பாடும் பறவைகளே
எந்தன் பாடலை கேளுங்கள்
கூடும் மேகங்களே
எந்தன் கூக்குரல் கேளுங்கள்
ஒரு பாடல் நானும்பாட
அதைக்கேட்டு பூக்கள் பூக்க
இதுதானோ கானம் என்று
கதிரவனோ எட்டிப் பார்க்க
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!
காலைநேரப் பனித்துளி ஒன்று
புல்லின் மீது நடனமாட
சாலையோர பூக்கள் எல்லாம்
தலையசைத்து புன்னகை சிந்த
காற்றில் மிதக்கும் ஈரஅணுக்கள்
என்னுள்ளே உரசிச் செல்ல
இருண்டுகிடந்த என்மனக் காடோ
சற்றென்று பற்றிக் கொள்ள
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!
அழகான காலைப்பொழுதே
என் மெளனம் கலைத்தாயே
சொல்லாத உணர்வுகள் எல்லாம்
சொல்லி நீ சென்றாயே
சிறு மின்னல் காட்சிமூலம்
தேடிச்சென்ற ஞானம் எல்லாம்
சிறுபுல்லில் நானும் காண
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!