About Me

Thursday, December 31, 2015

இந்த வருடத்தின் முத்தாய்ப்பான மூன்று விசயங்கள்

இந்த வருடத்தின் இறுதிக் கட்டுரை.இந்த வருடத்தின் மீதான என் பார்வை என்றும் சொல்லலாம்.எப்பவுமே ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தான் பல திருப்புமுனைகள் அமையும்.அது போல இந்த வருடத்தின் கடைசி நாட்களில் பல சுவாரஸ்சியமான திருப்புமுனைகள்.சென்னையின் மழை வெள்ளம்,சிம்புவின் பீப் பாடல் ,சென்னை மழைக்கிடையிலும் சென்னை கால்பந்து அணி அதிரி புதிரியாக  கோப்பையை வென்றது என எல்லாம் அழகான நினைவுகளாக நீங்கப் போகின்றன.

இன்னும் பத்து வருடம் கழித்து, நான் சென்னையின் இந்த வெள்ளக்காட்சியை போட்டோவாக என் பிள்ளைகளிடம் காட்டினால்,கண்டிப்பாக காமடியாகத்தான் பார்ப்பார்கள்.கண்டிப்பாக யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.மழையாக ஆரம்பித்து,வெள்ளமாக மாறி,மனிதனின் கருணையாக முடிந்த சென்னை வெள்ளம் சொல்லிச் சென்ற பாடம் ஒன்றே ஒன்றுதான்.இயற்கை நினைத்தால் நாம் வாழ்த்த தடம் தெரியாமல் நம்மை துடைத்தெரிய ஒரு நிமிடம் போதும்.ஆனால் நாம் தான் அது புரியாமல் இயற்கையோடு வாலாட்டிக்கொண்டே இருக்கிறோம்.சென்னை மழை காட்டிய மற்றொரு பாடம் மனிதநேயம்.சென்னையில் இவ்வளவு நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் என்னவோ மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்திருக்கிறது.

அடுத்தது சிம்புவின் பீப் பாடல்.பாவம் சிம்பு ,போன வருசம் பய தப்பான முகத்துல முழிச்சிட்டார் போல.போகுற இடத்துல எல்லாம் தர்ம அடி.யாரோ வாங்க வேண்டிய அடியெல்லாம் ,யார் பெத்த புள்ளையோ,சிம்பு வாங்கிக்கிறாரு.இனி இணையத்துல இவர்மேல காச்சி ஊத்த ஒன்னும் இல்லை என்னும் சொல்லுற அளவுக்கு பயபுள்ள அடி வாக்கிருச்சி.பொம்பளப்பிள்ளைங்கள எல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு.இத பார்த்தா காலேஜ்ல எங்க மெக்கானிக்கல் வாத்தியார் சொன்ன வார்த்த, இப்ப ஞாபகம் வருது.ஒரு தடவ  பொம்பள பிள்ளைங்களுக்கு லேப்ல மார்க் குறைச்சுப் போட்டுடாரு நம்ம சாரு.இத கவனிச்ச புள்ளைங்க அவர் வண்டி பெட்ரோல்டேங்கல மண்ண போடலாமா? ,இல்ல சீனிய போடலாமானு? பெரி டிஸ்கஸனே பண்ணியிருக்காய்ங்க.இது எப்படியோ சாருக்கு தெரிச்சு போய் அவர் அடித்த நாள் கிளாஸ்ல இத சொல்லி,உங்க கிளாசுக்கு வரவே பயமா இருக்குனு புலம்பி தள்ளிட்டாரு.இன்னொரு நாள் லேப்ல பெயில் ஆக்கிருவேன் சொன்னவர, ஊர்ல இருந்து ஆள் இறக்கிருவேன்னு ஒரு புள்ள மெரட்டிருக்கு.இன்னைக்கு காலத்துல பொம்பள பிள்ளைங்க ரொம்ப உசாரு .சிம்பு அவங்க ஆயா காலம்னு நினைச்சு பாட்டு போட இன்னைக்கு அவர் டவுசர் கழன்டு போச்சு.மிஸ்டர் சிம்பு ,உங்க அப்பா கதாநாகியை தொடாமலே முதல் படத்துல நடிச்சதாலயே 100 நாள் ஓடுச்சாம்.இத நாங்க உங்களுக்கு சொல்ல தேவ இல்ல. எல்லா பெண்களையும் சக மனிதரா ,தோழனா பார்த்து பழகுங்க.நீங்க யாரப்பார்த்தாலும் லவ்ரா பார்க்க நினைச்சு ,அவங்க ,கடைசில உங்க நைனா போட்ட சோக பாட்ட உங்களுக்கே டெடிகேட் பன்னிட்டு போய்ராங்க.....

கடைசியா ISL கால்பந்து பைனல் மேச்.நம்ம ஆளுங்களா இப்படி.எங்கையா இருந்தீங்க? இம்புட்டு திறமைய வச்சுக்கிட்டு.  எப்பவும் பிரேசில்,ஜெர்மனி என அடுத்தவங்களையே பார்த்த எனக்கு ,நம்ம ஊரு கிட்டுமணி,ஜேஜே வை பார்க்க ஒரே ஆச்சர்யம்.அதுவும் அந்த பைனல் மேட்ச் கடைசியில் மென்டோசா அடித்த ரெண்டு கோல் அற்புதம்.நான் பார்த ஜோரான பைனல் மேட்சுகளில் இதுதான் மிகச்சிறப்பான ஒன்று.சத்தமில்லால் இந்திய கால்பந்து அணியினர் உலகுக்கு சொன்ன செய்தி.நாம் வேகமாக வந்து கொண்டிருக்கிறோம்.இந்திய அணி உலக்கோப்பையில் ஆடும் அந்த நாளைக் காண ஆவலாக உள்ளேன்.

வாழ்க்கை எல்லாவற்றையும் கரைத்துவிடும்,ஒருவிதமான கரைப்பான்.அதுயாரையும் விட்டுவைப்பதில்லை.போகிற போக்கில் எல்லாவற்றையும் துடைத்து தூக்கி போட்டுவிடும்.அது ஒவ்வொரு பன்னிரெண்டு மாதத்திற்கு ஒரு முறையும், தனது இந்த பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.புத்தனை மறக்க வைத்தது,காந்தியை மறக்க வைத்தது.நம்மையும் ஒரு நாள் தடம் தெரியாமல் மறக்க வைத்துவிடும்.
ஒவ்வொரு பன்னிரெண்டு மாதமும் வாழ்க்கை பழையவற்றை அழித்து தன்னை தான் புதுப்பித்துக்கொள்ளும்.அதோடு சேர்ந்து நாமும் நம்மை புதுப்பித்துக்கொள்வோம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Sunday, September 27, 2015

நாம் மறந்த காந்தி

ஒவ்வொரு வருடமும் நாம் காந்தியடிகளின் பிறந்த நாளை ஒரு தலைவரின் பிறந்த நாளாக, நாட்டின் அடையாளமாக, ஒரு அலங்கார திருவிழாவாக கொண்டாடி கடந்து சென்று விடுகிறோம் .காந்தி என்ற அகிம்சைவாதியை, தன்னலமற்ற மனிதனை, ஆளுமை மிக்க தலைவனை பற்றி படிக்க மறந்துவிட்டோம்.
             அகிம்சையின் ஆழத்தை உலகுக்கு உணர்த்தியவர்கள் மூன்று பேர். அவர்கள் புத்தர், மகாவீரர், மற்றும் காந்தியடிகள். சமகாலத்திய நமக்கு புத்தர், மகாவீரரை சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலும் காந்தியின் வாயிலாக அகிம்சையின் பலத்தை உணர முடிகிறது . ஒரு முறை இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் செய்தியாளர்கள் இப்படிக் கேட்டார்கள், "உங்களால் ஏன் காந்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை? " அதற்கு சர்ச்சில் சொன்னார். காந்தி கத்தியை தூக்கியிருந்தால், துப்பாக்கியை காட்டி அடக்கி இருப்போம். துப்பாக்கியை காட்டியிருந்தால், பீரங்கியை காட்டி அடக்கி இருப்போம். காந்தியோ அகிம்சையை ஆயுதமாக ஏந்தி போராடுகிறார். அகிம்சையை வெல்லும் ஆயுதம் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.அதனால் காந்தியை அடக்க முடியவில்லை என சர்ச்சில் பதிலளித்தார். இது தான் அகிம்சையின் பலம். உண்மையின் பலம். அதை நடைமுறையில் சாத்தியபடுத்தி வெற்றி கண்ட காந்தியடிகள் பலம்.
                     ரோட்டில் ஒரு மனிதன் அடிபட்டு கிடந்தால் அதை ஒரு காட்சியாக, எளிதாக கடந்துவிடும் மனப்பான்மை உள்ள காலகட்டத்தில், தன் நாட்டு மக்கள் உண்ண உணவில்லாமல் , உடுத்த உடையில்லாமல் இருப்பதை பார்த்து ஒரு முழ வேட்டியை ஆடையாக ஏற்று, கடைசி வரை தன் கொள்கையிலிருந்து மாறாமல் வாழ்ந்தார். நம்மால் ஒரு அரசனை யோ, அரசியையோ, குறைந்த ஆடையோடு பார்க்க போக முடியுமா? ஒரு முறை சர்ச்சில் காந்தியை 'அரை நிர்வாண பக்கிரி என்று கூறி ஏளனம் செய்தார். ஆனால் உலக வரலாற்றில் இங்கிலாந்து ராணியை குறைத்த ஆடையுடன் சந்தித்த முதல் மனிதர் ஆனார்.காந்திக்காக அரண்மனையின் பாரம்பரியங்கள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்பது தான் உண்மை. தன்மானத்துடன் கட்டும் ஒரு முழத்துண்டே ஒரு மனிதனின் உண்மையான உடை என்ற தன் கொள்கையை வாழ்ந்தே நிரூபித்தார்.
                  மற்றொரு முறை காந்தியை ஒருவர் கடுமையாக திட்டி ஒரு கடிதம் எழுதினார். அதை சலனமில்லாமல் படித்த காந்தி, அதில் இருந்த குண்டூசியை மட்டும் வைத்துக் கொண்டு கடிதத்தை கிழித்துப் போட்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர் கேட்தற்கு 'தனக்கு தேவையானதை கடிதத்தில் இருந்து எடுத்து கொண்டதாகவும், தேவையற்றதை கிழித்து போட்டதாகவும் பதிலளித்தார்.' தன்னை நோக்கி எறியப்பட்ட அத்தனை வசைகளையும் , புறக்கணிப்புகளையும் அமைதியாக , அகிம்சை வழியில் கடந்து சென்ற மாபெரும் தலைவர் .
                           அதுவரை இரத்தத்தால் சுதந்திர வரலாறை எழுதியவர்கள் மத்தியில், கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டத்தை நடத்தி , அகிம்சை என்னும் மயிலிறகால் இந்தியாவின் சுதந்திரத்தை வரலாற்றில் எழுதிய ஒரு ஆளுமைமிக்க தலைவர் மகாத்மா காந்திஜி. எத்தனையோ மனிதர்கள் சுய சரிதை எழுதியுள்ளார்கள். ஆனால் காந்தியைப் போல் ஒளிவுமறைவின்றி தன் வாழ்க்கையை பந்தியில் பரிமாறியவர்கள் யாரும் இல்லை. நாம் படிக்க வேண்டியது காந்தியின் வரலாறு இல்லை, மகாத்மாவை பற்றி இல்லை, உலகத்தை தன் கொள்கையால், ஆளுமையால் புரட்டிப் போட்ட மாபெரும் மனிதரை பற்றி.

Friday, August 28, 2015

சில வரிக் கதைகள் (குவாண்டம் வாழ்க்கை, சூது கவ்வும், வாழ்க்கை ஒரு வட்டம்)


குவாண்டம் வாழ்க்கை
கல்யாணம் ஆகாமல் ஒன்றாய் வாழும் கௌதமும், கீர்த்தியும் அந்த
அப்பார்ட்மென்ட் கட்டிலில்
பிளாங்க் இடைவெளியில்(h/2 Pi), நிலையற்ற தருணத்தில்( unCertainity), காம (குவாண்ட) உணர்வை
பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சட்டென சுதாரித்துக் கொண்ட கிர்த்திதன்னை விலக்கிக்கொண்டு கேட்டாள் "இதெல்லாம் தப்பில்லையா?''
இல்லையென்பது போல் சிரித்துக் கொண்டே தலையசைத்தான் கௌதம். இருவரும் தங்கள் பிளாங்க் இடைவெளியை குறைத்துக் கொண்டார்கள். புதிய பிரபஞ்சம் உருவாக தயாரானது.

அசிங்கமான மனிதர்கள்
கிழிந்த சட்டை, அழுக்கு பாவாடை சகிதமாய் ,நடு ரோட்டில் கிடந்த மாட்டின் அசிங்கங்களை வெறும் கையால் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள். அவளை அசிங்கமாக பார்த்துக்கொண்டே கடந்து சென்றார்கள் சக மனிதர்கள்.

சூது கவ்வும்
முன்பெல்லாம் தன் காதல் கல்யாண வாழ்க்கையை பற்றி அக்கம் பக்கத்தில் பெருமையடித்துக் கொண்ட கமலா', இப்போதெல்லாம் ஓடிப்போன மகளின் காதலைப் பற்றி அக்கம் பக்கத்தில்புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை ஒரு வட்டம்
மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட மோகன், வாழ்க்கையில் தேறுவது கடினம் என பள்ளி ஆசிரியர் வருத்தப்பட்டுக் கொண்டார். பாவம் மோகன், இப்போது கால்நடை மருத்துவர் ஆகி விட்டான்.


Thursday, July 30, 2015

கனவு நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி

சோக மேகம் அடி மனதில்
அடை மழை போல் கண்ணீரோ
இரு கண்களில்.

வார்த்தையில் வடிக்கமுடியாத
வாழ்க்கை வாழ்ந்து
வானுயர வளர்ந்து நின்றீர்.

ஐயா, மனிதனாய் பிறக்கிறோம்
உங்களைப்போல் மனிதனாகவே
இறந்தவர் சிலர்.

இரும்பைக் கூட்டி
எரிபொருள் கொடுத்து
விண்ணில் பறக்க விடும்
வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்.

இருண்ட நெஞ்சங்களுக்கு
தன்னம்பிக்கை கொடுத்து
விண்ணில் பறக்கும்
வித்தையைக் கற்றுக் கொடுத்தீர்.

சாதி, மத பேதம் பூண்ட
மனிதர்களுக்கிடையில்
பேத பாகுபாடின்றி வாழ்ந்தீர்.

இனிமையாக, எளிமையாக வாழ்ந்து
வாழ்க்கை பாடம் கற்றுக்
கொடுத்த ஆசானே.

வாழ்க்கையென்னும் இருண்ட காட்டில்
எதிர்கால விளக்கேற்றி
வழி நடத்திய தலைவனே.

நீர் சொன்ன பாதை நோக்கி
இதோ வருகிறது நாளைய பாரதம் . 

நிம்மதியாக போய் வா
கனவு நாயகனே.

நீர் விதைத்த இளைய பாரதம்
உன் பெயர் சொல்லும்
எப்போதும்.

Monday, June 8, 2015

டால்ஸ்டாய் கதைகள்: பாதிரியாரும் பிரார்த்தனையும்

அமைதியாக இருந்த கடலில் அந்தக் கப்பல் நிதானமாக போய்க்கொண்டிருந்தது.அதில் ஒரு பாதிரியாரும் சில பிரயாணிகளும் இருந்தனர்.கப்பளின் மேல் தளத்தில் இருந்தவர்கள் சிறு சிறு கூட்டங்களாக கூடி உணவருந்திக் கொண்டும் படுத்தபடி அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். பாதிரியார் இவர்கள் யாருடனும் சேராமல் தனியாக உலவிக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ஒருவன் தொலைவில் இருந்த எதையோ சுட்டிக்காட்டித் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.பாதிரியாரும், அவன் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தார்.சூரிய ஒளியில் பளபளக்கின்ற கடலைத் தவிர வேறு ஒன்றும் அங்கிருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. தானும் கூட்டத்தின் மத்தியில் போய் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசும் கதைகளைக் கேட்க விரும்பினார் பாதிரியார்.

ஆனால் அவர் வருவதைக் கண்டதும் கதை சொன்னவன் அதை நிறுத்திவிட்டான்.நீ சொல்வதைக் கேட்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.ஏன் நீ சொல்லிக்கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டாய்?என்றார் பாதிரியார் அவனைப் பார்த்து.

"கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் அதோத் தூரத்தில் தெரியும்,அந்தச் சிறிய தீவைப் பாருங்கள்! அங்கே கடவுளின் தொண்டர்கள் சிலரும் முதியவர்கள் சிலரும் இருக்கிறார்கள்" என்றான் அவன்.அவன் கண்ணுக்குத் தெரிந்த அந்த தீவு ஏனோ பாதிரியாரின் கண்களுக்குத் தெரியவில்லை.

"தீவுதான் எனக்குத் தெரியவில்லை. அதை விடு.அங்கே வாழும் முதியவர்களைப் பற்றியாவது என்னிடம் கூறு:அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன்" என்று மிகவும் ஆவலோடு கேட்டார் பாதிரியார்.

அவர்களைப் பற்றி நான் வெகு காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர்கள் புனிதமானவர்கள் என்பார்கள்.ஆனால் அவர்களைக் காணும் பாக்கியம் எனக்குப் போன வருடம்தான் கிடைத்தது.ஒரு பயணத்தின் போது படகில் மீன் பிடித்துக் கொண்டு நான் திரும்பிக் கொண்டிருந்தபோது வழி தவறி அத்தீவிற்குப் போய்விட்டேன்.இங்கும் அங்கும் அலைந்து திரிந்து விட்டு கடைசியாக ஒரு மண்குடிசைக்குச் சென்றேன். அங்கே முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.அப்போது வேறு இருவர் அந்த மண்குடிசையின் உள்ளே இருந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எனக்கு உணவும் உடையும் தந்து என் படகைச் செப்பனிடு உதவினார்கள்.

"அவர்களில் ஒருவர் கூனல் முதுகுள்ள சிறிய உருவமுடையவர்:அவர் காவி உடை அணிந்திருந்தார்.மிகவும் வயதானவராகத் தெரிந்தார்.அவருக்கு நூறு வயதுக்கும் இருக்கும்.அவருடைய நரைத்த தாடி வெண்மை நிறம் மாறிப் போய் பசுமையாகிக் கொண்டிருந்தது.சிரித்த முகம் அவருக்கு.தேவதையைப் போல் அது ஒளி வீசிக்கொண்டிருந்தது.இரண்டாவது கிழவர் முதலாமானவரை விட உயரமானவர்.அவரும் வயதானவர்தான்.கிழிந்த கம்பளி உடை ஒன்றை அவர் அணிந்திருந்தார்.அவருடைய நீளமான தாடி பாதி மஞ்சள் நிறமானதாகவும் பாதி சாம்பல் நிறத்திலும் இருந்தது.ஆனாலும் அவர் மிக பலசாலியாக இருந்தார்.நான் சொல்லாமலே என் படகை அவர் செப்பனிட்டுக் கொடுத்தார்.மூன்றாவதாக இருந்த கிழவர் மிகப் பெரியவரியவராகவும் உயரமானவராகவும் இருந்தார்.முழங்கால் வரை அவரது தாடி நீண்டு வளர்ந்திருந்தது.அவரது முகம் அவரது கடின உள்ளத்தைக் காட்டியது.அவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவேயில்லை.வேலை செய்வதிலேயே அவர்கள் கருத்தாக இருந்தார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதன் மூலமும் பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலமும் உணர்த்திக் கொண்டு அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் 'இங்கே வெகு காலமாக வசிக்கிறீர்களா?' என்று கேட்டேன்.அதற்கு அவர்களில் ஒருவர் ஏதோ முணுமுணுத்தார்.மற்றொருவர் அவர் கையைப் பற்றிக் கொண்டு புன்னகை செய்தார்.சிறிது நேரத்திற்குப் பிற்கு ,"மன்னிக்கவும்!" என்று கூறிவிட்டுச் சிரித்தார். "

இப்போது கப்பல் தீவை நெருங்கிக் கொண்டிருந்தது.

தீவு இப்போது எல்லோர் கண்களுக்கும் நன்றாகத் தெரிந்தது.பாதிரியாருக்கும் அது நன்றாகத் தெரிந்தது.

மாலுமியை நெருங்கி அந்தத் தீவின் பெயரைக்கேட்டார் ."பெயர் எனக்குத் தெரியாது; இதைப் போல எவ்வளவோ தீவுகளின் இங்கே இருக்கின்றன" என்றான் அவன் அசட்டையாக.

"அங்கே முதியவர்கள் வாழ்வதாக கூறுகிறார்களே?" என்று திரும்பவும் கேட்டார் பாதிரியார்.

"அப்படித்தான் சொல்லுகிறார்கள்! அது உண்மையா,பொய்யா என்று எனக்குத்தெரியாது;மீனவர்களில் சிலர் அவர்களைப் பார்த்திருப்பதாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.அது கட்டுக் கதையாகவும் இருக்கலாம்" என்றான் மாலுமி சலிப்புடன்.

"அந்தத் தீவுக்குச் சென்று அவர்களைக் காண நான் விரும்புகிறேன்:எனக்கு உன்னால் உதவ முடியுமா?" என்று கேட்டார் பாதிரியார்.

"இந்தக் கப்பல் அங்கே போகாது!ஏதாவது ஒரு சிறு படகிலே ஏறித்தான் அங்கு செல்ல வேண்டும்.அதற்குக் கப்பல் தலைவனின் அனுமதி வேண்டும்" என்றான் மாலுமி கடுப்புடன்.

பாதிரியார் விடுவதாயில்லை.கப்பல் தலைவனிடம் நேராய்ப் போய் தன் ஆசையைக் கூறினார்.

"நம்முடைய பிரயாணம் தடைப்படுவதைத் தவிர அதனால்  எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் பேசும் பேச்சு நமக்குப் புரியாது:நம் மொழியும் பேச்சும் அவர்களுக்குத்தெரியாது!" என்றான் தலைவன்.

பாதிரியார் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால்,மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தலைவன் கடைசியில் அவர் ஆசையை நிறைவேற்ற இணங்கினான்.

கப்பல் தீவை நோக்கிச் சென்றது!கப்பல் தலைவனிடமிருந்த தூரதிருஷ்டிக் கண்ணாடியின் மூலம் பாதிரியார் தீவைப் பார்த்தார்.கரையில் அந்த மூன்று பெரியவர்களும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.

"கப்பலை இங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கிறேன்.நீங்கள் வேண்டுமானால் படகில் சென்று வாருங்கள்" என்று கூறினான் தலைவன்.

கப்பல் நிறுத்தப்பட்டது.சிறு படகு ஒன்றை அதிலிருந்து இறக்கினார்கள்.படகோட்டிகளில் சிலர் அதற்குள் குதித்தார்கள்.பாதிரியாரும் படகிற்குள் இறங்கினார்.படகும் தீவை நோக்கிச் சென்று கரையை அடைந்தது.பாதிரியார் அதிலிருந்து கரையேறினார்.இப்போதும் அந்த மூன்று பெரியவர்களும் அங்கே கைகோத்துக் கொண்டு நின்றிருந்தனர்.பாதிரியரைப் பார்த்ததும் அவர்கள் அவரை வணங்கினார்கள்.அவர்களும் அவர்களை ஆசிர்வதித்தார்.

அவர்களைப் பார்த்து பாதிரியார், "இந்த ஆளரவமற்ற இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் மனித குலத்தின் பாவத்தை மன்னித்து அருளும்படி ஏசுவை நோக்கித் தவம் புரிவதாகக் கேள்விப்பட்டேன்.நானும் கர்த்தரின் சேவகன் தான்! வேத்தைப் போதித்து வாழ்விப்பது என்னுடைய புனித கடமை.அதனால் கடபுளின் கருணையால் நான் இங்கே வந்திருக்கிறேன்.உங்களைப் பார்க்க வேண்டும் என்பதும், முடிந்தால் உங்களுக்குப் போதனை செய்ய வேண்டும் என்பதும் ,ஆண்டவனின் கட்டளை!" என்றார் பாதிரியார்.

முதியவர்கள் இதற்குப் பதில் ஒன்றும் கூறாமல்,ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள்.

"நீங்கள் ஆண்டனை எவ்வாறு வழிபடுகிறீர்கள்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் பாதிரியார்.

அதற்கும் அவர்கள் புன்னகையையே பதிலாக அளித்தனர்.

கடைசியில் அவர்களில் பெரியவராகத் தென்பட்டவர் கூறினார்:"கர்த்தரின் சேவகரே! கடவுளை எப்படி வழிபடுவது என்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது; எங்களுக்கு நாங்களே சேவை செய்வது எப்படி என்கிற ஒன்றை மட்டும் தான் நாங்கள் அறிவோம்."

"சரி,அதை விடுங்கள்.கடவுளை எப்படி வண்ங்குகிறீர்கள் அதைச் சொல்லுங்கள்?" என்றார் பாதிரியார்.

அதற்கு அந்த மூவரில் மூத்தவராகத் தெரிந்த பெரியவர் பதில் அளித்தார்:"மூன்று தேவர்களே!எங்கள் மூவரிடமும் கருணை காட்டுங்கள் என்று கூறி வணங்குவோம்."

அவர் இவ்வாறு கூறியதும்,அம்மூவரும் வானை நோக்கி,ஒரே குரலில் மேற்கூறிய பிரார்த்தனையைக் கூறி வணங்கினார்கள்.

"தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி என்ற இந்த மூன்று தேவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீகள் என்று தெரிகிறது.ஆனாலும் நீங்கள் பிரார்த்தனை செய்யும் முறை தவறு.உங்கள் அறியாமைக்காக நான் பரிதாபப்படிகிறேன்.நீங்கள் கர்த்தருக்கு திருப்தி அளிக்கும் முறையில் நடந்து கொள்ள விருப்புகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால்,அதற்கான சரியான வழிமுறை உங்களுக்கு தெரியவில்லை.சரியாகப் பிரார்த்தனை செய்யும் முறையை உங்களுக்கு நான் சொல்லித் தருகிறேன். இது வேதத்தில் கூறப்பட்டுள்ள முறை.கடவுளே அவ்விதிகளைச் செய்திருக்கிறார்."

தேவபிதா,தேவகுமாரன்,பரிசுத்த ஆவி இவை பற்றிய தத்துவங்களைப் பாதிரியார் அவர்களுக்கு விளக்கினார்.

"மனிதர்களை இரட்சிக்க வேண்டி இந்த உலகில் அவதரித்த தேவகுமாரன் இப்படித்தான் கடவுளை வணங்க வேண்டும் என்று விதித்திருக்கிறான்.சொல்லுகிறேன் கேளுங்கள்: பரமண்டலத்திலுள்ள எங்கள் கர்த்த பிதாவே......" என்று தொடங்கினார் பாதிரியார்.

பெரியவர்கள் மூவரும் அவர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொன்னார்கள். நடுத்தர உயரமுள்ள பெரியவர் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பினார்.உயரமானவருடைய தாடியும்,மீசையும் தெளிவாக உச்சரிக்க இயலாமல் அவரைத் தடுத்தன.மூன்றாவது பெரியவருக்குப் பற்கள் இல்லாததால் உச்சரிப்பு சரியாக வரவில்லை.மறுபடியும் மறுபடியும் பாதிரியார் அவர்களிக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே இருந்தார்.அவர்களும் திரும்பத் திரும்ப அதைச் சொன்னார்கள்.மாலை நேரம் வரை இதே கதை தான்.ஆனாலும் பாதிரியார் சலிக்கவில்லை.முதியவர்களும் அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.பிரார்த்தனை வாசகம் மனப்பாடம் ஆகும் வரை பாதிரியார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இரவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், கப்பலுக்குப் புறப்படப் பாதிரியார் எழுந்தார்.அவர் அவர்களிடம் விடை பெறும் போது,முதியவர்கள் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.பாதிரியார் கப்பலை அடையும் வரை, உரத்த குரலில் அவர்கள் செய்த பிரார்த்தனை கேட்டுக் கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் நிலவொளியில் அவர்களது உருவங்கள் மட்டும்தான் தெரிந்தன.சத்தம் அடங்கிப் போயிருந்தது.

இப்போது கப்பல் அங்கிருந்து நகரத் துவங்கியது.ஆனாலும் தீவைப் பார்த்துக் கொண்டே பாதிரியார் உட்கார்ந்திருந்தார்.தீவும் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.இப்போது கப்பலில் இருந்த அனைவரும் உறங்கிவிட்டனர்.பாதிரியார் மட்டும் உறங்கவில்லை.

அந்த நேரத்தில் முதியவர்களின் ஆர்வத்தை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தார்.அந்த உத்தமர்களுக்கு போதிக்கும் பாக்கியத்தை தமக்கு அருளிய கடவுளுக்கும் நன்றி கூறினார்.

அந்தச் சமயத்தில் கடலில் திடீரென வெண்மையாக ஒளி போன்ற ஒன்று பளிச்சென்று காணப்பட்டது.அது கப்பலையும் நெருங்கியது.அது ஒரு படகும் இல்லை.அதற்குப் பின் பாய் மரமும் தெரியவில்லை.அது பறவையோ, மீனோ இன்னதென்று அவரால் இனம் காண முடியவில்லை.ஆனால் மனித உருவம் அல்ல.இவ்வளவு உயரமான மனிதன் இருக்க முடியுமா? அதுவும் அவன் இப்படிக் கடலில் நடந்து வரக்கூடுமா?அவரது சிந்தனை பலவாறாக ஓடியது.

அந்த சமயத்தில் மாலுமியும் அதைப் பார்த்துவிட்டான்."அதோ தெரிகிறதே, அது என்ன?" என்று அந்த மாலுமி கேட்டான் பாதிரியாரைப் பார்த்து.அதற்குள் பாதிரியார் தெரிந்துகொண்டார் அந்த மூன்று முதியவர்களும் தான் விரைவாக அங்கே வந்துகொண்டிருந்தனர் என்பதை.அவர்களுடைய உடலும் வெண்ணிறத்தாடியும் நிலவொளியில் ஒளி வீசின."கடவுளே! பூமியில் நடந்து வருவதைப் போல் அல்லவா இவர்கள் கடளில் நடந்து வருகின்றனர்!." என்று வியப்போடு உரக்கக் கூவியபடி கப்பலை அந்த இடத்திலே நிறுத்திவிட்டான் மாலுமி.பிரயாணிகள் அனைவரும் அதற்குள் தளத்தில் கூடிவிட்டனர்.அவர்கள் வருவதை அபர்களும் கண்டார்கள்.அவர்கள் இப்போது கப்பலில் வந்து ஏறிவிட்டனர்.பிறகு பாதிரியாரைப் பார்த்து,"கர்த்தரின் தொண்டரே! நீங்கள் சொல்லிக் கொடுத்தவற்றையெல்லாம் நாங்கள் மறந்துவிட்டோம்.தயை செய்து அதை மீண்டும் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள். " என்று அவர்கள் அவரை வேண்டிக்கொண்டார்கள்.

அவர்கள் அப்படிச் சொன்னதும் மண்டியிட்டு அமர்ந்து பாதிரியார், "கடவுளின் புராதன உத்தமர்களே!உங்கள் பிரார்த்தனையும் கடவுளை எட்டும்.நாங்ககள் தான் பாவ ஆத்மாக்கள்.நீங்கள் தான் எங்களுக்காக கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்ய வேண்டும்.உங்களுக்குப் போதிக்க எனக்குத் தகுதியில்லை!" என்றார்.

பிறகு பாதிரியார் அவர்களை வணங்கினார்.அதற்குப் பிறகு தங்கள் தீவை நோக்கி அந்த முதியவர்கள் திரும்பினார்கள்.

பொழுது புலரும் வரை, அவர்கள் மறைந்த அந்த இடத்திலிருந்து ஒளி எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருந்தது.


Tuesday, June 2, 2015

எனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்!!

சின்ன பிரச்சனை  வந்துவிட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த திசையில் ,எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. முன்னேற்பாட்டுடன் தயார் நிலையில் இருப்பவர்கள் பிரச்சனைக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் அடிக்கிறார்கள்.முன்னேற்பாடு இல்லாதவர்கள் சோர்ந்து மூலையில் உட்கார்ந்துவிடுகிறார்கள்.ஒரு மனிதன் தன்னம்பிக்கையை இயல்பாக வளர்த்துக்கொள்ளலாம் அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கலாம். தன்னம்பிக்கையை இயல்பாக வளர்த்துக்கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்.சரி தன்னம்பிக்கையை நமக்கு நாமே வளர்த்துக் கொள்வது எப்படி?

நாம் எல்லோரும் சினிமா பார்த்து இருப்போம். அதில் ஒரு ஹீரோ இருப்பார்.படத்தின் துவக்கத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்திப்பார்.இரண்டாவது கட்டத்தில் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறுவார்.இந்த இரண்டு கட்டத்திற்கு இடையில் ஒரு திருப்புமுனை இருக்கும்.அந்த திருப்புமுனை தான் ஹீரோவிற்கு தன்னம்பிக்கை தரும் தருணம். நாமும் நம்மை உணர தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ள வாழ்வில் ஒரு திருப்புமுனை அவசியம்.அப்படி ஒரு திருப்புமுனை ஏற்படுத்திக்கொள்ள  நம் வாழ்க்கையை நாமே பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டும்.உதாரணமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது சற்று நிதானமாக நம் வாழ்க்கையை பின்னோக்கி அதுவரை சந்தித்த பல பிரச்சனைகளை நினைத்து பார்க்கவேண்டும்.அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக எதிற்கொண்டோம் என்பதை சிந்திக்க வேண்டும்.இதை செய்ய ஆரம்பிக்கும் போதே பிரச்சனையை பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக ,அதை தீர்க்க சிந்திக்க ஆரம்பித்து விடுவோம்.

என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய நிகழ்வு நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது நிகழ்ந்தது.படிப்பில் நான் சுமார் ரகம் தான்.ஆனால் முட்டாள் இல்லை.அதுவும் கணிதத்தில் தான் படுமோசம்.முதல் ஆறு மாதத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு கணித்தில் நான் எடுத்த அதிக மதிப்பெண்களே ஐந்து .இதை பார்த்த கணித ஆசிரியர் நான் தேறுவது கடினம் கடினம் என் நினைத்து என்னை தினமும் கும்ம ஆரம்பித்தார்.என்னை மாற்றுவதற்காக குட்டிக்கரணமே அடித்துப்பார்தார்.ஆனால் கணிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.இப்போதும் ஞாபகம் இருக்கிறது.ஹால்டிக்கெட் கொடுக்கும்போது எப்படியாவது பாஸாகிவிடு என்று என் ஆசிரியர் கூறியது.அதன் பின் நடந்ததெல்லாம் ஆச்சர்யம்.ஏனென்றால் முழு ஆண்டு தேர்வு முடிவில் கணிதத்தில் நான் எடுத்த மதிப்பெண் 190.இதைக் கேட்ட என் ஆசிரியருக்கு நம்பவே முடியவில்லை.பெயில் ஆகிவிடுவேன் என அவர் கணித்த மாணவன்   190 மதிப்பெண்கள். இதைவிட நூறு மதிப்பெண்கள்  எடுப்பார்கள் என ஆசிரியர் கணித்த பல மாணவர்கள் 160 கூட தாண்டவில்லை.

நடந்தது இது தான்.முழு ஆண்டு தேர்வுக்கு தயாராவதற்கு 20 நாட்கள் வரைக்கொடுத்திருந்தார்கள்.ஓராண்டில் படிக்காததை 20 நாட்களில் படிக்க ஒரு திட்டம் தீட்டினேன்.திட்டம் இதுதான்.அதுவரை வெளிவந்த அனைத்து கம்பெனிகளின் நோட்ஸ்களையும் மாதிரி வினாத்தாட்களையும் சேகரிப்பது.எதை எப்போது படித்து முடிக்கவேண்டும் என்ற விரிவான ஒரு செயல் திட்டம்.இதற்காக எத்தனையோ பழைய நோட்டு புத்தகக்கடைகளை ஏறி இறங்கினேன்.கணிதத்திற்கு மட்டும் எட்டு கம்பெனிகளின் நோட்ஸ்களை சேகரித்தேன்.

நோட்ஸ்,மாதிரிவினாத்தாட்கள் ஒரு கையில் ,எப்படி படிக்க வேண்டும் என்ற செயல் திட்டம் மறு கையில்.இருபது நாட்கள் திட்டமிட்ட கடின உழைப்பு.அந்த இருபது நாட்களில் நான் முழுவதுமாக மாறிப்போயிருந்தேன்.ஒவ்வொரு பரிட்சை எழுதும் போதும் துளிகூட சந்தேகமில்லாமல் எழுதினேன்.கணிதம் மட்டுமில்லாமல் இயற்பியல்,வேதியியல் என எல்லா பாடாத்திலும் மார்க்குகளை அள்ளிக்குவித்தேன்.அதுதான் என் வாழ்க்கையில் உண்மையாக என்னை உணர்ந்த தருணம்.வெற்றிச்சூத்திரத்தை கண்டறிந்த தருணம்.அன்றிலிருந்து எவ்வளவு பிரச்சனைகள் எனக்கு வந்தாலும் இந்த நிகழ்வை நினைத்துப்பார்பேன்.புது புத்துணர்ச்சி பிற்க்கும்.புதிதாய் பிறந்தது போல் இருக்கும்.சட்டென களத்தில் குதித்து போரட ஆரம்பித்து விடுவேன்.

திரும்பிப்பாருங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு கரடுமுரடான பாதைகள், எத்தனை சோகம்,எத்தனை கண்ணீர்,எத்தனை இன்னல்கள்.ஆனால் சோர்ந்து போகவில்லை.இதையெல்லாம் கடக்க வைத்தது யார்?இதையெல்லாம் தாங்கிக்கொண்டது யார்?கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது வேறு யாரும் இல்லை.நீங்கள் தான். வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் நீங்களும் ஹீரோ தான்.

Thursday, May 28, 2015

சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்

வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போது மாபெரும் நாகரிகங்கள் எனத் தன்னை மார்தட்டிக் கொண்டவை பல இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு
மண்ணாக புதைந்து போய் உள்ளன.இதே போல் பல சாம்ராஜ்ஜியங்கள் ,அரசர்கள்,தனி மனிதர்கள் என பலரும் கணப்பொழுதில் காணாமல் போய் உள்ளனர்.இந்த அழிவு, வியாபாரம்,தொழில்நுட்பம் என பல துறைகளுக்கும் பொருந்தும்.நேற்று வரை கார்,பணம்,வசதி என பறந்து கொண்டிருந்தவர் சட்டென்று நடு ரோட்டிற்கு வந்திருப்பார்.நேற்று வரை உச்சத்திலிருந்த தொழில்நுட்பம் இன்று குப்பைக்கு போயிருக்கும்.பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து ,பங்கு மார்க்கட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி இன்று காணாமல் போயிருக்கும்.இவையெல்லாம் ஏன் நடக்கின்றன?இவற்றின் பின்னால் ஏதாவது அறிவியல் காரணம் உள்ளதா?இந்த காணமல் போனவர்கள் பட்டியலில் நாமும் சேராமல் இருப்பது எப்படி?

பத்து வருடத்திற்கு முன்னால் இந்தியவில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் கைபேசியை கொண்டு வந்து,அன்று கைபேசி மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி நோக்கியா.இன்று காணமல் போய்விட்டது.ஏன் காணாமல் போனது?நோக்கியாவின் அழிவைப் பற்றி பேச வேண்டுமானால், இரண்டு முக்கியமான விசயங்களைப் பற்றி பேச வேண்டும்.அதில் ஒன்று ஆப்பிளின் ஐபோன், மற்றொன்று கூகுளின் ஆண்டிராய்டு.ஆறு வருடத்திற்கு முன்னால் எல்லா மக்களின் கையிலும் கைபேசியை கொண்டு சேர்த்திருத்திருந்தன கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள். ஆனால் அடுத்த கட்ட தொழில்நுட்பம் என்னவென்று தெரியாமல் கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள் முழித்திக்கொண்டிருந்தன.அதில் நோக்கியாவும் ஒன்று.அப்போது கைபேசியின் அடுத்த பரிமாணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது ஆப்பிளின் ஐபோன்.தொடுதிரை ,கண்கவர் பொத்தன்கள் ,தொழில் நுட்ப நேர்த்தியென கைய்டக்க கணிப்பொறியாகவே கைபேசியை அறிமுகப்படுத்தினர்.இதை அனைத்து கைபேசி தயாரிப்பு கம்பெனிகளும் காப்பியடிக்க முயன்று மண்ணை கவ்வின.காரணம் ஆப்பிளின் தொழில்நுட்ப நேர்த்தி.இந்த இடைப்பட்ட காலத்தில் நோக்கிய சரியத்தொடங்கியது.தன்னை காப்பாற்றிக்கொள்ள மைக்ரோசாப்ட்டுடன் இணைய திட்டமிட்டது.மற்ற கம்பெனிகள் மாற்றத்திற்காக காத்திருந்தன.

அப்போது தான் ஆப்பிளின் தொழில்நுட்பத்திற்கு சவால்விட கூகுள் தயாரானது.அதாவது புதிய கைபேசி இயங்குதளம் ஆண்டிராய்டை இலவசமாக வெளியிட் தயாரானது.ஆண்டிராய்டை பொருத்தவரை தொழில்நுட்பம் முற்றிலும் இலவசம்.அதுவும் உயர்ந்த தரத்தில்.கூகுளின் திட்டமே அப்போது உச்சத்திலிருந்த ஆப்பிளை வீழ்த்துவது தான்.வாய்ப்புகளுக்காக காத்திருந்த அலைபேசி கம்பெனிகள் ஆண்டிராய்டை மொய்க்கத்தொடங்கின.அதுதான் அலைபேசி தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையின் ஆரம்பம்.கூகுள் ஆண்டிராய்டின் புண்ணியத்தால் குப்பனும் சுப்பனும் கைபேசி தயாரிக்கும் அளவுக்கும் தொழில்நுட்பம் எளிதானது.இங்கே நோக்கியாவின் நிலை பரிதாபம்.ஏற்கனவே மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துவிட்டதால்,ஆண்டிராய்டு இயங்கு தள கைபேசியை உருவாக்க முடியவில்லை. கடைசியில் வாய்ப்புக்காக காத்திருந்த சாம்சங்கும்,சோனியும் கைபேசி மார்க்கெட்டை விழுங்கின.நோக்கியாவை மைக்ரோசாப்ட் விழுங்கியது.சரி இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

வியாபார அறிவியலில் இதை இடையூறான கண்டுபிடிப்பு(disruptive innovation) என்பார்கள்.அதாவது வியாபாரத்திலோ,பொருட்களை உருவாக்கு முறையிலோ அல்லது தொழில்நுட்பத்திலோ சிறு மாற்றங்கள் செய்து புதிய சந்தையை அல்லது புதிய பயனாளர்களை உருவாக்கி சந்தையின் உச்சத்தை தொடுவது.உதாரணமாக சீன சந்தை மலிவானது,தரம் குறைந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் சீனாவின் திட்டமே மலிவான விலையை காரணம் காட்டி சந்தையில் நுழைந்து மெதுவாக தரத்தை உயர்த்தி உலக சந்தையின் உச்சத்தை தொடுவதுதான்.ஆரம்பத்தில் தரத்தை காரணம் காட்டி சீனாவை பார்த்து சிரித்த நாம் இன்று சீனாவிடம் உலக சந்தை இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை.

நோக்கியாவின் கதையிலும் நடந்தது இது தான்.கைபேசியில் புதிய மாற்றங்களை உருவாக்கி மொத்த சந்தையை வளைத்தது ஆப்பிள்.அதில் இருந்து புதிய சந்தையை உருவாக்க கூகுள் தொழில்நுட்த்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இலவச இயங்குதளத்தை உருவாக்கி சந்தையை தன் வசமாக்கிக்கொண்டது.இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருந்த நோக்கியா தன்னையே இழந்துவிட்டது.

இப்படிதான் தொழிலிலும் ,தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்படும் சிறு மாற்றங்களை கவனிக்க தவறி மொத்தத்தையும் இழந்துவிடுகிறோம்.உங்கள் கடைக்கு எதிராக ஒருவர் வித்தியாசமான அணுகுமுறை முறையோடு சின்ன கடை விரித்தாலோ,அல்லது நீங்கள் வேலைபார்க்கும் இடத்தில் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்தாலோ அதை அலட்சியம் செய்யாதீர்கள்.அது உங்கள் அழிவுக்கே காரணமாகலாம். மற்றொரு கோணத்தில் சொன்னால் வாழ்க்கையில் நாம் உயரத்திற்கு போக சின்ன மாற்றங்களே போதும்.மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.மாறிக்கொண்டே இருங்கள்.மாற்றம் ஒன்றே மாறாதது.




Tuesday, May 26, 2015

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்?

அசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்?எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா? அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்!
ஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார்.



நகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை விட மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பெளத்தம்.பயணிகள் இளைப்பாறவும்,இயற்கையை பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்களை நட உத்தரவிட்டார்.ஏன் சால மரம் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பெளத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தரின் தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தன் தாய் வீட்டுக்கு போகும் வழியிலேயே ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.அதேப்போல புத்தர் இறந்தும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கடியில் தான்.ஆகவே சால மரம் பெளத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று.

சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாக பயன்படுத்தினர்.இதன் இழைகளை தைத்து உணவு சாப்பிட பயன்படுத்தினர்.ஆதிவாசிகள் இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த சால மர இலைகள் விவசாயத்திற்கு உரமாக பயன்பட்டன.சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாக கொண்டாடினர்.சால மரம்,புத்தரின் மறுவடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்பதால்,மரங்கள் ஞானத்தை அடையவதற்கான மன ஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பெளத்த துறவிகள் நம்பினர்.இதன் காரணமாகவே அசோகர் மரங்களை நட்டார்.சால மரம் மருத்துவக் குணம் கொண்டது.இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனை களைத்தீர்க்கும்.பல் வலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது.இதனால் பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால் ,இந்த மரங்களை வழி நெடுங்கிலும் வளர்த்து இருக்கின்றனர்.

இவ்வாறாக ஒரு மரத்தின் வரலாறை மறைத்து,அதன் காரணத்தை மறைத்து,வெறும் அசோகர் மரத்தை நட்டார் என்று கற்று தரும் நம் கல்வி முறை வியப்பின் சரித்திரம்.

Friday, May 22, 2015

கடவுளாகிய மனிதர்கள்

கல்லால் அடித்து ,
சிலுவையில் அறைந்து ,
கொன்று பின் ,கடவுளாக்கி
தொழும் இந்த மனிதர்களை
என்னவென்று சொல்வது.

Tuesday, April 21, 2015

அந்த மூன்று உண்மைகள்

சிலர் வாழ்க்கையை தங்ககளுக்காக தங்கள் எண்ணப்படி வாழ்கிறார்கள்.
சிலர் மற்றவர்களுக்காக வாழ்கிறார்கள்.
சிலர் எந்த தேர்வும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறார்கள்.இதில் எதில் சரி? எது தவறு? என்ற பேச்சிக்கே இடமில்லை.ஆனால் எல்லோருடைய வாழ்வும் இன்பம்.துன்பம் என்ற மேடு , பள்ளங்களின் வழியே தான் பயணிக்கிறது.இன்பத்தில் ஊறி மூழ்கியவர்களும் உண்டு.துன்பத்தை தாண்டி உச்சத்தை தொட்டவர்களும் உண்டு.இன்பத்தையும் துன்பத்தையும்  எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்து தான் வாழ்க்கையின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்க்கையை மேம்போக்காக, ஆர்ப்பாட்டமாக, கொக்கரித்து வாழும் போது தடமில்லாமல் அழிந்து போகிறோம்.ஆனால் புரிந்து கொண்டு வாழும் போது உணர்வு பூர்வமாக வாழ்கிறோம்.கடல் ஆர்பரித்து காணப்பட்டாலும் அதன் அடி ஆழத்தில் ஓர் அமைதியான நன்னீரேட்டம் இருக்கும்.அது போல வாழ்க்கை மேம்போக்காக, ஆர்ப்பாட்டமாக, கொக்கரித்து காணப்பட்டாலும் ,அதன் ஆழத்தில் ஓர் அமைதியான ஆன்மா இருக்கிறது.வாழ்க்கையின் ஆழத்திற்கு செல்ல செல்ல நாம் அதன் ஆன்மாகவே ஆகிவிடுகிறோம்.

வாழ்க்கையின் ஆழத்திற்கு செல்ல மூன்று உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இவை கண்டிப்பாக நம் வாழ்க்கையை மாற்றிப் போடும்.

முதல் உண்மை :நாம் என்றோ ஒரு நாள் இறக்கப் போகிறோம்.

சிந்தித்து பார்த்தால் நம் சாவை தவிர நமக்கு வலி கொடுக்க போகும்  விசயம் வேறு எதுவும் இல்லை.நம் சாவின் முன்னால் வாழ்க்கையின் பிரச்சனைகள் ஒன்றும் இல்லை.நம் சாவை தவிர நம்மை தடை செய்கிற சக்தி வேறு எதுவுமில்லை.நாம் எல்லையில்லா சக்தியும்,எல்லையில்லா சுதந்திரமும் பெற்றவர்கள்.நாம் சாவை தவிர வேறு எதற்கும் பயப்பட தேவையில்லை.நமக்கும் சாவுக்கும் இடையேயான ஒப்பந்தம் தான் வாழ்க்கை.வாழ்க்கையை சரியாக, நேர்மையாக வாழும் போது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறது.

இரண்டாவது உண்மை:நாம் இறந்தபின் நம்மை எல்லோரும் மறக்கப் போகிறார்கள்

 நமக்கு தெரிந்து இறந்து போனவர்கள், எத்தனை பேரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.எல்லோரையும் மறந்துவிட்டோம்.நாம் இறந்த பின்பு நம்மையும் இந்த உலகம் மறந்துவிடும் என்பது தான் உண்மை.அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் மண்ணிற்குள் போன மூன்று நாள் தான்.அதனால் வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.அன்பாக வாழுங்கள்.மற்றவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.அதே நேரத்தில் அடிமையாக வாழாதீர்கள்.வாழ்க்கை ஒரு முறைதான் அதில் யாருக்கும் சுமையாக இருக்காதீர்கள்.மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.தனியாக வந்தோம்,தனியாகவே போக போகிறோம் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

மூன்றாவது உண்மை: சாவதற்கு முன் ஏதாவது செய்யுங்கள்

நாம் எல்லோரும் ஏதாவது காரணத்திற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்.அதை அறிய முயற்சி செய்யுங்கள்.நாம் எல்லோருமே தனித்துவமானவர்கள்.நாமும் இந்த உலகத்தின் ஒரு பகுதிதான்.நம் பங்களிப்பில்லாமல் இல்லாமல் இந்த உலகம் முழுமை பெறாது.அதனால் இறப்பதற்கு முன் இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யுங்கள்.உங்கள் உதவியை எதிர்பார்த்து இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது.குறைந்த பட்சம் துவண்ட மனதிற்கு ஆறுதல் கொடுங்கள்.சாய்ந்து கொள்ள உங்கள் தோல் கொடுங்கள்.இது போதும் உங்கள் அன்பால் உலகை துடைக்க.மறந்து விடாதீர்கள்.நீங்கள்
தனித்துவமானவர்கள்.சாவதற்கு முன் ஏதாவது செய்யுங்கள்.


வாழ்க்கையில் துன்பம் வரும் போதும், இன்பம் வரும் போதும் இதை மனதில் வையுங்கள்.நீங்கள் எல்லையில்லா ஆற்றலை பெறுவீர்கள்.இவை உங்களின் பிறப்பின் ரகசியத்திற்கு உங்களை கூட்டிச்செல்லும்.நீங்கள் இறக்கும் போது இந்த உலகம் உங்களுக்காக அழும்.ஆனால் நீங்கள் அப்போது சிரித்துக் கொண்டு இருப்பீர்கள்.
 




 






Wednesday, February 11, 2015

குருட்டுச்சித்தன்

தன்னையறியாமல் மண்ணையறிய
புறம் நோக்கியோடி - காலிடறி
அகத்தில் விழுந்த குருட்டுச்சித்த  - உன்
எண்ணமென்னும் ஏர் தாருமாறாயிருக்க.
மந்திரத்தால் கத்தியும்,தந்திரதால் தாவியும்
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ?

ஜான் ஞானம் மேலேற
துளிவிசம் கீழிறங்க
அடையப்போவதோ அகம்பாவமாயிருக்க!
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ? 

கற்ற குப்பை வைத்துக்கொண்டு
பார்ப்பதெல்லாம் மாயையென்று!
வாழ்க்கைவிட்டு ஓடிப்போய்!
குப்பையான உடலுடன்
சேர்த்த ஞானம் வைத்துக்கொண்டு
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ?

வந்தவனும் சொல்லவில்லை.
போனவனும் சொல்லப்போவதில்லை.
உண்மையெல்லாம் ஊமையாயிருக்க! - நீயும்
கொண்டுவரவுமில்லை, கொண்டுபோவதுமில்லை.
இல்லையெல்லாம் இப்படியிருக்க.
ஞானமென்னும் செல்லாக் காசை வைத்து
அகமென்னும் இருட்டில் நீ
அடையபோகும் இலக்கென்னவோ?

கதிரவனும் உதிக்கிறான்.
சந்திரனும் சிரிக்கிறான்.
ஞானமென்னும் தவளை கொண்டு
மாற்றமெல்லாம் வேண்டுகிறாய்.
கதிரவனும் மாறுமோ?சந்திரனும் சாகுமோ?
இக்கணத்தில் வாழடா,
உறுதிகொண்டு வாழடா,
அக்கரைக்கு ஆசைகொண்டு,
சங்கடத்தில் வீழாதே.
சொல்வதெல்லாம் உண்மையல்ல.
கேட்பதெல்லாம் உண்மையல்ல.
உணர்தெல்லாம் உண்மையே - அது
உனக்குமட்டும் உண்மையே.