அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

இடைவெளி

இடைவெளிக்கு
மதிப்பில்லையென்று யார் சொன்னது?
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையேயான இடைவெளிதான்
அவர்களின் காதலை இனிக்க செய்து
கல்யாணத்தை புளிக்க செய்கிறது!!!

அந்த தீபாவளி

அப்போதெல்லாம்
இரண்டு ஒட்டுப்போட்ட டவுசர்
இரண்டு நைந்த சட்டை என
வருடத்தை ஓட்டிய நான்
புது துணிகளுக்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வெளியூரில் வேலைபார்க்கும்,படிக்கும்
அண்ணண் மற்றும் நண்பர்களை
சந்திக்க கிடைக்கும் அந்த அரிய
சந்தர்பத்திற்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வருடம் முழுவதும் உழைத்த
அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்
தீபாவளி அன்றுதான் ஓய்வுநாள்,
அவர்கள் செய்துதரும்
அந்த பலகாரத்திற்காக தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

அப்பா எடுத்து தரும்
புத்தாடைகளை நண்பர்கள்
ஏற்றுகொள்வார்களா என்ற
எதிர்ப்பார்ப்புகளுடன்  தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

மத்தாப்புகளும்,வாணவேடிக்கைகளும்
வாங்க முடியாமல் போனாலும்
போன தீபாவளிக்கு நண்பன் வெடி தந்தமாதிரி
இந்த தீபாவளிக்கும் தருவானோ? என தீபாவளியை
எதிர்பார்த்து காத்திருந்தேன்,

வருடம் ஒருமுறை குடும்பத்தோடு
அமர்ந்து இலை விரித்து சாப்பிடும்
அந்த ஒரு நாளுக்காக தீபாவளியை எதிர்பார்த்து
காத்திருந்தேன்,

இப்படி எல்லா எதிர்ப்பார்ப்புகளும் சேர்ந்து
தீபாவளியை ஒரு திருவிழாவாக
காண்பித்தன,உற்சாகம் கரைபுரண்டு
ஓடச்செய்தன.

ஆனால் இன்று என்னிடம்
எல்லாம் இருப்பதால்,
எதிர்பார்ப்பே இல்லாமல்
ஒரு சாதாரண வார விடுமுறை போல்
சிறு புன்னைகையுடன்
வார்த்தை வாழ்த்துகளுடன்
என் தீபாவளி முடிந்துவிடுகிறது.


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!!



 








வெறுமையின் வலி

வெறுமை
இங்கே கொட்டிக்கிடக்கும்
வரிகளுக்குள்ளும் வார்த்தைகளுக்குள்ளும்
நீங்கள் எதை தேடிக்கொண்டு வந்தீர்களோ?
அதைதான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்!
உணர்வுகளை தேடும் மனிதர்களின்
நடுவில் இந்த வெறுமையின் வலிகளை
வரிக்கும் வெற்று மனிதன் நான்!!

பெண்மை

பெண்மை
ஆண் உடலின்
ஒன்பது வாசல்களிலும்
நுழைந்து பரவமூட்டும்
ஒரு வரிக்கவிதைதான்
பெண்மை.

விஸ்வரூபம்

சூழ்ச்சி வலையால்
பசுவின் கழுத்தை நெறித்த
பசுந்தோல் போர்த்திய
புலியென தீவிரவாதம்.
பசு புனிதம் - அதுபோல்
எல்லா மதமும் புனிதம்.
பசுவை வணங்கும் நாம்
பசுந்தோல் போர்த்திய
புலிகளை வணங்குவது தகுமோ?
மதத்தை வணங்கலாம்.
ஆனால் அதன் பின்னால்
ஒளிந்து வாழும்
மக்களை கொல்லும்
மனித பீரங்கிகளை
துடைத்து  துடைத்து 
வணங்கவா முடியும்?
தவறுகளை சுட்டிக்காட்டும்
விரல்களை வெட்ட ஆரம்பித்தால்
உலகமும் நரகம்.
அதே ஏற்றுக்கொண்டால்
நரகமும் சொர்க்கம்.
மனிதன் மனிதானாக
இருக்கவே மதம்.
மதம் கருணையாகும் போது
கடவுள் ஆகிறது.
மதம் கருகும் போது
மிருகமாகிறது.
எங்கே கொள்கையும்
பாதையும் தவறப்படுகிறதோ
அங்கே மதம் கருகுகிறது.
கருகுவதன் காரணத்தை
சுட்டிக்காட்டி ஆளில்லை.
போராட ஆளில்லை.
களை வெட்ட ஆளில்லை.
ஆனால் சுட்டிகாட்டுபவனை
வெட்டி எறிய கூட்டமுண்டு.
குறைகளை ஏற்காத,சகிக்கமுடியாத
எல்லாம் டார்வின் பரிணாமப்படி
வாழ்ந்தாக சரித்திரம் இல்லை.
மாற்றமென்பது நம்மிடம் வரவெண்டியது
அடுத்தவரிடம் இல்லை.
மாறுவோம் மனிதனாவோம்.







ஜென் நிலா

நிலா
வெறும் நிலா
நிர்வாண நிலா
நிலா நிலாவாக
இருப்பதை தவிர
வேறொன்றும் இல்லை.

காமம்

நானோ
என்னவென்றே தெரியாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
நீயோ
என்னவென்றே தெரியாமல்
கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
தேடுவதும் தெரியாமல்
கொடுப்பதும்  தெரியாமல்
அனுபவம் மட்டும் காட்சியாக
வேட்கை தொடர்கிறது.
 

கருவறை சுகம்

ரத்தமும் சதையுமாய்
ஆனந்த சுகத்தோடு
அன்னையின் கருவறையில்
உறங்கியதொரு காலம்.....

யாருமில்லா தனிமையில்
நான் உள்ளே இருந்து
அவள் பேசுவதை கேட்டு
கழித்ததொரு காலம்....

அந்த பத்து மாதமும்
எனக்காக அவள் பட்ட
கஷ்டமெல்லாம் எனக்கு
மட்டுமே தெரியும்....

பத்துமாதமும் முடிந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் கருவறையில்
இருந்து பிரித்து பூமியில்
நட்டார்கள்.கேட்டால்
பிறந்தநாள் என்றார்கள்.

அன்று நான் அழுவதை
சுற்றி நின்று ஆனந்தமாக
சிரித்தார்கள் .

அன்று தொலைத்த
கருவறை சுகம்
அன்பாக காதலாக மாறி
ஒரு பெண்ணை
நோக்கி நகர்ந்தது!

அவளும் வந்தாள் - மனைவியாக.
அவள் மார்பில்
தலைவைத்து படுத்துக்கொண்டேன்.
அவளும் தலைகோதிவிட்டாள்.
மீண்டும் குழந்தையாகி போனேன்.

மீண்டும் ஒரு நாள் வந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் பூமியில்
இருந்து பிரித்துவிட்டார்கள்.கேட்டால்
இறந்தநாள் என்கிறார்கள்.

இப்போது எல்லோரும்
அழுகிறார்கள்.நானோ
ஆனந்தமாக இருக்கிறேன்.ஏனென்றால்
நான் மீண்டும் அவளோடு
சேரப்போகிறேன் .

அந்த கருவறை
சுகத்திற்கான
பயணத்திற்கு மீண்டும்
தயாராகிவிட்டேன்.









நான் தேடும் கவிதை

தினமொரு கவிதை
எழுதிட நினைத்து
தவியாய் தவிக்கிறேன்.

ஆயிரம் எண்ணங்கள்
குவியலாய் அவியலாய்,
 அதிலொரு முகத்தை தேடுகிறேன்.

எண்ணங்கள் கூடி வர
வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை.
வார்தைகள் வளைந்துவர
அர்த்தங்கள் ஒத்துழைக்கவில்லை.
அர்த்தங்கள் கூடிவர
உணர்வுகள் வெளிப்படவில்லை.

இன்னமும் குப்பையும்
கூழமுமாய் ஒழுங்கில்லா
வடிவியலுடன் எழுத்துகளை
அடுக்கி கவிதை
செய்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் உணர்வை தொட்டு
உயிரில் கலக்கும் அந்த
கவிதை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.


தெருக்கூத்து

இருட்டுக் கொட்டடியில்
சிற்றிடை சிரிப்பழகியின்
கடைசரக்கை கண்டிட,
விட்டில் பூச்சிகளாய்
வாலிபம் மொய்த்து நிற்க,
ஆரம்பித்தது கலைக்கூத்து.

அடித்தொண்டை கானமும்
கோமாளி பேச்சுமாய் தன்
நாடகத்தை தொடங்கினாள்.
காட்டியும் காட்டாமலும்
பேசியும் பேசாமலும்
ஜாடையாய் அவள் செய்த
கோலங்கள் இரவைவிரட்டிக்
கொண்டு இருந்தன.

ஏழ்மையின் காரணமாய்
தன் மானத்தை முச்சந்தியில்
கொட்டி அவள்  அள்ளி
கொண்டிருந்ததை பதின்ம
வயது சிங்கங்கள்
சீண்டி சுகம் கண்டனர்.

இங்கே பார்பவனுக்கும் பசி
பார்க்கப்படும் பொருளுக்கும் பசி
இவனது காமப்பசி அங்கே
அவளுக்கு வயற்றுப்பசியை
தீர்க்கிறது.

உண்மையில் பசி
சந்தி சிரிக்க வைக்கும்
கலைக்கூத்து தான்.