About Me

Wednesday, October 31, 2012

கருவறை சுகம்

ரத்தமும் சதையுமாய்
ஆனந்த சுகத்தோடு
அன்னையின் கருவறையில்
உறங்கியதொரு காலம்.....

யாருமில்லா தனிமையில்
நான் உள்ளே இருந்து
அவள் பேசுவதை கேட்டு
கழித்ததொரு காலம்....

அந்த பத்து மாதமும்
எனக்காக அவள் பட்ட
கஷ்டமெல்லாம் எனக்கு
மட்டுமே தெரியும்....

பத்துமாதமும் முடிந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் கருவறையில்
இருந்து பிரித்து பூமியில்
நட்டார்கள்.கேட்டால்
பிறந்தநாள் என்றார்கள்.

அன்று நான் அழுவதை
சுற்றி நின்று ஆனந்தமாக
சிரித்தார்கள் .

அன்று தொலைத்த
கருவறை சுகம்
அன்பாக காதலாக மாறி
ஒரு பெண்ணை
நோக்கி நகர்ந்தது!

அவளும் வந்தாள் - மனைவியாக.
அவள் மார்பில்
தலைவைத்து படுத்துக்கொண்டேன்.
அவளும் தலைகோதிவிட்டாள்.
மீண்டும் குழந்தையாகி போனேன்.

மீண்டும் ஒரு நாள் வந்தது.
என்னை வேரின் சுவடே
இல்லாமல் பூமியில்
இருந்து பிரித்துவிட்டார்கள்.கேட்டால்
இறந்தநாள் என்கிறார்கள்.

இப்போது எல்லோரும்
அழுகிறார்கள்.நானோ
ஆனந்தமாக இருக்கிறேன்.ஏனென்றால்
நான் மீண்டும் அவளோடு
சேரப்போகிறேன் .

அந்த கருவறை
சுகத்திற்கான
பயணத்திற்கு மீண்டும்
தயாராகிவிட்டேன்.