிடிக்கலேனு தெரிஞ்சிருந்தும்
பிடிச்சமாறி நடிச்சதுண்டு

நண்பன் இருந்தாலும்
உண்மையாக நானுமில்ல
காதல் இருந்தாலும்
அன்பாக இருக்கவில்ல
உண்மை இருந்தாலும்
உண்மை சொல்லி பழக்கமில்ல
கடவுளே வந்தாலும்
பிச்சையெடுக்காத நாளில்ல

ஒன்னும் இல்லேநாளும்
கொழுப்புக்கு பஞ்சமில்ல
மண்ண தின்னாலும்
வெறிக்கு பஞ்சமில்ல
கட்டைல போனாலும்
சபலத்துக்கு பஞ்சமில்ல
நானும் சாகும்போது
ஊருக்குள்ள அழுவாரோ?
நல்லவன் போயிட்டானு
ஊருக்குள்ள சொல்வாரோ?
நானும் அத கேட்பேனோ?
சந்தோஷமா போவேனோ?


கடைசி காதல் கடிதம்

ஏ பெண்ணே!
உன்மீது நான்கொண்ட உணர்வு
ஓர் உண்மை!
அதற்காக இயற்கை கற்பழித்து
காதல்,அன்பு என்ற வார்த்தைகளின்
பின்னால் ஒளியவிருப்பமில்லை.
உன் பெண்மை
என் உணர்வை உணருமானால்
என்னை ஏற்றுக்கொள்
உன்மடியில் சாய்ந்து கொள்கிறேன்
இல்லை மண்ணில் வீழ்ந்துவிடுகிறேன்.

இன்னொரு காலை

ஊர்ஓரம் அரசமரம்
மாமனுக்கு காத்திருந்தேன்
மாமனும் வரவில்ல
மனசும்தான் இயங்கவில்ல
மாமனும் வருவாரோ?
மனச கொஞ்சம் தருவாரோ?

ஒத்த மரத்தடியில்
ஒரு நேரம் காத்திருக்கேன்
நிக்க நிழலில்ல
நீதி சொல்ல ஆளில்ல
காலைல வந்தவ
கால் கடுக்க நிக்குறேன்
ஒத்த முகம்பாக்க
ஒத்த காலில் நிக்குறேன்
சொக்கன் முகம் பார்ப்பேனோ?
சொக்கிப் போய் நிப்பேனோ>

கருத்த உடம்புண்டு
இரும்பு போல கையுண்டு
வட்ட முகமுண்டு
லட்டுபோல கண்ணுண்டு
அழக சிரிப்பாரோ?
மல்லிகைப்பூ கொடுப்பாரோ?

மாமனுக்கு பிடிக்குமுனு
மடிநெறய சோளமும்
தாகம் எடுக்குமுனு
சட்டிநெறய மோரும்
கொண்டுவந்தேன்
மாமனும் வரல
மடிபாரமும் இறங்கல

நாளும் ஓடுதடி
பொழுதும் தேயுதடி
நாளும் ஏங்குறேன்
நாளுக்கு நாள் தேயுறேன்
தினமும் தூங்கையில
நெஞ்சுக்குள்ள அழுகுறேன்
இன்னைக்குப் பார்ப்பேன்னு
காலையில முழிக்குறேன்!



காலை கானம்

பாடும் பறவைகளே
எந்தன் பாடலை கேளுங்கள்
கூடும் மேகங்களே
எந்தன் கூக்குரல் கேளுங்கள்
ஒரு பாடல் நானும்பாட
அதைக்கேட்டு பூக்கள் பூக்க
இதுதானோ கானம் என்று
கதிரவனோ எட்டிப் பார்க்க
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


காலைநேரப் பனித்துளி ஒன்று
புல்லின் மீது நடனமாட
சாலையோர பூக்கள் எல்லாம்
தலையசைத்து புன்னகை சிந்த
காற்றில் மிதக்கும் ஈரஅணுக்கள்
என்னுள்ளே உரசிச் செல்ல
இருண்டுகிடந்த என்மனக் காடோ
சற்றென்று பற்றிக் கொள்ள
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


அழகான காலைப்பொழுதே
என் மெளனம் கலைத்தாயே
சொல்லாத உணர்வுகள் எல்லாம்
சொல்லி நீ சென்றாயே
சிறு மின்னல் காட்சிமூலம்
தேடிச்சென்ற ஞானம் எல்லாம்
சிறுபுல்லில் நானும் காண
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!





நானா இப்படி?

என்னில் விழுந்தாய்
காதலாய் மாறினேன்

சொல்லில் விழுந்தாய்
கவியென மாறினேன்

கண்ணில் விழுந்தாய்
கருவிழி ஆகினேன்

சிப்பியில் விழுந்தாய்
முத்தென மாறினேன்

நிலவில் விழுந்தாய்
அழகென மாறினேன்

காற்றில் கலந்தாய்
சுவாசம் ஆகினேன்

பூவில் விழுந்தாய்
வாசம் ஆகினேன்

புவியில் விழுந்தாய்
 ஜீவன் ஆகினேன்

 துளியாய் விழுந்தாய்
கடலாய் மாறினேன்

உளியாய் விழுந்தாய்
சிலையாய் மாறினேன்

என்னை என்ன செய்தாய்
இப்படி மாறினேன்!!