அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

உசாரய்யா உசாரு பஞ்சம் வரப்போகுது உசாரு

கடந்த சில வருடங்களாக நான் உன்னிப்பாக கவனித்துவரும் விசயங்களில் ஒன்று உணவுப்பொருட்களின் விலைவாசி.2011 ஆம் ஆண்டு நான் மதுரைக்கு குடியேறிய போது ஒரு சாதாரண ஓட்டலில் இரண்டு வகை காய்களுடன் நான் சாப்பிடக்கொடுத்து 30 ரூபாய்.அதே ஓட்டலுக்கு நான் இப்போது கொடுத்துக்கொண்டிருப்பது 60 ரூபாய்.நான்கு வருடங்களில் இரண்டு மடங்குவிலை கூடிவிட்டது என்றால் உண்மையில் இது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய விசயம்.அதிலும் எங்கள் குடும்பமே அரிசி வியாபாரம் செய்ததால் அரிசியின் விலை உயர் பற்றி தீவிரமாக சிந்தித்ததின் விளைவுதான் இந்த பதிவு.

அரிசியில் பொன்னி,கல்சர் பொன்னி,ஐ,ஆர்.20 என வகைகள் உண்டு.இதில் பொன்னி மேல் தட்டு மக்களால் வாங்கப்படும் வகை.ஏனென்றால் அதன் விலை கிலோ 40 லிருந்து 60 வரை இருக்கும்.கல்சர் பொன்னியின் விலை 20 லிருந்து 40 வரை இருக்கும், ஆனால் கடைக்காரர்கள் எல்லாவற்றையும் பொன்னியென்றே நாமம் சாத்தி விற்று விடுவார்கள்.இதிலும் விளைந்து நீண்ட நாள் ஆன அரிசியை பழைய அரிசியெனவும்,விளைந்து கொஞ்சநாளே ஆன அரிசியை புது அரிசியெனவும் அழைப்பார்கள்.சுருக்கமாக ஒரு வருட பழசு அல்லது ஆறு மாத பழசு என குறிப்பிடுவார்கள்.ரொம்ப பழைய அரிசிக்கு மொளசு அதிகம்.ஏனென்றால் அது குழையாது. அரிசியின் கணிசம் அதிகமாக இருக்கும்.இங்கே கணிசம் என்பது முக்கியமான ஒரு சிந்திக்க வேண்டிய விசயம்.ஒருவருக்கு 100 கிராம் கணிசமான அரிசி ஒரு வேளை வயிறு நிறைய தேவைப்படுகிறது  என வைத்துக்கொள்வோம்.அதே நபர் கணிசம் குறைந்த அரிசியை சாப்பிட்டால் அவருக்கு 200 கிராம் வயிறு நிறைய தேவைப்படும்..எனவே கணிசம் என்பது  வயிறு நிறையும் தன்மை எனக்கொள்ளலாம்,கணிசத்தை கவனிக்க தவறினால் மாத பட்ஜெட்டில் போர்வையே விழுந்துவிடும்.

நான் சிறுவயதாக இருக்கும் போது 100 மூடை உள்ளூர் அரிசியென்றால் 10 மூடை கர்நாடக பொன்னி இருக்கும்.கர்நாடக பொன்னி விலை குறைவாக இருந்தாலும், கணிசம் மற்றும் தரம் கம்மியாக இருந்ததால் வாங்க ஆள் இருக்காது.ஆனால் நான் இப்போது கர்நாடக பொன்னி தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.ஏனென்றால் உள்ளூரில் விளையும் பொன்னியின் விளை 60 ஐ தொட்டுவிட்டது.

தீண்டவே ஆளில்லாத அரிசி இன்றைக்கு சிம்மாசானத்தில்.உள்ளூர் அரிசியோ தீண்ட முடியாத விலை உயரத்தில்.என்ன காரணம்?

ரொம்ப எளிமையான காரணம் தான்.விளைச்சல் குறைந்துவிட்டது.உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.நான்கு வருடங்களில் இரண்டு மடங்கு விலைஉயர்வு என்றால் நான்கு வருடங்களில் விளைச்சல் இரண்டு மடங்கு குறைந்து விட்டதாகத்தான் அர்த்தம். விளைச்சல் குறைவுக்கானக்கான காரணங்கள் என்ன?

1.பருவநிலை மாறுபாடு
2.விவசாயம் ஊக்குவிக்கபடாமல் அடுத்த தலைமுறை விவசாயிகள் இல்லாமல் போய்விட்டனர்.
3.தண்ணீர் அரசியல்

பருவநிலை மாறுபாட்டுக்கு நாம் தான் முழுக்காரணம்.குறிப்பாக மரங்களின் அழிவு,தமிழ் நாட்டில் ஊக்குவிக்கப்படும் தொழிற்ச்சாலைகளினால் ஏற்படும் சுற்றுப்புற மாசுபாடு,உலகலாவிய வெப்ப உயர்வு.இதனால் பருவமழை தவறிவிடுகிறது.எனவே விவசாயிகள் அரசையும், நிலத்தடி நீரையும் நம்பி இருக்க வேண்டி இருக்க வேண்டியுள்ளது.தனியார் கம்பெனிகளின் தண்ணீர் சுரண்டல்களினால் நிலத்தடிநீரின் அளவும் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது.மேலும் அரசு விவசாயத்தை ஊக்குவிக்காமல் ஒரு தன்னுடைய ஒரு தலை பட்சமான கல்வி மற்றும் தொழில் அணுகு முறையால் அடுத்த தலைமுறை விவசாயிகளே இல்லாமல் போய்விட்டனர்.வேறு வழியில்லாமல் விவசாயிகள் பக்கத்து மாநிலங்களை தான் தண்ணீருக்காக நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.கேரளமும் கர்நாடகமும் நமக்கு தண்ணீர் தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கப்போகிறார்கள்.

நிறைய பேருக்கு கர்நாடகம் ஏன் தண்ணீர் தருவதில்லை என்ற காரணமே தெரிவதில்லை.ஏற்கனவே மேலே சொன்னபடி அரிசி விவகாரத்தில் நம் போட்டியாளர்களே அவர்கள் தான்.அவர்கள் நமக்கு நிறைய தண்ணீர் தருவார்களாம்.நாம் முப்போகம் விளைவித்து அவர்களுடனே போட்டி போடுவோமாம்.கர்நாடகம் கையை சூப்பிக்கொண்டு வேடிக்கைபார்க்குமாம்.உண்மையில் இந்த தண்ணீர் அரசியலில் அழவேண்டியது நாம் தான். விவசாயிகள் அல்ல.இன்னும் சில வருடங்களில் நம் சொந்த விவசாயமே அழியப்போவதின் அறிகுறிதான் இவையெல்லாம்.அப்போது யானைவிலைக்கு குதிரைவிளைக்கு போகப்போகிறது அரிசிவிலை.இதையெல்லாம் தமிழகத்தின் ஒட்டு மொத்தவிவசாயத்தையே குலநாசம் செய்ய ஒருதிட்டத்தை செயல்படித்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.அதை பற்றி அடுத்த கட்டுரையில்.

எங்கள் அப்ப எங்களை எதற்காவும் வீட்டில் கண்டித்ததில்லை.ஏன் திட்டியது கூட இல்லை.ஆனால் ஒரு விசயத்தை தவிர.அது என்ன தெரியுமா?சாப்பிடும் போது சிந்தும் ஒரு துளி அரிசி மணிக்காக.சிந்தினாலும் பொறுக்கி தட்டில் போட்டு சாப்பிடச்சொல்வார்.ஏன் என்பதற்கு அவரே காரணம் சொல்வார்.ஒரு அரிசி மணி விளைய ஆறு மாதங்கள் வெயில், மழை, காற்று என்று பாராமல் உழைத்து கண்ணின் மணியை போல் பாதுகாக்கிறார்கள்.ஒரு மணி என்பது ஒரு விவசாயின் ஆறுமாத உழைப்பு.அதை விரயம் செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

நாம் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பசியென்றால் கைவைக்கப்போவது என்னவோ சோற்றில் தான்.சோற்றில் கைவைக்கும் போது உங்களுக்காக சேற்றில் கால்வைத்த மினிதர்களை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.அவர்களும் மனிதர்கள் தானே.

"சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.

படிக்கவேண்டிய புத்தகங்கள்








கொள்ளிவைக்கும் இஸ்ரேல்,சுடுகாடாகும் பாலஸ்தீனம்

ஒரு துப்பாக்கிகுண்டால்
மரணத்தை பரிசளித்தார்கள்.
மரணத்தை உறுதிசெய்ய -மேலும்
இரண்டுகுண்டுகளை பரிசளித்தார்கள்.
உடல்சிதறி
நிலமெல்லாம் ரத்தகளமாய்
பிணக்குவியல்களுக்கு நடுவே
புனிதமானவர்களின் புனிதமும்,
போராட்டக்காரர்களின் கொள்கைகளும்,
காக்கப்படுகின்றன
.



தினசரி செய்தித்தாள்களை பார்க்கும் போது ஒரே வெறுப்பாக இருக்கிறது.இஸ்ரேல் பாலஸ்தீன போரால் தினமும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் போய்க்கொண்டிக்கின்றன.எதையும் செய்யமுடியாமல் உலகத்தோடு சேர்ந்து நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சொந்த தாய்மண்ணை அபகரித்துவிட்டார்கள் என்று பாலஸ்தீனமும்,தங்களை எதிர்க்கிறார்கள் என்று இஸ்ரேலும் காரணம் சொல்லிக்கொண்டு கொல்வது என்னவோ அப்பாவி பொதுமக்களைத்தான்.
இங்கே மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அர்ப்பமான கொள்கைகள்,வரலாறு,மதரீதியான நம்பிக்கை என இரு சாரராக பிரிந்துகொண்டு போரை ஊக்குவிக்கும் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறார்கள்.அதுவும் ஒரே நாடு, ஒரே இனம்,ஒரே மக்கள் என்று சொல்லும் இந்தியர்கள் கூட அணி அணியாக பிரிந்து நியாய தர்மம் பேசி ஏதோ ஒரு தரப்பை ஊக்குவிப்பதுதான் வேதனைதரும் விசயம்.

நாம் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு பேசும் நியாய தர்மங்கள் துப்பாக்கியின் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை ஒரு போதும் காப்பாற்ற போவதில்லை.பல்லாயிரகணக்கான மக்களை கொன்று அவர்களின் சவக்குழியின் மேல் அமைதி பூங்காவைகட்ட நினைக்கிறது இஸ்ரேல்.கடந்த கால துரோகங்களையும்,மத உணர்வுகளையும் காரணம் காட்டி தன் இனத்தை தானே இழந்து கொண்டிருக்கிறது பாலஸ்தீனம்.

இவையெல்லாம் நம் மனிதன்மையை கேள்விக்குறிகளாக்குகின்றன.இங்கே மனித உயிர்கள் புழுவினும் கீழ்நிலைகளாக கருதி கொல்லப்படுகின்றன.வேதனையிலும் வேதனை தரும் விசயம் இதை உலகமே கைகட்டி,வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதுதான்.ஒரு லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்தான் ஹிட்லர்.ஆறு லட்சம் தமிழர்களை கருவறுத்தான் ராஜபக்சே.இப்போது இஸ்ரேல் செய்வதுமட்டும் புனிதப்போராகவா ஆகிவிடப்போகிறது.

உலகின் அதிபயங்கர புத்திசாலிகள் என மார்த்தட்டிக்கொள்ளும் யூத இஸ்ரேலியர்களே மக்களை கொத்துக்கொத்தாக கொல்வதுதான் புத்திசாலித்தனமோ?உயிரின் வலி,போரின் வக்கிரங்களை தலைமுறை தலைமுறைகளாக அனுபவித்த நீங்கள் மற்றவருக்கு அதையே பரிசளிப்பது தகுமோ?

பாலஸ்தீன போராளிகளே நீங்களும் ஒன்றும் புனிதர்கள் அல்ல.உங்கள் கொள்கைகளும் ஒன்றும் புனிதமானவை அல்ல.உங்கள் கொள்கைகள் வெறும் இடத்திற்காகதான்.உங்கள் கொள்கைகளால் போவது என்னவோ அப்பாவி உயிர்கள்தான்.போராட்டத்தை கைவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை.போராடும் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்.கத்தியின்றி ரத்தமின்றி அறவழியில் போராடுங்கள்.மிச்சம் இருப்பவர்களாவது வாழட்டும்.

அமைதியென்பது சுடிகாட்டிலும் இருக்கிறது,பூந்தோட்டத்திலும் இருக்கிறது.உங்கள் துப்பாக்கிகளும் கொள்கைகளும் உங்களுக்கு கொடுக்கப்போவது என்னவோ மயானத்தைதான்.நாடு,இன கொள்கைகளை தாண்டி மனிதனாக வாழப்பழகுங்கள்.மழைக்கு இரவில் ஒதுங்கும் ஒரு ஆட்டுக்குட்டியை தன்வீட்டீல் அனுமதிக்காத மனிதன் உலகில் இல்லை.ஆனால் வீடில்லாத, வாழ வழியில்லாத, சக மனிதனை அரவணைத்து வாழத்தெரியாத மனிதநேயத்தை என்னவென்று சொல்வது.

இந்த பூமி எல்லோருக்கும் சொந்தம்.அதன் மேல் கிறுக்கியிருக்கும் எல்லைக்கோடுகள் மனிதனை தடுத்துவிடமுடியாது.போரை நிறுத்துங்கள்.எல்லை தாண்டி,கொள்கை தாண்டி மனிதநேயத்துடன் மனிதனாக வாழுங்கள்.மற்றவரையும் வாழவிடுங்கள்.நாளைவிடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.



படிக்கவேண்டிய புத்தகங்கள்








என் கேள்விக்கு என்ன பதில் சுப வீரபாண்டியன் அவர்களே?

இந்த கட்டுரை சுப வீரபாண்டியன் அவர்கள் http://tamil.oneindia.in/ இணையதளத்துக்கு எழுதிய கட்டுரைக்கு என்னுடய கருத்துரையாக எழுதப்பட்டது.அவர்கள் என் கருத்துரையை ஏற்க மறுத்துவிட்டதால்.அதை இங்கே பதிவாக இடுகிறேன்.அந்த கட்டுரைய  இங்கே படித்துவிட்டு பதிவை படிக்கவும்.









முதலில் தங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இங்கே ஜன்ஸ்டீனின் பொது சார்புக்கொள்கையை பற்றி கூறி உள்ளீர்கள்.ஆனால் அவர் கூறிவிட்டதால் மட்டும் அது உண்மையாகிவிட முடியாது.எல்லா கொள்கைகளும் ஓர் எல்லைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன.ஏன் ஒளியை மிஞ்சக்கூடிய எந்த பொருளும் இல்லை என்ற ஜன்ஸ்டீனின் கொள்கையையே நியூட்டினோக்கள் தகர்த்துவிட்டன.

உண்மையில் பெரும்பாலான அறிவியல் கொள்கைகள் முதலும் இல்லாமல் தொடக்கமும் இல்லாமல் முழித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன.கண்ணால் பார்ப்பதை மட்டும் நம்புவேன் என்றால் கண்ணால் பார்க்க முடியாத காற்றை யாருமே நம்ப முடியாது.

உண்மையில் அறிவியல் ஒன்றும் முற்று பெறவில்லை.அது இன்னும் அறைகுறையாக தான் உள்ளது.ஏன் அறிவியலே சொல்லுகிறது ஒரு பிரபஞ்சம் அல்ல கோடான கோடி பிரபஞ்சங்கள் உள்ளன என்று.மேலும் நம் முடைய அறிவியல் கொள்கைகள் மற்றொரு பிரபஞ்சத்தில் செல்லுபடியாகாது.

அப்படியென்றால் நீங்கள் மேற்கோள்காட்டும் அறிவியலே பிரபஞ்சம் என்ற எல்லைக்கு உட்பட்டது என்றால் உங்கள்வாதாமும் இப்பிரபஞ்சத்திற்கு உட்பட்டதுதான்.மார்க்ஸ்,ஜன்ஸ்டீன் அல்லது மேலை நாட்டு விஞ்ஞானிகள் சொல்வது இருக்கட்டும்.நம் முன்னோர்கள் சொன்ன கடவுள் வழி கருத்துகள் பாமரனால் தவறாக புரிந்துக்கொள்ளபட்டு இருந்தாலும் படித்தவர்களான நாம் அதை சரியாக புரிந்துகொண்டு ஆராய வேண்டியுள்ளது.ஆனால் நாம் ஆராயமலே தவறு என்று முடிவு கட்டிவிட்டோம்.

ஏன் ஜெனிவாவிலே நடராஜர் சிலை உள்ளது.அங்கே உள்ளவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள்தாம். அவர்களுக்கு கடவுள் மறுப்பு அறிவியல் தெரியாமலா சிலை வைத்தார்கள்?முதலில் அறிவியல் முழுமையாக முற்று பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.பின் அதை வைத்து எழுதிய தத்துவவிலாசங்களை பேச அலச ஆரம்பிப்போம்.

மனிதன் பகுத்தறிந்து முழு விழிப்போடு வாழ மட்டுமே அறிவியல்.அதை வைத்துக்கொண்டு பாமரனின் அடிப்படை நம்பிக்கையை சிதைப்பது அநியாயம்.

கணிதமேதை ராமானுஜன் :- பிரபஞ்சத்தின் புதிர்

கணிதமேதை ராமானுஜத்தை பத்தி எழுத வேண்டும் என்று ரொம்ப வருடத்திற்கு முன்னாடியே யோசிச்சிருந்தேன்.ஆனால் அவரைப்பற்றி நான் எழுத நினைத்த தலைப்புக்கு நிறைய கடினமான அறிவியல் தலைப்புகள் தேவைப்பட்டது.அவற்றையெல்லாம் எல்லோருக்கும் புரியும்படி எழுத முடியுமா? என்ற சிந்தனையில் எழுத முடியாமல் போய்விட்டது.இப்போது அவரைப்பற்றிய திரைப்படம் வெளியாகி உள்ளது.இது அவரைப்பற்றி எழுத சரியான தருணம் என நினைக்கிறேன்.

ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறைப் பற்றி நான் இங்கு எழுதப்போவதில்லை.ஆனால் மேற்கில் வாழும் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானியின் பார்வையில் ராமானுஜத்தை பற்றி எழுதப் போகிறேன்.அவர் தான் "மிக்கியோ கக்கூ (Michio Kaku)".புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான கக்கூ தனது உயர்பரிமாணங்கள்(hyperspace) என்னும்  நூலில் ராமானுஜத்தை பற்றி சிலேகித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்.

"கணித உலகில் ராமானுஜம் ஒரு விந்தையான மனிதர்.அவரை ஒரு வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் வலிமையோடு ஒப்பிடலாம்.நூறு வருடங்கள் மேற்கில் உள்ள அத்தனை கணித வல்லுனர்களும் சேர்ந்து கண்டுபிடித்த அத்தனை கணித கோட்பாடுகளையும்,சூத்திரங்களையும் தனிமனிதனாக 33 வயதிற்குள் மறு உருவாக்கம் செய்தார்.மேற்கு உலக தொடர்பில்லாததால் தான் கண்டிபிடித்த பல விசயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவை என்று தெரியாமலே தன் வாழ்வின் பெரும்பகுதியை அதில் செலவிட்டார்.

ராமானுஜம் மொத்தம் 400 பக்கங்களில் 4000 சூத்திரங்களை எழுதியுள்ளார்.அவற்றில் சில சூத்திரங்கள் மிக வினோதமானவை.இந்த வினோத சூத்திரங்கள் மாடுலர் பங்சன் என்னும் கணித பிரிவின் கீழ் வருகின்றன.மேலும் ராமானுஜத்தை கவுரவிக்கும் பொருட்டு இவை "ராமானுஜன் பங்சன் (RamanujanThetaFunction)"  என்றே அழைக்கப்படுகின்றன.இவற்றில் மிக விசேசம் என்னவென்றால் இந்த வினோத சூத்திரங்களில் ஆங்காங்கே 24ன்  அடுக்கு என்று இடம் பெருகிறது.இந்த 24 என்ற என்னை விஞ்ஞானிகள் மேஜிக்கல் நம்பர் என்கிறார்கள்.ஏன் இதை மேஜிக்கல் நம்பர் என்று புரிந்துகொள்ள நாம் சில உயர் அறிவியல் கோட்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை இந்த பிரபஞ்சம் மூன்று பரிமாணங்களை (dimension) கொண்டது.இதை நாம் ஏற்கனவே பள்ளிகளில் X,Y,Z என வரைபடத்தாளில்(graph) மூன்று தளங்களாக பிரித்து படித்திருக்கிறோம்.சுருக்கமாக (மேல்,கீழ்),(இடது,வலது),(முன்,பின்) என முப்பரிமாணங்களாக குறிக்கலாம்.பின்னால் வந்த ஜன்ஸ்டீன் தனது பொது சார்பியல் கொள்கையில்(general theory of relativity) காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நான்கு பரிமாணங்கள் ஆக்கினார்.ஆனால் தற்போதைய இயற்பியல் கூற்றுப்படி இந்த பிரபஞ்சம் பத்து பரிமாணங்கங்களை கொண்டது.சரி அது என்ன சரியாக 10 பரிமாணம்?ஏன் 9 இருக்கக்கூடாதா? என கேட்கலாம்.ஆனால் இந்த காரணத்தை அறிந்த ஒரே மனிதர் ராமானுஜம் மட்டுமே. 

இயற்பியலில் நூலிழைக்கோட்பாடு(string theory) என்று ஒன்று உள்ளது.இந்த நூலிழைக்கோட்பாட்டின் படி பிரபஞ்சமே அடிப்படையில் மெல்லிய நூலிழைகளால் ஆனது.ஏன் இந்த பிரபஞ்சமே இரண்டு பெரிய உயர்பரிமாண நூலிழைகளின் மோதலினால் தான் உருவானது.அடிப்படை துகள்களான புரோட்டான்,எலெக்ரான் என எல்லாமே சாதாரண நூலிழைக்களின் மாறுபட்ட தோற்றங்கள் தான்.



இந்த நூலிழைகளை எப்படிகற்பனை செய்லாம் என்றால் குண்டு பல்பின் நடிவில் இருக்கும் டங்ஸ்டன் இழையோடு ஒப்பிடலாம்.தூரத்தில் இருந்து பார்க்கும் போது டங்ஸ்டன் இழை சாதாரண கம்பி போல் தொன்றினாலும் மிக அருகில் நெருக்கமாக பார்க்கும் போது நெருக்கமாக சுற்றப்பட்ட லேசான நீண்ட கம்பி என்பது புரியும்.அது போல் எலெக்ட்ரான்,புரோட்டான் அருகில் தூரத்தில் பார்த்தால் துகள் போல் தோன்றினாலும் அருகில் பார்த்தால் டங்ஸ்டன் இழை போல் நெருக்காமாக சுற்றப்பட்ட உயர்பரிமாண இழைகளால் ஆனவை.இந்த இழைகளின் அதிர்வு மற்றும் நிறையைப்பொறுத்து அது எலெக்ட்ரானாகவும்,புரோட்டானாகவும் தெரிகிறது.

இந்த நூலிழைகள் தானாக அறுந்தும் மற்றொரு நூலிழையோடும் சேர்ந்து புது புது அணு துகள்களை உருவாக்குகின்றன.இப்படி இவை இணைந்து உருவாக்கும் ஜோடிகளும் அதன் அதிர்வெண் பரிமாணங்களும் முடிவிலியாக இருக்கின்றன.ஆனால் ராமனுஜன் பங்சனை பயன்படுத்தும் போது முடிவிலிகள் கரைந்து சரியாக 24 வகையான ஜோடிகளும், அதிர்வெண் பரிமாணங்களும் வருகின்றன.


ராமனுஜன் பங்சனை பொதுப்படையாக்கும் போது 24 என்பது சுருங்கி 8 ஆகிறது.எனவே இந்த பிரபஞ்சம் (8+2)=10 பரிமாணங்களை கொண்டதாகிறது.இவற்றில் ஒன்றை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ முடிவிலியில் போய் நிற்கிறது.உண்மையில் ராமனுஜன் சொன்ன 24 என்ற எண் இயற்பியலாளர்களை பொருத்தவரை மேஜிக் நம்பர்தான்.ஆனால் ஏன் 24 என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.ஆனால் இதை உருவாக்கிய ராமானுஜனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு முறை ஜன்ஸ்டீன் இப்படி சொன்னார்.
"இந்த உலகத்தை படைக்கும் போது கடவுள் என்ன நினைத்தார்?எப்படி படைத்தார் என்பது தெரியவேண்டும்.மற்றவை பற்றி எனக்கு கவலை இல்லை என்றார்."
ஜன்ஸ்டீனின் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒரே மனிதர் ராமானுஜன் மட்டுமே.ஆனால் அவரும் இப்போது உயிரோடு இல்லை.உண்மையில் பிரபஞ்சத்தை போலவே ராமானுஜனும் ஒரு புரியாத புதிர்தான்.

உன்னை நான் பார்த்த பின்

உன்னை நான் பார்த்த பின்
முன்பு போல் இல்லையே!
என்னையே கேட்கிறேன்
எங்கு நான் தொலைந்தேனோ?

மண்ணிலே பிறந்தேனோ?
மழையிலே கரைந்தேனோ?
காற்றிலே கலந்தேனோ?
கூந்தல் வாசம் நுகர்ந்தேனோ?

கால தூரம் கடந்தேனோ?
காம ஏக்கம் உணர்ந்தேனோ?
சொர்க்கமே சென்றாலும் உன்
பிரிவு ஏக்கம் கொல்லுதடி.

உன்னையென்று பார்த்தேனோ?
உயிரை தொலைத்துவிட்டேனே.
கண்ணிழந்த குருடர்கள்
யானை தடவி பார்ப்பது போல்,
கண்ணில் கண்ட பொருளெல்லாம்
உன்னை பார்க்க நினைக்கிறேன்.

மொட்டைமாடி போகிறேன்.
ஒற்றைக்காலில் நிற்கிறேன்.
தனிமையோடு பேசுகிறேன்.
தவமாய் கிடக்கிறேன்.

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கான கவிதைகள்
எழுதப்படாமல் காத்திருக்கின்றன.
உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள்
பரிமாறப்படாமல் இதயக்கூட்டில் காத்திருக்கின்றன.
உனக்கான முத்தங்கள்,
உனக்கான ரோஜா,
உனக்காக சேகரித்த மயிலிறகு,
நாம் கைகோர்த்து நடக்க வேண்டிய
கடற்கரை மணற்பரப்பு,
இரவின் நிழல்,
நிலவின் மடி,
குளிர்கால போர்வைகளென,
எல்லாம் காத்திருக்கின்றன,
உன் ஒற்றை சொல்லுக்காக,
எப்போது சொல்லப்போகிறாய்?
உன் காதலை என்னிடம்.


தன்னம்பிக்கை நேரம்::உன்னையே நீ அறிவாய்

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் கேட்கச்சொன்னார் சாக்ரடீஸ்.ஆனால் அவ்வாறு கேட்பதானால் ஆகும் விளைவுகளை அவர் சொல்லவே இல்லை.உண்மையில் இந்த உலகை புரட்டிப்போட்ட அத்தனை விசயங்களும் கேள்விகள் கேட்டதினாலே விளைந்தவை.சரி ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?கேள்வி
கள் கேட்பதனால் என்ன பயன்? யாரிடம் கேள்விகள் கேட்பது?

கேள்விகள் தான் மனித பரிணாமத்தின் முதல் படிக்கட்டுகள்.எப்போது மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தானோ? அன்றே அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.உண்மையில் சிந்தனை என்பது பல கேள்வி பதில்களின் கூட்டுத்தொகுப்பு.நாம் சிந்திக்க வேண்டுமானால் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.சரி யாரிடம் கேள்விகள் கேட்பது?கேள்விகள் மனிதன் தனக்குதானே கேட்டுக்கொள்ள வேண்டியவை.ஆனால் நம்மில் பெரும்பாலானோர் கேள்விகளை மற்றவரிடம் கேட்டு நம் மேதாவிலாசங்களை காட்டிக்கொண்டிருக்கிறோம்.பிரச்சனை என்னவென்றால் நமக்கு புரியாத விசயங்களை மற்றவரிடம் கேட்கும் போது அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.நம் கேள்வி நம்மை புத்திசாலியாக அடையாளம் காட்டிவிடுகிறது.ஆனால் அது ஒரு போலி அடையாளம்.ஏனென்றால் நமக்கு பதில் தெரியவில்லை.இப்படிதான் இந்த உலகம் கேள்விகளால் புத்திசாலிகளை அடையாளம் காணுகிறது.கேள்விகள் என்றும் நிரந்தரமானவை.பதில்கள் வெறும் கானல் நீர்.

ஏதென்ஸ் மக்கள் அந்த ஊர் கோவிலில் உள்ள மாந்தீரக பெண்ணிடம் கேட்டார்கள்.இந்த ஊரிலே எல்லாம் தெரிந்த மேதையார் என்று.உடனே அந்த பெண் சொன்னாள் சாக்ரடீஸ்.எல்லாரும் சாக்ரடீஸிடம் போய் இதை சொன்னார்கள்.அதற்கு அவர் சொன்னார் "எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.ஆனால் நீங்களோ எல்லாம் தெரிந்தவர் போல் நடித்துக்கொண்டு இருக்குறீர்கள்".அதனால் தான் நான் மேதையாக தெரிகிறேன் என்றார்.

ஒரு அற்புதமான கதை ஒன்று சொல்வார்கள்.ஒரு ஊரில் ஒரு முட்டாள் இருந்தான்.ஊர் மக்கள் அனைவரும் அவனை முட்டாள் முட்டாள் என்றே அழைத்தார்கள்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மனிதன் ஊருக்குள்ளே வசிக்காமல் ஊரின் வெளியே வசித்துவந்தான்.ஒரு நாள் ஒரு ஜென் குரு அந்த பக்கமாக கடந்து போவதைப்பார்த்த அந்த மனிதன் அவர் காலில் விழுந்து தன் பிரச்சனையை விளக்கி கூறினான்.அவரும் அவனிடம் யார் என்ன சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இரு என்றார்.தான் ஒரு வருடம் கழித்து இந்த பக்கம் கடந்து போகும் போது தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார்.ஒரு வருடமும் கடந்து சென்றது .அந்த குரு மீண்டும் அந்த ஊரை கடந்து சொல்லும் போது ஊரே அந்த முட்டாள் மனிதனை தோளில் சுமந்து கொண்டு குருவை வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர்.குரு அந்த மனிதனிடம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா எனக்கேட்டார்.அதற்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஊரே தன்னை அறிவாளியென்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் கூறினான்.இந்த கதை பதில் தெரியாமல் கேள்வியோடு மட்டும் நின்று போகும் மனிதர்களைப் பற்றியது.

கேள்விகளை நமக்கு நாமே கேட்கும் போது நமது அறியாமை நமக்கு புரிகிறது.மற்றொன்று அறியாமை நம் அறியும் ஆவலை தூண்டி நம் தேடலை ஆரம்பித்து வைக்கிறது.தேடல் நம்மை எல்லையற்ற புரிதலின் ஆழத்திற்கு கூட்டிச்செல்கிறது.ஜென்னில் ஒரு அற்புத வரி சொல்வார்கள்."நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது ஒரு குரு உங்கள் முன் தோன்றுவார்".அதே சமயம் நாம் தேடும் பொருளும் நம்மை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.தேடல் நம்மை அறிவின் உச்சத்திற்கு இட்டுச்சென்று பிரகாசிக்க வைக்கிறது.

தன் மேல் ஏன் ஆப்பிள் விழுந்தது என தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தேடி புறப்பட்டார் நியூட்டன்.விளைவு நவீன அறிவியலின் தந்தை ஆனார்.ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தால் என்னவாகும் என் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தன்னைதானே கேட்டுக்கொண்டதன் விளைவுதான் ஜன்ஸ்டீனின் "சார்பு மற்றும் சிறப்பு சார்புக்கொள்கை".சாக்ரடீஸ்,நீயூட்டன்,ஜன்ஸ்டீன் என எல்லோரும் கேள்விகளை தனக்கு தானே  கேட்டுக்கொண்டார்கள்.தீராத தேடல் அவர்களை தொற்றிக்கொண்டது.அதனால் தான் அவர்கள் அறிவின் உச்சத்தை தொட்டார்கள்.உன்னையே நீ அறிவாய் என்பதன் பொருள்.உன்னையே நீ கேள்விகேட்டு தேட ஆரம்பி என்று பொருள்.உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.தீராத தேடல் உங்களை தொற்றிக்கொள்ளட்டும்.

தன்னம்பிக்கை நேரம் :: எங்கிருந்து ஆரம்பிப்பது?



நம்மில் சிலருக்கு ஒரு விசயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? என்பதே தெரிவதில்லை.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.ஒரு விசயத்தின் ஆரம்பமே தவறு என்றால் முடிவு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்.நாம் தொடங்கும் இடத்தை பற்றி சரியாக யோசிக்கவில்லை என்றால் முடிவில் காணமல் போய்விடுவோம்.உண்மையில் சிறப்பான திட்டமிட்ட தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள்.

சரி எங்கிருந்து ஆரம்பிப்பது,எப்படி ஆரம்பிப்பது?
உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் இரண்டு வகையான வழிகள் உண்டு.ஒன்று சிந்தனை வழி மற்றொன்று செயல் வழி.நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்பட ஆரம்பித்துவிடுவோம்.ஆனால் வெகு சிலரே சிந்தித்துபின் செயல்பட தொடங்குகிறோம்.

நம்மில் எத்தனை பேர் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளைப் பற்றி சிந்தித்து பின் செயல்பட தொடங்குகிறோம்.அதாவது நம் இலக்குகள் என்ன?திறமைகள் என்ன?பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன?என்பதை பற்றி சிந்தித்திருக்கிறோம்.ஒரு நாளில் நாம் செய்யப்போகும் வேலைகள் எந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்? என்பதில் நமக்கு தெளிவு இல்லை என்றால் அந்த வேலையின் பலன் தான் என்ன?

இந்த உலகத்தில் உள்ள எல்லா விசயங்களும் மேம் போக்காக எளிமையாக இருந்தாலும் அடிப்படையில் மிகவும் சிக்கலானவை.உதாரணமாக வீட்டில் மனைவியின் சமையலை எளிமையாக குறை சொல்லிவிடலாம்.ஆனால் அதை நாம் செய்யும் போது தான் உணர முடியும் அதன் கடினத்தை.கொஞ்சம் யோசித்து பார்த்தால் சமையல் பல பொருட்களின் ஒரு சிக்கலான கலவை.அதில் ஒன்று குறைந்தாலோ அல்லது கூடினாலோ முழுவதும் பாலாகிவிடும்.எனவே சிந்திக்கும் போது விசயங்களின் அடி ஆழம் முழுமையாக தெரியவரும்.

மேலும் நான் பலரை பார்த்திருக்கிறேன். உடல் எடையை குறைக்கிறேன் பேர் வழி தங்களை உடலை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள்.உண்மையில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஆழமாக சிந்திக்க வேண்டியது.அதாவது உண்ணும் உணவுகள்,உண்ணும் விதம் என எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பின் செயலில் இறங்க வேண்டும்.

உண்மையில் நம் உடம்பை கட்டுப்படுத்துவது மூளை.அதற்கு சரியான கட்டளைகள் இட்டுவிட்டால் அது நம் உடல் முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஓடு என்று மூளைக்கு தற்காலிக கட்டளையிடுகிறோம்.உடனே உடல் ஓடிக்கொண்டே இருக்கும்.ஆனால் எதற்காக ஓடுகிறோம் என்று மூளைக்கு தெரியாது.சாப்பிடாதே என்று வாய்க்கு கட்டளையிடுகிறோம்.அதை வாய் கேட்பதே இல்லை.இங்கு தான் எல்லோரும் தோற்று போய்விடுகிறோம்.உண்மையில் உடல் எடை என்பது பல விசயங்களின் சிக்கலான தொகுப்பு.

நம் கண் ஒரு சுவையான சிக்கன் வறுவலை பார்க்கிறது.உடனே மூளைக்கு தகவல் போகிறது.உடனே மூக்கும் தன் பணியை ஆரம்பித்து மூளைக்கு தகவல் போகிறது.எல்லா தகவல்களையும் ஆராய்ந்து சிக்கன் வேணுமா?வேண்டாமா? என்று மூளை முடிவு செய்கிறது.வேண்டும் என முடிவாகி நாக்கு மற்றும் குடலில் அமிலங்கள் சுரந்து உணவை செரிக்க தயாராகின்றன.உற்றுப்பார்த்தால் நன்றாக புரியும் நம் மூளைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.நம் மூளைதான் முதலாளி, உடம்பு வெறும் தொழிலாளர்கள்.நமக்குள் என்ன நேர்ந்தாலுல் நாம் பரிசோதிக்க வேண்டிய முதல் ஆள் மூளை.

நம் மூளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மான முடிவெடுக்க நாம் ஒதுக்கும் நேரம்தான் சிந்திக்கும் நேரம்.ஒரு முறை தெளிவாக மூளை முடிவெடுத்து விட்டால் மற்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக்கொள்ளும்.உலகின் ஆகச்சிறந்த செல்வந்தர்கள்,மனிதர்கள்,படைப்பாளிகள் என எல்லோரின் வெற்றிக்கும் காரணம் அவர்கள் சிந்தக்க நேரம் ஒதுக்குகிறார்கள்.உண்மையில் நாம் சிந்தக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க ஆரம்பிக்கிறோம்.நாம் கவனிக்க ஆரம்பிக்கும் போது புரிய ஆரம்பிக்கிறது.எல்லாம் புரிய ஆரம்பிக்கும் போது நாம் வளர ஆரம்பிக்கிறோம்.

காலை எழுந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் அமைதியாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அன்றைய நாளைப்பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்.அது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அடையாளம் காட்டலாம்.எனவே எல்லாவற்றையும் சிந்தித்து,நமக்கு தெரிந்த விசயங்களில் இருந்து செயல்பட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

தன்னம்பிக்கை நேரம் :: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.

"அப்பா இங்கே பாருங்கள் மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால்  ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள் மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக்குருடன்.இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."


உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.

கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்.


பொட்டல்கள்

வெயிலும் கருவேல மரமும்
கைகோர்த்து நிற்கும்
பொட்டல் காட்டில்,

ஒழுகல் மூக்கும்
ஓட்டை டவுசர் சகிதம்
டயர் வண்டியுடன்
மகாராஜாவாக வலம்
வந்தவர்கள் ஏராளம்.

ரெட்டை ஜடை
குட்டை பாவடை சகிதம்
பொம்மை குழந்தைகளை
வளர்த்த அம்மாக்கள் ஏராளம்.

இச்சி மரத்தடியில்
ஊரத்தண்ணி பானை  ஸ்டெம்பாக
கிரிக்கெட் ஆடிய சச்சின்கள் ஏராளம்.

பேந்தான்,குழிக்குண்டு,பம்பரமென
பக்கத்து தெரு ஒலிம்பிக்கிற்காக
பயிற்சி எடுத்தவர்கள் ஏராளம்.

பக்கத்து தெரு பஞ்சாயத்து,
அரசியல் ராஜ தந்திரம் மென
அரசியல் படித்தவர்கள் ஏராளம்.

புழுதியும் வெயிலுமாக
தண்ணீரே உணவாக
பொட்டலில் கரைந்த
இளமைக்காலங்கள் ஏராளம்.

ஒவ்வொருமுறை பொட்டலை
கடக்கும் போதும்,அதன் தாக்கம்
இதயத்தின் அடிவரை வருகிறது.
ரோஜாக்களால் ஏற்படாத
தாக்கமும் ,ஏக்கமும் - ஒரு
பொட்டலால் ஏற்படுகிறது.

இப்போது
பொட்டல்கள் கொள்வாரில்லாமல்
அனாதைகளாக கைவிரித்து
காத்துக்கொண்டிருக்கின்றன.
மகாராஜாக்களையும்
சச்சின்களையும்
சந்திக்க.