About Me

Friday, September 21, 2012

தெருக்கூத்து

இருட்டுக் கொட்டடியில்
சிற்றிடை சிரிப்பழகியின்
கடைசரக்கை கண்டிட,
விட்டில் பூச்சிகளாய்
வாலிபம் மொய்த்து நிற்க,
ஆரம்பித்தது கலைக்கூத்து.

அடித்தொண்டை கானமும்
கோமாளி பேச்சுமாய் தன்
நாடகத்தை தொடங்கினாள்.
காட்டியும் காட்டாமலும்
பேசியும் பேசாமலும்
ஜாடையாய் அவள் செய்த
கோலங்கள் இரவைவிரட்டிக்
கொண்டு இருந்தன.

ஏழ்மையின் காரணமாய்
தன் மானத்தை முச்சந்தியில்
கொட்டி அவள்  அள்ளி
கொண்டிருந்ததை பதின்ம
வயது சிங்கங்கள்
சீண்டி சுகம் கண்டனர்.

இங்கே பார்பவனுக்கும் பசி
பார்க்கப்படும் பொருளுக்கும் பசி
இவனது காமப்பசி அங்கே
அவளுக்கு வயற்றுப்பசியை
தீர்க்கிறது.

உண்மையில் பசி
சந்தி சிரிக்க வைக்கும்
கலைக்கூத்து தான்.






Monday, September 10, 2012

தீண்டாமை

தீண்டாமை
அழகான அந்த கவிதை
வாசித்து முடிக்கப் பட்டதும்
அரங்கமே அதிர்ந்தது - கர ஒலியில்
அதை எழுதிய மாணவன்
பிற்படுத்த பட்டவன் என்பதால்
அக்கவிதை நிராகரிக்கவும் பட்டது.
இங்கே மனிதர்கள் மட்டுமல்ல ,
கடவுளே பிறந்தாலும் -
உயர்குடியில் பிறந்தால் தான்
டம்ளரில் டீ- இல்லையென்றால்
சிரட்டையில் தான் டீ.

Sunday, September 9, 2012

அறிவரைகளை அலட்சியம் செய்யாதீர்கள்

அறிவரை
இன்றைய நவீனயுகத்தில் அலட்சியப்படுத்துதல் என்பது நாகரீகமாகிவிட்டது.எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு வாழ்க்கையை அரித்துக்கொண்டிருக்கிறது.யாராவது அறிவுரை சொல்லிவிட்டால் போதும் உடனே அலட்சியத்துடன் "அறிவுரை சொல்வது எளிது" என மட்டம் தட்டுவது. அறிவுரை எப்பேர் பட்ட வரம். நம்மீது கொண்ட கனிவின் காரணமாக தன் சொந்த நேரத்தை நமக்காக ஒதுக்கும் மனித இதயத்தை கோடாரியால் வெட்டும் நம் புரிதலின் பார்வையை மாற்றவேண்டும்.அறிவுரையின் மீதான புரிதலை வளர்க்க வேண்டும்.ஒவ்வொரு விடியலிலும் நாம் காணும் மனிதர்களும்,பறவைகளும் நமக்கான பாடத்தை சுமந்து வருகின்றன.ஆனால் நாம் அவற்றை பார்க்கும் பார்வையையும் ,ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

ஒருமுறை முகமது நபியிடம் ,ஒரு பெண் தன் குழந்தை அதிகம் இனிப்பு சாப்பிடுவதாகவும் ,அதற்காக அறிவுரை கூறுமாறு வேண்டினாள். நபிகள் அவர்களும் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வருமாறு கூறினர்.அவளும் ஒரு வாரம் கழித்து வந்தாள்.அப்போது நபிகள் அந்த குழந்தையிடம் இனிப்புகள் சாப்பிடுவது உடம்பிற்கு கெடுதி அதனால் இனிப்பு சாப்பிடுவதை குறைக்குமாறு அறிவுரை கூறினாராம்.அதை கேட்ட அந்த பெண் ஏன் அன்றே இதை கூறி இருக்கலாமே என கேட்டாள்.அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் "நானும் அன்றைய தினம் வரை இனிப்புகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன்".அதனால் தான் அன்று கூறவில்லை.இப்போது இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.அதனால் தான் அறிவுரை கூறுகிறேன் என்றார்.

அதற்காக அறிவுரை கூறுபவர்கள் எல்லாம் நல்லவர்களாவும் ,அதை கடைபிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அறிவுரை என்கின்ற பாடம் இறைவன் நமக்கு அளிக்கின்ற பரிசு.அறிவுரை சொல்பவர்கள் வெறும் தூது செல்பவர்கள்.ஆனால் நாமோ தூதுவனைப் பார்த்து கொண்டு தூது பொருளை தவற விட்டுவிடுகிறோம்.சிப்பியை பார்த்துவிட்டு முத்துவை தவறவிடலாமா? நாம் எப்போதெல்லாம் துன்பப்படுகிறோமோ அப்போதெல்லாம் நமக்கான ஆறுதல் ஏதோ ஒரு வடிவில் வந்து கொண்டுதான் இருக்கிறது.நாம் தான் அதை ஏற்கும் மன நிலைமையையும்,பகுத்தாயும் திறனையும் இழந்துவிட்டோம்.எல்லாவற்றையும் புரிதலோடும் அன்பென்ற கருனையோடும் அணுகும் போது ,மழைக்காலத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புல்லின் மீதான பனித்துளிகூட ஓராயிரம் பாடங்களையும் ,அர்த்தங்களையும் மெளனமாக சொல்லிவிட்டு செல்கிறது.

Friday, September 7, 2012

வரதட்சனை

பூமியில் பிறந்த
இருமனங்களின் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சியிக்கப்பட்டு
பூமியிலே விற்கப்படுகிறது.