அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

இன்னொரு காலை

ஊர்ஓரம் அரசமரம்
மாமனுக்கு காத்திருந்தேன்
மாமனும் வரவில்ல
மனசும்தான் இயங்கவில்ல
மாமனும் வருவாரோ?
மனச கொஞ்சம் தருவாரோ?

ஒத்த மரத்தடியில்
ஒரு நேரம் காத்திருக்கேன்
நிக்க நிழலில்ல
நீதி சொல்ல ஆளில்ல
காலைல வந்தவ
கால் கடுக்க நிக்குறேன்
ஒத்த முகம்பாக்க
ஒத்த காலில் நிக்குறேன்
சொக்கன் முகம் பார்ப்பேனோ?
சொக்கிப் போய் நிப்பேனோ>

கருத்த உடம்புண்டு
இரும்பு போல கையுண்டு
வட்ட முகமுண்டு
லட்டுபோல கண்ணுண்டு
அழக சிரிப்பாரோ?
மல்லிகைப்பூ கொடுப்பாரோ?

மாமனுக்கு பிடிக்குமுனு
மடிநெறய சோளமும்
தாகம் எடுக்குமுனு
சட்டிநெறய மோரும்
கொண்டுவந்தேன்
மாமனும் வரல
மடிபாரமும் இறங்கல

நாளும் ஓடுதடி
பொழுதும் தேயுதடி
நாளும் ஏங்குறேன்
நாளுக்கு நாள் தேயுறேன்
தினமும் தூங்கையில
நெஞ்சுக்குள்ள அழுகுறேன்
இன்னைக்குப் பார்ப்பேன்னு
காலையில முழிக்குறேன்!



காலை கானம்

பாடும் பறவைகளே
எந்தன் பாடலை கேளுங்கள்
கூடும் மேகங்களே
எந்தன் கூக்குரல் கேளுங்கள்
ஒரு பாடல் நானும்பாட
அதைக்கேட்டு பூக்கள் பூக்க
இதுதானோ கானம் என்று
கதிரவனோ எட்டிப் பார்க்க
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


காலைநேரப் பனித்துளி ஒன்று
புல்லின் மீது நடனமாட
சாலையோர பூக்கள் எல்லாம்
தலையசைத்து புன்னகை சிந்த
காற்றில் மிதக்கும் ஈரஅணுக்கள்
என்னுள்ளே உரசிச் செல்ல
இருண்டுகிடந்த என்மனக் காடோ
சற்றென்று பற்றிக் கொள்ள
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


அழகான காலைப்பொழுதே
என் மெளனம் கலைத்தாயே
சொல்லாத உணர்வுகள் எல்லாம்
சொல்லி நீ சென்றாயே
சிறு மின்னல் காட்சிமூலம்
தேடிச்சென்ற ஞானம் எல்லாம்
சிறுபுல்லில் நானும் காண
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!





நானா இப்படி?

என்னில் விழுந்தாய்
காதலாய் மாறினேன்

சொல்லில் விழுந்தாய்
கவியென மாறினேன்

கண்ணில் விழுந்தாய்
கருவிழி ஆகினேன்

சிப்பியில் விழுந்தாய்
முத்தென மாறினேன்

நிலவில் விழுந்தாய்
அழகென மாறினேன்

காற்றில் கலந்தாய்
சுவாசம் ஆகினேன்

பூவில் விழுந்தாய்
வாசம் ஆகினேன்

புவியில் விழுந்தாய்
 ஜீவன் ஆகினேன்

 துளியாய் விழுந்தாய்
கடலாய் மாறினேன்

உளியாய் விழுந்தாய்
சிலையாய் மாறினேன்

என்னை என்ன செய்தாய்
இப்படி மாறினேன்!!

சொல்லாட்டு

செவ்வானம் பூப்பூக்க
கார் இருளோ கொடை விரிக்க
கண்ணே விழித்தாயோ
கன்னித்தமிழ் கேட்டாயோ!

அப்பன் வரும் வரையில்
எந்தனிமை நீ போக்க
சோககத நான் பாட
கண்மணியே கேட்பாயோ!

மன்னன் நாடாள
மாந்தோப்பில் குயில் பாட
மண்குடிசை இல்லாமல்
மரக்கிளையில் நீயாட
பண்ணெடுத்து நான் பாட
பைங்கிளியே கேட்டாயோ!

பலகாரம் இனிக்குமென்று
ஊருசனம் சொல்லயிலே
பலகாரம் என்னவென்று
பைங்கிளியே அறிவாயோ!

நெல் குத்தும்போது
நெல்ல கொஞ்சம் பார்த்ததுண்டு
நெல்லு சோறு என்னவென்று
பைங்கிளியே நான்றியேன்!

கட்டிக் கொள்ள துணியுனில்ல
ஒட்டிக் கொள்ள சுவருமில்ல
கோட மழ பெய்யயில
கண்மணியே என்ன செய்ய?

சட்டிக்குள்ள தண்ணியுண்டு
அத சுத்தி தவளையுண்டு
சட்டியில சோறு பொங்கி
நாளு ரொம்ப நாளாச்சி!

காலம் வருமென்று
சட்டி நிறையுமென்று
கன்னீரில் நான் பாட
கண்மணியே நனைந்தாயோ?

சாகாவரம்

இன்னதென உலகம்
இதுவென தறியாமல்
பண்ணிய பாவங்கள்
பெற்றதொரு குழந்தை
ஓழமிட்டு அழுக,

உச்சிதனை முகர்ந்து
நெற்றியில் முத்தமிட்டு
பாலூட்டி சீராட்ட,

விதைத்தநெல் முளைக்காமல்
பருவமழை பொய்த்துவிட
பெற்றகடன் தொட்டிலிலே
பட்டகடன் வாசலிலே,

பாதிமுகம் சிரிக்கையிலே
மீதிமுகம் கோணலிலே
பாவிமகள் பிறந்தாளென்று
பார்நிரப்ப வந்தாளென்று
ஊர்ப்பேச்சு கேட்கையிலே,

கள்ளி மடிபிடித்து
பால்மணம் மாறுமுன்னே
கள்ளிப்பால் கொடுத்தாயோ
கல்நெஞ்சன் ஆனாயோ
கட்டையிலே போகுமுன்னே
சாகாவரம் கேட்டாயோ?

காதல் விஞ்ஞானி

கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே  போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்

நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?

நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்


உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
 நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.


பாட்டாளி


சுட்டு விரல் இங்கே
சுட்டு பொருள் எங்கே
பட்டபாடு எஞ்சிருக்க
புசித்த வயிறு காஞ்சிருக்க
பண்ணையவன் பழுத்திருக்க
பனம் பழமோ தனித்திருக்க
கூடியவளுக்கோ கூழில்லை
கேட்பதற்கு நாதியில்லை
கேட்காத நாளில்லை
கேட்டவனோ முடமாக
கேட்பவனோ செவிடாக
பிரார்த்தனையோ பிணமாக
வறுமையோ வறுத்தெடுக்க
பொறுமையை செல்லறிக்க
வாழவும் வழியில்லை
சாகவும் வழியில்லை
வழியில்லா வாழ்க்கையில்
வழிதெரியா வழிப்போக்கனாய்
சிதைந்து கொண்டிருக்கிறான்!

ரோஜா

பச்சைக் குச்சியின்மேல்
கட்டழகியின் நடனம்,
காட்சி நேரம்,
காலை முதல்
மாலை வரை!

ஊடல்

குளிரின் மஞ்சத்தில்,
குளிர்காயும் நேரத்தில்,
இதமாய் பதமாய்,
இதழோடு இதழாக,
உயிரோடு உயிராக
ஒளிவீசினாய்!
காதல் சொன்னாய்,
கவிதை தந்தேன்,
கோபம் என்றாய்,
விலகி நின்றேன்,
வளைந்து நெழிந்தாய்,
வாரி அனைத்தேன்,
கண்ணில் சிரித்தாய்,
காதில் சொன்னேன்,
அன்பே கொல்லாதே!







அலைபேசி காதல்

சித்திரை பல்லழகி,
ஒய்யார நடையழகி,
சிலிர்க்கும் கூந்தலுடன்,
நீல வண்ண குழாயும்,
பச்சை வண்ண சொக்காயுடன்,
பூனநடை நடந்து கொண்டு,
சாய உதட்டின் வழியே
கண்ணே மணியே
கணியமுதே கற்கண்டே என்று
தாலாட்டிக் கொண்டிருந்தாள் அலைபேசியை!
காதலின் பரிசத்தை
ஊமையாய் குருடாய்
கேட்டுக்கொண்டிருந்தது அலைபேசி.