அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கான கவிதைகள்
எழுதப்படாமல் காத்திருக்கின்றன.
உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள்
பரிமாறப்படாமல் இதயக்கூட்டில் காத்திருக்கின்றன.
உனக்கான முத்தங்கள்,
உனக்கான ரோஜா,
உனக்காக சேகரித்த மயிலிறகு,
நாம் கைகோர்த்து நடக்க வேண்டிய
கடற்கரை மணற்பரப்பு,
இரவின் நிழல்,
நிலவின் மடி,
குளிர்கால போர்வைகளென,
எல்லாம் காத்திருக்கின்றன,
உன் ஒற்றை சொல்லுக்காக,
எப்போது சொல்லப்போகிறாய்?
உன் காதலை என்னிடம்.


தன்னம்பிக்கை நேரம்::உன்னையே நீ அறிவாய்

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் கேட்கச்சொன்னார் சாக்ரடீஸ்.ஆனால் அவ்வாறு கேட்பதானால் ஆகும் விளைவுகளை அவர் சொல்லவே இல்லை.உண்மையில் இந்த உலகை புரட்டிப்போட்ட அத்தனை விசயங்களும் கேள்விகள் கேட்டதினாலே விளைந்தவை.சரி ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?கேள்வி
கள் கேட்பதனால் என்ன பயன்? யாரிடம் கேள்விகள் கேட்பது?

கேள்விகள் தான் மனித பரிணாமத்தின் முதல் படிக்கட்டுகள்.எப்போது மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தானோ? அன்றே அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.உண்மையில் சிந்தனை என்பது பல கேள்வி பதில்களின் கூட்டுத்தொகுப்பு.நாம் சிந்திக்க வேண்டுமானால் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.சரி யாரிடம் கேள்விகள் கேட்பது?கேள்விகள் மனிதன் தனக்குதானே கேட்டுக்கொள்ள வேண்டியவை.ஆனால் நம்மில் பெரும்பாலானோர் கேள்விகளை மற்றவரிடம் கேட்டு நம் மேதாவிலாசங்களை காட்டிக்கொண்டிருக்கிறோம்.பிரச்சனை என்னவென்றால் நமக்கு புரியாத விசயங்களை மற்றவரிடம் கேட்கும் போது அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.நம் கேள்வி நம்மை புத்திசாலியாக அடையாளம் காட்டிவிடுகிறது.ஆனால் அது ஒரு போலி அடையாளம்.ஏனென்றால் நமக்கு பதில் தெரியவில்லை.இப்படிதான் இந்த உலகம் கேள்விகளால் புத்திசாலிகளை அடையாளம் காணுகிறது.கேள்விகள் என்றும் நிரந்தரமானவை.பதில்கள் வெறும் கானல் நீர்.

ஏதென்ஸ் மக்கள் அந்த ஊர் கோவிலில் உள்ள மாந்தீரக பெண்ணிடம் கேட்டார்கள்.இந்த ஊரிலே எல்லாம் தெரிந்த மேதையார் என்று.உடனே அந்த பெண் சொன்னாள் சாக்ரடீஸ்.எல்லாரும் சாக்ரடீஸிடம் போய் இதை சொன்னார்கள்.அதற்கு அவர் சொன்னார் "எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.ஆனால் நீங்களோ எல்லாம் தெரிந்தவர் போல் நடித்துக்கொண்டு இருக்குறீர்கள்".அதனால் தான் நான் மேதையாக தெரிகிறேன் என்றார்.

ஒரு அற்புதமான கதை ஒன்று சொல்வார்கள்.ஒரு ஊரில் ஒரு முட்டாள் இருந்தான்.ஊர் மக்கள் அனைவரும் அவனை முட்டாள் முட்டாள் என்றே அழைத்தார்கள்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மனிதன் ஊருக்குள்ளே வசிக்காமல் ஊரின் வெளியே வசித்துவந்தான்.ஒரு நாள் ஒரு ஜென் குரு அந்த பக்கமாக கடந்து போவதைப்பார்த்த அந்த மனிதன் அவர் காலில் விழுந்து தன் பிரச்சனையை விளக்கி கூறினான்.அவரும் அவனிடம் யார் என்ன சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இரு என்றார்.தான் ஒரு வருடம் கழித்து இந்த பக்கம் கடந்து போகும் போது தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார்.ஒரு வருடமும் கடந்து சென்றது .அந்த குரு மீண்டும் அந்த ஊரை கடந்து சொல்லும் போது ஊரே அந்த முட்டாள் மனிதனை தோளில் சுமந்து கொண்டு குருவை வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர்.குரு அந்த மனிதனிடம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா எனக்கேட்டார்.அதற்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஊரே தன்னை அறிவாளியென்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் கூறினான்.இந்த கதை பதில் தெரியாமல் கேள்வியோடு மட்டும் நின்று போகும் மனிதர்களைப் பற்றியது.

கேள்விகளை நமக்கு நாமே கேட்கும் போது நமது அறியாமை நமக்கு புரிகிறது.மற்றொன்று அறியாமை நம் அறியும் ஆவலை தூண்டி நம் தேடலை ஆரம்பித்து வைக்கிறது.தேடல் நம்மை எல்லையற்ற புரிதலின் ஆழத்திற்கு கூட்டிச்செல்கிறது.ஜென்னில் ஒரு அற்புத வரி சொல்வார்கள்."நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது ஒரு குரு உங்கள் முன் தோன்றுவார்".அதே சமயம் நாம் தேடும் பொருளும் நம்மை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.தேடல் நம்மை அறிவின் உச்சத்திற்கு இட்டுச்சென்று பிரகாசிக்க வைக்கிறது.

தன் மேல் ஏன் ஆப்பிள் விழுந்தது என தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தேடி புறப்பட்டார் நியூட்டன்.விளைவு நவீன அறிவியலின் தந்தை ஆனார்.ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தால் என்னவாகும் என் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தன்னைதானே கேட்டுக்கொண்டதன் விளைவுதான் ஜன்ஸ்டீனின் "சார்பு மற்றும் சிறப்பு சார்புக்கொள்கை".சாக்ரடீஸ்,நீயூட்டன்,ஜன்ஸ்டீன் என எல்லோரும் கேள்விகளை தனக்கு தானே  கேட்டுக்கொண்டார்கள்.தீராத தேடல் அவர்களை தொற்றிக்கொண்டது.அதனால் தான் அவர்கள் அறிவின் உச்சத்தை தொட்டார்கள்.உன்னையே நீ அறிவாய் என்பதன் பொருள்.உன்னையே நீ கேள்விகேட்டு தேட ஆரம்பி என்று பொருள்.உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.தீராத தேடல் உங்களை தொற்றிக்கொள்ளட்டும்.

தன்னம்பிக்கை நேரம் :: எங்கிருந்து ஆரம்பிப்பது?



நம்மில் சிலருக்கு ஒரு விசயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது? என்பதே தெரிவதில்லை.முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.ஒரு விசயத்தின் ஆரம்பமே தவறு என்றால் முடிவு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்.நாம் தொடங்கும் இடத்தை பற்றி சரியாக யோசிக்கவில்லை என்றால் முடிவில் காணமல் போய்விடுவோம்.உண்மையில் சிறப்பான திட்டமிட்ட தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள்.

சரி எங்கிருந்து ஆரம்பிப்பது,எப்படி ஆரம்பிப்பது?
உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் இரண்டு வகையான வழிகள் உண்டு.ஒன்று சிந்தனை வழி மற்றொன்று செயல் வழி.நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் சிந்திக்காமல் செயல்பட ஆரம்பித்துவிடுவோம்.ஆனால் வெகு சிலரே சிந்தித்துபின் செயல்பட தொடங்குகிறோம்.

நம்மில் எத்தனை பேர் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளைப் பற்றி சிந்தித்து பின் செயல்பட தொடங்குகிறோம்.அதாவது நம் இலக்குகள் என்ன?திறமைகள் என்ன?பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன?என்பதை பற்றி சிந்தித்திருக்கிறோம்.ஒரு நாளில் நாம் செய்யப்போகும் வேலைகள் எந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்? என்பதில் நமக்கு தெளிவு இல்லை என்றால் அந்த வேலையின் பலன் தான் என்ன?

இந்த உலகத்தில் உள்ள எல்லா விசயங்களும் மேம் போக்காக எளிமையாக இருந்தாலும் அடிப்படையில் மிகவும் சிக்கலானவை.உதாரணமாக வீட்டில் மனைவியின் சமையலை எளிமையாக குறை சொல்லிவிடலாம்.ஆனால் அதை நாம் செய்யும் போது தான் உணர முடியும் அதன் கடினத்தை.கொஞ்சம் யோசித்து பார்த்தால் சமையல் பல பொருட்களின் ஒரு சிக்கலான கலவை.அதில் ஒன்று குறைந்தாலோ அல்லது கூடினாலோ முழுவதும் பாலாகிவிடும்.எனவே சிந்திக்கும் போது விசயங்களின் அடி ஆழம் முழுமையாக தெரியவரும்.

மேலும் நான் பலரை பார்த்திருக்கிறேன். உடல் எடையை குறைக்கிறேன் பேர் வழி தங்களை உடலை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள்.உண்மையில் அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஆழமாக சிந்திக்க வேண்டியது.அதாவது உண்ணும் உணவுகள்,உண்ணும் விதம் என எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து பின் செயலில் இறங்க வேண்டும்.

உண்மையில் நம் உடம்பை கட்டுப்படுத்துவது மூளை.அதற்கு சரியான கட்டளைகள் இட்டுவிட்டால் அது நம் உடல் முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஓடு என்று மூளைக்கு தற்காலிக கட்டளையிடுகிறோம்.உடனே உடல் ஓடிக்கொண்டே இருக்கும்.ஆனால் எதற்காக ஓடுகிறோம் என்று மூளைக்கு தெரியாது.சாப்பிடாதே என்று வாய்க்கு கட்டளையிடுகிறோம்.அதை வாய் கேட்பதே இல்லை.இங்கு தான் எல்லோரும் தோற்று போய்விடுகிறோம்.உண்மையில் உடல் எடை என்பது பல விசயங்களின் சிக்கலான தொகுப்பு.

நம் கண் ஒரு சுவையான சிக்கன் வறுவலை பார்க்கிறது.உடனே மூளைக்கு தகவல் போகிறது.உடனே மூக்கும் தன் பணியை ஆரம்பித்து மூளைக்கு தகவல் போகிறது.எல்லா தகவல்களையும் ஆராய்ந்து சிக்கன் வேணுமா?வேண்டாமா? என்று மூளை முடிவு செய்கிறது.வேண்டும் என முடிவாகி நாக்கு மற்றும் குடலில் அமிலங்கள் சுரந்து உணவை செரிக்க தயாராகின்றன.உற்றுப்பார்த்தால் நன்றாக புரியும் நம் மூளைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.நம் மூளைதான் முதலாளி, உடம்பு வெறும் தொழிலாளர்கள்.நமக்குள் என்ன நேர்ந்தாலுல் நாம் பரிசோதிக்க வேண்டிய முதல் ஆள் மூளை.

நம் மூளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மான முடிவெடுக்க நாம் ஒதுக்கும் நேரம்தான் சிந்திக்கும் நேரம்.ஒரு முறை தெளிவாக மூளை முடிவெடுத்து விட்டால் மற்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக்கொள்ளும்.உலகின் ஆகச்சிறந்த செல்வந்தர்கள்,மனிதர்கள்,படைப்பாளிகள் என எல்லோரின் வெற்றிக்கும் காரணம் அவர்கள் சிந்தக்க நேரம் ஒதுக்குகிறார்கள்.உண்மையில் நாம் சிந்தக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க ஆரம்பிக்கிறோம்.நாம் கவனிக்க ஆரம்பிக்கும் போது புரிய ஆரம்பிக்கிறது.எல்லாம் புரிய ஆரம்பிக்கும் போது நாம் வளர ஆரம்பிக்கிறோம்.

காலை எழுந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் அமைதியாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அன்றைய நாளைப்பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்.அது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அடையாளம் காட்டலாம்.எனவே எல்லாவற்றையும் சிந்தித்து,நமக்கு தெரிந்த விசயங்களில் இருந்து செயல்பட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

தன்னம்பிக்கை நேரம் :: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்.

"அப்பா இங்கே பாருங்கள் மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால்  ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள் மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக்குருடன்.இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."


உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு.மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.

கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்.


பொட்டல்கள்

வெயிலும் கருவேல மரமும்
கைகோர்த்து நிற்கும்
பொட்டல் காட்டில்,

ஒழுகல் மூக்கும்
ஓட்டை டவுசர் சகிதம்
டயர் வண்டியுடன்
மகாராஜாவாக வலம்
வந்தவர்கள் ஏராளம்.

ரெட்டை ஜடை
குட்டை பாவடை சகிதம்
பொம்மை குழந்தைகளை
வளர்த்த அம்மாக்கள் ஏராளம்.

இச்சி மரத்தடியில்
ஊரத்தண்ணி பானை  ஸ்டெம்பாக
கிரிக்கெட் ஆடிய சச்சின்கள் ஏராளம்.

பேந்தான்,குழிக்குண்டு,பம்பரமென
பக்கத்து தெரு ஒலிம்பிக்கிற்காக
பயிற்சி எடுத்தவர்கள் ஏராளம்.

பக்கத்து தெரு பஞ்சாயத்து,
அரசியல் ராஜ தந்திரம் மென
அரசியல் படித்தவர்கள் ஏராளம்.

புழுதியும் வெயிலுமாக
தண்ணீரே உணவாக
பொட்டலில் கரைந்த
இளமைக்காலங்கள் ஏராளம்.

ஒவ்வொருமுறை பொட்டலை
கடக்கும் போதும்,அதன் தாக்கம்
இதயத்தின் அடிவரை வருகிறது.
ரோஜாக்களால் ஏற்படாத
தாக்கமும் ,ஏக்கமும் - ஒரு
பொட்டலால் ஏற்படுகிறது.

இப்போது
பொட்டல்கள் கொள்வாரில்லாமல்
அனாதைகளாக கைவிரித்து
காத்துக்கொண்டிருக்கின்றன.
மகாராஜாக்களையும்
சச்சின்களையும்
சந்திக்க.




























கதை நேரம் : நாமே புத்தர்கள்

 ஜென் தத்துவமோ அல்லது கோட்பாடோ அல்ல.எல்லா
தத்துவக்குப்பைகளையும் துடைத்தெரிந்து விட்டு விழிப்புணர்வுடன் இயற்கையோடு வாழ்வது தான்.

நாம் எல்லோரும் காலையில் விழிக்கிறோம், மூன்று வேளை சாப்பிடுகிறோம்,இரவில் தூங்குகிறோம்.இவற்றிற்கிடையில் சாப்பாட்டிற்காக உழைக்கிறோம்.ஆனால் இவற்றில் எதையும் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வோடு செய்வதில்லை.

காலையில் கண்விழித்த போது மீண்டும் ஒரு வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லவில்லை.குளிக்கும் போதும் நம் உடலை தொட்டு தழுவி நம்மை சுத்தமாக்கும் தண்ணீருக்கு நன்றி சொல்லவில்லை.
சாப்பிடும் போதும் சாப்பாட்டை வாயில் இட்டு ரசித்து சுவைத்து சாப்பிடுவதும் இல்லை. அதற்காகபாடு பட்டவற்களுக்கு நாம் நன்றி சொல்வதும் இல்லை.இரவிலும் அன்றைய தினம் முழுவதிற்கும் நமக்கு உதவியவர்களுக்கும், நமக்கு வாய்ப்பளித்தவர்களுக்கும் நாம் நன்றி சொல்வதில்லை.என்ன ஒரு நன்றி கெட்ட வாழ்க்கையை வாழுகிறோம்.உண்மையில் ஒரு செக்கு மாட்டைப்போல் வாழ்கிறோம்.

வாழ்க்கையை இனிமையாய் வாழ நாம் என்ன செய்கிறோம் என்ற சின்ன விழிப்புணர்வு போதும்.அப்புறம் வாழ்க்கை இனிக்கத்தொடங்கி விடும்.
ஒரு சின்ன விழிப்பென்னும் தீப்பொறி அறியாமை  காட்டிற்குள் விழும் போது என்ன ஆகும் என்பதை பாரதியார் பாடுகிறார்..

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.


விழிப்பென்னும் சிறு தீப்பொறியை அறியாமை நிரம்பிய மனமென்னும் காட்டிற்குள் வைத்த போது ,மனமென்னும் காடு  எரிந்து சாம்பலாகி,விழிப்பென்னும் உயர் நிலையை அடைகிறது.அப்போது அவர் மனம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என ஆனந்த கூத்தாடுகிறது.

மனதில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம்,சின்ன கீறல் போதும் ஞானம் உதயமாகிவிடும்.அப்புறம் வாழ்க்கையே இனிமையாகிவிடும்.அற்பமெல்லாம் அற்புதமாகிவிடும்.

ஒருவன் பெரிய ஜென் மடாலயத்திற்கு சென்று அங்குள்ள குருவிடம் "நான் புத்தனாக வேண்டும்" என்றான் ஒருவன்.

அவர் உடனே கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.அவனும் அதிர்ச்சியில் கன்னதை தடவிக்கொண்டே அங்கிருந்த தலைமை குருவிடம் "இவர் ரொம்ப மோசம். நான் புத்தனாக வேண்டும் என்றுதானே கேட்டேன்?" இதற்காக ஏன் இப்படி அறைகிறார்? என்றான்.

உடனே தலைமை குரு சொன்னார்.

"அவர் ரொம்ப கருணையானவர். நீ ரொம்ப இளம் வயதுக்காரன் என்பதால் உன்னை அறைவதோடு நிறுத்திக்கொண்டார்.இல்லையென்றால் கத்தியெடுத்து வெட்டி இருப்பார்".

ஏன் என்னை இப்படி கோபப்படுகிறார்? என்றான் வந்தவன்.

அதற்கு குரு சொன்னார் பிறகு "புத்தனாக இருந்து கொண்டே புத்தனாவது எப்படி என்று கேட்டால் யாருக்குதான் கோபம் வராது."

இதையே தான் இந்து மதமும் சொல்கிறது "அயம் ஆத்மா பிரம்மம்  – இந்த ஆத்மாவே பிரம்மம்

நானே புத்தனென்றேன்
ஆனவமாய் ஆகி நின்றேன்.
நாமே புத்தர்களென்றேன் 
புத்தனாய் ஆகிவிட்டேன்.

இன்னொரு கவிதை

வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்

மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும்  ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ  !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !



 
மேலும் படிக்க

சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்? 

கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்) 

சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1

 

 


 


  

சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?



உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?

 பெண்களைப்பற்றி அறிய முதல் பகுதியை இங்கு சொடுக்கி படித்துவிட்டுவரவும்.

இந்த கேள்வியை கேட்டவர் புகழ் பெற்ற மனோதத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு.ஆனால் அவருக்கே இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.
சரி பெண்களுக்கு உண்மையில் என்ன தான் வேண்டும்.
 
அவர்களுக்கு எல்லாமே தான் வேண்டும்.இதை எப்படி புரிந்து கொள்வது.உதாரணமாக ஒரு பெண் 250 ரூபாய் சேலை எடுக்கப்போனால்.கீழ் சொன்னவாரு அவர்கள் நடந்து கொள்வார்கள்.
  1. எல்லா மாடல்களையும் பொறுமையாக பார்ப்பார்கள்.
  2.  பெரிய பெரிய பூவாக இல்லாமலும் ,வெறும் கட்டம் கட்டமாக இல்லாமலும், நவீன ட்ரண்டாக இருக்க வேண்டும்.
  3. கண்டிப்பாக எளிமையாக இருக்கக்கூடாது.
  4. பட்டிக்காட்டுதனமாக இருக்கக் கூடாது.
  5. அடுத்தவர்கள் பார்த்தவுடன் வாய்பிளக்க வேண்டும்.
  6. யாருமே கட்டாத,யாருமே கற்பனை கூட கண்டிராத ஒரு சேலை

எளிமையாக சொன்னால் ஒரு ஆயிரம் ரூபாய் சேலைக்கு உரிய தகுதி இருக்க வேண்டும்.மேல் சொன்ன அனைத்து விசயங்களும் பெண்களுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்.இப்படிதான் அவர்கள் எல்லா தகுதிகளும் உள்ள ஒரு சிறந்த 250 ரூபாய் சேலையை தேர்ந்தெடுப்பார்கள்.

பெண்களை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

ஏனென்றால் ஒரு பெண்ணுக்கே தான் யார்? தனக்கு என்ன வேண்டும்? என்பது தெரியாது.பிறகு நாம் எப்படி தெரிந்துகொள்வது.

மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொண்டால்.அந்த சேலை எடுக்கும் பெண்ணுக்கே தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம் என்பது தெரியாது.பட்டிக்காட்டுதனமான சேலை என்று ஒரு பாய்ண்ட் சொல்லி இருக்கிறேன் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அதற்கு ஒவ்வொரு அர்த்தம் சொல்லுவாள்.பெண்களை புரிந்து கொண்டு சேலை டிசைன் செய்தால் ஒரு பெண்ணுக்கே சேலை டிசைன் செய்வதில் நம் எல்லோருடைய வாழ்க்கையே முடிந்துவிடும்.ஏனென்றால் அவர்களுக்கே என்ன டிசைன் வேண்டும் என்பது தெரியாது.நாம் டிசைன் செய்து காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் உள்ளுணர்வு அதை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.


 ஏன் ஒவ்வொரு பெண்ணும்  கையில் கைகுட்டை அல்லது பை,தனித்துவமான ஆடை அலங்காராம் செய்கிறார்கள் தெரியுமா?

ஏனென்றால் பெண்களுக்கு அடிப்படையிலே ஒரு பிடிமானமும்,ஒரு தனித்துவ குறியீடும் தேவைப்படுகிறது.உதாரணமாக எல்லா மலர்களும் ஒரே போல் இருந்தால் நமக்கு அதனதன் அழகில் வித்தியாசம் தெரியாது.அது போல் ஒவ்வொரு மலருக்கும் தனித்துவமான அடையாளங்கள் வேண்டும்.  அப்போது தான் வண்டுகள் குறிப்பிட்ட மலரை அடையாளம் காணமுடியும்.இப்படிதான் தான் பெண்களும் தங்களுக்கென ஒரு அடையாள குறி ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.அப்போது தான் ஆண்களால் எளிமையாக அந்த பெண்ணை அடையாளம் காண முடியும்.

பெண்கள் ஏன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?

பெண்கள் இயல்பிலே வெளிப்படுத்தும் தன்னை கொண்டவர்கள்.அது அழகானலும் சரி அழுகையானலும் சரி.மனதில் எதையுமே வைத்துக்கொள்ள விரும்புவது இல்லை.அதை வெளிப்படுத்தியாக வேண்டும்.அதனால் தான் பெண்களுக்கு தங்கள் பேச்சை காது கொடுத்து கேட்கும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்.ஒரு நாள் ஒரு விசயத்தை மனதில் வைத்து வெளிப்படுத்தா விட்டால் பெண்களுக்கு தூக்கமே வராது.உண்மையில் எல்லா ஆண்களும் காதலிக்கும் போது பெண்களின் பேச்சை கேட்பது போல்,பேசிக்கொண்டே இருப்பது போல் நடிக்கிறார்கள்.ஏனென்றால் ஆண்களுக்கு இயற்கையிலே அந்த தன்மை கிடையாது.மேடைப்பேச்சாளர்கள் பாதி பேர் வீட்டில் பேசுவதே இல்லை என்பது தான் உண்மை.பேசிக்கொண்டே இருக்கும் காதல் கல்யாணத்திற்கு பின் நாறிவிடுகிறது என்பதுதான் உண்மை.


இறுதியாக பெண்களுடன் வாழ்வது எப்படி?

இந்த கட்டுரையை நான் எழுத ஆரம்பித்ததே இந்த கேள்விக்காக தான். நாம் எல்லோரும் பெண்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் இல்லை இல்லை புரிந்து கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.ஏன்? நாம் யாரும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.ஒரு சேலை எடுக்க இவ்வளவு நேரமா?மேக்கப் போட இவ்வளவு நேரமா? என கோபித்துக்கொள்கிறோம்.ஆனால் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முயற்சி செய்வதில்லை.உண்மையில் எல்லா பெண்களுக்கும் சில விசயங்களில் ஆலோசகர் தேவைப்படுகிறார்.அவர்களும் கேட்க தயாராகவே இருக்கிறார்கள்.ஆண்கள் மனதில் ஒரு விசயத்தை நினைத்தவுடனே செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.யோசிப்பதில்லை.பெண்கள் பல வழிகளில் யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.செயல்படுவதில்லை.பெண்களிடம் யோசனைகளை கேட்டுக்கொண்டு ஆண்கள் செயல்பட வேண்டும்.இது தான் இயற்கையான வழி.

மற்றொரு முக்கியமான விசயம் பெண்கள் சார்ந்து வாழ்பவர்கள்.அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்,அன்பை அளிக்கும் ஆணை சார்ந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு நல்ல அப்பா, நல்ல அண்ணண், நல்ல நண்பன்,நல்ல காதலன், நல்ல கணவன் என நிறைய  நல்ல விசயங்கள் தேவைப்படுகிறது.இதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி ஏன் கடவுள் பெண்களை மட்டும் இப்படிப்படைத்தான்?

வாழ்க்கையை சுவாரசியமாக்கத்தான்.எல்லாமே புரிந்து விட்டால்,தெரிந்து விட்டால் வாழ்க்கையில் தேடல் நின்றுவிடும்.சுவாராசியம் தீர்ந்துவிடும்.அதனால்தான் கடவுள் தன்னையும் ,பெண்களையும் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு படைத்து விட்டான்.

பெண்களை உற்றுப்பாருங்கள்,கூர்ந்து கவனியுங்கள்,வாழ்க்கையே சுவாரசியமாகி கவிதைபோல் ஆகிவிடும். 

கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்)



ஒரு ஆத்திகர் இறந்தவுடன் சொர்க்கம் சென்றார்.

கடவுள் ஊர்வலம் நடப்பதால் கொஞ்ச நேரம் ஒரத்தில் நிற்குமாறு கிங்கரர்கள் ஆத்திகரிடம் கூறினார்கள்.அவரும் ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச  நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வெள்ளை சிப்பாவும்,முகத்தில் தாடியும் கொண்ட மனிதனை தங்கள் தோல்களில் சுமந்த படி சென்றனர்.ஆத்திகர் கூட்டத்தை பற்றி கிங்கரர்களிம் கேட்டதற்கு கிறித்தவர்கள் கூட்டம் என கூறினார்கள்.

அந்த கூட்டம் போன பின்பு மற்றொரு கூட்டம் வந்தது. அவர்களும் ஒரு பெரிய மனிதரை தங்கள் தோல்களில் சுமந்து ஆடிக்கொண்டே சென்றனர்.அவர்கள் பற்றி கேட்ட போது இஸ்லாமியர்கள் கூட்டம் என கூறினார்கள்.

அதற்கடுத்தாற் போல் அமைதியாக ஒரு மனிதன் நடந்து போனார்.அவரை பின் பற்றி அமைதியாக ஒரு கூட்டம் சென்றது.அவர்களை பார்த்த உடனே புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என ஆத்திகர் புரிந்து கொண்டார்.

இவ்வாறாக சிறிதும் பெரிதுமாக கூட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.இறுதியில் ஒரே ஒரு வயதான மனிதர் மட்டும் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார்.அவர் பின்னால் எந்த கூட்டமும் இல்லை.

இதைப்பார்த்த ஆத்திகருக்கு ஒரே ஆச்சர்யம்.ஓடிப்போய் அவரிடமே நீங்கள் யார்?உங்களை நான் பூமியில் பார்த்ததே இல்லை என கூறினார்.

அதற்கு அந்த வயதான மனிதர் நான் தான் கடவுள் என்றார்.

========================================================================

"ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்" என்று ஒரு மத போதகர் போதகம் செய்து கொண்டிருந்தார்.இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் பரிசோதிக்க விரும்பினான்.

உடனே போதகர் கன்னத்தில் அறைந்தான்.

உண்மையான போதகர் மறுகன்னத்தையும் காண்பித்தார்.

இந்த முறை அவன் தன் முழு உடல் பலத்தையும் பயன்படுத்தி ஓங்கி மறு கன்னத்திலும் அறைந்தான்.

உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக அடிக்கத்தொடங்கினார்.

வலிதாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.

"என்ன செய்கிறீர்கள்?காலையில்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னதைக் காட்ட சொன்னீர்கள்?"

துறவி சொன்னார் :

"ஆம்.எனக்கு மூன்றாம் கன்னம் இல்லையே; ஏசுவும் மறு கன்னத்தோடு நிறுத்திக்கொண்டார்.அதற்கு பிறகு நான் விரும்பியதை செய்து கொள்ளலாம்.ஏசு இதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை என்றார்".

=======================================================================

 மேலும் படிக்க :


சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி?

 

 

சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1



இந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ  ரசிக்க முடிந்தால்,புரிந்து கொள்ள முடிந்தால் பெண்களையும் ரசிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியும்.

ஆண்களே இல்லாத, பெண்கள் ஆட்சி செய்யும் பெண்களின் உலகம் எவ்வாறு இருக்கும்?அந்த உலகத்தில் சண்டையே இருக்காது.அந்த உலகத்தில் தண்ணி, தம் இருக்காது.சண்டை வந்தால் சண்டையிடுவதற்கு பதிலாக அந்த நாடு எதிரி நாட்டுடன் பேசிக்கொள்ளாது.அந்த உலகத்தில் கொடிய செயலே கில்லுவதும்,அறைவதுமாக இருக்கும்.

ஒரு ஆங்கில படத்தில் ஒரு அருமையான காட்சி ஒன்று பார்த்தேன்.அது பெண்களின் உலகத்தை , மனதை அருமையாக படம் பிடித்துக்காட்டியது.
படத்தின் கதானாயகன் ஒரு சீன குங்பு மாஸ்டர்.ஜப்பானியர்கள்  இந்த குங்பு மாஸ்டரை கொல்ல நினைக்கிறார்கள்.தன்னையும் தன் குடும்பத்தையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மனைவியின் வற்புறுத்துதலால் நாட்டைவிட்டே போக முயற்சி செய்கிறான்.அந்த காட்சியில் கதா நாயகன் சொல்லுவான் "நான் எவ்வளவு பெரிய குங்பு மாஸ்டர்!இருந்தும் என்னால் இந்த நாட்டுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.நான் கோழை போல் நாட்டைவிட்டு போக போகிறேன்." அதற்கு அவன் மனைவி சொல்லுவாள்.
"எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.நீங்கள்,நான் நம் மகன் மூவரும் உயிரோடு இருக்கிறோம்."அது போதும் என்பாள்.

உண்மையில் ஆண்கள் அறிவுப்பூர்வமானவர்கள்.பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள்.ஒரு ஆணுக்கு பித்தாகரஸ் தியரம் அவசியமாக இருக்கலாம்.ஆனால் பெண்ணுக்கு தானும் தன் குடும்பமும் மிக முக்கியம்.உண்மையில் பெண்கள் தான் உலகத்தையே உறவு பாலங்களாக பின்னி பேணிக்காப்பவர்கள் பெண்கள்.

ஒரு ஆணை திட்டிவிட்டால் பத்து நிமிடத்தில் போடா போ என தன் வேலையை பார்க்கப்போய்விடுவான்.ஆனால் பெண்ணோ இடிந்து போய்விடுவாள்.அதிலிருந்து மீள நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

எந்த டீக்கடையிலாவது பெண்கள் அமர்ந்து அரசியல் பேசியது உண்டா?
இல்லை.

ஏனென்றால் ஆண்கள் புறத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் வீட்டைத்தாண்டி சமூகம்,அரசியல் என புறத்தன்மைவாய்ந்த விசயங்கள் வேண்டும்,
பெண்கள் அகத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் அழகு,தங்கள் கவுரவம்,தங்கள் பிள்ளை என தங்களை பற்றிய அல்லது தங்களை சுற்றி உள்ளவர்கள் பற்றிய விசயம் மிக அவசியம்.ஒரு பெண்ணுக்கு மன்மோகன்சிங்கை விட அன்று நாதஸ்வரம் சீரியலில் என்ன நடந்தது என்பது முக்கியம்.

ஆண்கள் உடல் வலிமையானவர்கள்.அதனால் தான் ஆண்கள் ஆட்சி செய்யும் இந்த உலகம் இத்தனை வன்முறைத்தனமாக இருக்கிறது.பெண்கள் மன வலிமையானவர்கள்.பெண்களின் உடம்பே அதிக பட்ச வலிகளை தாங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதனால் தான் பிரசவம் போன்ற விசயங்களை இலகுவாக தாண்டிவிடுவார்கள்.அது மட்டும் இல்லாமல் ஒரு செயலை எடுத்துவிட்டால் செய்யாமல் விட மாட்டார்கள்.

ஒரு பெண்ணால் தன் எதிரே நிற்பவர்களின் உடல் மொழிகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பொய் சொல்லுகிறான் என்றால் அந்த பெண்ணால் அவன் பொய் சொல்லுகிறான்,என்பதை ஆணின் உடல் மொழியால் அறிந்து கொள்ளமுடியும்.

ஒரு பெண்ணிற்கு சமுதாயத்தின் மீதும் அதன் கட்டுப்பாடுகளின் மீது எந்த அக்கரையும் இல்லை.அவள் நினைத்தால் அத்தனைக்கட்டுப்பாடுகளையும் எளிதாக உடைத்து தாண்டிவிடுவாள்.

ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண் நண்பர்கள் இருக்க முடியும்.ஆனால் ஒரு ஆணுக்கு இரண்டு பெண் நண்பர்கள் இருந்தால் அவன் செத்தான்.

பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு உலகம்.அவர்களுக்கென பிடித்தமான விசயங்கள்,செயல்பாடுகள்,கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்ணிற்கு பெண் வேறுபடும்.

தன்னை மதிக்கும்,தன்னை காக்கும்,தன் மேல் அன்பைப்பொழியும் ஆண்களையே பெண்களுக்கு பிடிக்கும்.ஒரு ஆண் வலிமையற்றவனாய்,அன்பில்லாதவனாய் இருந்தாள்.உடனே அவனை விட்டு விலக ஆரம்பிப்பாள்.

பெண்களுக்கு உள்ளுணர்வு தன்மை அதிகம்.அதனால் அவர்கள் எதிரிகள் அருகில் வரும் போதே முறைக்க அல்லது எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரு ஆண் துரோகங்களையும்,அவமானங்களையும் எளிதாக மறந்து விடுவான்.ஆனால் ஒரு பெண் துரோகங்களை,அவமானங்களையும் மறக்கவும் மாட்டாள்.மன்னிக்கவும் மாட்டாள்.


தொடரும்............

மேலும் வாசிக்க

திகில் கதை : வேண்டாத வேலை 

சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா

 

 

 

திகில் கதை : வேண்டாத வேலை


நள்ளிரவில் ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர்.அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று பீரோல் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை தேடினார்கள்.

இறுதியாக இருவரும் பீரோல் இருக்கும் அறையை அடைந்தனர்.முதலாவது திருடன் பீரோலை திறந்து பார்த்தவுடன் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.அலறலைக் கேட்ட இரண்டாவது திருடனும் பீரோல் அருகில் வந்து சுற்றி முன்னும் பின்னும் பார்த்தான். திடீரென அவனும் அலறியபடி தரையில் சுருண்டு விழுந்தான்.

சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது திருடர்கள் இருவரும் வாயில் நுரையுடன் சுருண்டு கிடந்தனர்.

வீட்டில் உள்ளவர்கள் உடனே போலிஸுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார்கள்.போலிஸ் வந்து இருவரையும் ஆம்புலன்ஸில்  ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் ஏன் அலறினார்கள்?
எதனால் இருவரும் மயங்கி விழுந்தார்கள்?
என போலிஸுக்கு ஒன்றுமே புரியவில்லை.
வீட்டில் உள்ளவர்களை கேட்ட போதும் தங்களுக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் சொல்லிவிட்டார்கள்.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த வீடு முழுவதையும் மீண்டும் பரிசோதிக்க ஆரம்பித்தார்.குறிப்பாக அந்த பீரோல் இருக்கும் அறையை கூர்ந்து பரிசோதிக்க ஆரம்பித்தார்.ஆனால் அங்கு எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

பிறகு அந்த அறையைவிட்டு அதற்குமுன் இருந்த சமையல் அறையை பரிசோதிக்க ஆரம்பித்தார்.சமையல் அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது.ஆனால் அந்த அறையில் இருந்த ஒரு மேஜையின் மீது வெற்று தட்டு இருப்பதை தற்செயலாக பார்த்தார் .அதன் ஓரங்களில் ஏதோ இனிப்பு பொருள் ஒட்டி இருப்பதை பார்த்தார்.

உடனே வீட்டில் உள்ளவர்களிடம் தட்டைப்பற்றி விசாரித்தார்.அதற்கு வீட்டில் உள்ளவர்கள் "வீட்டில் எலித்தொல்லை அதிகம் இருப்பதால் எலியை கொல்ல சுவீட்டிற்குள் எலி மாத்திரை வைத்துவிட்டு தூங்குவது தங்கள் வீட்டில் வழக்கம் என் கூறினார்கள்."

இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் புரிந்து விட்டதால் கிளம்ப ஆரம்பித்தார்.ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியாததால் இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என கேட்டனர்?

அதற்கு அவர் திருடர்கள் முதலில் சமையல் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.எலி மருந்து கலந்த சுவீட்டை சாப்பிட்டுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்து பீரோலை திறக்க ஆரம்பிக்கும் போது எலி மருந்து தன் வேலையை காட்டிவிட்டது.திருடர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்றார்.


மேலும் வாசிக்க:

கதை நேரம் : அழகிய மனங்களுக்கான அந்த மாதிரி கதைகள்
கதைநேரம் : ஆசை