அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஜென் நிலா

நிலா
வெறும் நிலா
நிர்வாண நிலா
நிலா நிலாவாக
இருப்பதை தவிர
வேறொன்றும் இல்லை.

காமம்

நானோ
என்னவென்றே தெரியாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
நீயோ
என்னவென்றே தெரியாமல்
கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
தேடுவதும் தெரியாமல்
கொடுப்பதும்  தெரியாமல்
அனுபவம் மட்டும் காட்சியாக
வேட்கை தொடர்கிறது.
 

கருவறை சுகம்

ரத்தமும் சதையுமாய்
ஆனந்த சுகத்தோடு
அன்னையின் கருவறையில்
உறங்கியதொரு காலம்.....

யாருமில்லா தனிமையில்
நான் உள்ளே இருந்து
அவள் பேசுவதை கேட்டு
கழித்ததொரு காலம்....

அந்த பத்து மாதமும்
எனக்காக அவள் பட்ட
கஷ்டமெல்லாம் எனக்கு
மட்டுமே தெரியும்....

பத்துமாதமும் முடிந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் கருவறையில்
இருந்து பிரித்து பூமியில்
நட்டார்கள்.கேட்டால்
பிறந்தநாள் என்றார்கள்.

அன்று நான் அழுவதை
சுற்றி நின்று ஆனந்தமாக
சிரித்தார்கள் .

அன்று தொலைத்த
கருவறை சுகம்
அன்பாக காதலாக மாறி
ஒரு பெண்ணை
நோக்கி நகர்ந்தது!

அவளும் வந்தாள் - மனைவியாக.
அவள் மார்பில்
தலைவைத்து படுத்துக்கொண்டேன்.
அவளும் தலைகோதிவிட்டாள்.
மீண்டும் குழந்தையாகி போனேன்.

மீண்டும் ஒரு நாள் வந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் பூமியில்
இருந்து பிரித்துவிட்டார்கள்.கேட்டால்
இறந்தநாள் என்கிறார்கள்.

இப்போது எல்லோரும்
அழுகிறார்கள்.நானோ
ஆனந்தமாக இருக்கிறேன்.ஏனென்றால்
நான் மீண்டும் அவளோடு
சேரப்போகிறேன் .

அந்த கருவறை
சுகத்திற்கான
பயணத்திற்கு மீண்டும்
தயாராகிவிட்டேன்.









நான் தேடும் கவிதை

தினமொரு கவிதை
எழுதிட நினைத்து
தவியாய் தவிக்கிறேன்.

ஆயிரம் எண்ணங்கள்
குவியலாய் அவியலாய்,
 அதிலொரு முகத்தை தேடுகிறேன்.

எண்ணங்கள் கூடி வர
வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை.
வார்தைகள் வளைந்துவர
அர்த்தங்கள் ஒத்துழைக்கவில்லை.
அர்த்தங்கள் கூடிவர
உணர்வுகள் வெளிப்படவில்லை.

இன்னமும் குப்பையும்
கூழமுமாய் ஒழுங்கில்லா
வடிவியலுடன் எழுத்துகளை
அடுக்கி கவிதை
செய்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் உணர்வை தொட்டு
உயிரில் கலக்கும் அந்த
கவிதை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.


தெருக்கூத்து

இருட்டுக் கொட்டடியில்
சிற்றிடை சிரிப்பழகியின்
கடைசரக்கை கண்டிட,
விட்டில் பூச்சிகளாய்
வாலிபம் மொய்த்து நிற்க,
ஆரம்பித்தது கலைக்கூத்து.

அடித்தொண்டை கானமும்
கோமாளி பேச்சுமாய் தன்
நாடகத்தை தொடங்கினாள்.
காட்டியும் காட்டாமலும்
பேசியும் பேசாமலும்
ஜாடையாய் அவள் செய்த
கோலங்கள் இரவைவிரட்டிக்
கொண்டு இருந்தன.

ஏழ்மையின் காரணமாய்
தன் மானத்தை முச்சந்தியில்
கொட்டி அவள்  அள்ளி
கொண்டிருந்ததை பதின்ம
வயது சிங்கங்கள்
சீண்டி சுகம் கண்டனர்.

இங்கே பார்பவனுக்கும் பசி
பார்க்கப்படும் பொருளுக்கும் பசி
இவனது காமப்பசி அங்கே
அவளுக்கு வயற்றுப்பசியை
தீர்க்கிறது.

உண்மையில் பசி
சந்தி சிரிக்க வைக்கும்
கலைக்கூத்து தான்.






தீண்டாமை

தீண்டாமை
அழகான அந்த கவிதை
வாசித்து முடிக்கப் பட்டதும்
அரங்கமே அதிர்ந்தது - கர ஒலியில்
அதை எழுதிய மாணவன்
பிற்படுத்த பட்டவன் என்பதால்
அக்கவிதை நிராகரிக்கவும் பட்டது.
இங்கே மனிதர்கள் மட்டுமல்ல ,
கடவுளே பிறந்தாலும் -
உயர்குடியில் பிறந்தால் தான்
டம்ளரில் டீ- இல்லையென்றால்
சிரட்டையில் தான் டீ.

அறிவரைகளை அலட்சியம் செய்யாதீர்கள்

அறிவரை
இன்றைய நவீனயுகத்தில் அலட்சியப்படுத்துதல் என்பது நாகரீகமாகிவிட்டது.எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு வாழ்க்கையை அரித்துக்கொண்டிருக்கிறது.யாராவது அறிவுரை சொல்லிவிட்டால் போதும் உடனே அலட்சியத்துடன் "அறிவுரை சொல்வது எளிது" என மட்டம் தட்டுவது. அறிவுரை எப்பேர் பட்ட வரம். நம்மீது கொண்ட கனிவின் காரணமாக தன் சொந்த நேரத்தை நமக்காக ஒதுக்கும் மனித இதயத்தை கோடாரியால் வெட்டும் நம் புரிதலின் பார்வையை மாற்றவேண்டும்.அறிவுரையின் மீதான புரிதலை வளர்க்க வேண்டும்.ஒவ்வொரு விடியலிலும் நாம் காணும் மனிதர்களும்,பறவைகளும் நமக்கான பாடத்தை சுமந்து வருகின்றன.ஆனால் நாம் அவற்றை பார்க்கும் பார்வையையும் ,ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஒருமுறை முகமது நபியிடம் ,ஒரு பெண் தன் குழந்தை அதிகம் இனிப்பு சாப்பிடுவதாகவும் ,அதற்காக அறிவுரை கூறுமாறு வேண்டினாள். நபிகள் அவர்களும் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வருமாறு கூறினர்.அவளும் ஒரு வாரம் கழித்து வந்தாள்.அப்போது நபிகள் அந்த குழந்தையிடம் இனிப்புகள் சாப்பிடுவது உடம்பிற்கு கெடுதி அதனால் இனிப்பு சாப்பிடுவதை குறைக்குமாறு அறிவுரை கூறினாராம்.அதை கேட்ட அந்த பெண் ஏன் அன்றே இதை கூறி இருக்கலாமே என கேட்டாள்.அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் "நானும் அன்றைய தினம் வரை இனிப்புகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன்".அதனால் தான் அன்று கூறவில்லை.இப்போது இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.அதனால் தான் அறிவுரை கூறுகிறேன் என்றார்.

அதற்காக அறிவுரை கூறுபவர்கள் எல்லாம் நல்லவர்களாவும் ,அதை கடைபிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அறிவுரை என்கின்ற பாடம் இறைவன் நமக்கு அளிக்கின்ற பரிசு.அறிவுரை சொல்பவர்கள் வெறும் தூது செல்பவர்கள்.ஆனால் நாமோ தூதுவனைப் பார்த்து கொண்டு தூது பொருளை தவற விட்டுவிடுகிறோம்.சிப்பியை பார்த்துவிட்டு முத்துவை தவறவிடலாமா? நாம் எப்போதெல்லாம் துன்பப்படுகிறோமோ அப்போதெல்லாம் நமக்கான ஆறுதல் ஏதோ ஒரு வடிவில் வந்து கொண்டுதான் இருக்கிறது.நாம் தான் அதை ஏற்கும் மன நிலைமையையும்,பகுத்தாயும் திறனையும் இழந்துவிட்டோம்.எல்லாவற்றையும் புரிதலோடும் அன்பென்ற கருனையோடும் அணுகும் போது ,மழைக்காலத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புல்லின் மீதான பனித்துளிகூட ஓராயிரம் பாடங்களையும் ,அர்த்தங்களையும் மெளனமாக சொல்லிவிட்டு செல்கிறது.

வரதட்சனை

பூமியில் பிறந்த
இருமனங்களின் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சியிக்கப்பட்டு
பூமியிலே விற்கப்படுகிறது.

நான்

புள்ளி புள்ளியாக
சாவை நோக்கி நகரும்
மனித நேர்கோடு நான்!

பல பரிமாணச் சதைகளோடு
கூடித்திரியும்
ஒரு பரிமாணக்கோடு நான்!

வளைந்த காலவெளிக்குள்ளே
வாழ்க்கையை தேடும்
சிறு அதிர்வு நான்!

உடல் இயக்கவிதிகளெல்லாம்
தொலைத்துவிட்ட ஓர்
இதயம் நான்!

பிரம்மாண்டங்களுக்கிடையே பூத்த
சிறு மலருக்குள் - பதுங்கி வாழும்
வண்டு நான்!

இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடைப்பட்டு வாழும்
உயிர் ஜிவன் நான்!





பட்டமரம்

பட்டமரம்
பட்டமரம்
அழகான கானகத்தே
கரையில்லா அழகினூடே
அசிங்கமாய் காட்சியளிக்கிறேன்.
இன்பரசம் குடித்துக்கொண்டு
வாழ்க்கையை கரைத்தவன் - வெறும்
சக்கையாய் நிற்கிறேன்.


வைகறையும் வரும்
காலைஒளி கதவைத்தட்டும்
தத்தம் பறவைகள்
தன்குஞ்சுகளை என்பாதுகாப்பில் விட்டு
இரை தேடச்செல்லும்.
குஞ்சுகளோ என்மீது
ஆடிப்பாடி விளையாடும்.
அவைதம் பிஞ்சு நகங்களால்
என் கிளைகளை
பற்று ஆனந்தம்
வார்தையின் பார்பட்டது.


அதற்கு பலனாய்
இளவேனிற் காய்காத்து
கோடையில் பழுத்து
இலையுதிற் காலத்தே
விருந்து படைப்பேன்.
அவைகளும் விருந்துண்டு
என் தோல்மேலே
ஓடி விளையாடும்.



உச்சிவந்தால்
ஓடிவருவர் -  என் மடிதேடி.
வந்தவர்க்கு பழம்கொடுத்து
படுக்க மடிகொடுப்பேன்.
மாலை வந்தால்
சிறுவர் கூட்டம்
துள்ளி வந்து
என்னை தொத்தி
என்மேல் ஊர்ந்து
என்னை அணைத்து
ஆனந்தமாக விளையாடுவர்.


இரவு வந்தால்
இருட்டு அரக்கனிடமிருந்து
என் பிள்ளைகளை காப்பேன்.
அந்த நிலவின் ஒளி
ஆற்றில் எதிரொளிக்கும்.
அதன்  வெளிச்சத்தில்
பசியுண்ட குஞ்சுகளுக்கு
தாயினம் உணவூட்டும்
தாய்மையை பார்த்து ரசிப்பேன்.


அணுஅணுவாய் துளி சாறுகூட
மிச்சமில்லாமல் வாழ்க்கையை ரசித்தேன்!
இன்றோ ஒருதுளி
இலைகூட இல்லாமல்
பட்டமரமாய் எஞ்சியிருக்கிறேன்!
யாரும் என்மீது
கூடிகட்டுவதில்லை!
யாரும் என்மீது
ஏறி விளையாடுவதில்லை!
நான் என்ன
பாவம் செய்தேன்?
எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்த்தவன்!
யாருக்கும் பயன்படாமல்
சக்கையாய் நிற்கிறேன்!
காய்ந்த சருகாய்
காயத்துடன் நிற்கிறேன்.