About Me

Monday, June 13, 2016

எனர்ஜி டானிக் : கடினமானதை தேர்ந்தெடுங்கள்

மிக எளிதான விசயம்,மிக கடினமான விசயம் ரெண்டில் ஒன்றை தேர்ந்தெடிக்கச் சொன்னால், எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
மிகச்சிறப்பான ஒருஅணி,மிகச்சுமாரான ஒரு அணி இரண்டில் ஒன்றுக்கு தலைமை தாங்கச் சொன்னால்,எதற்கு தலைமை தாங்குவீர்கள்?பெரும்பாலும் சிறப்பான ஒன்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுப்போம்.உண்மையில் சிறப்பான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான வெற்றி பெறலாம்.சுமாரான அணிக்கு தலைமை தாங்கினால் சிறப்பான அனுபவத்தையும், வாழ்க்கை பாடத்தையும் கற்கலாம்.

வாழ்க்கைக்கு வெற்றியை விட சிறப்பான அனுபவமும், கற்ற பாடமும் மிக அவசியம்.சின்ன வயதில் தெரிந்தோ ,தெரியாமலோ இந்த பழக்கம் என்னிடம் இருந்தது.கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டாக இருந்தாலும் மிகச் சுமாரான அணியின் பக்கம் சேர்ந்து விளையாடுவது பழக்கமாக இருந்தது.இப்போது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது என்னுடைய பழக்கத்தினால் நான் கற்ற படங்கள் என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் எனக்கு மிக உறுதுணையாக இருக்கின்றன.

தொடர் தோல்விகள்

மிகச் சுமாரான அணியாக இருப்பதால் தொடர் தோல்விகள் என்பது நிதர்சனம்.மிக அரிதாகவே வெற்றி கிட்டும்.தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் தானாக ஏற்பட்டுவிடும்.தொடர் தோல்விகளை கூட தாங்கிக்கொள்ளும் மனோ திறன் ஏற்படும்.மொத்த அணியுமே முன்னேறாத வரை வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற பாடம் புலப்படும்.

கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்றுக்கொடுப்பது

மிகச்சிறப்பான அணிக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள  ஆரம்பிப்போம்.நம்முடைய ஆட்டத்திறனும் மெருகேர ஆரம்பிக்கும்.மெது மெதுவாக கற்றவற்றை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு கற்றுக்கொடுக்க ஆரம்பிப்போம்.நம்மை அறியாமலே ஒரு நிபுணனாக ஆரம்பிப்போம்.நிபுணன் ஆன பின் பயிற்சியாளராக மாறி மொத்த அணிக்கு சொல்லிக்கொடுப்போம்.

விமர்சனங்களை புறந்தள்ளுதல்

திறமையான அணியோடு மோதும் போது விமர்சனங்கள் வருவது சாதாரணம்.எள்ளி நகையாடுதல்,மோசமான வார்த்தைகள் அல்லது கோபத்தை தூண்டும் நடத்தைகள் என எல்லாம் அருவியாக பொழியும்.எல்லாவற்றையும் பொறுமையாக, திறமையாக கையாளும் போது  வெற்றியின் ரகசியங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

ஒரு அணியாக ஆடுவது

தனி மனிதனாக எவ்வளவுதான் சிறப்பானதாக ஆடினாலும்,ஒரு அணியாக ஆடினால் தான் வெற்றிகிட்டும்.அணியில் ஒருவரின் சிறு தவறுகூட மொத்த அணியின் வெற்றியை பாதிக்கும்.தனிமனித திறமையை குழுவின் திறமையே வெற்றிக்கு முக்கியம்.

பலம் மற்றும் பலவீனங்கள்

சுமாரான அணியாக இருப்பதால் நம்முடைய பலவீனங்கள் எளிதில் தெரிய ஆரம்பிக்கும்.தனி மனிதனின் பலங்களை வைத்து, அணியின் பலவீனத்தை மறைப்பதே  விளையாட்டின் தந்திரம் என்பது புரிய ஆரம்பிக்கும்.இறுதியில் தன்னம்பிக்கை மிக்க மனிதனாக இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற ஒற்றை வசனத்துடன் போராட ஆரம்பிப்போம்.

ஒரு சுமாரான அணியோடு வாழ ஆரம்பித்தை என் வாழ்க்கை எத்தனையோ பாடங்களை மனதில் விட்டுச்சென்றது.வெற்றிக்காக ஆடாமலும்,தோல்விக்காக அழமாலும் எல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கம் என மனதை பண்படுத்திவிட்டது.வாழ்க்கையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் வாழ்க்கையை ரசிக்க பழகிக் கொண்டேன்.வாழ்க்கையில் நம்முடைய சிறு தேர்வு நம்மை எங்கையோ கொண்டு சென்றுவிடுகிறது.தேர்ந்தெடுக்கும் போது கடினமானதையே தேர்ந்தெடுப்போம்.வாழ்க்கை  நம்மை செதுக்க அனுமதி அளிப்போம்.




2 comments:

  1. தேர்ந்தெடுக்காமலேயே வாழ்க்கை அணியில் மிகச் சாதாரண அணியே வாய்க்கப் பெற்றது. ஆனால் நாட்பட நாட்பட எதையும் சாதிக்கும் திறன் தானாகவே அமைந்து விடுகிறது

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..