About Me

Saturday, November 26, 2011

காத்திருப்பு

முள்ளில் பூத்த அழகே
என் சொல்லில் முளைத்த கனியே
இசையாய் காற்றாய்
இனிக்கும் தேனாய்
என் உயிரில் கலந்த உணர்வே!

உன்னை நினைக்கும் போது
என் உள்மூச்சும் எரியுதடி
விழிகள் மூடினாலும்
உன் பிம்பம் தெரியுதடி
உன் ஒவ்வொரு அசைவிலும்
என்னுள் மாற்றம் நிகழுதடி

காலம் சுருங்க
இடைவெளி அதிகரிக்க
உன் ஒவ்வொரு மொளனம்
என்னைக் கொல்லுதடி
என் ஆசை குழந்தையின்
அழுகுரல் கேட்கவில்லயா?
அது காதல் கேட்கிறது
நீ மொளனம் கொடுக்கிறாய்
விண்ணை நோக்கிய மண்ணாய்
உன்னை நோக்கி காத்திருக்கிறேன்
உன் காதலுக்காக!

Tuesday, November 22, 2011

என் கேள்வி ?

கேள்வியொன்னு கேள்வியொன்னு
மண்டைக்குள்ள நிக்குது
அத கேக்கனும் நினைக்கும்போது
நெஞ்சுக்குள்ள விக்குது
வந்த இடமும் தெரியல
போகும் இடமும் தெரியல
நடுவுல நின்னுக்கிட்டு
நானும் கேள்வி கேக்குறேன்

கட்டிக் கட்டா புத்தகமுண்டு
கடன் வாங்கிய அறிவுமுண்டு
புத்திசாலினு பேருமுண்டு
நல்லவனா நடிப்பும் உண்டு
நடிக்கிறேனு தெரிஞ்சிருந்தும்
நடிக்காம இருந்ததில்ல
பிடிக்கலேனு தெரிஞ்சிருந்தும்
பிடிச்சமாறி நடிச்சதுண்டு

நண்பன் இருந்தாலும்
உண்மையாக நானுமில்ல
காதல் இருந்தாலும்
அன்பாக இருக்கவில்ல
உண்மை இருந்தாலும்
உண்மை சொல்லி பழக்கமில்ல
கடவுளே வந்தாலும்
பிச்சையெடுக்காத நாளில்ல

ஒன்னும் இல்லேநாளும்
கொழுப்புக்கு பஞ்சமில்ல
மண்ண தின்னாலும்
வெறிக்கு பஞ்சமில்ல
கட்டைல போனாலும்
சபலத்துக்கு பஞ்சமில்ல
நானும் சாகும்போது
ஊருக்குள்ள அழுவாரோ?
நல்லவன் போயிட்டானு
ஊருக்குள்ள சொல்வாரோ?
நானும் அத கேட்பேனோ?
சந்தோஷமா போவேனோ?


கடைசி காதல் கடிதம்

ஏ பெண்ணே!
உன்மீது நான்கொண்ட உணர்வு
ஓர் உண்மை!
அதற்காக இயற்கை கற்பழித்து
காதல்,அன்பு என்ற வார்த்தைகளின்
பின்னால் ஒளியவிருப்பமில்லை.
உன் பெண்மை
என் உணர்வை உணருமானால்
என்னை ஏற்றுக்கொள்
உன்மடியில் சாய்ந்து கொள்கிறேன்
இல்லை மண்ணில் வீழ்ந்துவிடுகிறேன்.

Friday, November 18, 2011

இன்னொரு காலை

ஊர்ஓரம் அரசமரம்
மாமனுக்கு காத்திருந்தேன்
மாமனும் வரவில்ல
மனசும்தான் இயங்கவில்ல
மாமனும் வருவாரோ?
மனச கொஞ்சம் தருவாரோ?

ஒத்த மரத்தடியில்
ஒரு நேரம் காத்திருக்கேன்
நிக்க நிழலில்ல
நீதி சொல்ல ஆளில்ல
காலைல வந்தவ
கால் கடுக்க நிக்குறேன்
ஒத்த முகம்பாக்க
ஒத்த காலில் நிக்குறேன்
சொக்கன் முகம் பார்ப்பேனோ?
சொக்கிப் போய் நிப்பேனோ>

கருத்த உடம்புண்டு
இரும்பு போல கையுண்டு
வட்ட முகமுண்டு
லட்டுபோல கண்ணுண்டு
அழக சிரிப்பாரோ?
மல்லிகைப்பூ கொடுப்பாரோ?

மாமனுக்கு பிடிக்குமுனு
மடிநெறய சோளமும்
தாகம் எடுக்குமுனு
சட்டிநெறய மோரும்
கொண்டுவந்தேன்
மாமனும் வரல
மடிபாரமும் இறங்கல

நாளும் ஓடுதடி
பொழுதும் தேயுதடி
நாளும் ஏங்குறேன்
நாளுக்கு நாள் தேயுறேன்
தினமும் தூங்கையில
நெஞ்சுக்குள்ள அழுகுறேன்
இன்னைக்குப் பார்ப்பேன்னு
காலையில முழிக்குறேன்!



Wednesday, November 16, 2011

காலை கானம்

பாடும் பறவைகளே
எந்தன் பாடலை கேளுங்கள்
கூடும் மேகங்களே
எந்தன் கூக்குரல் கேளுங்கள்
ஒரு பாடல் நானும்பாட
அதைக்கேட்டு பூக்கள் பூக்க
இதுதானோ கானம் என்று
கதிரவனோ எட்டிப் பார்க்க
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


காலைநேரப் பனித்துளி ஒன்று
புல்லின் மீது நடனமாட
சாலையோர பூக்கள் எல்லாம்
தலையசைத்து புன்னகை சிந்த
காற்றில் மிதக்கும் ஈரஅணுக்கள்
என்னுள்ளே உரசிச் செல்ல
இருண்டுகிடந்த என்மனக் காடோ
சற்றென்று பற்றிக் கொள்ள
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


அழகான காலைப்பொழுதே
என் மெளனம் கலைத்தாயே
சொல்லாத உணர்வுகள் எல்லாம்
சொல்லி நீ சென்றாயே
சிறு மின்னல் காட்சிமூலம்
தேடிச்சென்ற ஞானம் எல்லாம்
சிறுபுல்லில் நானும் காண
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!





Saturday, November 12, 2011

நானா இப்படி?

என்னில் விழுந்தாய்
காதலாய் மாறினேன்

சொல்லில் விழுந்தாய்
கவியென மாறினேன்

கண்ணில் விழுந்தாய்
கருவிழி ஆகினேன்

சிப்பியில் விழுந்தாய்
முத்தென மாறினேன்

நிலவில் விழுந்தாய்
அழகென மாறினேன்

காற்றில் கலந்தாய்
சுவாசம் ஆகினேன்

பூவில் விழுந்தாய்
வாசம் ஆகினேன்

புவியில் விழுந்தாய்
 ஜீவன் ஆகினேன்

 துளியாய் விழுந்தாய்
கடலாய் மாறினேன்

உளியாய் விழுந்தாய்
சிலையாய் மாறினேன்

என்னை என்ன செய்தாய்
இப்படி மாறினேன்!!

Thursday, November 10, 2011

சொல்லாட்டு

செவ்வானம் பூப்பூக்க
கார் இருளோ கொடை விரிக்க
கண்ணே விழித்தாயோ
கன்னித்தமிழ் கேட்டாயோ!

அப்பன் வரும் வரையில்
எந்தனிமை நீ போக்க
சோககத நான் பாட
கண்மணியே கேட்பாயோ!

மன்னன் நாடாள
மாந்தோப்பில் குயில் பாட
மண்குடிசை இல்லாமல்
மரக்கிளையில் நீயாட
பண்ணெடுத்து நான் பாட
பைங்கிளியே கேட்டாயோ!

பலகாரம் இனிக்குமென்று
ஊருசனம் சொல்லயிலே
பலகாரம் என்னவென்று
பைங்கிளியே அறிவாயோ!

நெல் குத்தும்போது
நெல்ல கொஞ்சம் பார்த்ததுண்டு
நெல்லு சோறு என்னவென்று
பைங்கிளியே நான்றியேன்!

கட்டிக் கொள்ள துணியுனில்ல
ஒட்டிக் கொள்ள சுவருமில்ல
கோட மழ பெய்யயில
கண்மணியே என்ன செய்ய?

சட்டிக்குள்ள தண்ணியுண்டு
அத சுத்தி தவளையுண்டு
சட்டியில சோறு பொங்கி
நாளு ரொம்ப நாளாச்சி!

காலம் வருமென்று
சட்டி நிறையுமென்று
கன்னீரில் நான் பாட
கண்மணியே நனைந்தாயோ?

Thursday, November 3, 2011

சாகாவரம்

இன்னதென உலகம்
இதுவென தறியாமல்
பண்ணிய பாவங்கள்
பெற்றதொரு குழந்தை
ஓழமிட்டு அழுக,

உச்சிதனை முகர்ந்து
நெற்றியில் முத்தமிட்டு
பாலூட்டி சீராட்ட,

விதைத்தநெல் முளைக்காமல்
பருவமழை பொய்த்துவிட
பெற்றகடன் தொட்டிலிலே
பட்டகடன் வாசலிலே,

பாதிமுகம் சிரிக்கையிலே
மீதிமுகம் கோணலிலே
பாவிமகள் பிறந்தாளென்று
பார்நிரப்ப வந்தாளென்று
ஊர்ப்பேச்சு கேட்கையிலே,

கள்ளி மடிபிடித்து
பால்மணம் மாறுமுன்னே
கள்ளிப்பால் கொடுத்தாயோ
கல்நெஞ்சன் ஆனாயோ
கட்டையிலே போகுமுன்னே
சாகாவரம் கேட்டாயோ?

Tuesday, November 1, 2011

காதல் விஞ்ஞானி

கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே  போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்

நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?

நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்


உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
 நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.