அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை,ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.

 கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை
ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.
கரை வேட்டிகட்டியவனெல்லாம் கோமாளியுமில்லை,ஜீன்ஸ் போட்டவெனெல்லாம் ஜீனியஸும் இல்லை.

கோடை காலம்,இலையுதிர் காலம் என்பது போல் இது தேர்தல் காலம்.பட்டிதொட்டி எங்கும் ஒரே அரசியல் பேச்சு.தேர்தல் கூட்டணி,ஆளும் ஊழல்,எதிர் கட்சி ஊழல்,என இணையம் முழுவதும் ஒரே அரசியல் பேச்சு.ஆனால் இந்த தேர்தல் முன்பை போல் இல்லை.இணையத்தின் ஆழமான ஊடுருவல் மற்றும் கைப்பேசிகளின் தாக்கத்தால் சின்ன விசயம் கூட கடைக்கோடி குடிமகன்களிடம் வெகுவாகப் போய்ச்சேர்கிறது.இதில் முக்கியமான ஒரு விசயம் எல்லா நிகழ்வுகளும் நகைச்சுவையாகவே சித்தரிக்கப் படுகின்றன.

இன்றைய சூழலில் எல்லாஅரசியல் தலைவர்களும் கேளி கிண்டலுக்கு ஆளாகின்றனர்.உண்மையில் எல்லா தலைவர்களும் என்ன பேசுவதென்று விழி பிதுங்கி போய் இருக்கின்றனர்.அது மட்டுமில்லாமல் அவர்கள் பேசும் ஒவ்வொரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து பதில் போடஇணையத்தில் ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.அவர்கள் பேசும் சிறிய தவறான பேச்சு கூட அவர்கள் அரசியல் வாழ்க்கைக்கு சாவு மணியாக அமையக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் அவதாரம் எடுத்து நிற்கிறது.

இப்படி இன்றைய அரசியல் ஒரு கேளி கூத்தாகவே போய் கொண்டிருக்கிறது.எல்லா அரசியல் தலைவர்களையும் கோமாளியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒன்றை யோசிக்க மறந்துவிட்டோம்.நாளை தேர்தல் என்று வரும் போது இந்த கோமளிகளில் ஒருவரைதான் நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.வேறு வழி இல்லை.இது அவர்களுக்கும் தெரியும் அதனால் தினம் ஒரு பேச்சு என தினுசு தினுசாக பொய் பேசித்திரிகிறார்கள்.நாமும் எல்லாவற்றையும் ஒரு காமடியாகவே பார்த்து போய்க்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் மூன்று மாதங்களுக்கு கோமாளிகளாக தெரிபவர்களுக்கு தேர்தல் முடிந்தபின் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாம் கோமாளிகளாக தெரிவோம்.ஆட்சி அதிகாரத்தில் எல்லாவற்றையும் சம்பாதித்துவிட்டு நம்மை அடிமையாகவே வைத்திருக்கும் அவர்கள் கோமாளிகளா? இல்லை எல்லா அதிகாரமும் கையில் இருந்து மாற்று அரசியலுக்கு வழியில்லாமல் ,பணத்தை வாங்கிக்கொண்டு சொத்தைகளுக்கு ஓட்டு போட்டு, பதவியில் அமர்த்தி குறை சொல்லி கொண்டிருக்கும் நாம் கோமாளிகளா?

இந்த நிலைமையை பார்க்கும் போது ஆப்பசைத்த குரங்கின் கதைதான் நியாபகம் வருகிறது.சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.கண்டிப்பாக சிரிக்க வேண்டிய காலத்தில் அழுவோம்.

பச்சைவேட்டிக்காரன் ஐந்நூறு
சிவப்புவேட்டிக்காரன் ஆயிரம்
கருப்பு,சிவப்பு வேட்டிகாரனிடம் முந்நூறுவென
எல்லாரிடம் பணம்வாங்கிக்கொண்டு
சிவப்புவேட்டிக்காரனுக்கு ஓட்டுப்போட்டு
காரணம் சொன்னால் அம்மா
சத்தியத்தை மீறக்கூடதென்று.

எனர்ஜி டானிக்: கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்

புத்திசாலிகள் உலகை ஆளுகிறார்கள்,
பலசாலிகள் அவர்களை பின் தொடர்கிறார்கள். 

கடுமையாக உழைத்தால் முன்னேறலாம்.புத்திசாலிதனமாக உழைத்தால் வேகமாக முன்னேறலாம்.கடுமையான உழைப்பும்,புத்திசாலிதனமும் இணையும் போது அற்புதம் நிகழ ஆரம்பிக்கும்.கடுமையாக எல்லோருக்கும் உழைக்க தெரியும்.ஆனால் எப்படி புத்திசாலிதனமாக செயல்படுவது?அதற்கு முன் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

எதையும் யோசிக்காமல் செய்ய ஆரம்பித்தால் கடுமையாக உழைப்பவர் என கொள்ளலாம்.யோசித்து தெளிவான திட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தால் புத்திசாலிதனமாக செயல்படுபவர் என கொள்ளலாம்.இதில் நீங்கள் எந்தவகை என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சரி எந்த விசயத்தையும் புத்திசாலிதனமாக அணுகுவது எப்படி?

  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்ய வேண்டிய விசயத்தை சுலபமாகவும்,எளிமையாகவும் செய்யக் கூடிய ஒரு வழி உள்ளது என்பதை மனதார நம்புங்கள்.இந்த வார்த்தையை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள்.
  • உடனே சிந்திக்க ஆரம்பியுங்கள்,சிந்தனையில் வருபவற்றை மனதிலே குறித்துக்கொள்ளுங்கள்.எதையும் நல்லது,கெட்டது என சிந்தனை தடையில்லாமல் சிந்தியுங்கள்.
  • ஒரு சின்ன யோசனை கிடைத்த உடன் அதை உடனே திட்டமாக்குங்கள்.
  • இதைவிட ஒரு சிறப்பான, எளிய திட்டம் ஒன்று உள்ளது.அதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என மறுபடியும் மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.
  • இப்போது முதல் திட்டத்தை உருவாக்க என்னென்ன வழிமுறைகளை ,சிந்தனைகளை,பின்பற்றினோமோ அவற்றை மறுபடியும் பயன்படுத்தாமல் வேறு ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.இதை திரும்ப திரும்ப செய்து பலதிட்டங்களை உருவாக்குங்கள்.
  • எல்லா திட்டங்களில் உள்ள நல்லது கெட்டதை உங்கள் உள்ளுணர்வால் ஆராய்ந்து, எல்லாவற்றையும் இணைத்து இறுதி திட்டத்தை உருவாக்குங்கள்.
  • உங்கள் திட்டத்தை யாரிடமாவது விளக்கி தேவையான மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக உழையுங்கள்.
எதையும் யோசித்து செய்வதுதான் புத்திசாலிதனம்.எப்படி யோசிக்க வேண்டும் என்பதைதான் மேலே பார்த்தோம்.மேலே சொன்னவற்றை படிக்கும் போது சில ஆச்சர்யமான மனம் சார்ந்த விசயங்களை பார்க்கலாம்.
நம் மூளைதான் எல்லாவற்றையும் செய்கிறது.அது சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் சிறப்பாக ஊக்கப் படுத்தவேண்டும்.மற்றொன்று நம் உள்ளுணர்வு.தேர்தெடுக்கும் போது பகுத்தறிவைவிட உள்ளுணர்வுதான் சரியானதை தேர்ந்தெடுக்கிறது என அறிவியல் சொல்லுகிறது.எனவே நாம் புத்திசாலிதனமாக செயல்பட மனமும்,உள்ளுணர்வும் முக்கியம்.

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவரும் மரவெட்டிகள்.அதில் ஒருவர் பலசாலி. மற்றொருவர் புத்திசாலி.காலையில் மரம் வெட்ட சென்று மாலையில் திரும்பி வரும்போது யார் அதிகமாக மரம் வெட்டியது என எண்ணிப் பார்ப்பார்கள்.எப்போதும் புத்திசாலி நபர் தான் நாளின் இறுதியில் அதிக மரம் வெட்டியிருப்பார். இதை பார்த்த பலசாலி புத்திசாலியிடம் காரணத்தை இவ்வாறாக கேட்டார்.

"நான் காலையிலிருந்து மாலைவரை இடைவிடாமல் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். நீ யோ இடைவெளி விட்டு வெட்டிக் கொண்டிருக்கிறாய். ஆனால் நாளின் இறுதியில் நீதான் ஜெயிக்கிறாய். அதன் ரகசியிம் என்ன?" என்றார் ?

அதற்கு அந்த புத்திசாலி சொன்னார்
"நாம் தொடர்ந்து வெட்டும் போது சிறிது நேரத்தில் உடலும் மனமும் சோர்ந்து விடுகிறது, கோடாரியும் மழுங்கி விடுகிறது. அதனால் சிறிது ஓய்வு எடுத்து மரம் வெட்டுகிறேன்.ஓய்விலும் எனது கோடாரியை நான் கூர் தீட்டிக் கொண்டிருப்பேன். இதனால் மறுபடியும் முழு வீச்சுடன் வெட்ட ஆரம்பிப்பேன். இதனால் நாள் முழுவதும் முழு தெம்புடன் மரம் வெட்டுகிறேன். நாளின் இறுதியில் அதிகமான மரக்கட்டைகளை சேகரிக்கிறேன்.


மேலே உள்ள கதையில் சொன்னது போல் கடின உழைப்பை விட .புத்திசாலிதனத்துடன் கூடிய கடின உழைப்பே உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிலும் வெற்றி பெற கடினமாக அல்ல,புத்திசாலிதனமாக செயல்படுங்கள்



விஜய் மொல்லையா :- பணம் உள்ளவனுக்கே உலகம் சொந்தம்

"நீ யார் என்பது முக்கியமல்ல,பணம் உன்னிடம் உள்ளதா என்பது தான் முக்கியம்"



வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டு ஒடியதால் இன்று முதல் அவரை விஜய் மொல்லையா என அன்போடு அழைக்கலாம்.


9000 கோடி ரூபாய் அடித்துவிட்டு இன்னும் ஜம்பம் பேசி திரியும் விஜய் மல்லையாவை பாராட்டுவதா ! இல்லை நாம் இந்த மாதிரி உலகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைத்து வருந்துவதா? உண்மையில் இதை நினைத்தால் மிக வருத்தமாக உள்ளது.ஒரு லட்ச ரூபாய் கடன் தொகையை கட்டமுடியாத ஒருவரை குண்டர்களை வைத்து அடித்து துவத்த ஒரு வங்கி,1200 கோடி கடன் வாங்கியவனிடம் கடன் வசூலிக்க முடியாமல் மன்டியிட்டு கதறிக்கொண்டு இருக்கிறது.இந்த அனுபவம் எனக்கும் ஒரு முறை ஏற்பட்டது.


அது நம் நாட்டின் பெயரை கொண்ட ஒரு தேசிய வங்கி.அவர்களிடம் வீடு கட்ட நான்கு லட்ச ரூபாய் கடன் கேட்ட போது அந்த வங்கி மேலாளர் பேசிய பேச்சை கேட்டால், நாம் என்னவோ கடவுளின் பினாமியிடம் கடன் கேட்டது போன்று இருந்தது.இத்தனைக்கும் நான் முறையாக வரி செலுத்தும் குடிமகன்.அந்த வங்கியில் இருந்து தான் 10 வருடமாக சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த மேலாளர் சொன்னார்,தம்பி நான்கு லட்சம் எல்லாம் சின்ன விசயம்,வேண்டும் என்றால் 20 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள்.அது மட்டும் இல்லாமல் எங்கள் வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.தயவு செய்து வேறு வங்கியில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.இவை எல்லாம் வழக்கம் போல் பல வார  அலைச்சலுக்கு பின் கிடைத்த பதில்கள்.

இப்போது அதே வங்கிதான் நம் கதநாயகனுக்கு 1200 கோடி கொடுத்து முதலிடத்தில் உள்ளது.இதை நினைக்கும் போது ட்விட்டரில் நண்பர் ஒருவர் போட்ட காமடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

லோன் வாங்க லோ லோவென அலையவிட்ட வங்கிகளை,இப்போது
கடன் வசூலிக்க லோ லோவென அலையவிடும் விஜய் மல்லையாவை வாழ்த்துகிறோம்.

உண்மையில் நம் நாட்டில் பணம் உள்ளவருக்கு தான் சட்டம் முதல் அரசியல் வரை சலாம் போடுகிறது.பலகோடி மதிப்புள்ள நிலங்களை அரசே மானிய விலையில் ஒரு தொழில் அதிபருக்கு வழங்குகிறது.ஒரு தொழில் அதிபரின் மகன் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை கார் ஏற்றிக்கொன்று சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்.பல கோடி ஊழல் செய்தவர்களை,
பல கோடி வரி ஏய்ப்பு செய்தவர்களை நம் சட்டத்தால் ஒன்றும்  செய்ய முடியவில்லை.இதைக்கூட அரசியல் கட்சிகள் பணக்காரன் ,ஏழை என அரசியல் பேசி அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் பார்க்கும் போது கீழே உள்ள பாடல் தான் ஞாபகம் வருகிறது.

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே

அண்டாவை காணோம்

அண்டாவை காணோம் என்பது போல் இப்போதெல்லாம் விமானங்கள் காணாமல் போவது சர்வ சாதாரணமாகிவிட்டது.காணாமல் போனது கூட பரவாயில்லை. அதை கண்டுபிடிக்கிறோம் என்கிற பெயரில் மெகா சீரியல் ரேஞ்சுக்கு செய்திகள் வெளியிடுகிறார்கள் சம்பந்தப்பட்ட நாடுகளும் அதன் விமான நிறுவனங்களும்.கூகுள் மேப்பில் தன் வீடு தெரிகிறதா?தன் பைக் தெரிகிறதா? என்று தேடிச் செல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையான விசயம்.நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் விமானங்கள் காணாமல்  போவதற்குரிய காரணங்களை வெளியிட்டிருந்தது.அதில் ஒரு செய்தி இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

அதாவது பயணிகள் விமானத்தை ஓட்டுவதற்கு குறைந்த பட்சம் 1500 முதல் 3000 மணி நேரமாவது பயிற்சி செய்து ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் உள்ள விமானிகள் அதிக பட்சம் 100 மணி நேரம் தான் பயிற்சி பெற்றிருப்பதாகவும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு எப்படி செயல்படுவது என்பது தெரிவதில்லை என்று ஓய்வு பெற்ற விமானி கூறுகிறார்.இதில் வேடிக்கையான விசயம் பேட்டியளித்த விமானி வெறும் முப்பது மணிநேரமே பயிற்சி பெற்றதாக ஒப்புக்கொண்டார்.இதனால் கடுமையான பனிபொழிவு , சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு நடுவே எப்படி செயல் படுவது என்று முதலில் தெரியவில்லை என்றும், பின்னர் அனுபவத்தில் கற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

சரியா சொன்ன நம்மள வச்சு தான் அவங்க விமானத்தை ஓட்டி பழகுறாங்க!அட பதறுங்களா நீங்க லோடுவச்சு ஓட்டி பழக நாங்க தான் கிடைச்சோமா?



எனர்ஜி டானிக்: நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் ஆள் நீங்கள் தான்

யார் யாரையோ,எதை எதையோ இந்த மனம் தெரிந்து கொள்ள துடியாய் துடிக்கிறது.மனமே நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்பதை தெரிந்து கொள்ள நான் துடியாய் துடிக்கிறேன்!!
 
என்னை என் மனைவி புரிந்து கொள்ளவில்லை,நண்பன் புரிந்து கொள்ளவில்லை,யாரும் புரிந்து கொள்ளவில்லை என புலம்பிக் கொண்டே நம்மில் பலர் தினமும் வாழ்க்கையை கடந்து கொண்டே இருக்கிறோம்.நம்மை மற்றவர்கள் புரிந்து கொண்டது ஒரு புறம் இருக்கட்டும்.நம்மை நாமே எவ்வளவு புரிந்து கொண்டு இருக்கிறோம்?நம்முடைய பலம், பலவீனம்,விருப்பு,வெறுப்புகள் என துளி துளியாக நமக்கு நம்மை பற்றி எவ்வளவு தெரியும்.இதை தான் கிழக்கில் தன்னை அறிந்தவன் எல்லாம் அறிவான் என்றும்,தன்னை வென்றவன் உலகை வென்றவன் என்றும் கூறுவர்.

எவ்வளவோ தொழில்நுட்பம் பற்றி பேசிக்கொண்டும் ,படித்துக்கொண்டும் இருக்கிறோம்.ஆனால் நம்மால் ஒரு ரொட்டித்துண்டை போட்டால் அதை ரத்தமாகவும்,சதையாகவும் மாற்றக்கூடிய ஒரு தொழில்நுட்பமோ அல்லது கருவியோ கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால் நம் உடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை சுலபமாக செய்கிறது.அப்படியே இன்றைய தொழில்நுட்பத்தில் இதை செய்து முடிக்க,நமக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இடைவேளி இல்லாமல் பல சிக்கலான கருவிகளை பயன் படுத்தினால் மட்டுமே இதை செய்து முடிப்பது சாத்தியம் என அறிவியல் கூறுகிறது. ஆனால்சரியாக ஒரு ஜான் வயிற்றுக்குள் இதெல்லாம் எந்த சத்தமுமில்லாமல் சுலபமாக நடக்கிறது.

ஒரு மிக்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் பத்து கல்லை போட்டு அரைத்துப் பாருங்கள்.அது தான் அந்த மிக்சியின் கடைசி காலம்.ஒரு கல்லை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள்,எந்த பிரச்சனையுமில்லை,முடிந்தால் அரைக்கும் இல்லையென்றால் ,அப்படியே வெளியே தள்ளிவிடும்.இதையே தொடர்ந்து செய்தால்  நம் உடல் அதற்கும் தன்னை பழக்கப் படுத்துக்கொள்ளும். இவ்வளவு அற்புதமான நம் உடலை நாம் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளோம்?

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நம் இதயம் நம்மை கேட்டு துடிக்கவில்லை,மனம் நம் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் மூளை நம்மை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.நம்மிடம் எந்த உத்தரவையும் எதிர்பார்ப்பதில்லை.மொத்தத்தில் ஒரு பத்து சதவீதம் தான் நம் உடலே நம் கட்டுப்பாட்டில் உள்ளது.சரி இதையெல்லாம் நாம்  தெரிந்து கொண்டோமா?

உடல் கண்ணுக்கு தெரிந்த மனம்,மனம் கண்ணுக்கு தெரியாத உடல்.இதை உணரும் போதே உடலும்,மனமும் கோவிலாகிவிடும்.இவ்வளவு அற்புதம் செய்யும் இந்த உடலை வணங்காமல்,உணராமல் கடவுளை, மற்றவரையோ வணங்கி என்ன பயன்?நாம் கண்டதை தின்று,தேவையில்லாதை நினைத்து இந்த கோவிலாகிய உடலையும்,மனதையும் அசுத்த படுத்திக்கொண்டிருக்கிறோம்.நம்மை நாம் வணங்கி மதிக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்.துள்ளியமாக நிலாவுக்கு போய்வர தெரிந்த நமக்கு, சாதாரண சாலையை விபத்தில்லாமல் கடக்க தெரியவில்லை.ஊருக்கே உடல் நலம் பற்றி கூறும் டாக்டருக்கு தன் பிரச்சனை தெரியவில்லை.பிரச்சனை  எங்கே இருக்கிறது?


நாம் தேடல் என வெளியே ,வெளியே என ஓடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரச்சனை உள்ளே தான் இருக்கிறது.மனைவியை புரிந்து கொள்ளும் முன்,நம்மை புரிந்து கொண்டிருந்தால்,பிரச்சனைக்கு அங்கே வாய்ப்பில்லை.குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அவ்வளவு முட்டாள்தனம் தன்னை அறியாமல் மற்றவர்களை குறை சொல்வது.அமைதியான குளத்தில் வெளியில் இருந்து யாரும் கல் எறியாமல் ஒழிய,குளத்தின் அமைதியை யாரும் கெடுக்க முடியாது.அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்க மனமென்னும் குளத்தில் கல்லெரிந்தவர்கள் யார் என்பதை ஆராயுங்கள்.



அந்த ஜென் குருவை சந்தித்து ஞானம் பெற ஒரு அரசன் வந்தான்.அவனை வரவேற்ற குரு.நீ இங்கு எப்படி வந்தாய்? என கேட்டார்.அதற்கு குதிரை வண்டியின் மூலம் வந்ததாக கூறினான்.அரசனை அழைத்து வாசலுக்கு சென்ற குரு, அரசனிடம்
வண்டியின் சக்கரத்தை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை, இது வெறும் சக்கரம் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை, அதை கழட்டிவிட ஆணையிட்டார்.அடுத்து குதிரையை காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை இது வெறும் குதிரைகள் என்றான்.அப்படியானால் இது குதிரை வண்டி இல்லை அந்த குதிரைகளை கழட்டிவிட ஆணையிட்டார்.இப்படியாக அச்சாணி,சாட்டை,வண்டி என ஒவ்வொன்றாக காட்டி இதுவா குதிரை வண்டி என கேட்டார்?அதற்கு அரசன் இல்லை என சொல்ல எல்லாவற்றையும் கழட்டிவிட சொன்னார்.கடைசியில் அங்கே ஒன்றும் இல்லாமல் இருந்தது.அப்போது அரசினிடம் நீ குதிரை வண்டியில் வந்ததாக சொன்னாயே எங்கே உன் வண்டி என்றார்?யோசிக்க ஆரம்பித்தான் அரசன் .

நான்,நான் என பேசிக்கொண்டே போகிறோம்.இந்த நான் தான் பிரச்சனைக்குரிய நபர்.அவர் தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முதல் நபர்.நம்மை புரிந்து கொண்டாலே உலகத்தை புரிந்து கொண்டது மாதிரி.


உலகம் உன்னில் இருந்து ஆரம்பிக்கிறது,
நீயின்றி உலகில்லை,
புரிதலை உன்னில் இருந்து ஆரம்பி,
புரிந்து கொண்டபின்,
நீ உருவாக்கிய உலகத்தை உடைத்து விடு,
இப்போது ஒரே உலகம்,
அதில் நீ,நான்,நாம் என பாகுபாடில்லாமல்
தடம் தெரியாமல்,வாழ்ந்து மறைவோம்.


இந்த வருடத்தின் முத்தாய்ப்பான மூன்று விசயங்கள்

இந்த வருடத்தின் இறுதிக் கட்டுரை.இந்த வருடத்தின் மீதான என் பார்வை என்றும் சொல்லலாம்.எப்பவுமே ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தான் பல திருப்புமுனைகள் அமையும்.அது போல இந்த வருடத்தின் கடைசி நாட்களில் பல சுவாரஸ்சியமான திருப்புமுனைகள்.சென்னையின் மழை வெள்ளம்,சிம்புவின் பீப் பாடல் ,சென்னை மழைக்கிடையிலும் சென்னை கால்பந்து அணி அதிரி புதிரியாக  கோப்பையை வென்றது என எல்லாம் அழகான நினைவுகளாக நீங்கப் போகின்றன.

இன்னும் பத்து வருடம் கழித்து, நான் சென்னையின் இந்த வெள்ளக்காட்சியை போட்டோவாக என் பிள்ளைகளிடம் காட்டினால்,கண்டிப்பாக காமடியாகத்தான் பார்ப்பார்கள்.கண்டிப்பாக யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.மழையாக ஆரம்பித்து,வெள்ளமாக மாறி,மனிதனின் கருணையாக முடிந்த சென்னை வெள்ளம் சொல்லிச் சென்ற பாடம் ஒன்றே ஒன்றுதான்.இயற்கை நினைத்தால் நாம் வாழ்த்த தடம் தெரியாமல் நம்மை துடைத்தெரிய ஒரு நிமிடம் போதும்.ஆனால் நாம் தான் அது புரியாமல் இயற்கையோடு வாலாட்டிக்கொண்டே இருக்கிறோம்.சென்னை மழை காட்டிய மற்றொரு பாடம் மனிதநேயம்.சென்னையில் இவ்வளவு நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் என்னவோ மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்திருக்கிறது.

அடுத்தது சிம்புவின் பீப் பாடல்.பாவம் சிம்பு ,போன வருசம் பய தப்பான முகத்துல முழிச்சிட்டார் போல.போகுற இடத்துல எல்லாம் தர்ம அடி.யாரோ வாங்க வேண்டிய அடியெல்லாம் ,யார் பெத்த புள்ளையோ,சிம்பு வாங்கிக்கிறாரு.இனி இணையத்துல இவர்மேல காச்சி ஊத்த ஒன்னும் இல்லை என்னும் சொல்லுற அளவுக்கு பயபுள்ள அடி வாக்கிருச்சி.பொம்பளப்பிள்ளைங்கள எல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு.இத பார்த்தா காலேஜ்ல எங்க மெக்கானிக்கல் வாத்தியார் சொன்ன வார்த்த, இப்ப ஞாபகம் வருது.ஒரு தடவ  பொம்பள பிள்ளைங்களுக்கு லேப்ல மார்க் குறைச்சுப் போட்டுடாரு நம்ம சாரு.இத கவனிச்ச புள்ளைங்க அவர் வண்டி பெட்ரோல்டேங்கல மண்ண போடலாமா? ,இல்ல சீனிய போடலாமானு? பெரி டிஸ்கஸனே பண்ணியிருக்காய்ங்க.இது எப்படியோ சாருக்கு தெரிச்சு போய் அவர் அடித்த நாள் கிளாஸ்ல இத சொல்லி,உங்க கிளாசுக்கு வரவே பயமா இருக்குனு புலம்பி தள்ளிட்டாரு.இன்னொரு நாள் லேப்ல பெயில் ஆக்கிருவேன் சொன்னவர, ஊர்ல இருந்து ஆள் இறக்கிருவேன்னு ஒரு புள்ள மெரட்டிருக்கு.இன்னைக்கு காலத்துல பொம்பள பிள்ளைங்க ரொம்ப உசாரு .சிம்பு அவங்க ஆயா காலம்னு நினைச்சு பாட்டு போட இன்னைக்கு அவர் டவுசர் கழன்டு போச்சு.மிஸ்டர் சிம்பு ,உங்க அப்பா கதாநாகியை தொடாமலே முதல் படத்துல நடிச்சதாலயே 100 நாள் ஓடுச்சாம்.இத நாங்க உங்களுக்கு சொல்ல தேவ இல்ல. எல்லா பெண்களையும் சக மனிதரா ,தோழனா பார்த்து பழகுங்க.நீங்க யாரப்பார்த்தாலும் லவ்ரா பார்க்க நினைச்சு ,அவங்க ,கடைசில உங்க நைனா போட்ட சோக பாட்ட உங்களுக்கே டெடிகேட் பன்னிட்டு போய்ராங்க.....

கடைசியா ISL கால்பந்து பைனல் மேச்.நம்ம ஆளுங்களா இப்படி.எங்கையா இருந்தீங்க? இம்புட்டு திறமைய வச்சுக்கிட்டு.  எப்பவும் பிரேசில்,ஜெர்மனி என அடுத்தவங்களையே பார்த்த எனக்கு ,நம்ம ஊரு கிட்டுமணி,ஜேஜே வை பார்க்க ஒரே ஆச்சர்யம்.அதுவும் அந்த பைனல் மேட்ச் கடைசியில் மென்டோசா அடித்த ரெண்டு கோல் அற்புதம்.நான் பார்த ஜோரான பைனல் மேட்சுகளில் இதுதான் மிகச்சிறப்பான ஒன்று.சத்தமில்லால் இந்திய கால்பந்து அணியினர் உலகுக்கு சொன்ன செய்தி.நாம் வேகமாக வந்து கொண்டிருக்கிறோம்.இந்திய அணி உலக்கோப்பையில் ஆடும் அந்த நாளைக் காண ஆவலாக உள்ளேன்.

வாழ்க்கை எல்லாவற்றையும் கரைத்துவிடும்,ஒருவிதமான கரைப்பான்.அதுயாரையும் விட்டுவைப்பதில்லை.போகிற போக்கில் எல்லாவற்றையும் துடைத்து தூக்கி போட்டுவிடும்.அது ஒவ்வொரு பன்னிரெண்டு மாதத்திற்கு ஒரு முறையும், தனது இந்த பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.புத்தனை மறக்க வைத்தது,காந்தியை மறக்க வைத்தது.நம்மையும் ஒரு நாள் தடம் தெரியாமல் மறக்க வைத்துவிடும்.
ஒவ்வொரு பன்னிரெண்டு மாதமும் வாழ்க்கை பழையவற்றை அழித்து தன்னை தான் புதுப்பித்துக்கொள்ளும்.அதோடு சேர்ந்து நாமும் நம்மை புதுப்பித்துக்கொள்வோம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நாம் மறந்த காந்தி

ஒவ்வொரு வருடமும் நாம் காந்தியடிகளின் பிறந்த நாளை ஒரு தலைவரின் பிறந்த நாளாக, நாட்டின் அடையாளமாக, ஒரு அலங்கார திருவிழாவாக கொண்டாடி கடந்து சென்று விடுகிறோம் .காந்தி என்ற அகிம்சைவாதியை, தன்னலமற்ற மனிதனை, ஆளுமை மிக்க தலைவனை பற்றி படிக்க மறந்துவிட்டோம்.
             அகிம்சையின் ஆழத்தை உலகுக்கு உணர்த்தியவர்கள் மூன்று பேர். அவர்கள் புத்தர், மகாவீரர், மற்றும் காந்தியடிகள். சமகாலத்திய நமக்கு புத்தர், மகாவீரரை சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலும் காந்தியின் வாயிலாக அகிம்சையின் பலத்தை உணர முடிகிறது . ஒரு முறை இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் செய்தியாளர்கள் இப்படிக் கேட்டார்கள், "உங்களால் ஏன் காந்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை? " அதற்கு சர்ச்சில் சொன்னார். காந்தி கத்தியை தூக்கியிருந்தால், துப்பாக்கியை காட்டி அடக்கி இருப்போம். துப்பாக்கியை காட்டியிருந்தால், பீரங்கியை காட்டி அடக்கி இருப்போம். காந்தியோ அகிம்சையை ஆயுதமாக ஏந்தி போராடுகிறார். அகிம்சையை வெல்லும் ஆயுதம் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.அதனால் காந்தியை அடக்க முடியவில்லை என சர்ச்சில் பதிலளித்தார். இது தான் அகிம்சையின் பலம். உண்மையின் பலம். அதை நடைமுறையில் சாத்தியபடுத்தி வெற்றி கண்ட காந்தியடிகள் பலம்.
                     ரோட்டில் ஒரு மனிதன் அடிபட்டு கிடந்தால் அதை ஒரு காட்சியாக, எளிதாக கடந்துவிடும் மனப்பான்மை உள்ள காலகட்டத்தில், தன் நாட்டு மக்கள் உண்ண உணவில்லாமல் , உடுத்த உடையில்லாமல் இருப்பதை பார்த்து ஒரு முழ வேட்டியை ஆடையாக ஏற்று, கடைசி வரை தன் கொள்கையிலிருந்து மாறாமல் வாழ்ந்தார். நம்மால் ஒரு அரசனை யோ, அரசியையோ, குறைந்த ஆடையோடு பார்க்க போக முடியுமா? ஒரு முறை சர்ச்சில் காந்தியை 'அரை நிர்வாண பக்கிரி என்று கூறி ஏளனம் செய்தார். ஆனால் உலக வரலாற்றில் இங்கிலாந்து ராணியை குறைத்த ஆடையுடன் சந்தித்த முதல் மனிதர் ஆனார்.காந்திக்காக அரண்மனையின் பாரம்பரியங்கள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்பது தான் உண்மை. தன்மானத்துடன் கட்டும் ஒரு முழத்துண்டே ஒரு மனிதனின் உண்மையான உடை என்ற தன் கொள்கையை வாழ்ந்தே நிரூபித்தார்.
                  மற்றொரு முறை காந்தியை ஒருவர் கடுமையாக திட்டி ஒரு கடிதம் எழுதினார். அதை சலனமில்லாமல் படித்த காந்தி, அதில் இருந்த குண்டூசியை மட்டும் வைத்துக் கொண்டு கடிதத்தை கிழித்துப் போட்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர் கேட்தற்கு 'தனக்கு தேவையானதை கடிதத்தில் இருந்து எடுத்து கொண்டதாகவும், தேவையற்றதை கிழித்து போட்டதாகவும் பதிலளித்தார்.' தன்னை நோக்கி எறியப்பட்ட அத்தனை வசைகளையும் , புறக்கணிப்புகளையும் அமைதியாக , அகிம்சை வழியில் கடந்து சென்ற மாபெரும் தலைவர் .
                           அதுவரை இரத்தத்தால் சுதந்திர வரலாறை எழுதியவர்கள் மத்தியில், கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டத்தை நடத்தி , அகிம்சை என்னும் மயிலிறகால் இந்தியாவின் சுதந்திரத்தை வரலாற்றில் எழுதிய ஒரு ஆளுமைமிக்க தலைவர் மகாத்மா காந்திஜி. எத்தனையோ மனிதர்கள் சுய சரிதை எழுதியுள்ளார்கள். ஆனால் காந்தியைப் போல் ஒளிவுமறைவின்றி தன் வாழ்க்கையை பந்தியில் பரிமாறியவர்கள் யாரும் இல்லை. நாம் படிக்க வேண்டியது காந்தியின் வரலாறு இல்லை, மகாத்மாவை பற்றி இல்லை, உலகத்தை தன் கொள்கையால், ஆளுமையால் புரட்டிப் போட்ட மாபெரும் மனிதரை பற்றி.

சில வரிக் கதைகள் (குவாண்டம் வாழ்க்கை, சூது கவ்வும், வாழ்க்கை ஒரு வட்டம்)


குவாண்டம் வாழ்க்கை
கல்யாணம் ஆகாமல் ஒன்றாய் வாழும் கௌதமும், கீர்த்தியும் அந்த
அப்பார்ட்மென்ட் கட்டிலில்
பிளாங்க் இடைவெளியில்(h/2 Pi), நிலையற்ற தருணத்தில்( unCertainity), காம (குவாண்ட) உணர்வை
பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சட்டென சுதாரித்துக் கொண்ட கிர்த்திதன்னை விலக்கிக்கொண்டு கேட்டாள் "இதெல்லாம் தப்பில்லையா?''
இல்லையென்பது போல் சிரித்துக் கொண்டே தலையசைத்தான் கௌதம். இருவரும் தங்கள் பிளாங்க் இடைவெளியை குறைத்துக் கொண்டார்கள். புதிய பிரபஞ்சம் உருவாக தயாரானது.

அசிங்கமான மனிதர்கள்
கிழிந்த சட்டை, அழுக்கு பாவாடை சகிதமாய் ,நடு ரோட்டில் கிடந்த மாட்டின் அசிங்கங்களை வெறும் கையால் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள். அவளை அசிங்கமாக பார்த்துக்கொண்டே கடந்து சென்றார்கள் சக மனிதர்கள்.

சூது கவ்வும்
முன்பெல்லாம் தன் காதல் கல்யாண வாழ்க்கையை பற்றி அக்கம் பக்கத்தில் பெருமையடித்துக் கொண்ட கமலா', இப்போதெல்லாம் ஓடிப்போன மகளின் காதலைப் பற்றி அக்கம் பக்கத்தில்புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை ஒரு வட்டம்
மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட மோகன், வாழ்க்கையில் தேறுவது கடினம் என பள்ளி ஆசிரியர் வருத்தப்பட்டுக் கொண்டார். பாவம் மோகன், இப்போது கால்நடை மருத்துவர் ஆகி விட்டான்.


கனவு நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி

சோக மேகம் அடி மனதில்
அடை மழை போல் கண்ணீரோ
இரு கண்களில்.

வார்த்தையில் வடிக்கமுடியாத
வாழ்க்கை வாழ்ந்து
வானுயர வளர்ந்து நின்றீர்.

ஐயா, மனிதனாய் பிறக்கிறோம்
உங்களைப்போல் மனிதனாகவே
இறந்தவர் சிலர்.

இரும்பைக் கூட்டி
எரிபொருள் கொடுத்து
விண்ணில் பறக்க விடும்
வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்.

இருண்ட நெஞ்சங்களுக்கு
தன்னம்பிக்கை கொடுத்து
விண்ணில் பறக்கும்
வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்.

சாதி, மத பேதம் பூண்ட
மனிதர்களுக்கிடையில்
பேத பாகுபாடின்றி வாழ்ந்தீர்.

இனிமையாக, எளிமையாக வாழ்ந்து
வாழ்க்கை பாடம் கற்றுக்
கொடுத்த ஆசானே.

வாழ்க்கையென்னும் இருண்ட காட்டில்
எதிர்கால விளக்கேற்றி
வழி நடத்திய தலைவனே.

நீர் சொன்ன பாதை நோக்கி
இதோ வருகிறது நாளைய பாரதம் . 

நிம்மதியாக போய் வா
கனவு நாயகனே.

நீர் விதைத்த இளைய பாரதம்
உன் பெயர் சொல்லும்
எப்போதும்.

டால்ஸ்டாய் கதைகள்: பாதிரியாரும் பிரார்த்தனையும்

அமைதியாக இருந்த கடலில் அந்தக் கப்பல் நிதானமாக போய்க்கொண்டிருந்தது.அதில் ஒரு பாதிரியாரும் சில பிரயாணிகளும் இருந்தனர்.கப்பளின் மேல் தளத்தில் இருந்தவர்கள் சிறு சிறு கூட்டங்களாக கூடி உணவருந்திக் கொண்டும் படுத்தபடி அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். பாதிரியார் இவர்கள் யாருடனும் சேராமல் தனியாக உலவிக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ஒருவன் தொலைவில் இருந்த எதையோ சுட்டிக்காட்டித் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.பாதிரியாரும், அவன் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தார்.சூரிய ஒளியில் பளபளக்கின்ற கடலைத் தவிர வேறு ஒன்றும் அங்கிருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. தானும் கூட்டத்தின் மத்தியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசும் கதைகளைக் கேட்க விரும்பினார் பாதிரியார்.

ஆனால் அவர் வருவதைக் கண்டதும் கதை சொன்னவன் அதை நிறுத்திவிட்டான்.நீ சொல்வதைக் கேட்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.ஏன் நீ சொல்லிக்கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டாய்?என்றார் பாதிரியார் அவனைப் பார்த்து.

"கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் அதோத் தூரத்தில் தெரியும்,அந்தச் சிறிய தீவைப் பாருங்கள்! அங்கே கடவுளின் தொண்டர்கள் சிலரும் முதியவர்கள் சிலரும் இருக்கிறார்கள்" என்றான் அவன்.அவன் கண்ணுக்குத் தெரிந்த அந்த தீவு ஏனோ பாதிரியாரின் கண்களுக்குத் தெரியவில்லை.

"தீவுதான் எனக்குத் தெரியவில்லை. அதை விடு.அங்கே வாழும் முதியவர்களைப் பற்றியாவது என்னிடம் கூறு:அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன்" என்று மிகவும் ஆவலோடு கேட்டார் பாதிரியார்.

அவர்களைப் பற்றி நான் வெகு காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர்கள் புனிதமானவர்கள் என்பார்கள்.ஆனால் அவர்களைக் காணும் பாக்கியம் எனக்குப் போன வருடம்தான் கிடைத்தது.ஒரு பயணத்தின் போது படகில் மீன் பிடித்துக் கொண்டு நான் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி தவறி அத்தீவிற்குப் போய்விட்டேன்.இங்கும் அங்கும் அலைந்து திரிந்து விட்டு கடைசியாக ஒரு மண்குடிசைக்குச் சென்றேன். அங்கே முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.அப்போது வேறு இருவர் அந்த மண்குடிசையின் உள்ளே இருந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எனக்கு உணவும் உடையும் தந்து என் படகைச் செப்பனிடு உதவினார்கள்.

"அவர்களில் ஒருவர் கூனல் முதுகுள்ள சிறிய உருவமுடையவர்:அவர் காவி உடை அணிந்திருந்தார்.மிகவும் வயதானவராகத் தெரிந்தார்.அவருக்கு நூறு வயதுக்கும் இருக்கும்.அவருடைய நரைத்த தாடி வெண்மை நிறம் மாறிப் போய் பசுமையாகிக் கொண்டிருந்தது.சிரித்த முகம் அவருக்கு.தேவதையைப் போல் அது ஒளி வீசிக்கொண்டிருந்தது.இரண்டாவது கிழவர் முதலாமானவரை விட உயரமானவர்.அவரும் வயதானவர்தான்.கிழிந்த கம்பளி உடை ஒன்றை அவர் அணிந்திருந்தார்.அவருடைய நீளமான தாடி பாதி மஞ்சள் நிறமானதாகவும் பாதி சாம்பல் நிறத்திலும் இருந்தது.ஆனாலும் அவர் மிக பலசாலியாக இருந்தார்.நான் சொல்லாமலே என் படகை அவர் செப்பனிட்டுக் கொடுத்தார்.மூன்றாவதாக இருந்த கிழவர் மிகப் பெரியவரியவராகவும் உயரமானவராகவும் இருந்தார்.முழங்கால் வரை அவரது தாடி நீண்டு வளர்ந்திருந்தது.அவரது முகம் அவரது கடின உள்ளத்தைக் காட்டியது.அவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவேயில்லை.வேலை செய்வதிலேயே அவர்கள் கருத்தாக இருந்தார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதன் மூலமும் பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலமும் உணர்த்திக் கொண்டு அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் 'இங்கே வெகு காலமாக வசிக்கிறீர்களா?' என்று கேட்டேன்.அதற்கு அவர்களில் ஒருவர் ஏதோ முணுமுணுத்தார்.மற்றொருவர் அவர் கையைப் பற்றிக் கொண்டு புன்னகை செய்தார்.சிறிது நேரத்திற்குப் பிற்கு ,"மன்னிக்கவும்!" என்று கூறிவிட்டுச் சிரித்தார். "

இப்போது கப்பல் தீவை நெருங்கிக் கொண்டிருந்தது.

தீவு இப்போது எல்லோர் கண்களுக்கும் நன்றாகத் தெரிந்தது.பாதிரியாருக்கும் அது நன்றாகத் தெரிந்தது.

மாலுமியை நெருங்கி அந்தத் தீவின் பெயரைக்கேட்டார் ."பெயர் எனக்குத் தெரியாது; இதைப் போல எவ்வளவோ தீவுகளின் இங்கே இருக்கின்றன" என்றான் அவன் அசட்டையாக.

"அங்கே முதியவர்கள் வாழ்வதாக கூறுகிறார்களே?" என்று திரும்பவும் கேட்டார் பாதிரியார்.

"அப்படித்தான் சொல்லுகிறார்கள்! அது உண்மையா,பொய்யா என்று எனக்குத்தெரியாது;மீனவர்களில் சிலர் அவர்களைப் பார்த்திருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.அது கட்டுக் கதையாகவும் இருக்கலாம்" என்றான் மாலுமி சலிப்புடன்.

"அந்தத் தீவுக்குச் சென்று அவர்களைக் காண நான் விரும்புகிறேன்:எனக்கு உன்னால் உதவ முடியுமா?" என்று கேட்டார் பாதிரியார்.

"இந்தக் கப்பல் அங்கே போகாது!ஏதாவது ஒரு சிறு படகிலே ஏறித்தான் அங்கு செல்ல வேண்டும்.அதற்குக் கப்பல் தலைவனின் அனுமதி வேண்டும்" என்றான் மாலுமி கடுப்புடன்.

பாதிரியார் விடுவதாயில்லை.கப்பல் தலைவனிடம் நேராய்ப் போய் தன் ஆசையைக் கூறினார்.

"நம்முடைய பிரயாணம் தடைப்படுவதைத் தவிர அதனால்  எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் பேசும் பேச்சு நமக்குப் புரியாது:நம் மொழியும் பேச்சும் அவர்களுக்குத்தெரியாது!" என்றான் தலைவன்.

பாதிரியார் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால்,மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தலைவன் கடைசியில் அவர் ஆசையை நிறைவேற்ற இணங்கினான்.

கப்பல் தீவை நோக்கிச் சென்றது!கப்பல் தலைவனிடமிருந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியின் மூலம் பாதிரியார் தீவைப் பார்த்தார்.கரையில் அந்த மூன்று பெரியவர்களும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.

"கப்பலை இங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கிறேன்.நீங்கள் வேண்டுமானால் படகில் சென்று வாருங்கள்" என்று கூறினான் தலைவன்.

கப்பல் நிறுத்தப்பட்டது.சிறு படகு ஒன்றை அதிலிருந்து இறக்கினார்கள்.படகோட்டிகளில் சிலர் அதற்குள் குதித்தார்கள்.பாதிரியாரும் படகிற்குள் இறங்கினார்.படகும் தீவை நோக்கிச் சென்று கரையை அடைந்தது.பாதிரியார் அதிலிருந்து கரையேறினார்.இப்போதும் அந்த மூன்று பெரியவர்களும் அங்கே கைகோத்துக் கொண்டு நின்றிருந்தனர்.பாதிரியரைப் பார்த்ததும் அவர்கள் அவரை வணங்கினார்கள்.அவர்களும் அவர்களை ஆசிர்வதித்தார்.

அவர்களைப் பார்த்து பாதிரியார், "இந்த ஆளரவமற்ற இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் மனித குலத்தின் பாவத்தை மன்னித்து அருளும்படி ஏசுவை நோக்கித் தவம் புரிவதாகக் கேள்விப்பட்டேன்.நானும் கர்த்தரின் சேவகன் தான்! வேத்தைப் போதித்து வாழ்விப்பது என்னுடைய புனித கடமை.அதனால் கடபுளின் கருணையால் நான் இங்கே வந்திருக்கிறேன்.உங்களைப் பார்க்க வேண்டும் என்பதும், முடிந்தால் உங்களுக்குப் போதனை செய்ய வேண்டும் என்பதும் ,ஆண்டவனின் கட்டளை!" என்றார் பாதிரியார்.

முதியவர்கள் இதற்குப் பதில் ஒன்றும் கூறாமல்,ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள்.

"நீங்கள் ஆண்டனை எவ்வாறு வழிபடுகிறீர்கள்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் பாதிரியார்.

அதற்கும் அவர்கள் புன்னகையையே பதிலாக அளித்தனர்.

கடைசியில் அவர்களில் பெரியவராகத் தென்பட்டவர் கூறினார்:"கர்த்தரின் சேவகரே! கடவுளை எப்படி வழிபடுவது என்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது; எங்களுக்கு நாங்களே சேவை செய்வது எப்படி என்கிற ஒன்றை மட்டும் தான் நாங்கள் அறிவோம்."

"சரி,அதை விடுங்கள்.கடவுளை எப்படி வண்ங்குகிறீர்கள் அதைச் சொல்லுங்கள்?" என்றார் பாதிரியார்.

அதற்கு அந்த மூவரில் மூத்தவராகத் தெரிந்த பெரியவர் பதில் அளித்தார்:"மூன்று தேவர்களே!எங்கள் மூவரிடமும் கருணை காட்டுங்கள் என்று கூறி வணங்குவோம்."

அவர் இவ்வாறு கூறியதும்,அம்மூவரும் வானை நோக்கி,ஒரே குரலில் மேற்கூறிய பிரார்த்தனையைக் கூறி வணங்கினார்கள்.

"தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி என்ற இந்த மூன்று தேவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீகள் என்று தெரிகிறது.ஆனாலும் நீங்கள் பிரார்த்தனை செய்யும் முறை தவறு.உங்கள் அறியாமைக்காக நான் பரிதாபப்படிகிறேன்.நீங்கள் கர்த்தருக்கு திருப்தி அளிக்கும் முறையில் நடந்து கொள்ள விருப்புகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால்,அதற்கான சரியான வழிமுறை உங்களுக்கு தெரியவில்லை.சரியாகப் பிரார்த்தனை செய்யும் முறையை உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். இது வேதத்தில் கூறப்பட்டுள்ள முறை.கடவுளே அவ்விதிகளைச் செய்திருக்கிறார்."

தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி இவை பற்றிய தத்துவங்களைப் பாதிரியார் அவர்களுக்கு விளக்கினார்.

"மனிதர்களை இரட்சிக்க வேண்டி இந்த உலகில் அவதரித்த தேவகுமாரன் இப்படித்தான் கடவுளை வணங்க வேண்டும் என்று விதித்திருக்கிறான்.சொல்லுகிறேன் கேளுங்கள்: பரமண்டலத்திலுள்ள எங்கள் கர்த்த பிதாவே......" என்று தொடங்கினார் பாதிரியார்.

பெரியவர்கள் மூவரும் அவர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொன்னார்கள். நடுத்தர உயரமுள்ள பெரியவர் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பினார்.உயரமானவருடைய தாடியும்,மீசையும் தெளிவாக உச்சரிக்க இயலாமல் அவரைத் தடுத்தன.மூன்றாவது பெரியவருக்குப் பற்கள் இல்லாததால் உச்சரிப்பு சரியாக வரவில்லை.மறுபடியும் மறுபடியும் பாதிரியார் அவர்களிக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே இருந்தார்.அவர்களும் திரும்பத் திரும்ப அதைச் சொன்னார்கள்.மாலை நேரம் வரை இதே கதை தான்.ஆனாலும் பாதிரியார் சலிக்கவில்லை.முதியவர்களும் அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.பிரார்த்தனை வாசகம் மனப்பாடம் ஆகும் வரை பாதிரியார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், கப்பலுக்குப் புறப்படப் பாதிரியார் எழுந்தார்.அவர் அவர்களிடம் விடை பெறும் போது,முதியவர்கள் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.பாதிரியார் கப்பலை அடையும் வரை, உரத்த குரலில் அவர்கள் செய்த பிரார்த்தனை கேட்டுக் கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் நிலவொளியில் அவர்களது உருவங்கள் மட்டும்தான் தெரிந்தன.சத்தம் அடங்கிப் போயிருந்தது.

இப்போது கப்பல் அங்கிருந்து நகரத் துவங்கியது.ஆனாலும் தீவைப் பார்த்துக் கொண்டே பாதிரியார் உட்கார்ந்திருந்தார்.தீவும் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.இப்போது கப்பலில் இருந்த அனைவரும் உறங்கிவிட்டனர்.பாதிரியார் மட்டும் உறங்கவில்லை.

அந்த நேரத்தில் முதியவர்களின் ஆர்வத்தை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தார்.அந்த உத்தமர்களுக்கு போதிக்கும் பாக்கியத்தை தமக்கு அருளிய கடவுளுக்கும் நன்றி கூறினார்.

அந்தச் சமயத்தில் கடலில் திடீரென வெண்மையாக ஒளி போன்ற ஒன்று பளிச்சென்று காணப்பட்டது.அது கப்பலையும் நெருங்கியது.அது ஒரு படகும் இல்லை.அதற்குப் பின் பாய் மரமும் தெரியவில்லை.அது பறவையோ, மீனோ இன்னதென்று அவரால் இனம் காண முடியவில்லை.ஆனால் மனித உருவம் அல்ல.இவ்வளவு உயரமான மனிதன் இருக்க முடியுமா? அதுவும் அவன் இப்படிக் கடலில் நடந்து வரக்கூடுமா?அவரது சிந்தனை பலவாறாக ஓடியது.

அந்த சமயத்தில் மாலுமியும் அதைப் பார்த்துவிட்டான்."அதோ தெரிகிறதே, அது என்ன?" என்று அந்த மாலுமி கேட்டான் பாதிரியாரைப் பார்த்து.அதற்குள் பாதிரியார் தெரிந்துகொண்டார் அந்த மூன்று முதியவர்களும் தான் விரைவாக அங்கே வந்துகொண்டிருந்தனர் என்பதை.அவர்களுடைய உடலும் வெண்ணிறத்தாடியும் நிலவொளியில் ஒளி வீசின."கடவுளே! பூமியில் நடந்து வருவதைப் போல் அல்லவா இவர்கள் கடளில் நடந்து வருகின்றனர்!." என்று வியப்போடு உரக்கக் கூவியபடி கப்பலை அந்த இடத்திலே நிறுத்திவிட்டான் மாலுமி.பிரயாணிகள் அனைவரும் அதற்குள் தளத்தில் கூடிவிட்டனர்.அவர்கள் வருவதை அபர்களும் கண்டார்கள்.அவர்கள் இப்போது கப்பலில் வந்து ஏறிவிட்டனர்.பிறகு பாதிரியாரைப் பார்த்து,"கர்த்தரின் தொண்டரே! நீங்கள் சொல்லிக் கொடுத்தவற்றையெல்லாம் நாங்கள் மறந்துவிட்டோம்.தயை செய்து அதை மீண்டும் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள். " என்று அவர்கள் அவரை வேண்டிக்கொண்டார்கள்.

அவர்கள் அப்படிச் சொன்னதும் மண்டியிட்டு அமர்ந்து பாதிரியார், "கடவுளின் புராதன உத்தமர்களே!உங்கள் பிரார்த்தனையும் கடவுளை எட்டும்.நாங்ககள் தான் பாவ ஆத்மாக்கள்.நீங்கள் தான் எங்களுக்காக கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்ய வேண்டும்.உங்களுக்குப் போதிக்க எனக்குத் தகுதியில்லை!" என்றார்.

பிறகு பாதிரியார் அவர்களை வணங்கினார்.அதற்குப் பிறகு தங்கள் தீவை நோக்கி அந்த முதியவர்கள் திரும்பினார்கள்.

பொழுது புலரும் வரை, அவர்கள் மறைந்த அந்த இடத்திலிருந்து ஒளி எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருந்தது.