About Me

Thursday, June 19, 2014

பொட்டல்கள்

வெயிலும் கருவேல மரமும்
கைகோர்த்து நிற்கும்
பொட்டல் காட்டில்,

ஒழுகல் மூக்கும்
ஓட்டை டவுசர் சகிதம்
டயர் வண்டியுடன்
மகாராஜாவாக வலம்
வந்தவர்கள் ஏராளம்.

ரெட்டை ஜடை
குட்டை பாவடை சகிதம்
பொம்மை குழந்தைகளை
வளர்த்த அம்மாக்கள் ஏராளம்.

இச்சி மரத்தடியில்
ஊரத்தண்ணி பானை  ஸ்டெம்பாக
கிரிக்கெட் ஆடிய சச்சின்கள் ஏராளம்.

பேந்தான்,குழிக்குண்டு,பம்பரமென
பக்கத்து தெரு ஒலிம்பிக்கிற்காக
பயிற்சி எடுத்தவர்கள் ஏராளம்.

பக்கத்து தெரு பஞ்சாயத்து,
அரசியல் ராஜ தந்திரம் மென
அரசியல் படித்தவர்கள் ஏராளம்.

புழுதியும் வெயிலுமாக
தண்ணீரே உணவாக
பொட்டலில் கரைந்த
இளமைக்காலங்கள் ஏராளம்.

ஒவ்வொருமுறை பொட்டலை
கடக்கும் போதும்,அதன் தாக்கம்
இதயத்தின் அடிவரை வருகிறது.
ரோஜாக்களால் ஏற்படாத
தாக்கமும் ,ஏக்கமும் - ஒரு
பொட்டலால் ஏற்படுகிறது.

இப்போது
பொட்டல்கள் கொள்வாரில்லாமல்
அனாதைகளாக கைவிரித்து
காத்துக்கொண்டிருக்கின்றன.
மகாராஜாக்களையும்
சச்சின்களையும்
சந்திக்க.