வணக்கம் நண்பர்களே
பள்ளி நினைவுகள் பற்றி பதிவுலக நண்பர்கள் எழுத அழைத்திருந்தனர்.இதை நான் எழுத நினைத்த போது இது ஒரு சுயபுராணமாக இல்லாமல் ,ஓர் நல்ல பாடமாகவும் , ஒர் நல்ல இதயத்தை பற்றிய பதிவாக அமைய வேண்டுமென்ற எண்ணம் உருவானது.ஆகையால் இப்பதிவை என் தாவரவியல் ஆசிரியரான எழிலரசு அவர்களை பற்றி எழுதியுள்ளேன்.
அன்று ஒரு நாள் ஓர் ஆசிரியர் ஒரே நாளில் என்னை அடித்து இரண்டு பிரம்புகளை ஒடித்தார்.காரணம் ரொம்ப சாதாரணம்.நான் வீட்டுப்பாடம் எப்போதும் எழுதுவதில்லை.அன்று வாழ்வில் வெறுப்பின் உச்சியில் இருந்த ஞாபகம்.இது நடந்தது நான் எட்டாம்வகுப்பு படிக்கும் போது.அன்று மாலை வீட்டில் அம்மாவிடம் அடித்த காயத்தைக் காட்டிஅந்த ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு திட்டிக்கொண்டிருந்தேன்.அம்மாவோ ஆசிரியருக்கு சப்போட்டாக,பாருடா மாதா,பிதா,குரு தெய்வம் மரியாதையா பேசு என்றார்.நானும் கோபத்தில் சற்றும் யோசிக்காமல் சொன்னேன் ஆமாம் மாதா,பிதா,குரு தெய்வம் ஆனால் மாதா,பிதா,ஆசிரியர்,தெய்வம் என்று யாரும் சொல்லவில்லையே.குருவைதான் திட்டக்கூடாது ஆனால் ஆசிரியரை திட்டலாம் என சொன்னேன்.இத்தனைக்கும் நான் மோசமாக படிக்கும் ஆள் இல்லை.ஏன் இவர்களுக்கு இந்த கொலைவெறி என யோசித்து யோசித்து ஆசிரியர்களை பார்தால் எனக்கு பற்றிக்கொண்டு வரும்.ஆசிரியர்களை நான் மதித்தது கிடையாது.என்னை பொறுத்தவரை குரு என்பவர் தட்சனை வாங்குவார் ஆனால் எதையும் எதிர்னோக்காமல் வாழ்க்கையை பார்க்க சொல்லி தருவார்.ஆனால் இந்த ஆசிரியர்களோ மாதா மாதாம் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் வெறியை பிள்ளைகளின் மேல் காட்டுகிறார்கள்.இவர்களை குரு என்று சொன்னால் குரு என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போகும்.இப்படியே என் பள்ளி வாழ்க்கை ஒரு போராட்டமாக கடந்து கொண்டிருந்தது.ஆனால் நானும் என் பள்ளியின் முடிவில் உண்மையான குருவை தரிசித்தேன்.
அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டியாக வந்து அறிவுக்கண்ணை திறந்தார்.எழிலரசு அவர்களோ வீல் சேரில் வந்து எங்கள் அறிவுக்கண்ணை திறந்தார்.சிவகாசி இந்து நாடர் உயர் நிலை பள்ளியில்(S.H.N.V. Higher Secondary school) எழிலரசு அவர்கள் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.ஒர் விபத்தில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுத்து அவரது தண்டிவடத்தில் பலத்த அடி.பல மாத போராட்டத்துக்கு பின் மீண்டும் பள்ளிக்கு வந்தார்.அதுவும் வீல் சேரில் இடுப்புக்கீழ் எந்த பகுதியும் வேலை செய்யாமல். பார்த்தாலே கண்கலங்கி நீர்வடியும்.ஆனால் ஒரு முறை கூட எங்களிடம் எந்த உதவியும் கேட்டதில்லை.பாடமோ புத்தகத்தை பார்க்காமலே 145 ஆம் பக்கத்தில் மூன்றாவது வரியில் அச்சுப் பிழையை திருத்திக்கொள்ளுங்கள் என தெளிவான உச்சரிப்பு வரும்.புத்தகத்தை தலைகீழ் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்.நிலாவில் கால் வைத்தது முதல் பைசம் சட்டைவத்துக்கு சட்டை போட்டது வரை அக்கு வேர ஆணிவர பிரிச்சு மேய்வார்.மொத்த வகுப்பும் வச்ச கண் மாறாம பார்த்து ரசிக்கும்.அவர் அமைதியா இருங்கனு சொல்லி கேட்பது அரிது.அந்த பள்ளியில் அவருக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் இருந்து பார்த்ததில்லை.
அடிக்கடி எங்களிடம் அவர் சொல்லும் வாசகம் நூலகத்திற்கு சென்று புத்தகத்தின் தலைப்பையும்,உள்ளடக்கத்தையும் மட்டும் படி வாழ்வில் பெரிய ஆளாகிவிடலாம் என்பது. நானும் என் கல்லூரி நாட்களில் இதை முழுவதுமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன்.பல நூறு புத்தகத்தை கடந்த பின் தான் தெரிந்தது அவரின் சூழ்ச்சி.ஒரு முறை தொட ஆரம்பித்தால் நம்மோடு புத்தகம் ஒட்டிக்கொள்ளும் என்பது. நிறைய படி,பிடித்தை செய்,உன்னால் முடிந்ததை மற்றவருக்கு கொடு. இது அவர் எங்களுக்கு சொல்லி கொடுத்த பாடம்.தளர்ச்சியுறும் போது நான் தன்னம்பிக்கை கட்டுரை படிப்பதில்லை வீல்ச்சேரில் வலம்வரும் தன்னம்பிக்கையான அவரை நினைத்துக் கொள்வேன்.புத்துணர்வும் புது வேகமும் எனக்குள் பிறக்கும்.உண்மையில் அவரே எனக்கு உண்மையான குரு.