About Me

Thursday, February 9, 2012

கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )

விமர்சனம்
விமர்சனம்
இருப்பதை ஏற்க முடியாத
திருப்தியில்லா மனதின் சலனம்
படைப்புகள் கடவுளுக்கு சொந்தம்
படைப்பவன் வெறும் பொம்மை
பொம்மையை விமர்சனம் செய்யலாம்
படைப்பை விமர்சனம் செய்ய
கடவுளுக்கே கிடையாது உரிமை
விமர்சனத்தின் அடி நாதம்
முழுமையை நோக்கியென்றால்
கடவுளின் படைப்பே
சில நேரம் ஊனமாகி
அழுது நிற்பதேன்
விமர்சனம் சுட்டிக்காட்டும் போது
அகங்காரமாய் முட்டி நிற்கிறது
தட்டிக் கொடுக்கும் போது
தோழனாய் தோள்கொடுத்து நிற்கிறது

அது ஓர் அழகான குளிர்இரவு
பாட்டியின்  கதகதப்பான அனைப்பில்
நடக்கும் கதைமழையில்
வரும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும்
ஆயிரம் ஆயிரம் விமர்சனத்திற்கும்
பாட்டி சொன்ன எளிய பதில்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா?
நல்லதை எடுத்துக்கொள்! கெட்டதை விட்டுவிடு!
மகிழ்விக்க வந்ததை விமர்சனம் செய்யாதே!

6 comments:

  1. விமர்சனங்களே படைப்பினை மெருகேற்றும் என்னும் நம்பிக்கை கொண்டவளாயிருப்பதால் கவிக்கருவோடு ஒன்ற இயலவில்லை. பாட்டி சொன்ன கதைகள் காலங்காலமாய் வாய்வழியாகவும் செவி வழியாகவும் தலைமுறைகளுக்கு வழங்கப்படுபவை.விமர்சனங்களைத் தாண்டிய விநோதம் அவை. ஆனால் படைப்புகள் காலங்களைத் தாண்டி படைப்பாளியின் பெருமை சொல்லி நிற்கக்கூடியவை. படைப்பெனும் சிலைகள் பக்குவமாய் செதுக்கப்பட விமர்சன உளிகளின் பங்கு அவசியம். இது என் தனிப்பட்டக் கருத்து மட்டுமே. மனிதருக்கு மனிதர் கருத்துக்கள் மாறலாம்.

    தங்கள் கருத்தும் அதை எழுதியிருக்கும் விதம் நன்றாக உள்ளது. மேற்கண்டவை இப்படைப்புக்கான என் விமர்சனம். தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை பக்குவமாய் கூறியமைக்கு மிக்க நன்றி.ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உங்களிடம் கேட்கலாம் என நினைகிறேன்

      படைப்பெனும் சிலைகள் பக்குவமாய் செதுக்கப்பட விமர்சன உளிகளின் பங்கு அவசியம்.

      எந்த ஒரு சிற்பியும் செதுக்கிய பின் விமர்சனத்திற்காக சிலையை மாற்றுவதில்லை.மாற்றவும் முடியாது.எல்லா விமர்சனங்களும் படைப்புகள் முடிந்த பின் தான் பிறக்கின்றன.அவை வேண்டுமானால் வரப்போகும் சிலைகளுக்கு அடி நாதமாகலாம்.ஆனால் விமர்சனமே படைப்பாளியின் சாவு மணியாகும் போது அது தேவையே இல்லை.இது என்கருத்து.தயவு செய்து தங்கள் கருத்தைக் கூறவும்.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. புரியாத பருவத்தில்
    புரிந்திட விழைகிற எண்ணங்களை வினாக்களை
    எளிதாக புரிய வைத்த பாட்டி....
    ஏற்றுக்கொள்ளக் கூடியது
    இன்றோ ஓரளவு பக்குவப்பட்ட நிலை என்றாலும்
    இன்னும் சில விஷயங்களில் வினாக்களும் சந்தேகங்களும்
    எழுவது இயற்கையே..
    விமர்சனங்கள் மனதை புண்படுத்தும்
    அளவுக்கு இருக்கக் கூடாது என்பதே
    என் கருத்து..
    மற்றபடி விமர்சனங்கள் தான் நம்மை
    பட்டை தீட்டி வைரமாக மின்ன வைக்கும்.

    பொருள்பொதிந்த நல்ல பதிவுக்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தோழனாய் தோள் கொடுக்கும் விமர்சனங்களை ஊக்குவிப்பதே என் நோக்கம்

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. உங்கள் புரிதலுக்கு மிகவும் நன்றி. இங்கு விமர்சனம் என்பதை பண்பட்ட மனங்களிலிருந்து வரும் நியாயமானக் கருத்துக்களையே குறிப்பிட விழைகிறேன். படைப்பைப் பற்றிய விமர்சனம் எனில் அது முழுக்க முழுக்கப் படைப்பைப் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும். படைப்பாளியைப் பற்றியதாய் இருக்கக்கூடாது. படைப்பாளியைப் பற்றிய விமர்சனங்களை தனித்த விமர்சனமாக முன்வைப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை.

    வடித்த சிலையானாலும் மேலும் சீர்படுத்த சில இடங்களில் உளிகளின் பங்கு தேவையே. நீங்கள் சொல்வது போல் அடுத்தப்படைப்பை நேர்த்தியுடன் படைக்க அவை நிச்சயம் உதவும். மகேந்திரன் அவர்கள் சொல்லியிருப்பது போல் விமர்சனங்கள் மேலும் திறமையை வளர்க்க உதவ வேண்டுமே தவிர மனத்தை ஊனப்படுத்தக் கூடாது. இதிலும் நான் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். மொத்தத்தில் விமர்சனங்களையும், விதண்டாவாதங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். உண்மையில் நம் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களையும், நம் வளர்ச்சியை விரும்பாதவர்களையும் பாகுபடுத்தத் தெரிந்திருந்தால் மீதி பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

    என் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்ததற்கு மிகவும் நன்றி தனசேகரன்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம் சகோதரி.நன்றி வாழ்த்துகள்

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..